அண்ணாநகரிலிருந்து வந்து முகப்பேறுக்குள் நுழைந்ததும் சிறிய மகிழ்ச்சி. இன்னும் கொஞ்ச தூரத்திற்கு குண்டும் குழியுமான சாலை கிடையாது. போக்குவரத்தும் ஓரளவிற்கு சீராக இருக்கும். நெருக்கடியாகவே இருந்தாலும்தான் என்ன? வாகனம் குதித்து குதித்து குதிரை ஓட்டுகின்ற உணர்வையெல்லாம் கொண்டுவராத வழவழப்பான பாதை. முகப்பேறின் மூலையில் தொழிற்பேட்டை துவங்கும் வரையில் சாலை சீராக இருக்கும். அதன் பின்னும் அத்தனை மோசமில்லை. தொழிற்பேட்டையில் ஃபோர்டு, ஹெச்.சி.எல். எல்லாம் வந்து போனதும் கொஞ்சம் நெஞ்சை நிமிர்த்தி மூச்சை அதிகமாக உள்ளிழுத்து தேவைக்கும் அதிகமாக காற்றை நுரையீரலில் நிரப்பிக்கொள்ளலாம். உங்கள் வழி தனி வழியாக நேராகச் சென்று நடந்துகொண்டிருக்கும் பாலக் கட்டுமானப் பணிகளை குறுக்குவெட்டாகக் கடந்து தொழிற்பேட்டையின் குறுக்குச் சந்துகளுக்குள் நுழைவதாக இருப்பின் ஒன்றும் பிரச்சனை இல்லை. நிமிர்த்திய நெஞ்சை உள்வாங்கத் தேவையில்லை. ஆனால், தப்பித் தவறி கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருக்கும் சாலையில் நாம் பயணம் செய்யவேண்டிய சூழல் அமைந்ததேயானால் அபார பொறுமையும், தன்னம்பிக்கையும், வண்டியோட்டும் திறனும் இல்லாமல் கதை நடக்காது. ம...