Skip to main content

Posts

Showing posts from 2007

தாரே ஜமீன் பர் - திரைப்படம் தொடர்பானது மட்டுமல்ல

தற்போதைய மழலையர் கல்வியின் அணுகுமுறையின் மீது கனமான கேள்வியை வைத்துச் செல்லும் வசனங்களை (நன்றி: வலைப்பதிவர் நாராயண் அவர்களுக்கு) எந்தவிதமான அடிக்கோடுகளும் இல்லாமல் சாதாரணமாக போகிறபோக்கில் பேசிச் செல்வதாக அமைத்தது, அந்த மாணவன் வெல்லவேண்டும் என்ற எதிர்ப்பார்பை அரங்கில் இருக்கும் ஒவ்வொரு பார்வையாளரின் மனதிலும் விதைத்தது, கடைசிக் காட்சியில் அனைவரையும் உணர்வுமயமாக்கி மனதைப் பிழிந்து கண்களை மகிழ்ச்சியில் பனிக்கவைத்தது, இப்படியாக பல நிலைகளில் சாதாரண இந்திப் படத்தைவிடவும் மேலே சென்று, தனிக்கவனம் தேவைப்படும் குழந்தைக்காக, வணிக ரீதியான படத்தை எடுத்த ஆமிர்கானின் சமூக அக்கறையைப் பாராட்டவேண்டும். மனமகிழ்விற்கான திரைப்படங்களைப் பார்த்தபின் அது குறித்து ஆராய்வது தேவையற்றது. ஆனால், இதைப் போன்ற சமூக அக்கறையுள்ள படங்களைப் பார்த்த பிறகு, படம் எழுப்பும் கேள்விகள் குறித்தும், படத்தால் ஏற்பட்ட விழிப்புணர்வு நிலையானதா தற்காலிகமானதா என்னும் தர்க்கம் குறித்தும், விழிப்புணர்வால் ஏற்படக்கூடிய மாற்றத்தை நமது தற்போதைய சமூக அமைப்பு அங்கீகரிக்குமா என்பதுமான தளங்களில் சிறிது யோசிக்கவேண்டியிருக்கிறது. படத்தின் ஆணிவேர...

பேநசீர் - கோவையற்ற எண்ணங்கள் நான்கு

1/4 எங்கோ, என்றோ கேள்விப்பட்டு நினைவில் தங்கிவிட்ட அந்நிகழ்வினை இப்போது இணையத்தில் தேடிப்பார்த்தேன், கிடைக்கவில்லை. குமுதத்தின் மனம் திறந்த கடிதத்தில் படித்ததா? ஆறரை ஆண்டுக்காலமாக துபாயில் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பா.ம.க. (பாகிஸ்தான் மக்கள் கட்சி - PPP) அனுதாபி சொன்னதா? நட்பாக இருந்த கராச்சிவாலா? ஜித்தாவில் அறிமுகமான மொஹாஜிர்? எப்படி இந்தச் செய்தி நினைவில் ஊறியதென நினைவில்லை. பாகிஸ்தான் குறித்த சில செய்திகள் மறந்து போவதில்லை. என்றோ இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் படித்த 'Jinnah has sold Indian Muslim's right for a bowl of soup' எம்.ஜே.அக்பரின் வாசகத்தை நினைவில் இருத்தி அதனை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் சொல்லிக்காட்டி மொக்கை போடும் வழக்கம் இன்னும் இருக்கிறது. ஆனால், இந்நிகழ்வில், செய்தி மட்டும் நினைவில் இருக்கிறது, செய்தியின் நதிமூலம் கிடைக்கவில்லை. 1979ம் வருடத்தில் சுல்ஃபிகர் அலி பூட்டோ அவர்கள் தூக்கிலிடப்பட்டார். அது தொடர்பான அச்சுறுத்தும் சூழலில் பேநசீரின் தாயும், பேநசீரும் கராச்சியில் இருக்கும் இந்தியத் தூதரகத்தில் சில பொழுதுகளைக் கழித்திருக்கிறார்கள். அடைக்கலம் த...

சாம்பார் வடையின் தமிழ் சினிமா பரிந்துரைக்காக - ஆயிரத்தில் ஒருவன்

http://sambarvadai.blogspot.com/2007/11/blog-post_16.html இந்தப் பதிவிற்காக, இந்தப் பதிவு :-) ஒரே வயது, சூழல், சிந்தனைத் திறன் கொண்டிருப்போரின் ரசனையே ஒன்றுக்கொன்று மாறுபட்டிருக்கும்போது, தலைமுறை தாண்டி ரசனையை எடுத்துச் சென்று இளையவர்கள் பார்க்க வேண்டும் என நாம் நினைக்கும் படத்தைப் பரிந்துரைப்பது சிரமமான காரியம். ரசிப்புத் தன்மை, நாட்டுப்பற்று, மொழிப்பற்று இவையெல்லாம் திரை ஊடகத்தின் வழியாக மக்களைச் சென்றடைந்தது குறைந்து, வணிகத் திரைப்படம் பொழுதுபோக்கிற்கு மட்டுமே என்னும் நிலைமை வந்து நீண்ட நாள்களாகின்றன. வணிகப்படங்களைப் புறந்தள்ளும் உரத்த சிந்தனையாளர்களும், உரத்த சிந்தனையாளர்களை அறிந்திராத வணிகப்பட ரசிகனுமாக ஆளாளுக்கு அவரவர் உலகில் இயங்குகிறார்கள். இந்த இரண்டு உலகிலிருந்தும் எனக்குக் கிடைத்த அறிமுகங்களால் பில்லாவின் திரைத்தனத்தையும் அதற்கான அணுகுமுறையில் ரசிக்க முடிகின்றது; நேற்று (19.12.07) காலை தேசிய ஒளிபரப்பில் ஃபரான் அக்தரின் பாசிடிவையும் 1 அதற்கான அணுகுமுறையில் ரசிக்க முடிகின்றது. இரண்டும் வெவ்வேறு உலகங்கள் என்ற புரிதல் கிடைக்கவேண்டும் அவ்வளவே. முன் சொன்ன ரசனை மாற்றம் மற்றுமின்ற...

The Kite Runner - புத்தகம், எனது பார்வையில் 4/4

இனி நாவல் குறித்த எனது எண்ணங்கள். தாலிபானின் வீழ்ச்சி சில நல்ல கதைகளை (உண்மைக் கதைகளை) அளித்திருக்கின்றது. மனீஷா நடித்த திரைப்படம் - இது நாவலாகவும் வந்தது, த ஆஃப்கான் (நாவல்), காபூல் எக்ஸ்ப்ரஸ் (திரைப்படம்), த கைட் ரன்னர் (நாவல், திரைப்படம்). இவை நான்கும் இதனை எழுதும்போது சட்டென நினைவிற்கு வருபவை. இன்னமும் யோசித்தால் கூடுதலாக இரண்டொன்று நினைவிற்கு வரலாம். இதில் காபூல் எக்ஸ்பிரஸில் தாலிபானின் வீழ்ச்சிக்குப் பிறகு தாலிபான்களில் யாரேனும் பொதுமக்களின் கையில் கிடைத்தால் என்ன கதிக்கு ஆளாவார்கள் என்னும் காட்சி படம் பிடிக்கப்பட்டிருக்கும். மனீஷா நடித்த படத்தில் நோன்புக் காலத்தில் குழந்தைக்காக ரொட்டி சமைக்கும் தாய்க்கு தாலிபான்கள் தண்டனை தரும் காட்சி. ஆஃப்கனில் ஃப்ரெட்ரிக் மிகவும் சாமர்த்தியமாக எந்த அரசியல் அமைப்பையும் நாட்டையும் குறை கூறாதபடி மேலோட்டமாக (டிப்ளமாடிக் - எப்படி தமிழ்ப்படுத்துவது?) எடுத்துச் செல்வார். மூக்கு ஆபரேஷனுக்குப் பின் சாப்பிட்ட பின் விடுதலைக்குப் பின் காங்கிரசிற்குப் பின் சதாமிற்குப் பின் பின்நவீனத்துவம் இப்படி வழமையான 'பின்' விவகாரம் தாலிபானுக்கும் அமைந்து நன்றாக...

The Kite Runner - புத்தகம், எனது பார்வையில் 3//4

மங்கோலிய இனத்தைச் சேர்ந்த வேலைக்காரனுக்கு இத்தனை பெரிய வீட்டில் தனியாக என்ன வேலை எனக் கேள்வி கேட்கிறது. நிலையைச் சொல்ல முயலும் ஹஸனை தாலிபான் சட்டை செய்யவில்லை. ஹஸன் வீட்டைக் காக்க முயற்சி செய்கிறான். அநியாயமாக சுட்டுக் கொல்லப்படுகின்றான். ஹஸனின் மனைவியும் சுடப்படுகிறாள். சொஹ்ரப் அநாதை இல்லத்திற்கு அனுப்பப்படுகிறான். ரஹீம்கான் பாகிஸ்தானில் தஞ்சம் புகுகின்றார். பாபாவின் மாளிகையை தாலிபான் எடுத்துக்கொள்கிறது. பின்னோக்கிய நினைவுகள் நிகழ்காலத்திற்கு வர, ரஹீம்கான் அமீரிடம் ஒன்றை வேண்டிக்கொள்கிறார். அது மிகவும் கடினமானது. மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் வயோதிகரின் ஆசையை நிறைவேற்று என்னும் முஸ்தீபுடன் வேண்டுகோளை முன்வைக்கிறார். அதாவது, ஆஃப்கான் சென்று அநாதை இல்லத்திலிருக்கும் சொஹ்ரபை மீட்டு பாகிஸ்தானிலிருக்கும் இன்னொரு நல்ல அநாதை இல்லத்தில் சேர்த்துவிடவேண்டும் என்னும் கடினமான விண்ணப்பம் அது. அமெரிக்காவில் வசதியாக வாழும் அமீருக்கு அது தேவையற்றதாகத் தோன்றுகிறது. தாலிபானின் ஆட்சியில் இருக்கும் ஆப்கானுக்குள் நுழைந்தால் எதுவும் நடக்கலாம். உயிரைப் பணயம் வைப்பதான அணுகுமுறை அது. அதனால் அமீர் தயங்குகிறான்...

The Kite Runner - புத்தகம், எனது பார்வையில் 2/4

ஆஃப்கானிய விளையாட்டுகள் எதுவும் அமீருக்குப் பிடிக்காமற்போக, பட்டம் விடுவதில் மட்டும் ஈடுபாடு வளர்கிறது. பட்டம் அங்கே கலாசாரத்துடன் இணைந்து கவுரவத்தின் அடையாளமாக இருக்கிறது. மற்றவர்களுடைய பட்டங்களை வீழ்த்துவது பெருமைக்குரிய விஷயம் என்றால், வீழ்கின்ற பட்டங்களை பிடிப்பதும் பெருமைக்குரிய விஷ்யமாக இருக்கின்றது. வீழ்ந்த பட்டத்தை முதலில் தொட்ட சிறுவன், அதனை வீட்டிற்கு எடுத்துச் செல்வதில் உண்டாகும் எந்தத் தடைகயையும் முறியடிக்கத் தயாராக இருப்பதான கலாசாரம்தான் கதையின் முடிச்சு. பட்டம் பிடிப்பவன் - த கைட் ரன்னர் . வீரக்குணமில்லாமல் வளரும் அமீர் அந்த வருடத்திய பட்டத் திருவிழாவில் எல்லாருடைய பட்டங்களையும் வெட்டுகின்றான். கடைசிவரையில் பறக்கும் பட்டத்தை பறக்கவிட்டிருப்பவனுக்கு எத்தனை பாராட்டோ அத்தனை பாராட்டும் கடைசியாக அறுந்து வீழ்ந்த பட்டத்தைப் பிடிபவனுக்கும் உண்டு. கடைசியாக அறுந்து வீழ்ந்த பட்டத்தைப் பிடிக்க எல்லா சிறுவர்களும் ஓடுகின்றனர், அமீரின் வேலைக்கார நண்பன் ஹஸனும் ஓடுகின்றான், பட்டம் பிடிப்பவனாக. கடைசி வரையில் பறக்கும் தன் பட்டத்திற்கான அனைவருடைய பாராட்டுகளையும் வாங்கிக்கொண்டு அமீரும், அறுந்...

The Kite Runner - புத்தகம், எனது பார்வையில் 1/4

தாலிபான் பின்னணியானது கதைக்களனின் ஒருபகுதியாக இருக்கும் நாவல்களில் நான் படித்த இரண்டாவது நாவல். முதலாவது ஃப்ரெட்டிக் ஃபோர்சித்தின் த ஆஃப்கன், இரண்டாவது இது, காலித் ஹொஸைனியின் த கைட் ரன்னர் . த கைட் ரன்னரை வாங்கி வரும்போதே இதுவும் காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ், ரூட்ஸ், ப்ரெத்ரன் போல பாதி படிக்கப்பட்டு மீதி முடிக்கப்படாமல் அலமாரியில் தூசிக்கு நடுவில் உறங்கப் போகிறதோ என்றே நினைத்தேன். நல்லவேளையாக அப்படி ஏதும் நிகழவில்லை, படித்து முடித்தாயிற்று. ரஷிய ராணுவ ஆக்கிரமிப்பு (அல்லது வரத்து), புரட்சி, தாலிபான் இவற்றுக்கு முந்தைய காபூலில் கதை துவங்குகிறது. முந்தைய காபூலில் துவங்கி, ரஷிய ராணுவம், தாலிபான் வழியாக கதை நகர்ந்து தாலிபானின் ஆக்கிரமிப்பில் ஆஃப்கான் இருக்கும் காலகட்டத்தில் கதை முடிகின்றது. இந்நாவலில் சொல்லப்படும் தாலிபானின் உதயம், வளர்ச்சி குறித்த விவரணங்கள், பின்னணி இவற்றை ஃப்ரெட்ரிக்கின் ஆஃப்கானை அளவுகோலாகக் கொண்டு அணுகக்கூடாதென்ற முன் முடிவுடன் வாசித்த்ததால், ஒப்பீட்டுச் சிந்தனையில் ஆழாமல் கதையை ரசிக்க முடிந்தது. பணக்கார பஷ்த்தூனிய முதலாளியின் மகனுக்கும் அவர்களுடைய வேலைக்காரரின் மகனுக்கும் ...

பில்லா (அஜீத்) - வெற்றிப் படமாக வாய்ப்புகள் ஏராளம்

அடி தூள். ஒரே வரியில் சொல்வதானால் இதுதான். இந்தப் படத்திற்கான அளவுகோல் ரசிகர்கள்தான். அஜீத் ரசிகர்களின் நடுவில் அமர்ந்து இதனைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நடு என்றால் உண்மையான நடு - சென்னை உட்லேண்ட்ஸில் முதல் நாள் மதியக் காட்சி க்யூ-15 சீட்டு எண் என்றால் எப்படிப்பட்ட நடு என்று பார்த்துக்கொள்ளுங்கள். வெத்தலையப் போட்டேண்டி பாடலுக்கு இருக்கையின் மேல் ஏறி நின்று நடனம் ஆடுகிறார்கள். அஜீத்தை எதிர்த்து பிரபு வசனம் பேசும்போது பிரபுவை எதிர்த்து ரசிகர்கள் குரல் கொடுக்கிறார்கள். ஒய்.எஸ்.ஆரின் அற்புதமான துவக்க இசையைக் கேட்க இயலவில்லை. விசிலும் உற்சாகக் குரல்களுமாக அரங்கம் அதிர்கிறது. சென்னை சத்யம், உட்லேண்ட்ஸ் திரையரங்குகளில் செவ்வாய்க்கிழமை வரையில் முன்பதிவுகள் தீர்ந்திருக்கின்றன. கள்ளத்தனமாக நாற்பது ரூபாய் சீட்டு இருநூற்றைம்பதுக்கு விலையாகின்றது. சனி ஞாயிறுகளில் முன்னூறு முன்னூற்றைம்பது ஆகிவிடும் என்கிறார்கள். துண்டு துண்டாக வெட்டப்பட்ட காகிதங்களை பைகளில் எடுத்து வந்து திரையருகில் சென்று அஜீத் தோன்றும்போது பறக்கவிடுகின்றார்கள். இவையெல்லாம் வெற்றிக்கான அறிகுறிகள். சும்மாவேனும் சொல்லவேண்டும...

தஸ் கஹானியா(ன்) - திரைப்படம் எனது பார்வையில்

சென்னை எக்கச்சக்கமாக மாறியிருக்கிறது. மெலடி திரையரங்கில் சீட்டு தரும் இடத்தில், "ஷோ கித்னே பஜே ஷுரூ ஹோகா" என சாதாரணமாக ஒரு செம்பட்டைத் தலை ஒல்லிப்பிச்சான் வடக்கத்தியர் கேட்கிறார். "நோட்டீஸ்ல போட்டுக்குது பார் ட்வல் தர்ட்டின்னு" என நம்மவர் பதில் சொல்கிறார். இவர் கேட்டது அவருக்குப் புரிய, அவர் சொன்னது இவருக்குப் புரிய, தமிழ் - இந்தியில் இருவரும் உரையாடிப் போகிறார்கள். அரங்கத்தின் உள்ளே, "யே சி ரோ ஹைனா, நௌ நம்பர் கஹான் ஹை" எல்லாம் இந்தியிலேயே கேட்கிறார்கள். 10, 11 இருக்கை எண் கிடைத்து முன்னமே சென்று அமர்ந்துவிட்டால் இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லத் தயாராக இருக்கவேண்டும். சர்தாரிணிகள் "ஹே துசி..." யில் துவங்கி என்னென்னவோ பஞ்சாபியில் 'கப்ஷப்' அடிக்கிறார்கள். சல்வார் கமீஸ் உடையை அதற்குரிய முறைப்படி அணிபவர்களுள் வயதான சர்தாரிணிகளும் ஒருகூட்டத்தினர் என்னும் எண்ணம் இன்னமும் உறுதிப்படுகிறது. திரையரங்கம் வெறுமனே திரைப்படம் பார்ப்பதற்கு மட்டுமல்ல, அங்கே நகரின் சில முகங்கள் காணக்கிடைக்கும். தஸ் கஹானியான் . பத்து கதைகள், பன்னிரண்டு ரீல்கள...

கல்லி கிரிக்கெட் - சென்னை-600028

ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணியளவில் சென்னை கடற்கரைச் சாலையில் உழைப்பாளர் சிலை முதல் காந்தி சிலை வரையிலும் பயணம் செய்திருப்போர் இந்தக் காட்சிகளைக் கண்டிருப்பார்கள். மணலை ஒட்டியிருக்கும் சாலையில் வழிநெடுக ஸ்டம்புகள்தான். குறுக்காக, நெடுக்காக, ஓரம், நடு எதையுமே விட்டுவைக்காமல் எல்லாமும் பிட்சுகளாகி எந்த ஃபீல்டர் எந்த டீம், யார் அடிக்கும் பந்தை யார் பிடிப்பார் என்பதே விளங்காத அளவிற்கு கிரிக்கெட் விளையாடுகிறார்கள். யாரேனும் ஒரு கேட்சை தவறவிட்டாலும் அற்புதமான சென்னைத் தமிழின் ஆதார வார்த்தையுடன் துவங்கும் வசவு வாங்கப்போவது உறுதி. காஜி, காண்டு, பிஸ்த்து, தௌலத்து எல்லாம் புதுப்புது அர்த்தங்களுடன் சர்வ சாதாரணமாக பேச்சில் வந்து விழுகின்றன. சென்னையில் பிறந்து வளர்ந்து சென்னைத் தமிழைப் பேசவேண்டிய இடங்களில் பேசி, இப்போதும், 'ங்கண்ணா, சைடு வுடுண்ணா', 'நவுர்ண்ணா', 'ன்னா வர்ர(து) தெர்லியா' என்பதெல்லாம் தினசரி பேசும் நான்கூட இந்த சென்னைத் தமிழ் வழக்கின் முன்னால் காலாவதியாகிப்போனதாக உணர்கின்றேன். இன்னமும் நூறு சொல்லப்படாத சென்னை-600028உம், சுண்ணாம்புக்காவாயும், விசாலாட்சித் தோப்...

மாதுரி, பாடல், சர்ச்சை - சில கோவையற்ற எண்ணங்கள்

நடனப் பயிற்சியாளர் சரோஜ்கானும், ஸ்ரீதேவியும் இனிமேல் இணைந்து பணியாற்றுவதில்லையென ஒருவருகொருவர் நட்புடன் தொழில்முறையில் பிரிய முடிவெடுத்த காலகட்டத்திற்குக் கொஞ்சம் முன்னே பின்னேதான் மாதுரி தீக்ஷித்திற்கு தேஸாப் திரைப்படத்தில் சரோஜ்கானின் நடன அமைப்பிற்கு ஆடுகின்ற வாய்ப்பு மாதுரிக்குக் கிடைத்தது. ஜாவீத் அக்தரின் 'ஏக் தோ தீன்' எல்லா இடங்களிலும், அதாவது, இரவு விடுதிகள், திருமண ஊர்வலங்கள், தேநீர்க்கடைகள், ஏன், நமது பலகுரல் வித்தகர் மயில்சாமிகூட ஏக் தோ தீன் பாடலை கிருபானந்த வாரியார் சுவாமிகள் பாடினால் எப்படிப் பாடியிருப்பார் என பாடிக்காட்டினார். அந்த அளவிற்கு வடக்கு தெற்கென வித்தியாசம் இல்லாமல் பாடல் வெற்றி நடைபோட்டது, மாதுரி + சரோஜ்கான் கூட்டணியும். வெறுமனே எண்கள்தான் அந்தப் பாடலில் என்றாலும் இயைபுக்காக அவற்றைப் பிரித்து அடுத்த அடிகளில் சரியான இயைபைப் பொருத்தி, அதில் விரகத்தைச் சொல்லி, லக்ஷ்மிகாந்த் - ப்யாரிலாலின் இசையில் அச்சு அசல் இசைத்தட்டு நடனப் பாணியில் இசையும் நடனமும் அனைவரையும் தலையாட்ட வைத்தன. பாரா தேரா (பன்னிரண்டு பதின்மூன்று) என முடியும் வரிகளைத் தொடர்ந்து, தேரா கரூன் தேரா ...

பில்லா (புதுசு) பாடல்கள் - எனது பார்வையில்

உள்ளூர் முனைக் கடையில் வந்த கேசட்டுகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. அடுத்த கடை வடபழனி ராஹத் ப்ளாசாவில் தான். கமலாவில் அடிமைப்பெண்ணிற்கு கூட்டம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்கவும், பில்லா கேசட் வாங்கவுமாக ஒரே சவாரி இரண்டு காரியங்களாகப் புறப்பட்டேன். கமலாவில் கூட்டம் பரவாயில்லை. ராஹத்திலும் கேசட்டுகள் தீர்ந்துவிட்டன. நான் சென்றபோது ஒரேயொரு கேசட்தான் ஸ்டாண்டில் இருந்தது. அது வேறு யாருக்காகவேனும் இருக்கட்டும், சிடிதான் ஹோம் தியேட்டருக்கு சரியென்று சிடியை வாங்கினேன். வொய்.எஸ்.ஆர். என நான் நண்பர்களிடம் குறிப்பிடும் யுவன் ஷங்கர் ராஜா, புதிய பில்லாவில், சில இடங்களில் அடித்து தூள் கிளப்பியிருக்கிறார், சில இடங்களில் கொஞ்சம் சொதப்பியிருக்கிறார். புதிய பில்லாவை ரஜினி நடித்த பில்லாவின் மறுபதிப்பு என்கிறார்கள்...அதெல்லாம் சரி, எனக்கென்னவோ ஷாருக் நடித்த டானின் மறுபதிப்போ என்றே தோன்றுகிறது. காரணங்கள் இரண்டு. முதலாவது, ரஜினியின் பில்லா என்றால், அப்பாவி அஜீத்தின் அறிமுகம் 'நாட்டுக்குள்ள எனக்கொரு ஊருண்டு' மாதிரியான பாடலைக்கொண்டே ஆகியிருக்கவேண்டும். அதுபோன்ற பாடலே புதிய பில்லாவில் இல்லாமல், அப்...

நன்றிகள்

ஏழு நாள்களாக முகப்பில் எனது இடுகைகளை வெளியிட்டமைக்கு தமிழ்மணத்தார்க்கு மிக்க நன்றிகள். பதிவிற்கு வருகை தந்த, வாழ்த்துச் சொல்லிய, பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள். அதுவாகத் தோன்றி பதிவு எழுதுவதற்கும், இன்றைக்கு ஒரு பதிவு எழுதவேண்டுமென்று எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. முன்னதில் சுதந்திரமும் பின்னதில் பொறுப்பும் கேளாமல் வந்துவிடுகின்றன. இங்கே பாதி சுதந்திரம், பாதி பொறுப்பும் கலந்து அதிகமான வாசகர்கள் வரக்கூடும் என்னும் உந்துதலால் வழமையான பதிவுகளினும் மாறுபட்டு இருக்க முயற்சி செய்தும், வழமையான குசும்பு இரண்டு பதிவுகளில் முந்திக்கொண்டது. சல்தாஹை. குசும்பினால் இரண்டு மரபுக்கவிதை எழுத முடிந்திருக்கிறது என்னும் பார்வையில் குசும்பும் நல்லதே. நட்சத்திர அந்தஸ்தை அனுபவித்த மகிழ்வுடன் நேரம் கிடைக்கும்போது பதிவுகள் தொடரும் சகஜ நிலைக்குத் திரும்புகின்றேன். அன்புடன் ஆசாத்

வணிக இலச்சுத் தூதுவர்கள் (brand ambassadors)

வடக்கிற்கு காஜோல், தெற்கிற்கு திரிஷா என மிகத் தெளிவாக சந்தையைப் பிரித்துக்கொண்டு, அவர்கள் இருவரையும் தமது வணிக இலச்சின் தூதர்களாக்கிய டாடா இண்டிகாமைப் போலவே, சமீபத்திய வோடோஃபோனும் சந்தை விளம்பரத்தை (வணிக இலச்சு தூதர்களை) வடக்கு தெற்காக பிரித்துக்கொண்டது. வடக்கே இர்ஃபான் கான், தெற்கே பிரகாஷ் ராஜ். இந்த வடக்கு தெற்கு விவகாரத்திற்கே ஆளாகாமல் அகில இந்திய அளவில் ஷாருக்கானிற்கு இருக்கும் பிரபலத்தின்மேல் அபார நம்பிக்கை வைத்து தமிழ் டப்பிங் குரலுடன் ஷாருக் தென்னகத்தில் ஏர்டெல்லை சந்தைப்படுத்துகிறார். திரைப்படம் வெளிவருவதற்கு முன்னர் விமர்சனங்கள் வருவதைப்போல ஏர்செல்லின் இந்த விளம்பரம் வெளிவருவதற்கு முன்னரே சூர்யாவின் விதவிதமான ஒப்பனைகள் குறித்த கருத்துகள் வெளிவந்தன. இந்த பரபரப்பு எதிலும் கலந்துகொள்ளாமல் பி.எஸ்.என்.எல். தங்களை பிரீத்தி ஸின்தாவை முன்னிறுத்தி அடையாளம் காட்டிக்கொள்கிறார்கள். இப்படி அனைத்து தொலைதொடர்பு சேவையரும் யாரேனும் ஒரு பிரபலத்தை தங்கள் வ.இ.தூதராக முன்னிறுத்தி செயல்படுவதால் மட்டுமே அவர்களது சந்தைப் பங்களிப்பு தேவைப்படும் விகிதத்தில் இருப்பதில்லை. விளம்பரமும் வ.இ.தூதர்களும் குறி...

குண்டு வெடிப்பு - சில கோவையற்ற எண்ணங்கள்

எழுதுபவரின் வாழ்வின் ஒருபகுதியாக இல்லாத அக்கறைக்காக அவர் எழுதும் அக்கறையான விவரங்கள் எழுத்தளவில் இருக்கவே தகுதியுள்ளவை. அதாவது, சமூக அக்கறை குறித்த எந்த எழுத்தும், எழுதுபவரின் வாழ்வின் நீட்சியாக இருக்கும்பட்சத்தில்தான் அந்த எழுத்தின் தாக்கம் படிப்பவர் மனதில் நிலைக்கும், இல்லையெனில் அவை வெறும் அச்சடித்த காகிதங்களே. விவரங்களின் தொகுப்பாக வேண்டுமானால் அப்படிப்பட்ட எழுத்துகள் இருக்கலாம், சமூக அக்கறையின் பிரதிபலிப்பாக வேண்டுமானால் அந்த விவரணப் பதிவை ஏற்றுக்கொள்ளலாமேயன்றி, அந்த எழுத்து அது எழுதப்பட்ட அக்கறையான விஷயத்திற்காக சமூகத்தில் ஏதும் மாற்றத்தைத் தராது. இது எனது தீர்மானமான புரிதல். இதன் அடிப்படையில் சமூக அக்கறையுடன் ஏதாவது எழுதத்தலைப்படும்போது மனம் ஒப்புவதில்லை. எந்தவிதமான துயர்மீட்பு சேவை மையங்களுடனும் தொடர்பில்லை, காவல்துறையிலோ, ராணுவத்திலோ சேர்ந்து நாட்டுக்காக உழைக்கவில்லை, தனக்கென்று வாழாமல் பிறர்க்கென வாழ்ந்து அங்கும் இங்கும் ஓடி துன்பப்படுவோரின் இன்னல் தீர்ப்பதில்லை, தன்னைச் சுற்றி இத்தனை நடக்கிறதே எனப் பொங்கி எழுந்து புரட்சிக் கவிதைகள் வடித்து எந்த இயக்கத்திற்கும் பாடுபடுவதில்லை...

பொல்லாதவன் - விமர்சனம் அல்ல

பாடல்கள் குறித்து: நீண்ட நாள்களாகவே நினைத்துக்கொண்டிருப்பதுதான், ஒரு படத்தில் நான்கைந்து பாடலாசிரியர்கள் பாடல்கள் எழுதியிருக்கையில் பெயர் காட்டும்போதே யார் எந்தப் பாடலை எழுதியது என்று அதிகப்படியான விவரத்தை ஏன் திரை உலகோர் தருவதில்லை. அடிமைப்பெண், காதல் ஓவியம் இந்த இரண்டு படங்களில் அப்படிப் பார்த்தது சட்டென நினைவிற்கு வருகிறது. இன்னும் சில படங்களில் இருந்திருக்கலாம். ஒருவேளை இன்றைய பொல்லாதவனிலும் அப்படி அவர்கள் ஏதாவது விவரம் காட்டி நான் பார்க்கத் தவறிவிட்டேனோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. இது என்ன உத்தியோ? ஒலிநாடாவை வாங்கிப் பார்த்துக்கொள் என்கிறார்களோ? சில படங்களில் ஒலிநாடாவின் அட்டையிலும் கவிஞர்களின் பெயரைப் போடுவதில்லை. அப்படி என்னதான் திரைக்கவிஞர்களின் பாடல்களை அடையாளம் காட்டுவதில் இவர்களுக்குத் தயக்கம் என்பது விளங்கவில்லை. ஒலிப்பேழையை இன்னும் வாங்காததால், இணையத்தில் ம்யூசிக் இண்டியா ஆன்லைனைப் பிடித்து பாடல்களின் கவிஞர்கள் யார் யார் என்பதைப் பார்க்கவேண்டியதாக இருக்கிறது. 1. எங்கேயும் எப்போதும் பாடலின் மறுகலவைக்குத் தேவைப்பட்ட வரிகளை யுகபாரதி எழுதியிருக்கிறார். 2. அலிபாபா தங்கம் யா...

கண்ணதாசன் - எண்சீர் விருத்தம்

கண்ணதாசன் நானொலிக்கும் பேச்சுக்குள் அங்கு மிங்கும் . நற்றமிழின் சொல்லாடல் வேண்டி யன்று வானொலியின் அருகாமை பால பாடம் . வந்ததெனச் சொன்னாலும் குற்ற மில்லை! ஏனொலித்த திப்பாடல் என்றெண் ணாமல் . என்றென்றும் அழகியலில் நீந்தி நெஞ்சில் தேனொலிக்கும் கவியரசு நீயு ரைத்துத் . தெரிவித்த இலக்கியத்தில் வாழ்ந்த துண்டு! அத்திக்காய் அரிச்சுவடி சொல்லித் தந்தாய் . அவள்பறந்து போனதையும் பார்க்க வைத்தாய் முத்தத்தில் மோகத்தில் மூழ்கி நின்றாய் . முக்கண்ணர் நாகத்தை நீதி கேட்டாய் சித்தத்தில் வேதாந்தம் வேண்டி யன்று . சீராறு கட்டளைகள் பாடி வைத்தாய் எத்திக்கில் உன்பாடல் செல்ல வில்லை . என்றுன்னைப் பேசாத நெஞ்ச மில்லை எல்லைகள் திரையுலகில் மட்டு மில்லை . எழுதியவை இவையென்ற எல்லை யில்லை சொல்லுக்குள் பொய்யுரைகள் கொண்ட தில்லை . சோகத்தை எழுதாமல் விட்ட தில்லை கல்லெறிந்து வைத்தாலும் தமிழைத் தானே . கவிதைகளாய் எறிந்திட்ட சிந்தை செய்கை இல்லையொரு திரைக்கவிஞன் இங்கே யின்று . இவரைப்போல் என்றுரைத்தால் பொய்யாய்ப் போமோ? அன்புடன் ஆசாத்

சினேகா(ட்சீர்) - மொக்கையோ ஜொள்ஸோ ஏதோ ஒண்ணு

வெண்பா(வனா) பதிவில் போட்டது மொக்கையல்லவென்றும் ஜொள்ஸென்றும் பெருவாரியன நண்பர்கள் சொன்னதால், தலைப்பு தரும் உரிமையை அவர்களுக்கே தருகின்றேன். இது மொக்கையோ? ஜொள்ஸோ? எதுவாகவும் இருக்கட்டும், எனக்கு மிகவும் பிடித்தமான எண்சீர் விருத்தத்தின் நான்கு வரிகள் எழுத இந்தப் பதிவு உதவுகின்றது. எட்டுச்சீரென்றாலே அமுதம் கொட்டுச்சீர், அதிலும் முத்துப்பரல்களைப் ;-) பற்றி எட்டுச்சீர் எழுதுவதென்றால் இரட்டிப்பு மகிழ்ச்சி. அன்றந்த கொற்கைக்குப்1 பயணம் செய்து . அருமுத்தைக் காண்தமிழன் ஆனேன் அல்லன் இன்றந்த ருசியத்து2 வீதி சென்று . இணைமுத்தைக் கண்டேனா இன்னும் இல்லை என்றெந்தன் பயணத்தில் ஜப்பான் சென்று . எழில்மிக்கி மோட்டோவைக்3 காணக் கூடும் நன்றென்று நான்கண்ட முத்துக் கோவை . நாள்தோறும் இங்கென்றால் குற்றம் ஏனோ? 1. கொற்கை - முத்துகளுக்குப் பெயர் பெற்ற அன்றைய துறைமுகம் 2. ருசியா - ரஷியா. அங்கே குறைந்த விலையுள்ள முத்துகள் கிடைக்கும் 3. மிக்கிமோட்டா - ஜப்பான் நாட்டில் புகழ்பெற்ற முத்து வணிக நிறுவனம் *** சிறிய விளக்கம்: ஆட்சீர் - 'ஆட்' என்றால் உருதுவில் எட்டு, 'சீர்' தமிழ். எண்சீர் விருத்தங்களை அடிக்கடி எழ...

கார்கோ சர்வீஸ் - எனது பார்வையில்

அனைத்து வாழ்வியல் அணுகுமுறைகளிலும் சேவைகளால் ஏற்படும் வசதிகள் கூடியிருப்பதைப்போல் நடுத்தர, கீழ்நடுத்தர வளகுடாவாசிகளின் இந்திய வருகைகளிலும் நிறைய வசதிகள் கூடியிருக்கின்றன். எழுபதுகளின் இறுதி வரையிலும் எண்பதுகளின் துவக்கத்திலும் அங்கிருந்து பெட்டி கட்டி இங்கே பெட்டியைக் கொண்டுவந்து அவிழ்க்கும் வரையில் படாத பாடுபட்ட கதைகள் ஆயிரம் உண்டு. பணமாற்றுவிகிதத்தால் ஏதோ வருவாய் அதிகமாக இருப்பதான தோற்றத்தில் தூரத்து உறவுகளையும் திருப்திப்படுத்த வாங்கிக் குவித்த பரிசுப்பொருள்கள் பாதியும், 'எங்கள் வீட்டில் இதைத் தந்துவிடு' வகையறாக்களில் அடுத்தவருக்காகச் சுமக்கும் சுமை மீதியுமாகத்தான் பெட்டி நிறையும். சுங்க அதிகாரிகளால் பெட்டி திறக்கப்பட்டு தீர்வை அதிகமாகிவிடாமல் பத்திரமாக வீடு செல்லவேண்டுமே என்னும் நினைப்பில் விமானப் பயணத்தின் சுகத்தை அனுபவிக்க இயலாத மனநிலையில் பயணம் செய்தவதே விதியாக இருந்தது. பரிசுப் பொருள்கள் வாங்குவதும் எடுத்து வருவதும் அவரவர் சூழல் அனுமதிக்கும் விஷயம். ராணி முகர்ஜியின் 'மன்ச்' சிலும், அமிதாபின் குற்றியலுகரமில்லாத 'முத் தூ பாஸாயிட்டான் ஸ்வீட் எ டூ கொண்டா டூ ...