மீரான் சாகிபு தெரு காசினோ திரையரங்கை ஒட்டிச் செல்லும் தெரு. 17'' கணினித்திரை சுவர்த்தாள் என்ன ஜுஜுபி. இந்தத் தெருவில் நுழைந்ததும் இடதுபுறத்தில் பதினாறடிக்கு எட்டடி திரைப்பட சுவரொட்டியை நின்று நெருங்கி நிதானமாகப் பார்த்து ரசிக்கலாம், யாரும் நம்மை அதிசயமாகப் பார்க்கமாட்டார்கள். சென்னையிலேயே சுவரொட்டியை இத்தனை நெருக்கமாக நின்று பொறுமையாகப் பார்க்கக்கூடிய இடம் இதுவாகத்தான் இருக்கும். நீண்ட சுவர் இன்னமும் விளம்பரதாரர்களின் குத்தகைக்குச் சிக்காமல் இலவசமாக திரைப்படச் சுவரொட்டிகளைத் தாங்கி நிற்கிறது. எதிரே கடையில் தாராளமயமாக்கல் திரைக்கவர்ச்சி வெளிப்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் என எல்லா மொழிகளிலும் நடிகைகள் ப்ளாஸ்டிக் உறை போடப்பட்டு தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பார்கள். பொது இடங்களில் புகை பிடிக்கமுடியாத நிலை இருந்தபோதிலேயே மீரான் சாகிபு தெரு மட்டும் விதிவிலக்கு. நமது கோல்டு ஃப்ளேக் கிங்ஸுடன் போட்டி போட்டுக்கொண்டு 555வும் சில்லறையில் விற்பனையாகும். வசவசவென திரைப்பட வினியோகஸ்தர்களின் அலுவலகங்கள் ஒரு முனையிலிருந்து அடுத்த முனை வரையில் பரவிக்கிடக்கும். யாராவது வெள்ளை வேட்டி மனிதர்...