Skip to main content

ரெண்டு காலு குதுர (100சிசி - 125சிசி) - பாகம்-1

சென்னையில் தலைகளுக்கு அடுத்தபடியாக அதிகமாகத் தெரிவது இருசக்கரங்கள்தான். புள்ளிவிவரங்களின்படி ஆறேகால்கோடி தமிழக மக்கள் நாற்பத்தொன்றரை லட்சம் இருசக்கரங்களை 2001இல் உபயோகித்திருக்கிறார்கள். 2006 ஏப்ரல் வரையில் அறுபத்தேழரை லட்சம் இருசக்கரங்கள் தமிழகத்தில் பதிவாகியிருக்கின்றன.

2001 - 41,63,000
2002 - 46,00,570
2003 - 50,73,643
2004 - 55,47,755
2005 - 61,06,057
2006 - 67,50,328

இது மொத்தமாக அனைத்துரக இருசக்கரங்களின் எண்ணிக்கை. 'சூப்பர்பைக்' வகை துவங்கி, 'வீரப்த்ர' எம்80 வழியாக, டிவிஎஸ் எக்ஸெல் சூப்பர், ஸ்போர்ட்ஸ் வரையில் எல்லாவிதமான இருசக்கரங்களும் இதில் அடக்கம். இவற்றில் தனியான எண்ணிக்கையாக 125சிசி வரையில் வண்டிகளைப் பிரித்து புள்ளிவிவரங்கள் எதுவும் சரியாகக் கிடைக்கவில்லை. சந்தையில் எவையெவை எத்தனை பங்கினை எடுத்துள்ளன என்பதைப் பிடித்து ஓரளவிற்கு 125சிசிக்களின் எண்ணிக்கையை ஊகிக்கலாமே தவிர, சரியாகச் சொல்வது இப்போதைக்கு இயலாது.

இந்தியா முழுதும் 2005-06இல் தயாரான இருசக்கரங்களின் எண்ணிக்கை 76 லட்சம். இதில் தமிழகத்து சந்தையில் விற்பனையாகியிருப்பவை ஆறுலட்சத்து நாற்பதாயிரம். புள்ளியை விடுத்து தோராயமாகப் பார்த்தால் அனைந்திந்திய இருசக்கரத் தயாரிப்பில் ஒன்பது சதமானம் நமது (தமிழக) சந்தையில் விற்பனையாகிவிடுகின்றன. இது இன்னும் உயரலாம் என்றே விவரம் அறிந்தோர்கள் கூறுகின்றனர். உண்மை, புதுரகங்கள் வெளியானதும் ஓரிரு நாள்களுக்குள்ளாகவே அவை சென்னையின் போக்குவரத்து நெறிசலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணக் கிடைக்கின்றன. மலர்மாலை சந்தனம் குங்குமம் சகிதமாக 'பதிவு செய்வதற்காக' பலகையுடன் ஒன்றிரண்டு எக்ஸீட் 125 படபடவென ஓடிக்கொண்டிருக்கிறன.

சேகர் எம்போரியத்தைத் தாண்டி கோடம்பாக்கம் பாலத்தின் மேல் ஏறிக்கொண்டிருக்கும் வியர்வை + நெறிசல் + எரிச்சலான வேளையில் புதிய எக்ஸீட் 125 ஓட்டுபவரைப் பார்த்து "மைலேஜ் எப்படி சார்?" என நானும் கேட்கக்கூடாது, புத்தம் புதிய வண்டியை பூப்போல ஓட்டிச் செல்லும் அவரும் "காலைல வண்டி எட்ததும் கண்ணேறு போடுது பார், சாவுகிராக்கி" என மனதிற்குள் திட்டக்கூடாது. சாலை நாகரிகத்தில் புதிய வண்டி குறித்து அவராகச் சொல்லும் வரையில் நாமாக எதுவும் கேட்காமலிருப்பதும் ஒன்று (கலாய்ப்பதற்காக ஏடாகூடமாக எதையாவது கேட்பது இதில் அடங்காது :-)).

ஒட்டுமொத்த இருசக்கரச் சந்தையில் பஜாஜும் ஹீரோ ஹோண்டாவும் முன்னணியில் இருந்தாலும், சென்னையில் 125சிசி வரையிலான இருசக்கரங்களில் ஹீரோ ஹோண்டா அதிகமாக காணக்கிடைக்கிறது, குறிப்பாக ஸ்பெலெண்டர்.

125சிசி வரையில் பஜாஜ் வைத்திருக்கும் ரகங்கள்:
டிஸ்கவர்(125சிசி)
ப்ளாட்டினா(100சிசி)
சிடி100(100சிசி).

அதே வகையில் ஹீரோ ஹோண்டா வைத்திருக்கும் ரகங்கள்:
சிடி டான் / டீலக்ஸ்(100சிசி)
ஸ்பெலெண்டர்+
சூப்பர் ஸ்பெலெண்டர்(125சிசி)
பேஷன்+(100சிசி)

புள்ளிவிவரங்களை ஓரிரு வினாடிகளுக்கு ஒதுக்கிவிட்டு சாலையில் தினசரி காண்பதைப் பேச எண்ணம்.

அய்யா வண்டியை ஓட்டுவார், பெட்ரோல் கொள்கலனில் ஒருகுழந்தை உட்கார்ந்திருக்கும், கையில் ஒருகுழந்தையுடன் அம்மையார் அமர்ந்திருப்பார். சிறிய குடும்பத்தின் நான்குபேர்களும் ஒன்றாக இப்படி வசதியாக, குறைந்த செலவில் பயணம் செய்யக்கூடிய வாகனம் சென்னை நகருக்குள் இருசக்கரம் மட்டுமே.

சந்திப்புகளில் அருகில் நிற்கும் வண்டியிலிருக்கும் அம்மையாரின் மடியிலிருந்து குறுகுறுவென கைநீட்டி சிரிக்கும் குழந்தையைப் பார்த்து சிரிக்காமல் இருக்கவேண்டியது காலத்தின் கட்டாயம் - சாலை நாகரிகம்!?!? சல்தாஹை!

தொடரும்...

Comments

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...