சென்னையில் ஓரளவிற்கு நெரிசலான பகுதியில் இருக்கும் எனது ஒரு படுக்கையறை அடுக்குமாடிக் குடியிருப்பை (1BHK) விற்பது குறித்து மும்பை நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, ‘அபி பேச்னேக்கா? தூ பாகல் ஹை க்யா? வெய்ட் கரோ பாபா, கோயி பில்டர் அப்ரோச் கரேகா’ (இப்பொழுதே விற்கவேண்டுமா? உனக்குப் பைத்தியமா? கொஞ்சம் பொறு. யாரேனும் கட்டுமான நிறுவனத்தார் தொடர்புகொள்வார்). இந்த உரையாடல் எங்களிடையே நடந்தபோது நான் த லாஸ்ட் மேன் இன் டவர் படித்திருக்கவில்லை. கதையின் மையக் கரு அதுதான். விஷ்ராம் சொசைட்டி (டவர் ஏ) வாக்கோலா சாட்ண்டா க்ரூஸ் (கிழக்கு) மும்பை-4000055 இன்றைக்கு மிகப் பழைய கட்டடமாக இருக்கும் அதன் மீது மும்பையின் பிரபல கட்டுமான நிறுவனத்தார்களின் பார்வை படுகின்றது. குடியிருப்புகளின் சொந்தக்காரர்களை அவர்கள் அணுகுகின்றார்கள். வீட்டின் மேலிருக்கும் மனச்சாய்வால் அந்தப் பழைய கட்டடத்தில் குடியிருப்பவர்கள் நிறுவனத்தாரின் முன்வைப்பை ஏற்க மறுக்கிறார்கள். நிறுவனத்தார் விடுவதாக இல்லை. ஆடுற மாட்டை ஆடிக்கற பாடுற மாட்டைப் பாடிக் கறவாக ஒவ்வொரு குடியிருப்பின் சொந்தக்காருடைய தேவைகள், குறைபாடுகள் ரகசியமாக ஆராயப்படுகின்றன...