Skip to main content

ஃபாஸ்ட்ஃபுட் - பர்கர், மேரி ப்ரவுன் வகையறாக்கள் அல்ல

ஃபாஸ்ட் ஃபுட்இற்கு இப்படி ஒரு பொருள் சென்னையில் கிடைக்கும் என்பதை அந்த வார்த்தையை உருவாக்கிய அமெரிக்கர்கள் இன்னும் அறிந்திருக்கமாட்டார்கள். சைவம் - அசைவம் போல இதுவும் எப்படியோ ஆகிவந்துள்ளது. 70களில் ஏன் 80கள் வரையிலும் 'சென்னை ஃபாஸ்ட் ஃபுட் கடைகள்' பிரபலமாகவில்லை. புறநகரில் பேருந்து நிலையங்களிலும், இரயில் நிலையத்தையும் பிரதான சாலையையும் இணைக்கும் கிளைச்சாலைகளிலும் இரண்டு கரண்டிகளால் தோசைக்கல்லில் தாளம் போட்டு கொத்து பரோட்டா போட்ட இரவுக் கடைகள் ஃபாஸ்ட் ஃபுட் கடைகளாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு பெருநகருக்குள் வந்த வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் ஃப்ரிக்கனாமிக்ஸ் எழுதவேண்டியிருக்கும்.

முதலில் நடந்தது பிரியாணிப் புரட்சி. அலுமினிய சட்டியில் செய்தித்தாளைச் சுற்றி சணல் கயிறு கட்டி, அளவுத் தட்டால் ஒலியெழுப்பி கால், அரை, முழுசு என சிக்கன் பிரியாணி போடத்துவங்கினார்கள். தடிமனான 'யேரா' கண்ணாடிக் குவளையில் குளிர்நீருடன், மைக்கா ஒட்டப்பட்ட மேசை மேல், வெள்ளை பீங்கான் தட்டில் சாப்பிடுவதுதான் பிரியாணி என்றிருந்த நிலை மாறி, சந்துக்கு சந்து அலுமினிய சட்டிகள் ஒலியெழுப்பி ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தட்டில் பிரியாணி சாப்பாடு கையேந்தி பவனாகியது. அப்படி உருவாகிய கையேந்தி பவன்கள் மெதுவாக ப்ராண்ட் பெயர் சொல்லும் அளவிற்கு வாணியம்பாடி, எம்.எஸ்.வாணியம்பாடி, தலப்பாக்கட்டு என்று வளர்ந்தன. இவை ப்ராண்ட் பெயர் பெறுவதற்கு முன்பே, பிரியாணி சட்டிகளுக்குப் போட்டியாக, பரோட்டா மாஸ்டர், தோசைக்கல் இத்தியாதிகளுடன் பெருநகர் - புறநகர் இரண்டும் இணையும் இடங்களில் ஃபாஸ்ட் ஃபுட் கடைகள் குடைவிரிக்கத் துவங்கின.

ஃபாஸ்ட் ஃபுட்டின் பொருளை மாற்றியதைப் போல, இந்தக் கடைகள் 'ஈட் அவுட்'இன் பொருளையும் மாற்ற முயற்சி செய்தன என்றால் சென்னையை அறியாதோர் நம்பமாட்டார்கள். கையேந்தி பவன்களில் அவ்வப்போது ராஜ்தூத்களும், ஜாவாக்களும், யெஸ்டிக்களும் நிற்கத் துவங்கியதால் கொஞ்சம் தகுதியை உயர்த்திக்கொள்ள மடக்கு நாற்காலிகளும் மேசைகளும் போடப்பட்டு ஈட் அவுட்டானது. ஃப்ரடு ரைசிற்காக நான்-க்வாங் செல்லவேண்டிய அவசியமில்லாமல் நம்மூர் மாஸ்டரே ஏகப்பட்ட முட்டைகோசுத் துண்டுகளையும் மிளகையும் போட்டு, ஞெஞ்ஞேமுஞ்ஞே சுவையில் சாசையும் தர, வியாபாரம் சூடுபிடிக்க, ஈட் அவுட்டிற்கு அவசியமில்லமற்போனது. அப்படியே 'ஈட் இன்'ஆனது, அதாவது, கூரைக்குள் அமர்ந்து சாப்பிடலாம். ஹோட்டலுக்கும் சற்றே குறைந்த தரத்தில் மேசை நாற்காலிகளோடு ஃபாஸ்ட் ஃபுட் ஹோட்டல்களானது (கவனிக்க, ரெஸ்டாரண்ட் அல்ல). இன்றைக்கு ஃபாஸ்ட் ஃபுட் பெயர் கொண்ட கடைகள் இல்லாத பகுதிகளே சென்னைக்குள் இல்லையெனலாம்.

சமையல் செய்யும் இடமும், பாதி வெந்த உணவு வகைகளைப் பரப்பி வைக்கப்பட்டிருக்கும் இடமுமாகச் சேர்ந்து சாப்பிடும் இடத்தைவிடவும் பெரிதாக இருக்க வாய்பு உண்டு. கோல் வைத்து அளந்து பார்த்தாலும் இதனினும் சாப்பிடும் இடம் அத்தனை பெரிதாக இருக்காது. கண்ணாடிபெட்டிக்குள் குழல் விளக்கு ஒளியில் பாதி வறுத்த கோழி இறைச்சி தொங்கிக்கொண்டிருக்கும். அது சிகப்பாக வறுத்தெடுக்காமல், சிகப்பு வண்ணம் பெறவேண்டி கேசரி துகள் தடவப்பட்டு வறுத்த கோழி இறைச்சி. மாஸ்டருக்கு வலப்புறம் முட்டைகள் அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருக்கும். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தொழில் இவர்களால் வளர்ந்துவிட்டதோ என்னும் சந்தேகம் வருமளவிற்கு இழைத்து செய்யபட்ட மேசைகளில் முட்டைகோசுச் சீவல்கள் குவியலாகக் கிடைக்கும். கிலோ ரூ.220ற்கு விற்கப்படும் ஆட்டிறைச்சி தொடர்பான உணவு வகைகளில் உடன் போடப்படும் ஆபத்பாந்தவன் கிலோ ரூ.15ற்கு விற்கப்படும் முட்டைக்கோசுதான்.

[பீஃப் பிரியாணி பீஃப் பிரியாணி டொண்டி ருப்பீஸ் ப்ளேட்டு
மட்டன் போட்டா கட்டாது'பா ஒன்ஃபாட்டி ரேட்டு - என கானா வரி எழுதியபோது, ஆட்டிறைச்சி கிலோ ரூ.140. இப்போது ரூ.220. த.தொ.நு.வியலாரை சாத்த நினைப்பவர்கள் சாத்திக்கொள்ளலாம் :-)))]




வடமாநிலத்தில் தயாரான வாயு அடுப்பு சதா எரிந்துகொண்டிருக்கும். தலைக்கறியானாலும், கோழிக்கறியானாலும் பரிமாறுமுன் மறுசூடு செய்வது ஒரே சட்டியில்தான். சொல்லும் வகைக்கேற்ப சரியான சுவைக்கு உத்தரவாதம் உண்டு. ஆனாலும், அதற்கு முன் செய்யப்பட்ட உணவு வகையின் வாசம் சட்டியிலிருந்து ஒட்டிக்கொண்டு இதிலும் வரத்தான் செய்யும். சமைக்கும் சட்டியை மாற்றும் சில வசதியான ஃபாஸ்ட் ஃபுட் கடைகளும் உண்டு. எத்தனை வசதியான கடையாக இருந்தாலும், ஐம்பது ரூபாய்க்குள் ஒரு ஆள் மாமிச உணவு சாப்பிடலாம். பெர்முடா அணிந்த ஓரிரு வாலிபர்கள் சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். முரட்டுத் தனமான தோற்றமுள்ள யாராவது ஒருவராவது நாம் கடையில் நின்றிருக்கும்போது வந்துசெல்வார். இரண்டு மூன்று இருசக்கர வாகங்கள் சொல்லிவைத்தாற்போல் தாறுமாறாக நிறுத்தப்பட்டிருக்கும். பெட்டிக்கடை இதன் அருகில் அவசியம் இருக்கும். கிங்ஸும், மென்டோ ஃப்ரஷ்ஷும், நிலக்கடலை உருண்டைகளும் கிடைக்கும்.

முப்பதாண்டுகளுக்கு முன் புறநகர் பேருந்து நிலையங்களிலிருந்த இரவுக் கடைகள் நகருக்குள் வந்து சீனமும் இல்லாமல், மொகலும் இல்லாமல், செட்டிநாடும் இல்லாமல், இவையனைத்தும் கலந்த ஏதோ புதிய சுவையை மக்களுக்கு தந்துகொண்டு, மைக்கா மேசை உணவகங்களின் விலைக்கு சற்றே குறைவான விலையில் தங்கள் சந்தையை அமைத்துக்கொண்டு, தங்கள் வழியில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கின்றன.

இதுவரையில் நீங்கள் ஃபாஸ்ட் ஃபுட் கடையில் சாப்பிடாதவராக இருந்தால், ஒரு ஃப்ரைடு ரைஸாவது வாங்கிச் சென்று சாப்பிட்டுவிடுங்கள். அது சென்னையின் இன்னொரு சுவையை உங்களுக்கு அறிமுகப்படுத்தும். சுத்தமான சாகபட்சண நண்பர்கள் மட்டும் இதனைத் தவிர்த்தல் நலம்.

அன்புடன்
ஆசாத்

Comments

Anonymous said…
அருமை மிக அருமை...நான் சென்னையில் இருந்த காலகட்டத்தில் டின்னர் என்றால் மிக ரெகுலராக பாஸ்ட் புட் கடைகளில் (மட்டுமே infact) சாப்பிட்டு வந்தவன். என் Santro-வை கஷ்டப்பட்டு கிடைக்கிற கேப்-இல் பார்க் செய்துவிட்டு, tie எல்லாம் கட்டி கொண்டு (என் கம்பென்யில் அது வேறு கொடுமை) ஒருவன் பிளாஸ்டிக் ஸ்டூலை இழுத்து போட்டு உக்காருவதை சிலர் சற்று ஆச்சர்யமாக பார்ப்பார்கள். "பவன்"களின் மொக்கையான தோசை, 2 தடி பரோட்டா கொஞ்சூண்டு கப் குருமா options-க்கு, பாஸ்ட் பூட்ஸ் எவ்வளவோ தேவலை. கொத்து பரோட்டா, fried ரைஸ், வீச்சு பரோட்டா, முட்டை தோசை, சிலோன் பரோட்டா, டபுள் ஆம்லெட், ஆபாயில் என பல options.
Anonymous said…
அடி தூள்...கொளுத்திட்டீங்க...

மவுண்ட் ரோடு புகாரி பத்தி எழுதச் சொல்லி கேக்கணும்னு ரொம்ப நாளா நினைச்சுட்டு இருந்தேன்..

கண்ணுக்கு முன்னாலேயே எவ்வளவு மாற்றங்கள்? சாப்பிட்டதில்லைன்னாலும், வேடிக்கை பாத்திருக்கேன்.. சைவத்திலே உடுப்பி ஓட்டல்களை, சரவண பவன், வசந்தபவன், ராஜ் பவன் சங்கிலித் தொடர்கள் காணாமல் அடித்தது போல, அப்போ இருந்த மிலிடரி ஓட்டல்கள் எல்லாம் இப்ப செட்டிநாடு உணவங்கள் ஆகிவிட்டன.... எல்லா செட்டிநாடு உணவகங்களிலும் நூடுல்ஸ் தான் பிரதான உணவு. கஜேந்திரவிலாஸ், முனியாண்டி விலாஸ், yadgar எல்லாம் passe.. இப்பல்லாம் அஞ்சப்பர், அரசப்பர் தான்...

எழுபதுகளின் இறுதியில் இருந்து எண்பதுகளின் இறுதி வரையிலான மெட்ராஸ் தான் நான் பார்த்து ரசித்து அனுபவித்து வளர்ந்தது.. இரானி சாயாவும், மிட்லண்டில் 2.90 க்கு மூன்ரேக்கரும், ஒரே ரூபாய்க்குள் நகரின் இந்தக் கோடியில் இருந்து அந்தக் கோடி வரை கூட்டிச் செல்லும் பல்லவனும், புளூடயமண்டின் தொடர்காட்சிகளும், அறுபத்துமூவரும், பெசண்ட் நகர் கார்னிவலும், லஸ் கார்னரில் விடீயோ கேமும் பட படவென்று அத்தனையும் கண் முன் விரிகிறது... இப்ப வேற நகரம் போலத் ஆயிருச்சு...

ஸமானா பதல் கயா பாய் சாப் :-)
நானும் நிறையவாட்டி கையேந்தி பவனில சாப்பிட்டிருக்கேன்.
காலத்திற்கேற்தாற் போல் பெயர் மாறிடிச்சு......அவ்வளவுதான்
ORB Raja said…
நல்ல பதிவு. இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்!

fast food - fast track to fatty figure(body)
என்பது பத்தியும் எழுதி இருக்கலாம் :)
அருமை.ஏகப்பட்ட செய்திகள் இருக்கு.

இதுவரை இங்கெல்லாம் போனதே இல்லைன்னு நினைக்கும்போது வாழ்க்கையில் சுவையான ஒரு பகுதியை இன்னும் அனுபவிக்கலையேன்னு இருக்கு.

ரெண்டு அல்லது மூணு வார விடுமுறை மட்டுமே என்றதால் கால் வைக்கத் தைரியம் இல்லை(-:

நட்சத்திரப்பதிவுகள் எல்லாமே அமர்க்களம்.
வாழ்த்து(க்)கள்.
koothanalluran said…
'குஸ்கா' வை விட்டு விட்டீர்களே !!!
Anonymous said…
arumayana pathivu....pathivai padikkumpothu enakku paris corner sutri ulla kadaikal nyabagathukku waruthu....ange witha withamana noodles kadaiyum....biryani kadaigalum prabalam....yummy....
Anonymous said…
ஒருவாட்டியா ? நீங்க வேற, பரோட்டா சேறுவா, ஆம்லெட் முதல் ஃபிரைடு ரைஸ் வரை சாலைக் கடை சுவைக்கு நான் அடிமை.
அன்புடையீர் வருகைக்கும், பகிர்தலுக்கும் மிக்க நன்றிகள்.

அன்புடன்
ஆசாத்

பிரகாஷ்ஜி,

புகாரின்னா நெல்லை கேமளாபாத்லேர்ந்து பேசணும். சொல்லுங்க ஒரு நாளைக்கு பிரியாணிப் பட்டறைக்கே போகலாம்.

*

தஞ்சாவூரான், எழுதுவோம்.

*

துளசியக்கா, வருக வருக, அடுத்த முறை சென்னை வந்தால் ஒரு அழைப்பும் தரவேண்Dஉகிறேன்.

*

கூத்தாநல்லூரான் அய்யா,

இப்போது சில கடைகளில் குஸ்கா, பிரியாணி இரண்டையுமே சட்டிகளில் வைத்து விற்கிறார்கள்.

பணமிருந்தா பிரியாணி; இல்லேன்னா குஸ்கா.

சீப்பெஸ்ட் சிக்கன் பிரியாணி 1/2 ரூ.35, குஸ்கா 1/2 ரூ.20. கோயம்பேடு பேருந்து நிலையம் தாண்டி உள்ளே MMDAல ஒரு கடை இருக்கு. கண்ண மூடிக்கிட்டுதான் சாப்ப்பிடணும். எடம் கலீஜா இருக்கும், ஆனா, டேஸ்ட்டு...ஓஹோ.

*

ஜசீலா, சேவியர்ஜி,

நன்றிகள்.

அன்புடன்
ஆசாத்

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...