Skip to main content

ஊருக்குள்ள பாரு - கானா

சென்னை நகரின் அடிமட்ட மக்களின் அடையாளமாகத் துவங்கி, மெதுவாக கல்லூரிகளில் தொற்றி, திரைக்கு வந்து, அச்சிற்கு வந்து, இப்பொழுது வண்ணத்திரையும் தனியாக இதற்கென்று நிகழ்ச்சியைத் துவங்கியிருப்பது, என்னைப்போன்ற கானா ரசிகர்களுக்கு / எழுத முயற்சி செய்வோர்க்கு மகிழ்வினை அளிக்கிறது.

ஆனாலும், பரவலாக இன்றைக்கு உலவும் கானாக்களில் கானாவின் எல்லைக்குள் சென்று கோலோச்சும் வரிகள் சிலவே. இதனை சுயவிமர்சனமாகக்கூடக் கொள்ளலாம். எனது கானா புத்தகத்தின் முன்னுரையில் கவிஞர் யுகபாரதி கோடு காட்டியிருந்ததும் இதைத்தான்.

சென்னையின் வியர்வைப் புழுக்கமும் வேதனையும் வரிகளில் தெரியாத வரையில் அது முழுமையான கானாவாக இருக்க முடியாது.

நண்பர் ஒருமுறை குறிப்பிட்ட நினைவு, 'ஓரிரு நல்ல கவிதை வரிகளைப் பெறுகின்ற முயற்சியில், பல வரிகளை தேவையற்று எழுதவேண்டியதாகின்றது' - வார்த்தைகள் மாறியிருக்கலாம், ஆனால், பொருளடக்கம் இதுதான்.

கானாவிலும் அப்படித்தான், மண்ணின் மணத்துடன் கிடைக்கும் ஓரிரு கானா வரிகளைப் பெறுவதற்காக, கானாவைப் போலத் தோன்றும் சில வரிகளையும் எழுதவேண்டியதாகின்றது.

கானாவிற்கு முக்கியம் மொழிநடை, சென்னை உச்சரிப்பு. களம் சென்னையைச் சுற்றி அமைந்திருக்க வேண்டியது அவசியம்.

இன்று பழசும் புதிதுமாக வார்த்தைகளைக் கலந்து ஒரு கானா எழுத முயற்சி செய்தேன். பகிர்ந்துகொள்கிறேன்.

அன்புடன்
ஆசாத்

*****

ஊருக்குள்ளே பாரிருந்தா!

பாருக்குள்ளே ஊரிருந்தா செந்தமிழுதான்! - எங்க
ஊருக்குள்ள பாரிருந்தா டாஸுமாக்குதான்!

முன்னோரெல்லாம் கடாமார்க்கு1 மொண்டு குட்சாங்கோ(வ்)! - இங்க
மூணு கட்டிங் வுட்டதுக்கே மொர்ச்சிப் பாத்தாங்கோ(வ்)!

கட்டுமரம் வல்ச்சிக்கினு போனவுங்கெல்லாம் - மாமே
கையிகாலு வேதனைக்கி கஞ்சி குட்சாங்கோ(வ்)!
சுண்ட - கஞ்சி2 குட்சாங்கோ(வ்)!
காலுசென்டர் ட்ரிப்படிக்கும் ஓட்டுனருக்கு - மாமே
கள்ளுக்கட பக்கத்துல போருஇன்னாங்கோ(வ்)!
ஒன்பாட்டி - போரு3இன்னாங்கோ(வ்)!

அஆ...அஆ...
முன்னோரெல்லாம் கடாமார்க்கு மொண்டு குட்சாங்கோ(வ்)! - இங்க
மூணு கட்டிங் வுட்டதுக்கே மொர்ச்சிப் பாத்தாங்கோ(வ்)!

டுபாய்பார்ட்டி வந்துக்குதே(ய்) லீவுலமாமே - நைசா
டூட்டிப்ரீல டாலர்வுட்ட கன்னுங்க மாமே!
என்னி - கன்னுங்க4 மாமே!
மொடாக்குடி வுடாப்புடி போங்குலமாமே! - பீட்டு
ஊதிப்பாத்தா உள்ளடக்கம் சென்ஸு(ம்)மாமே!
நீயூ - சென்ஸு5(ம்)மாமே!

அஆ...அஆ...
முன்னோரெல்லாம் கடாமார்க்கு மொண்டு குட்சாங்கோ(வ்)! - இங்க
மூணு கட்டிங் வுட்டதுக்கே மொர்ச்சிப் பாத்தாங்கோ(வ்)!

அட்சதுக்கு அட்தநாளு தலகிலவல்ச்சா! - அதன
வெள்ளக்காரன் சொல்லிக்குட்த ஓவருன்னாங்கோ(வ்)!
ஆங்கு - ஓவரு6ன்னாங்கோ(வ்)!
இஸ்டத்துக்கு சல்பேட்டா7 வுட்டுக்கினாக்கா - காரம்
ஏத்திக்கினு கஸ்மாலம் சாவுறன்னாங்கோ(வ்)!
சுண்ணாம்பா - சாவுறன்னாங்கோ(வ்)!

அஆ...அஆ...
முன்னோரெல்லாம் கடாமார்க்கு மொண்டு குட்சாங்கோ(வ்)! - இங்க
மூணு கட்டிங் வுட்டதுக்கே மொர்ச்சிப் பாத்தாங்கோ(வ்)!

பாருக்குள்ளே ஊரிருந்தா செந்தமிழுதான்! - எங்க
ஊருக்குள்ள பாரிருந்தா டாஸுமாக்குதான்!

*****

1 - கடா மார்க் - அந்தக்கால (30 ஆண்டுகளுகு முன்) பாட்டில் சாரய ப்ராண்ட்
2 - சுண்டகஞ்சி - கடற்கரையோரங்களில் புழங்கும் ஒருவகை மது
3 - ஒன்ஃபாட்டிஃபோர் - 144 கூட்டமாகச் சேர்ந்து நிற்பதற்கு தடைச்சட்டம்
4 - என்னிகன் - Heineken பீர்
5 - நீயூசென்ஸு - ந்யூசென்ஸ் வழக்கு
6 - ஆங்குஓவரு - ஹாங்ஓவர்
7 - சல்பேட்டா - மட்டரக மதுவகை

*****

Comments

koothanalluran said…
கண்ணகியின் காற்சிலம்பில்
கொஞ்சம் வீழ்ந்து -நடனக்
காரிகையின்........

எனவெழுதிய 'எண்ணத்'திலிருந்தா
கானாக் கவிதை? இல்லை உங்களுக்கும் வைரமுத்து போல இரட்டை முகமா ?
இனிய கூத்தாநல்லூரான் அய்யா,

முதன்முதலாக புத்தகமாக அச்சேறி எனக்கும் ஒருசிறிய அங்கீகரத்தைக் கொடுத்தவை கானாக்களே.

அவை சென்னையின் அடையாளங்கள்.

மொழி சிதைந்திருந்தாலும், வேற்று மொழித்தாக்கம் அதில் காணப்பட்டாலும் அவை அனைத்தும் வறுமைக்கோட்டிற்கு சற்றுமேலோ, கீழோ வாழ்ந்துகொண்டிருக்கும் வலியின் பிரதிபலிப்புகள்.

படிக்கும் காலத்திலிருந்து கானாவிற்கு இலக்கிய அந்தஸ்து உண்டு என நம்பியவன் நான். இப்போதும் அந்த நம்பிக்கை குறையவில்லை.

கானாவும் வெல்லும்!

அன்புடன்
ஆசாத்
Anonymous said…
அண்த்தே, அல்லாத்தையும் பட்சிக்கினு கீறேன்.
இப்படிக்கு,
கல்ல கோட்ட மினிம்மா
gulf-tamilan said…
aahaa super gaanaa!!!.try to participate in kalaizar tv !!!
Anonymous said…
ஷோக்காகீது ஷாக்கா கீது கானா ஆசாத்தே;
மாஞ்சா மேலே பாஞ்சா போல இன்னா அசத்தே;
வேளச்சேரி ரோட்டு மேலே விக்கும் மஸ்கோத்தே;
கானா கிங்கு நீதான் மத்த எல்லா(ரு)ம் பிஸ்கோத்தே;
வாங்க கல்லக்கோட்ட மினிம்மா,

இப்ப கல்லக்கோட்டய மெய்லாப்பூட் தொகுதில சேத்துட்டதா பேசிக்றாங்க.

தாங்க்ஸ்!

*

இனிய கல்ஃப் தமிழன்,

முயற்சி செய்திருக்கலாம்.

ஆனால், அவர்கள் சொல்லும் அந்தப் பளப்பளா உடையும் அறிமுக இசையில் ஆடவேண்டிய குத்தும் என்னால் இயலாது.

அதனால், அந்த எண்ணுக்கு தொடர்புகொண்டு கானாப் போட்டியில் கலந்துகொள்ளும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன்.

*

சேவியர்ஜி,

சந்தம் அழகாக வந்திருக்கிறது. நாகர்கோயிலாக இருப்பினும் நீண்ட நாள்களாக சென்னையில் வசிக்கிறீர்கள். அடிமட்ட மக்களின் வியர்வையை கவிதையில் கொண்டு வருகின்றீர்கள்.

உங்களுடைய அந்த சைக்கிள் -> இருசக்கரம் -> நான்குசக்கரம் கவிதையில் தெரியும் வளர்ச்சியும் உணர்வுகளும்...அதை அழகிய கானாவாக வடிக்கலாம். அது சென்னையின் உணர்வு.

கானாவிலும் முயற்சி செய்யவேண்டுகிறேன்.

அன்புடன்
ஆசாத்
Anonymous said…
அண்த்தே, அது காரக்கோட்ட, அப்பால நெனப்பு வந்துச்சு :-)
RATHNESH said…
வடிவத்தில் என்ன இருக்குங்க சார், படிப்பவர் அல்லது கேட்பவர் மனங்களில் பளிச்சென்று ஒட்ட வேண்டும். அது தானே முக்கியம். புதுக்கவிதை வந்த புதிதிலும் இப்படித் தான் அலட்சியம் இருந்தது; அப்புறம் யார் முதலில் புதுக்கவிதை எழுதியது என்று சண்டை ஆரம்பிக்கவில்லையா? கானாவுக்கும் ஒரு காலம் வரும் அதன்பிறகு

"நிதி செய்வாரைப் பணிகுவர் மானிடர் மாமனே - எந்த நெறியினாலது செய்யினும் நாயென நீள்புவி
துதி செய்தே அடி நக்குதல் கண்டனை மாமனே" என்று பாரதியார் எழுதியது தான் முதல் கானா என்று கூட ஓர் அந்தஸ்து தர முயல்வார்கள்.

வெளுத்து வாங்குங்கள். உங்கள் நூலில் இருந்து ஓரிரு கானாக்களையும் தந்திருக்கலாம்.
இனிய கரக்கோட்ட மினிம்மா,

அத்தான பாத்தன்...என்னடா காரகோட்டய எப்பத்துலேர்ந்து கல்லக்கோட்டயாக்குனாங்கன்னு முழிச்சிக்கினு இர்ந்தேன்.

*

இனிய ரத்னேஷ்,

சமயம் கிடைக்கையில் கானா வரிகளை தட்டச்சிப் போடுகிறேன்.

அன்புடன்
ஆசாத்

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...