இனி நாவல் குறித்த எனது எண்ணங்கள்.
தாலிபானின் வீழ்ச்சி சில நல்ல கதைகளை (உண்மைக் கதைகளை) அளித்திருக்கின்றது. மனீஷா நடித்த திரைப்படம் - இது நாவலாகவும் வந்தது, த ஆஃப்கான் (நாவல்), காபூல் எக்ஸ்ப்ரஸ் (திரைப்படம்), த கைட் ரன்னர் (நாவல், திரைப்படம்). இவை நான்கும் இதனை எழுதும்போது சட்டென நினைவிற்கு வருபவை.
இன்னமும் யோசித்தால் கூடுதலாக இரண்டொன்று நினைவிற்கு வரலாம். இதில் காபூல் எக்ஸ்பிரஸில் தாலிபானின் வீழ்ச்சிக்குப் பிறகு தாலிபான்களில் யாரேனும் பொதுமக்களின் கையில் கிடைத்தால் என்ன கதிக்கு ஆளாவார்கள் என்னும் காட்சி படம் பிடிக்கப்பட்டிருக்கும். மனீஷா நடித்த படத்தில் நோன்புக் காலத்தில் குழந்தைக்காக ரொட்டி சமைக்கும் தாய்க்கு தாலிபான்கள் தண்டனை தரும் காட்சி. ஆஃப்கனில் ஃப்ரெட்ரிக் மிகவும் சாமர்த்தியமாக எந்த அரசியல் அமைப்பையும் நாட்டையும் குறை கூறாதபடி மேலோட்டமாக (டிப்ளமாடிக் - எப்படி தமிழ்ப்படுத்துவது?) எடுத்துச் செல்வார்.
மூக்கு ஆபரேஷனுக்குப் பின்
சாப்பிட்ட பின்
விடுதலைக்குப் பின்
காங்கிரசிற்குப் பின்
சதாமிற்குப் பின்
பின்நவீனத்துவம்
இப்படி வழமையான 'பின்' விவகாரம் தாலிபானுக்கும் அமைந்து நன்றாக சந்தைக்கு வந்திருக்கிறது. தவறேதும் இல்லை. அன்றைய மக்களின் சிந்தனை ஓட்டத்திற்குத் தேவையானதைத் தருவதும் நுண்கலைகளுக்கு அவசியமாகின்றது. இந்தப் பார்வையில் த கைட் ரன்னரைப் படிக்கலாம்.
அதிகமான வாசிப்பு அனுபவம் இல்லாததால் இந்த நாவல் சரியல்ல, தாலிபானை மோசமாக சித்தரித்திருப்பதால் மேற்கில் இதனைக் கொண்டாடுகிறார்கள் என்று உறுதியாகச் சொல்ல இயலவில்லை. தாலிபான் சித்தரிப்பு காரணமாகவே மேற்கில் கொண்டாடுகிறார்கள் என்றால், ஜான் க்ரிஷாமின் டைம் டு கில் ஆரியர்களை (ariyan race) மோசமாகச் சித்தரித்ததே அதையும் கொண்டாடினார்கள். ஆக, தாலிபான் சித்தரிப்பு மட்டும் இதனைக் கொண்டாடக் காரணமாக இருக்க இயலாதென்னும் நினைப்பு தோன்றுகிறது.
மற்ற அதிவிற்பனைகளை (பெஸ்ட் ஸெல்லர்ஸ்) அளவுகோலாகக் கொண்டு இந்நாவலை அணுகினால், இது ஜனரஞ்சகத்திலும் சேர்த்தியில்லாமல், விருது வாங்கும் வகையிலும் சேர்த்தியில்லாமல் இடைப்பட்ட நிலையில் ஊசலாடுவதாகத் தோன்றுகிறது. கதையின் முக்கியமான சில திருப்பங்களின் நிகழ்வுகள் அதீத கற்பனையின் விரிவாக்கமாகி திணிக்கப்பட்டாற்போன்று ஒட்டாமல் நிற்கின்றன.
முதலாவது, அமீர், ஹஸன் இருவரின் இளவயது வில்லன் ஆசி ஆசிஃப் வளர்ந்த பின்னரும் தாலிபானாகி வில்லனாக அமீரின் முன்னால் நிற்பதை ஏற்க இயலவில்லை.
ஹஸனின் மகனை மீட்டுவருவதற்காக பாகிஸ்தானிலிருந்து ஆஃப்கானுக்குப் புறப்பட்டதுமே அமீருக்கு கோழைத்தனம் நீங்கி ஒரு பஷ்தூனுக்கு இருக்கவேண்டிய வீரக்குணம் வந்துவிடும் கதையமைப்பு. மீண்டும் அமீரின் வீரத்தை நிரூபிக்க ஆசிஃப்தான் அங்கு வரவேண்டுமென்பது அவசியமற்றது. 'பச்சீஸ் ஸால் பெஹ்லே ஜப் மைனே கப்பர் சிங் கா பீச்சா கர்ரஹாத்தா' என சஞ்சீவ் குமார் ஷோலேயில் பேசுவதுபோன்ற அமைப்பு இது. திரைக்கு சரியாகலாம், ஆனால், எல்லாரும் பாராட்டும் நாவலில் இந்த அமைப்பு செருகப்பட்டாற்போல் இருக்கிறது.
இரண்டாவதாக, அதுவரையில் இறையச்சமே இல்லாத அமீர், சொஹ்ரபிற்கு ஆபத்து என்றதும் நான் இனிமேல் ஒழுங்காகத் தொழுவேன், ஜகாத் கொடுப்பேன் என்றெல்லாம் புலம்புவது இந்திப் படம் பார்க்காத வாசகர்களுக்கு வேண்டுமானால் அதிசயமாகத் தோன்றலாம். நமக்குதான் கடைசி நேரத்தில் மனம் மாறும் கதாபாத்திரங்களுடன் தலைமுறை தலைமுறையாகப் பழக்கமாயிற்றே, அதனால், பொரித்தெடுக்கிறது.
மூன்றாவதாக, அமீரை ஆசிஃபிடமிருந்து ஹஸனின் கவட்டை வில் காத்ததுபோல் வலுக்கட்டாயமாக இன்னொரு நிகழ்விலும் ஹஸனின் மகன் சொஹ்ரபின் கவட்டை வில் ஹஸனை ஆசிஃபிடமிருந்து காப்பது போல அமைத்திருப்பதைப் படிக்கும்போதே செயற்கையென்று ஒதுக்கித் தள்ளத் தோன்றுகிறது.
இவற்றை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், இழுவை என்று எங்குமே சொல்ல இயலாத சீரான ஓட்டம்.
இருபத்தைந்து வருட ஆஃப்கான் பின்னணியை கதையுடன் இணைத்திருக்கும் உத்தி. சரித்திர நாவலாக இல்லாமல், சரித்திரம் நிகழ்ந்தபோது அதனால் பாதிக்கபட்ட மக்களின் வாழ்வு சித்தரிக்கபட்ட விதம் நல்ல வாசிப்பு அனுபவம். மன்னர் காலத்திய ஆஃப்கானில் அரசு உயர் பதவியிலிருந்து இப்போது அமெரிக்காவில் தஞ்சமடைந்து, சந்தையில் கடைபோட்டிருந்தாலும் ஆஃப்கான் பழைய நிலைக்குத் திரும்பும் அப்பொழுது தனக்கு அதே உயர் பதவி கிடைக்கும் என வறட்டு கவுரவத்தில் பேசும் மனிதருக்காக அனுதாபப்படலாம்.
எல்லைக் காவலில் இருக்கும் ரஷிய வீரன் அகதிகளை அனுமதிக்க பஷ்தூனியப் பெண் என்னுடன் அரைமணிநேரம் இருக்கவேண்டும் எனச் சொல்லும்போதும், எனது பிணத்தின் மீது சென்றால்தான் அந்தப் பெண்ணைத் தொட முடியும் என பாபா வெடிக்கும்போதும், பிரச்சனை சுமுகமாக முடிந்ததும் அந்தப் பெண்ணின் கணவன் பாபாவுக்கு நன்றி சொல்லும்போதும், அகதிகளாக ஓடி வருபவர்களின் வலி பிரதிபலிக்கபட்டிருக்கிறது.
கதையின் மைய முடிச்சான சிறுவனை சிறுவன் பாலியல் பலாத்காரம் செய்யும் நிகழ்வில் அமீர் எட்டிப் பார்த்த நிகழ்வுதான் நான் வாங்கிய புத்தகத்தின் அட்டைப் படமாக இருக்கிறது. ஆர்வமுடன் எதையோ பார்க்கும் சிறுவனாகத்தான் இருக்கும் என்பது அனுமானமாக இருந்து, பிறகு கதையே அமீரின் இந்த கோழைத்தனத்தைச் சுற்றிதான் நகர்கிறது என்றதும் அட்டையைக் கவனித்துப் பார்க்கத் தோன்றியது. பட்டம் விடும்போது நூல் அறுக்காமல் இருக்க விரலில் துணி சுற்றிக்கொள்வது வழக்கம். அட்டைப் படத்தில் இருக்கும் சிறுவனின் சுட்டு விரலில் துணி சுற்றப்பட்டிருந்ததைப் பார்த்து 'ஆஹா' என படத்தை சுண்டத் தோன்றியது.
திரைப்படமாகவும் சமீபத்தில் வந்திருக்கிறது. பார்க்க வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம்.
அன்புடன்
ஆசாத்
Comments
According to the information I recd., the movie yet to have a release date in Chennai.
In case of any more / updated / corrected information, I will share it with you.
Thanks for your comment and inquiry.
anbudan
Azad