Skip to main content

அன்புள்ள எரியும் திரிக்கு... (புதுக்கவிதை) - போட்டிக்காக

அன்புள்ள எரியும் திரிக்கு...
































நானென்ன சொல்ல
நமது உறவுதான்
கஜலில் சுவரோவியமாகி1
செவிப்பறையை அலங்கரிக்கிறதே

நீ
ஏனையோர்க்கு ஒளி
எனக்கு இருள்

நீ பிறந்த நொடியில்தான்
எனது மரணயோகம் கணிக்கப்பட்டது

நீ
மோர்ப் பானை போர்த்திய முதுமக்கள் தாழி

உன்
காமச் சிரிப்பை விலக்கிப் பார்த்தால் கழுமரம்

ஏனிந்த முரண்தொடை
மரணமாலையை மங்கல நிறத்திலா கட்டுவது

ஒற்றைக் கால் நடனத்தால்
சிருங்காரம் சிலிர்க்க வைத்து
ஒரே ஒரு முத்தத்தில்
உடலைக் கருக்கி
உயிரை மட்டும்
எங்கோ இழுத்துச் செல்லக் காத்திருக்கிறாய்

ஆயினும்
அழகாகத்தான் இருக்கிறாய்

எனக்குத் தெரியும்
நீ மலருமன்று
நான் வண்டுமன்று

எல்லாம் தெரிந்தும்
வெம்மையின் திரையில்
நீ காட்டும்
குளிர் நடுக்க நிழற்படம்
அறிவை மழுங்கடித்து
அரைமயக்க நிலைக்குத் தள்ளும்

தூரத்தில் நின்று உன்னழகை ரசிக்க
நானொன்றும் மனிதனல்ல

விட்டில்

இதோ வருகிறேன்!


*****

1.
கஜலில் சுவரோவியமாகி - கஜல் பாடல்களில் விளக்கும் விட்டிலும் பல இடங்களில் வெவ்வேறு கற்பனைகளில் கையாளப்படும். உதாரணமாக,
அ. விட்டிலுக்கு எரியக் கற்றுத் தந்ததே நான்தான்,
ஆ. விட்டிலை தான் எரிக்கவில்லையென தீக்குளித்து சத்தியம் செய்கிறது விளக்கு,
இ. விளக்கு எரிவதற்கா? இல்லை எரிப்பதற்கா?
ஈ. காதல் தீயில் இருவரும் மாண்டனர். விளக்கு புகையாக, விட்டில் சாம்பலாக.

நன்றி:
படத்தை இலவசமாக இறக்கிக்கொள்ள அனுமதித்த gallery.hd.org வலைத்தளத்திற்கும், புகைப்படக் கலைஞர் ஆடம் ஹார்ட் டேவிசிற்கும்.

*****

அன்புடன்
ஆசாத்

Comments

விட்டிலுக்கும் மெழுகு வெளிச்சத்திற்கும் உள்ள உறவா? மனிதர் புரிந்து கொள்ள இது மனித உறவு இல்லை என்று நினைக்கிறேன். நல்லா இருக்கிறது உங்கள் கவிதை.
நன்றிகள் குமரன்.

அன்புடன்
ஆசாத்
அன்புள்ள எரியும் திரிக்கு
ஆசையாய் விட்டில் எழுதிய கடிதமே

நன்று ஆசாத்ஜி
இனிய மதுமிதாஜி,

ஓர் இடைவெளிக்குப் பின் புதுக்கவிதை முயற்சி செய்தேன்.

பாராட்டிற்கு நன்றிகள்.

அன்புடன்
ஆசாத்

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...