Skip to main content

தஸ் கஹானியா(ன்) - திரைப்படம் எனது பார்வையில்

சென்னை எக்கச்சக்கமாக மாறியிருக்கிறது.

மெலடி திரையரங்கில் சீட்டு தரும் இடத்தில், "ஷோ கித்னே பஜே ஷுரூ ஹோகா" என சாதாரணமாக ஒரு செம்பட்டைத் தலை ஒல்லிப்பிச்சான் வடக்கத்தியர் கேட்கிறார். "நோட்டீஸ்ல போட்டுக்குது பார் ட்வல் தர்ட்டின்னு" என நம்மவர் பதில் சொல்கிறார். இவர் கேட்டது அவருக்குப் புரிய, அவர் சொன்னது இவருக்குப் புரிய, தமிழ் - இந்தியில் இருவரும் உரையாடிப் போகிறார்கள்.

அரங்கத்தின் உள்ளே, "யே சி ரோ ஹைனா, நௌ நம்பர் கஹான் ஹை" எல்லாம் இந்தியிலேயே கேட்கிறார்கள். 10, 11 இருக்கை எண் கிடைத்து முன்னமே சென்று அமர்ந்துவிட்டால் இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லத் தயாராக இருக்கவேண்டும். சர்தாரிணிகள் "ஹே துசி..."யில் துவங்கி என்னென்னவோ பஞ்சாபியில் 'கப்ஷப்' அடிக்கிறார்கள். சல்வார் கமீஸ் உடையை அதற்குரிய முறைப்படி அணிபவர்களுள் வயதான சர்தாரிணிகளும் ஒருகூட்டத்தினர் என்னும் எண்ணம் இன்னமும் உறுதிப்படுகிறது. திரையரங்கம் வெறுமனே திரைப்படம் பார்ப்பதற்கு மட்டுமல்ல, அங்கே நகரின் சில முகங்கள் காணக்கிடைக்கும்.

தஸ் கஹானியான். பத்து கதைகள், பன்னிரண்டு ரீல்களில். ஒரு கதை முடிந்ததும் இன்னொன்று, அப்படியே தொடர்கிறது. கதை துவங்கும்போது நடிகர்களின் பெயர், முடியும்போது இயக்குனரின் பெயர் இப்படியாகப் பிரித்துக்கொண்டதாகத் தோன்றுகிறது. கதைகளுக்கிடையே இடைவெளியெல்லாம் கிடையாது. ஒன்று முடிந்ததும் இன்னொன்றாக, தொடர்ச்சியாக, புதிய திரை அனுபவமாக இருக்கின்றது.

திருமண உறவை மீறிய நட்பானது மூன்று கதைகளின் கதைக்களனாக அமைந்திருக்கிறது. இரண்டு அமானுடக் கதைகள். வன்முறையும் நிழலுகமும் ஒரு கதையின் களனாக அமைந்திருக்கிறது. காதல், இயலாமை, மத நம்பிக்கை, ஏமாற்றம் இவற்றின் பின்னனியில் ஒவ்வொரு கதை.

திரைப்படம் குறித்து பார்வையை முன்வைப்பதற்கு முன், எந்த அளவுகோலின் அடிப்படையில் இதனை அணுகுகின்றோம் என்பதை எழுதவேண்டியது அவசியம். அப்படித்தான் Paris Je t'aime என்ற படத்தை (இந்தப் படம் குறித்து ஏதும் அறியேன்) அளவுகோலாக நிர்ணயித்துக்கொண்டு தஸ் கஹானியான்வை குப்பை என ஒதுக்கிவிட்டது ஐபிஎன் லைவ்.

டைம்ஸ் ஆஃப் இண்டியா வேறொரு ஜனரஞ்சக அளவுகோலை வைத்து படத்தை பார்க்கலாம் என பரிந்துரைக்கின்றது.

வழமையான மசாலாக் கதைகளிலிருந்து சற்றே வெளியே வந்த புதிய முயற்சி என்பதுடன், ஓரளவிற்கு இந்தி வணிகப்படங்கள், ஆர்ட் மூவீஸ் என்றழைக்கப்பட்ட சில படங்கள் இவற்றையொட்டியே எனது அனுபவம் அமைந்திருப்பதால், அவற்றையே அளவுகோலாகக்கொண்ட எனது பார்வையில், தஸ் கஹானியான்வை தாராளமாக அரங்கிற்குச் சென்று பார்க்கலாம். ஏமாற்றம் இருக்காது.

இனி கதைகள் குறித்து.

பத்து கதைகளில், ஒருபக்கக் கதைபோல் வருகின்ற இரண்டு கதைகள், ஒரு அமானுடக் கதை, ஒரு இயலாமைக் கதை இந்த நான்கையும் காட்சியமைப்பிற்காக ரசிக்கலாம், மற்றபடி கதையில் சுவாரசியம் இல்லை. மற்ற கதைகளில் ஒரு கதை மனதை உலுக்கியெடுக்கிறது. ஒரு கதை பயமுறுத்துகிறது. மீதி நான்கு கதைகளையும் அமைதியாக ரசிக்கலாம்.

வரிசைக்கிரமமாக கதைகளைச் சொல்வதைவிட நான் ரசித்தவற்றை முதலில் எழுதிவிட்டு மற்றதை கடைசியில் எழுத எண்ணம்.

1.மேட்ரிமோனி:
மந்திரா பேடி - அர்பாஸ் கான் கணவன் மனைவிக்கிடையே வெளிப்பூச்சு மேட்டுக்குடி வாழ்க்கை அமைந்திருப்பதைக் காட்டும் கதை. காலைச் சிற்றுண்டி முதலே இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் துவங்கினாலும், வெளிப்பூச்சு மனப்பக்குவம் எந்த வேறுபாட்டிற்கும் வெடித்துப் பொங்காத அணுகுமுறையைத் தர, அவரவர் அவரவர் வழியில். பேடிக்கு ராணுவ வீரர் ஒருவருடன் தகாத உறவிருக்கிறது. வீரருக்கு அஸ்ஸாம் எல்லைப் பகுதிக்குச் செல்ல கட்டளை கிடைக்கிறது. அவர் பேடிக்கு ஒரு கழுத்தணியும் மோதிரமும் அன்பளிப்பாக தந்துவிட்டுப்போக, கதையின் முடிச்சு ரசிகர்களுக்குக் கிடைக்கிறது.

"நான் அஸ்ஸாமுக்குச் செல்கிறேன், உடனே புறப்படவேண்டும்"

"உடனேவா? இதனை ஏன் மூன்று மணிநேரமாக மறைத்தாய்?"

"நீ வந்தவுடன் சொல்லியிருந்தால் இந்த மூன்று மணிநேரத்தையும் சேர்த்தல்லவா இழந்திருப்போம்"


...அமைதி...

அவன், "மறுக்காமல் நான் தரும் பரிசை ஏற்றுக்கொள்ளவேண்டும்"

.....

"எல்லைப் பகுதி ராணுவத்தில் கதாநாயகனாக வேண்டி ஏதும் செய்து தொலைக்காதே. உன்னைக் காத்துக்கொள் புரிகிறதா?"
அவள். மந்திராபேடியின் நடிப்பு எனக்குப் பிடித்திருந்தது.

நகைகளை கணவனுக்குத் தெரியாமல் மறைக்கவேண்டி பழக்கமில்லாத காரியமாக அடகுக் கடைக்குச் சென்று அதனை பேடி அடகு வைக்கிறார். ஐநூறு ரூபாய்க்கு ஏதோ பரிசு கிடைத்திருப்பதாகச் சொல்லி இன்னொரு சீட்டை அர்பாஸ்கான் மந்திராவிடம் காட்டி, இது என்ன பரிசு என்று பார்க்கப்போவதாகச் சொல்கிறான். அலுவலகத்திலிருந்து பரிசு மிகவும் அற்புதமானது என்று சொல்லவும் மந்திரா அதனைப் பார்க்கும் ஆர்வத்துடன் ஓடிவர, பரிசாகக் காட்டப்படும் பொருள் ராணுவ வீரன் மந்திராவுக்கு அன்பளிப்பாக அளித்த நகையில் மோதிரம் மட்டும். அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை. பரிசு நன்றாக இருக்கிறது என மழுப்பிவிட்டு வெளியே வந்து அவசர அவசரமாக அடகுக் கடைக்கு தொலைபேசுகிறாள்.

தற்செயலாக, அலுவலக வரவேற்பில் இருக்கும் பெண்ணின் கழுத்தில் பார்க்க - அது ராணுவ வீரன் மந்திராவுக்கு பரிசளித்த நகை. கழுத்து நகை இன்னொருத்தியிடம், அதன் மோதிரம் இவளிடம். இத்துடன் கதை முடிகின்றது.

சொன்னதைவிட சொல்லப்படாத விவரங்களை ரசிகனை அனுமானிக்கவிட்ட விதம் எனக்குப் பிடித்திருக்கிறது.

2.பூரண்மாஷி:
அம்ரிதா சிங்கின் நடிப்பும் பஞ்சாபிய பாணி பேச்சும் கதையின் பலம். வீட்டின் விசேஷத்தில் அம்ரிதாவின் மகளுக்கு திருமணம் நிச்சயமாகின்றது. மகளை அலங்கரித்து சிகப்பு நிற மேலாடை அணிவித்து முக்காடு இடுகின்றார்கள், புதிய வளையல்கள் பூட்டுகிறார்கள். அடுத்த நாள் கணவர் வேலைக்காகப் புறப்படுகிறார். அடிக்கடி எரிந்து விழுகின்ற கணவராக பாத்திரப்படைப்பு. மனம் சோர்ந்திருக்கும் அம்மாவுக்கு மகிழ்வளிக்க மகள் தனது சிகப்பு நிற முக்காட்டை அம்மாவுக்கு இட்டு அழகு பார்த்து, தனது கை வளையல்களையும் கழட்டி அம்மாவுக்கு பூட்டுகிறாள். அப்படியே இருக்கவேண்டுமென்றும் எடுக்கக்கூடாதென்றும் அன்புக் கட்டளை.

தனது அலங்காரத்தைக் கண்ணாடியில் பார்த்ததும் பழைய நினைவுகள் வருகின்றன. என்றோ தனக்கு எழுதப்பட்ட காதல் கடிதத்த எடுத்துப் பார்க்கிறாள். ஒவ்வொரு பௌர்ணமியன்றும் உனது வீட்டுக் கதவைத் தட்டுவேன் என்ற வரிகள். அன்று பௌர்ணமி, அம்ரிதாவின் வீட்டுக் கதவு தட்டப்படுகிறது. அம்ரிதாவின் பழைய காதலன். அவளும் அவனைத் தொடர்கிறாள். அதிகாலையில் கண்விழித்துப் பார்க்கும்போது தான் வயல்வெளியில் இருப்பது தெரிய அவசரமாக முகத்தை மூடிக்கொண்டு வீடு திரும்புவதை ஓரிருவர் பார்த்துவிடுகிறார்கள்.

மகளின் மேலாடையை அணிந்திருந்ததால், அது அம்ரிதாவின் மகள்தானென்று ஊர்மக்கள் முடிவு செய்து கூட்டமாக வந்து சத்தம் போடுகிறார்கள். வயல்வெளியில் நொறுங்கிக் கிடக்கும் வளையல் துண்டுகளை எடுத்து வந்து காட்டி 'இது நான் ஆசையுடன் இவளுக்கு அணிவித்ததாயிற்றே, இதை மறக்க முடியுமா? இனி இவள் எனக்கு மருமகளாக வரத்தேவையில்லை' என்று சம்மந்தம் செய்த பெண்மணி விலகிப்போக, அம்ரிதா எதையும் சொல்ல இயலாமல் தவித்துக்கொண்டிருக்கும்போதே, கிணற்றடி - கூட்டத்தினர் சத்தம்போடும்போது அம்ரிதாவின் மகள் அணிந்திருந்த நீல நிற மேலாடை கிணற்றுச் சுவரில் - சத்தம் - கிணற்றில் மக்கள் எட்டிப் பார்ப்பது.

இப்படியாக கதை முடிகின்றது.

என்னை உலுக்கிய கதை இது.

3.Gubbare:
நானா படேகரும் இன்னொரு பெண்ணும்தான் பாத்திரங்கள். ஒரு பேருந்து, ஒரு அடக்கஸ்தலம் இவை இரண்டு மட்டுமே பின்னணி. இயல்பான உரையாடல்களால் மட்டுமே கதையை நகர்த்தியிருக்கிறார்கள்.

"விருந்தினர் அறை யாருக்கு - உனது அம்மாவுக்கா? விருந்தினர் அறையே தேவையில்லை"

"உன் அம்மா செய்து தந்த சாப்பாட்டுக்கூடையை கால்களால் நகர்த்தக் கூடாது, இதைத்தானே சொல்கிறாய்"


இப்படியான சின்னச்சின்ன விவாதங்களை பேருந்திலேயே நடத்துகின்றனர் ஒரு தம்பதியினர். பெண் கோபமாக எழுந்து அடுத்த இருக்கைக்குச் செல்ல அங்கே நானா படேகர் பலூன்களுடன் அமர்ந்திருக்கிறார். உரையாடல் துவங்குகிறது.

"நாங்களும் இப்படித்தான் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டை போடுவோம், மன்னிப்பு கேட்டுக்கொள்வோம். இந்த பலூன்களை வாங்கிச் சென்றால்தான் அவள் மன்னிப்பாள், கூடவே மன்னிப்புக் கேட்கும் அட்டையும். பதினோறு பலூன்கள், ஒன்று குறைந்தாலும் ஏற்றுக்கொள்ளமாட்டாள்."

தொடரும் உரையாடலில் பல விவரிப்புகள்.

பேருந்து நிற்கையில் நானா அட்டையை மறந்து இறங்கிவிடுகின்றார். இந்தப் பெண் எடுத்துக்கொண்டு தொடர, நானா அடக்கஸ்தலத்திற்குள் தனது மனைவியின் சமாதியில் பலூன்களைக் கட்டிவைத்து பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறாள். அட்டையை வைத்துவிட்டு பேருந்தில் வந்து ஏறி கணவனின் அருகில் அமர்ந்து தோளில் சாய்ந்துகொள்கிறாள்.

கதை முடிகின்றது.

4.ரைஸ் ப்ளேட்:
ஒருபக்கக் கதையின் கதைக் கருவாக இருந்தாலும் தேர்ந்த நடிப்பு, படமாக்கம் இவற்றால் அதிலும் விளையாடலாம்.

தென்னகத்து பிராமணப் பெண்மணியின் பாத்திரம் ஷபானா ஆஸ்மிக்கு, முஸ்லிம் பாத்திரம் நஸீருத்தீன் ஷாவிற்கு.

மிகவும் ஆசாரமான பெண்மணியானா ஷபானாவிற்கு அன்றைய நாள் சரியில்லாமல் துவங்குகிறது. பூனாவிற்குப் புறப்படும்போது பேத்தி தொலைபேசியில் அழைத்ததால் பணத்தை வீட்டிலேயே மறந்துவிட்டு இரயில் நிலையத்திற்கு புறப்படுகிறார். தொப்பி அணிந்த ஓட்டுனர் அமர்ந்திருக்கும் வாடகை வண்டியைத் தவிர்த்து சிவன் விஷ்ணு படங்களாக இருக்கும் வண்டியில் ஏறுகிறார். வண்டியின் சொந்தக்காரர்தான் இந்து, வண்டி ஓட்டி முஸ்லிம்தான் என்பது இறங்கும்போது தெரிகிறது. அதே வருத்தத்தில் செல்ல நஸீருத்தீன் மீது இடித்துகொள்கிறார். நஸீருத்தீன் உதவிக்கு வர, மறுக்கிறார். பணமில்லாமல் கைப்பையிலிருந்த சொச்ச சில்லறையை எண்ணி கணக்குப் பார்த்து ஒரே ஒரு சாப்பாட்டுத் தட்டை (ரைஸ் ப்ளேட்) வாங்கிக்கொண்டு அமர, கைகழுவ வேண்டியது நினைவுக்கு வருகிறது.

திரும்பிவந்து பார்த்தால், சாப்பாட்டை நஸீருத்தீன் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். பசி, சர்க்கரை வியாதி, காலையிலிருந்து உண்டான எரிச்சல் எல்லாம் அலைக்கழிக்க ஆவேசத்துடன் நஸீருத்தீனிடமிருந்து தட்டைப் பிடுங்கி சாப்பிடத் துவங்குகிறார். நேரமாகிவிட்டதை உணர்ந்து ரயிலுக்குச் செல்லும் அவசரத்தில் பைகளை எடுக்காமல் செல்கிறார். நினைவுக்கு வந்து திரும்பவும் வந்து பைகளைத் தேடும்போது, பைகளும் அவர் வாங்கிய சாப்பாட்டுத் தட்டும் இன்னொரு மேசை மீது இருக்கின்றது.

இத்துடன் கதையை முடித்திருக்கலாம் என்பது எனது பார்வை.

இன்னொரு காட்சியாக, இரயிலடியில் ஒரு முஸ்லிம் குடும்பத்தினர் வருவதும் ஷபானா தனது பைகை நகர்த்தி வைத்து அவர்களுக்கு இடம் கொடுப்பதாகவும் காட்சி அமைந்து கதையை முடிக்கின்றது.

5.ரைஸ் அன் ஃபால்:ச
சண்டைக் காட்சிப் பிரியனான எனக்கு இந்தக் கதை பிடித்திருக்கிறது.

சஞ்சய் தத் - சுனில் ஷெட்டி - மழையில் சண்டை - எனது ரசனையின் அளவுகோலின்படி இது அட்டகாசமான சண்டைக் காட்சி.

'பாபா, ஆஸ்திரேலியாமே செட்டில் ஹோஜாவ், பூரா பந்தோபஸ்த் மேனே கர்தியா' (பாபா, ஆஸ்திரேலியா போய்டு, எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன்). இது சுனில்

'யஹாங் கா தந்தா கோன் சம்பாலேகா' (இங்க தொழில யாரு பாத்துக்றது). இது சஞ்சய்

'மை ஹூன்நா' (நான் இருக்கன்ல).
சுனில் ஷெட்டியின் வில்லத்தனமான பேச்சு. என் போன்ற வனிகப்பட ரசிகர்களுக்கு இப்படிப்பட்ட வசனங்கள் மிகவும் பிடிக்கும்.

'பாபி கே சாத் ஹாஸ்பத்தால் மே யூசுஃப் ஹை' (அண்ணிகூட ஆஸ்பத்திரில யூசுஃப் இருக்கான்)

'தேரி மா பி காவ்ன் கயி ஹைனா' (உங்க அம்மா ஊருக்குப் போயிருக்காங்கல்ல)

இரண்டு வசனங்களிலுமே 'நீ அதிகம் பேசுனா, அவங்கள தூக்கிருவேன்'தான் மறைந்திருக்கும் பொருள். அட்டகாசம்.

இளம்பிராய நிகழ்வுகளையும் இன்றைய நிகழ்வுகளையும் ஏதோ இரண்டும் இப்போதுதான் நிகழ்வதைப்போல கதையை நகர்த்திய உத்தி எனது திரை அறிவிற்கு எட்டியவரையில் புதிதான அமைப்பு. இறந்து விழுகின்ற கடைசிக் காட்சியில்,

'யேய் அப்புன்கோ பொலிஸ் ஏக் நயா நாம் தியா ரே, பாபா' (போலீஸ் எனக்கு புதிய பெயர் தந்தது, பாபா)

'அப்புன்குபி நயா நாம் மிலா ரே, நவாப்' (எனக்கும் புதிய பெயர் கிடைத்தது, நவாப்)

இந்த வசனங்களுக்குப் பின்னர்தான் இரண்டு நிகழ்வுகளும் இப்போது நடப்பவையல்ல; வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பவை என்பது விளங்குகிறது.

6.லவ்டேல், 7.செக்ஸ் ஆன் த பீச், இரண்டும் அமானுடக் கதைகள். முன்னதில் அமானுடம் வந்து தனது பழைய காதலனின் மகளை மகனுக்கு மனைவியாக்குகின்றது, பின்னதில் அமானுடம் காமப் பேயாகி வாலிபர்களைக் கொல்கிறது. காட்சியமைப்புகளை ரசிக்கலாம்.

8.ஹை ஆன் ஹைவே:
வாய்ப்பு தேடும் இளம் இயக்குனர், அவனது நண்பி இளம் இயக்குனர் இவர்கள் இருவரின் வாழ்க்கை நிலை குறித்து சுஜாதாவோ பாலகுமாரனோ எழுதிய கதையில் படித்த விவரணங்கள் நினைவுக்கு வந்தன. சூழல் குறித்து கவலைப்படாமல் தான் தோன்றித்தனமான வாழ்க்கை வாழும் காதலர்கள். ஒருநாள் நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் காதலியை வெறியர்களிடமிருந்து காப்பாற்ற முடியாத சூழலுக்கு கிட்டத்தட்ட ஆளாகின்றான். சண்டையில் ஒருவன் தலையில் கல்லைப் போட்டுவிடுவதாகவும் காட்சி வருகின்றது.

மன உளைச்சலில் அன்றிரவு மணிக்கட்டை அறுத்துக்கொண்டு இறந்துவிடுகின்றான்.

பத்து கதைகளில் மிகவும் மோசமானது இதுதான்.

9.ஸாஹிர்:
இதுவும் ஒருபக்கக் கதைதான்.

எதிரெதிர் குடியிருப்பில் இருப்பவர்கள் மனோஜ் பாஜ்பாயும், தியா மிர்சாவும். அப்பொழுதே துணையை பிரிந்திருக்கும் மனோஜ், தியா மிர்சாவின் மேல் காதலாகிறார். தியா காதலை ஏற்க மறுக்கிறார். மும்பை விடுதிகளில் நடனமாடும் தொழிலில் தியா இருப்பது மனோஜுக்குத் தெரிய வருகிறது. குடிபோதையில் தியாவின் மேல் பாலியல் வன்முறை செய்கிறார். தியா ஏதோ சொல்லத் துடிக்க, இயலாமற்போகிறது.

தான் ஒரு எய்ட்ஸ் நோயாளி என்பதை தியா சொல்ல முயன்றதாக மனோஜ் சொல்லி அவள் இறந்துவிட்டாள், நான் இறப்பிற்காகக் காத்திருக்கிறேன் என்பதாக கதை முடிகின்றது.

10.ஸ்ட்ரேஞ்சர்ஸ் இன் த நைட்:
கவர்ச்சியாளர் நேஹாவும் மஹேஷ் மஞ்ரேக்கரும்.

ஒரு பக்கக் கதைதான், சொல்லிய நேர்த்தி அற்புதம்.

அந்த வருடத்தில் ஏதாவது பிழைகள் செய்திருந்தால் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளும் நாள் அது. அப்படியொரு வழக்கம் அந்த கணவன் மனைவியிடம்.

'அவன் விரல்களை முத்தமிட்டேன்' இப்படித்தான் துவங்குகிறது அவளுடைய வசனம். மனைவியின் தவறை கணவன் குத்திக் காட்டுவதாக வசனங்கள் தொடர்கின்றன.

'எங்கே நடந்தது இது', அவன்.

'இரயில் நிலையத்தின் ஓய்வு அறையில்'

'அடச்சீ, உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா'

'அவசியப்பட்டது. அந்த நிலையில் அவன் எதைக் கேட்டிருந்தாலும் கொடுத்திருப்பேன்'

'அந்த அன்னியன் துவங்கிய காரியத்தை முடித்திருப்பானே'

'இல்லை, பாதியில் விட்டுவிட்டான்'

அடுத்த நிகழ்வு மதக்கலவரத்தில் ஒரு முஸ்லிம் சிறுவன் பயந்து ஓடுவதும், ஒரு சமூக விரோதி சிறுவனைத் தொடர்வதும், சிறுவன் இரயில் நிலையத்தின் ஓய்வு அறைக்குள் நுழைவதும், அங்கு நேஹா தூப்பியா மட்டும் ஒதுங்கி இருப்பதும், சிறுவனை இன்னொரு அறைக்குள் அனுப்பி கதவை சாத்தி நேஹா நிற்பதும், சமூக விரோதி வருவதும், நேஹா வை நகர்த்த கையை உயர்த்துவதும் நேஹா அவன் கையை முத்தமிடுவதும், அவன் விலக்கிச் சென்று சிறுவனைத் தேடுவதும், சிறுவன் தப்பிவிடுவதுமாக நிகழ்ச்சிகள் காட்சிகளாக விரிகின்றன.

தான் இட்ட முத்தத்தை தவறாக எண்ணி கணவனிடம் சொல்லப்போக, கணவன் வேறு கற்பனையில் இருக்க, காட்சிகள் ரசிகனின் கண்முன்னே விரிகின்றன.

நேஹா ரசிகர்கள் பலருண்டு. அவர்களுக்கு விருந்து.

*

பத்து சிறுகதைகளைப் பார்க்கும் வித்தியாசமான திரை அனுபவத்திற்காக தாராளமாகப் பார்க்கலாம்.

அன்புடன்
ஆசாத்

Comments

Unknown said…
முசந்த் திரைவிமர்சனத்தை பார்த்து சென்ற வார விடுமுறையில் இந்த திரைப்படத்தை தவறவிட்டுவிட்டேன். உங்கள் விமர்சனம் திரைப்படத்தினை பார்க்க தூண்டுகிறது.

நன்றி.
சிவா
(sivaramang.wordpress.com)
ஒரு வித்தியாசமான அனுபவம்.

இங்கே எனக்குக் கிடைக்குமான்னு தெரியலை.

ரசித்துப் படித்தேன்.

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...