பொன்முட்டை -------------- மாதமொரு முட்டையிடும் வாத்து நானையா - நல்ல மஞ்சள்நிறப் பொன்முட்டை திர்ஹம் தானயா காதவழிப் பாதையிலே தனிமை வெக்கையில் - நான் கண்பிதுங்கி இட்டமுட்டைக் கதையைச் சொல்லவா மீசைவரி மேலுதட்டில் காணும் முன்னரே - நானும் மீனம்பாக்கம் போவதற்கு பெட்டி கட்டினேன் வீசைவிலை ஆங்கிலமா அரபு உருதுவா - எதுவும் விளங்காது தமிழ்தவிர முட்டி மோதினேன் ஏட்டுச்சுரைக் காயெடுத்துக் குழம்பு வைக்கவா - இல்லை ஏவுகின்ற வேலைசெய்து முட்டை போடவா வாட்டுகின்ற கேள்வியெந்தன் இடுப்பு ஒடித்தது - அடடா வளமான முட்டையொன்றை இடமு டிந்தது வந்தகடன் தீர்ப்பதற்கு இட்ட முட்டைகள் - அங்கே வாடகைக்கே போதவில்லை அழுகை வந்தது சொந்தக்கதை சோகக்கதை பழகிப் போனது - எந்த சோகத்திலும் முட்டையிடும் திறமை வந்தது அரபுலகா பாரதமா எங்கு காணினும் - யாரும் இடுவதெலாம் முட்டையன்றி வேறு ஒன்றிலை இரவுநேர மையிருட்டில் அழுது தீர்ப்பது - அங்கு இந்தியாவில் கண்டதில்லை இங்கு உள்ளது இட்டமுட்டை எல்லாமே எங்கு போனது - சுற்றம் ஈரநெஞ்சப் பாசத்தினால் பங்கு போனது திட்டமிட்டுப் போட்டதெல்லாம் களவு போனது - யாரோ தின்றுவிட்ட ஏப்பக்குரல் இங்கு கேட்டது விட்டகுறை சரியா...