Skip to main content

சென்னையின் சில முகங்கள் - மீரான் சாகிபு தெரு

மீரான் சாகிபு தெரு

காசினோ திரையரங்கை ஒட்டிச் செல்லும் தெரு.

17'' கணினித்திரை சுவர்த்தாள் என்ன ஜுஜுபி. இந்தத் தெருவில் நுழைந்ததும் இடதுபுறத்தில் பதினாறடிக்கு எட்டடி திரைப்பட சுவரொட்டியை நின்று நெருங்கி நிதானமாகப் பார்த்து ரசிக்கலாம், யாரும் நம்மை அதிசயமாகப் பார்க்கமாட்டார்கள். சென்னையிலேயே சுவரொட்டியை இத்தனை நெருக்கமாக நின்று பொறுமையாகப் பார்க்கக்கூடிய இடம் இதுவாகத்தான் இருக்கும். நீண்ட சுவர் இன்னமும் விளம்பரதாரர்களின் குத்தகைக்குச் சிக்காமல் இலவசமாக திரைப்படச் சுவரொட்டிகளைத் தாங்கி நிற்கிறது.

எதிரே கடையில் தாராளமயமாக்கல் திரைக்கவர்ச்சி வெளிப்பட தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் என எல்லா மொழிகளிலும் நடிகைகள் ப்ளாஸ்டிக் உறை போடப்பட்டு தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பார்கள். பொது இடங்களில் புகை பிடிக்கமுடியாத நிலை இருந்தபோதிலேயே மீரான் சாகிபு தெரு மட்டும் விதிவிலக்கு. நமது கோல்டு ஃப்ளேக் கிங்ஸுடன் போட்டி போட்டுக்கொண்டு 555வும் சில்லறையில் விற்பனையாகும்.

வசவசவென திரைப்பட வினியோகஸ்தர்களின் அலுவலகங்கள் ஒரு முனையிலிருந்து அடுத்த முனை வரையில் பரவிக்கிடக்கும். யாராவது வெள்ளை வேட்டி மனிதர் செய்தித்தாளில் பொட்டலாமாக எதையாவது கையில் வைத்திருந்து ஒரு கதவிலிருந்து வெளிப்பட்டு அடுத்த கதவிற்குள் நுழைந்தால், நம்புங்கள், அதற்குள் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் இருக்கலாம். ஏதோ படப்பெட்டிக்காக அது கைமாறியிருக்கலாம். லட்சங்களை இப்படி லட்சியம் செய்யாமல் பணத்தில் புரளும் ஆசாமிகள் அங்கும் இருக்கிறார்கள்.

திருட்டு விசிடிக்கள் குண்டர் சட்டத்தால் தடை செய்யப்படாத நேரத்தில் பட்டியலைத் தந்த பதினைந்தாவது நிமிடத்தில் சிடியை வாங்கிச் செல்லலாம். 'வூட்ல பசங்க இருக்கும்போது சிடியப் போட்றாத'பா. வெட்டாம வந்தது' என கூடவே அறிவுரையும் கிடைக்கலாம்.

நேற்று சந்தைக்கு வந்த வெளிநாட்டு டிவிடி ப்ளேயரின் மாடல் எண்ணைத் தந்தீர்களென்றால், அதை இரண்டு மணிநேரத்தில் உங்கள் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் வல்லுனர்கள் வாழ்கின்ற தெரு அது.

'ஹால்ல கொஞ்சம் ஸ்பீக்கர் செட் பண்ணணும்மா'

'பண்ணிரலாம். ஹோம் தியேட்டர் கணக்கா எஃபக்ட்டு குடுத்துரலாம். ஆம்ப்ளிஃபயர் இல்லாம மூவாயிரம் ஆவும். பையண்ட சொல்லிட்டா ஸ்பீக்கர் செஞ்சுருவான். ஓக்கேயா'


பல்லால் வயரைக் கடித்து இழுத்துக்கொண்டே பதில் சொல்லும் வித்தகர்கள் இந்தத் தெருவில் இருக்கிறார்கள்.

பணம் புரண்டாலும் பகட்டாக இல்லாமல் பழைய வீடுகளை அப்படியே அலுவலகமாக்கி, கடைகளாக்கி ஒழுங்கில்லாமல் நெளிந்துகொண்டிருக்கும் தெரு. முழுதும் வணிகமயமாகிப்போன இந்தத் தெருவில் இன்னமும் ஓரிரண்டு குடியிருப்பு வீடுகள் இருக்கின்றன. கோடிக்கணக்கில் விலை கிடைக்குமென்றாலும் மூதாதையர் சொத்தென்று விடாப்பிடியாக இன்னும் யாருக்கும் விற்காமல் இருக்கிறார்கள்.

அவர்கள் பழைய நரசிங்கபுரத்து மக்கள்.

இப்படியாக மீரான் சாகிபு தெருவில் சென்னைக்கு ஒரு முகம்.

அன்புடன்
ஆசாத்

Comments

ஓகை said…
அந்தத் தெருவைச் சுற்றியிருக்கும் திரையரங்குகளின் பட்டியல்:
1.நியு எல்பின்ஸ்டோன் - இப்போது இல்லை
2.காசினோ
3.கெயிட்டி
4.சித்ரா - இப்போது இருக்கிறதா தெரியவில்லை.
5.பாரகன் -இப்போது இருக்கிறதா தெரியவில்லை.
6.அண்ணா
7.சாந்தி
8.தேவி
9.தேவி பாரடைஸ்
10.தேவிகலா
11.தேவிபாலா
12.பிளாசா - இப்போது இல்லை.
13.வெலிங்க்டன் - இப்போது இல்லை
14.ராஜ்
15.மிட்லண்ட்
16.அலங்கார் - இப்போது இல்லை.

பாய்சாப் சரியான்னு சொல்லுங்க.
இனிய நடராஜன் அய்யா,

அனைத்தும் சரியே.

மீரான் சாகிபு தெருவிலிருந்து ஒன்றுஒன்றரை கிலோமீட்டர் ஆரத்திற்குள் அனைத்தும் வந்துவிடும்.

நியூ எல்ஃபின்ஸ்டன் - ரஹேஜா காம்ப்ளெக்ஸ்.

பாரகன் - அரிஹாந்த்(?) பில்டர்ஸ்

வெலிங்டன் - காம்ப்ளெக்ஸ் அத்தனை பெரிய வெற்றிபெறவில்லை.

அலங்கார், பிளாசா - நான் சரியாக கவனிக்கவில்லை.

தாயார் சாகிபு தெருவுக்கும் அண்ணா சாலைக்கும் இடையில் பாலமாக விளங்கியது பிளாசா ('தேவி'க்கு முன்).

கலங்கலாக நினைவிலிருக்கும் திரையரங்க நினைவுகள்...

மிட்லண்ட் - சிவந்த மண்
சித்ரா - நல்லநேரம்
சாந்தி - திக்குத் தெரியாத காட்டில்

அன்புடன்
ஆசாத்
Boston Bala said…
அருமையான தொடர். தெரிந்த இடங்களில் பார்க்காத பிரதேசங்களை அறிமுகம் செய்து மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறீர்கள்.
gulf-tamilan said…
பக்கத்தில் இருக்கும் ரிட்சி streetபற்றி ஒன்னும் சொல்லவில்லை?
உங்கள் e mail id தரவும்
தல, இப்பதான் பார்த்தேன். ப்ராட்வே பத்தி கொஞ்சமா எழுதியிருக்கிங்களே, சரி விடுங்க, ப்ராட்வே இப்போ, பிபிசி ஹோம்ஸ்ஸா மாறிடுச்சு :) அங்கே பிரபாத்துன்னு ஒரு தியேட்டர் இருந்தது அது ஷாப்பிங் காம்பெள்க்ஸாயிருச்சு. அப்படியே ப்ராட்வே போலிஸ் ஸ்டேஷன்க்கு நேர் எதிரா போனா முருகன் தியேட்டர் வரும். டிசமபர் 24 தேதி எம்.ஜி.ஆர் படம் போடுவாங்க, மத்த நேரமெல்லாம், மலையாள பிட்டு படம் ஓடற தியேட்டர் அது. அப்படியே நேரா போனா தங்கசாலை, வலதுப் பக்கம் திரும்பி நேரா போனிங்கன்னா, கிரெளவுன் தியேட்டர் [இப்ப சரவணா ஸ்டோர்ஸ் வாங்கிட்டதா கேள்வி] தங்கசாலை ஜங்க்ஷன்ல இருந்து பார்த்தா கிருஷ்ணா தியேட்டர், பிரிட்ஜ் ஏறி சுத்தி வந்தா பாரத் தியேட்டர். ஆசைய கிளப்பி விட்டிங்களே தல, நானும் வடசென்னையை ஒரு ரவுண்டு அடிக்கிறேன் பதிவுல :)))
நாராயண்ஜி,

தப்புதான் கொஞ்சமா எழுதுனது தப்புதான். நாம ப்ராட்வேக்கு பழைய ஆளு. அதனால அப்படி ஆகிருச்சு.

இப்ப நீங்க உசுப்பேத்துனதால பாருங்க கோடம்பாக்கம் பதிவு நீண்டுருச்சு.

வடசென்னை - காட்பாடா லேன் கானா இங்க இருக்கே கேட்டீங்களா?

வடசென்னை பதிவு போடுங்கஜீ.

*

இனிய கல்ஃப் தமிழன்,

azad_ak@yahoo.com

அன்புடன்
ஆசாத்

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...