ஆற்காடு சாலையானது போரூர் சந்திப்பில் முடியும் இடம் என்றைக்குமே போக்குவரத்து நெரிசலுக்குப் பெயர்போனது.
நெரிசலில் நீந்தும் வேளைகளில் சில சுவாரசியமான காட்சிகளைக் காணலாம். கிலோ ரூ.55இற்கு மாம்பழ வகை ரிலையன்ஸ் ஃப்ரஷ்ஷின் உள்ளே இருக்க, அதில் கால் பங்கு விலைக்கு அதே மாம்பழ வகையை தள்ளுவண்டிக்காரர் ஒருவர் ரிலையன்ஸ் ஃபரஷ்ஷின் வாசலிலேயே விற்றுக்கொண்டிருப்பார். போரூர் நடைபாதை அங்காடிகள் எங்கு முடிகிறதோ அங்கு ரிலையன்ஸ் ஃப்ரஷ் இருப்பதால் இந்த மேடுபள்ள வித்தியாசம் தெளிவாகக் காணக் கிடைக்கும்.
நடைபாதையில் கடை போடுவதற்காகக் குப்பையைப் பெருக்கி தனது கடைக்குப் பக்கத்தில் சிறிய மேடாகக் கட்டிவிட்டு, பெருக்கிய இடத்தில் நீர் தெளித்து கீரைகளை அடுக்கி வைக்கும் மூதாட்டியைக் காணலாம். பெருக்கித் தள்ளிய குப்பைக்கு அருகில்தானே கீரைகளை அடுக்கியிருக்கிறார் என வெளியூர்க்காரர்களும் கேட்கமாட்டார்கள்.
இப்படியான சுவாரசியங்களுடன் சேர்த்து இன்று இன்னொரு காட்சியும் காணக் கிடைத்தது.
குன்றத்தூர் சாலையிலிருந்து வந்து திரும்பும் ஒரு மாநகரப் பேருந்து பழுதாகி நகரமுடியாமல் நின்றுவிட்டது. நின்ற இடமோ, சரியாக நான்கு சாலைகள் சந்திக்கும் மையம். சாதாரணமாகவே நெரிசலில் அவதிப்படும் மக்கள் இந்த பழுதாகிப்போன பேருந்தால் தடைபட்ட போக்குவரத்தால் கூடுதல் அவதிக்கு ஆளானார்கள். அதிரடி வேகத்தில் கூடுதலாக அதிகாரிகள் வந்து வண்டிகளை பிரிவுகளாகப் பிரித்து எடுக்கச் சொல்லி ஓரளவிற்கு நெரிசலைக் குறைக்க முயற்சி செய்தார்கள். ஆனாலும், நின்றிருக்கும் பேருந்தை இழுத்துச் செல்ல கனஊர்தி வந்த பின், ஆற்காடு சாலையிலிருந்து வரும் வாகனங்களை முழுவதுமாகக் கொஞ்சநேரம் நிறுத்தி வைக்கவேண்டியதாகிவிட்டது.
கனஊர்தி வந்து, நின்று நிதானித்து திரும்பி, மாநகரப் பேருந்தின் பணியாளர்கள் பேருந்தின் கீழ் நுழைந்து இரும்புக் கயிறைக் கட்டி, அதன் மறு முனையை கனஊர்தியின் கொக்கிக்குள் மாட்டுவதற்கு சிரமப்பட்டார்கள்.
அப்பொழுது படபடவென மோட்டார்சைக்கிளில் வந்த அதிகாரி, திரும்புவதற்கு நின்ற வாகனங்களை திசைமாற்றச் சொல்லி சிறுசிறு ஆணைகளைப் போட்டுவிட்டு, கொக்கியிலிருந்து வழுவிக்கொண்டு வரும் இரும்புக்கயிற்றை சரியாகக் கட்டி "இப்ப இழு, சரியா வரும்" என பின்னே நகர்ந்து பேருந்து நகர்வதைப் பார்த்துவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கினார்.
அவர் வந்த வேகம், மற்ற காவலர்களுக்கு போக்குவரத்தை மாற்ற ஆணைகொடுத்த வேகம், தலைக்கவசத்தைக் கூடக் கழற்றாமல் (படம் பிடித்து, அதில் சிகப்பு வண்ண அம்புக்குறியிட்டு மஞ்சள் வண்ணத்தில் எடுப்பாகவும் காட்டியிருக்கிறேன்) உடனே கொக்கியின் அருகில் சென்று இரும்புக்கயிற்றை சரிசெய்த வேகம், சில நிமிடங்கள் மக்களை அசத்திவிட்டார்.
இப்படியும் சில அதிகாரிகள் இருப்பதால்தான் சென்னையின் போக்குவரத்து கொஞ்சமாவது ஒழுங்காக நடக்கின்றது என்பது எனது எண்ணம்.
ஓரிரு நாள்கள் வெயிலில் சுற்றினாலே Mometasone Furoateஐத் தேடி ஓடும் நகரில், வெயிலில் சுற்றுவதால் UV கதிர்களால் தாக்கப்பட்டு நிறமாற்றமடையும் முகத்திற்கு whitening moisturiser தேடி ஓடும் நகரில், சிகப்பழகை நோக்கி ஆண்களும் படையெடுக்கும் நகரில், சுட்டெரிக்கும் சென்னை வெயிலில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவலர்கள் மீதும், அதிகாரிகள் மீதும் எனக்கு மரியாதை உண்டாவதில் வியப்பேதும் இல்லை.
அன்புடன்
ஆசாத்
ஆசாத்
Comments
உண்மைதாங்க
அதே மாதிரி, நந்தனம் சிக்னல், SIET சிக்கனல், சேம்மியர்ஸ் சாலை சிக்கனலில் கூட கொஞ்சம் திறமையான ஆட்களை பார்கலாம். நான் பார்த்திருக்கேன். இப்ப எப்படியோ!
location-chennai???.
jeddah kidaaiyathaa??
:)
Nanri Azad
நந்தனம் இன்னும் அப்படித்தான்.
சிகப்பு எரிந்தாலும் இதோ சென்றுவிடுவோம் என்று கடப்பவர்களும், அவர்களை நிறுத்தி உபதேசம் செய்யும் காவலர்களும் இன்றும் உண்டு.
*
கல்ஃப் தமிழன்,
சென்னைதான்.
*
முரளி,
பின்னுட்டிற்கு நன்றிகள்.
*
பாலா,
:-)
*
ரவிசங்கர் அய்யா,
அவர் தனது கடமைக்கும் மேலே சென்று மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் தவற விட்ட கொக்கியில் மாட்டும் பணியையும் செய்திருக்கிறாரல்லவா.
இது எனது பார்வை; உங்கள் பார்வை அவர் கடமையைச் செய்ததாக மட்டுமே...இருக்கலாம்.
*
அன்புடன்
ஆசாத்
சென்னையில் உள்வசதி கட்டமைப்பு சுமார் 10 ஆண்டுகள் பின்தங்கியுள்ளது.
*
குமார்,
சல்தாஹை :-)
*
ஜெஸிலா,
வாகனத்தில் இருந்த பெண்ணின் படம், மற்றும் வாகனங்களின் எண்கள், விளம்பரப்பலகையில் இருந்த எண்கள் அனைத்தையும் வெட்டிவிட்டேன்.
எல்லா படங்களிலும் இப்படிச் செய்வேனா தெரியாது. தோன்றியது...வெட்டிவிட்டு பதிவில் போட்டேன். அவ்வளவே.
எண்பதுகளில் துபாய் போக்குவரத்துக் காவல் (ஷுர்த்தா) வண்டிகள் அனைத்தும் பென்ஸ்தான். ஆனால், வண்டிகளில் குளிர் சாதனம் கிடையாது. அந்த வெயிலில், ஈரப்பதத்தில் பென்ஸாக இருந்தாலுமே அது கொடுமை. அதிலும் துபாய் ஷுர்த்தாக்கள் தங்கள் பணியை சிறப்பாகச் செய்வார்கள்.
அந்த அதிகாரமும், சம்பளமும், அரசியல் குறுக்கீடில்லாத நிலையையும் இங்கே தந்தால் நமது காவலர்களும் அப்படித்தான் பணிபுரிவார்கள்.
அன்புடன்
ஆசாத்
பதிவை ஆங்கிலம் கலக்காம எழுதியதற்கு நன்றி!