Skip to main content

இப்படியும் சில பொறுப்பான அதிகாரிகள்


ஆற்காடு சாலையானது போரூர் சந்திப்பில் முடியும் இடம் என்றைக்குமே போக்குவரத்து நெரிசலுக்குப் பெயர்போனது.

நெரிசலில் நீந்தும் வேளைகளில் சில சுவாரசியமான காட்சிகளைக் காணலாம். கிலோ ரூ.55இற்கு மாம்பழ வகை ரிலையன்ஸ் ஃப்ரஷ்ஷின் உள்ளே இருக்க, அதில் கால் பங்கு விலைக்கு அதே மாம்பழ வகையை தள்ளுவண்டிக்காரர் ஒருவர் ரிலையன்ஸ் ஃபரஷ்ஷின் வாசலிலேயே விற்றுக்கொண்டிருப்பார். போரூர் நடைபாதை அங்காடிகள் எங்கு முடிகிறதோ அங்கு ரிலையன்ஸ் ஃப்ரஷ் இருப்பதால் இந்த மேடுபள்ள வித்தியாசம் தெளிவாகக் காணக் கிடைக்கும்.

நடைபாதையில் கடை போடுவதற்காகக் குப்பையைப் பெருக்கி தனது கடைக்குப் பக்கத்தில் சிறிய மேடாகக் கட்டிவிட்டு, பெருக்கிய இடத்தில் நீர் தெளித்து கீரைகளை அடுக்கி வைக்கும் மூதாட்டியைக் காணலாம். பெருக்கித் தள்ளிய குப்பைக்கு அருகில்தானே கீரைகளை அடுக்கியிருக்கிறார் என வெளியூர்க்காரர்களும் கேட்கமாட்டார்கள்.

இப்படியான சுவாரசியங்களுடன் சேர்த்து இன்று இன்னொரு காட்சியும் காணக் கிடைத்தது.

குன்றத்தூர் சாலையிலிருந்து வந்து திரும்பும் ஒரு மாநகரப் பேருந்து பழுதாகி நகரமுடியாமல் நின்றுவிட்டது. நின்ற இடமோ, சரியாக நான்கு சாலைகள் சந்திக்கும் மையம். சாதாரணமாகவே நெரிசலில் அவதிப்படும் மக்கள் இந்த பழுதாகிப்போன பேருந்தால் தடைபட்ட போக்குவரத்தால் கூடுதல் அவதிக்கு ஆளானார்கள். அதிரடி வேகத்தில் கூடுதலாக அதிகாரிகள் வந்து வண்டிகளை பிரிவுகளாகப் பிரித்து எடுக்கச் சொல்லி ஓரளவிற்கு நெரிசலைக் குறைக்க முயற்சி செய்தார்கள். ஆனாலும், நின்றிருக்கும் பேருந்தை இழுத்துச் செல்ல கனஊர்தி வந்த பின், ஆற்காடு சாலையிலிருந்து வரும் வாகனங்களை முழுவதுமாகக் கொஞ்சநேரம் நிறுத்தி வைக்கவேண்டியதாகிவிட்டது.

கனஊர்தி வந்து, நின்று நிதானித்து திரும்பி, மாநகரப் பேருந்தின் பணியாளர்கள் பேருந்தின் கீழ் நுழைந்து இரும்புக் கயிறைக் கட்டி, அதன் மறு முனையை கனஊர்தியின் கொக்கிக்குள் மாட்டுவதற்கு சிரமப்பட்டார்கள்.

அப்பொழுது படபடவென மோட்டார்சைக்கிளில் வந்த அதிகாரி, திரும்புவதற்கு நின்ற வாகனங்களை திசைமாற்றச் சொல்லி சிறுசிறு ஆணைகளைப் போட்டுவிட்டு, கொக்கியிலிருந்து வழுவிக்கொண்டு வரும் இரும்புக்கயிற்றை சரியாகக் கட்டி "இப்ப இழு, சரியா வரும்" என பின்னே நகர்ந்து பேருந்து நகர்வதைப் பார்த்துவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கினார்.

அவர் வந்த வேகம், மற்ற காவலர்களுக்கு போக்குவரத்தை மாற்ற ஆணைகொடுத்த வேகம், தலைக்கவசத்தைக் கூடக் கழற்றாமல் (படம் பிடித்து, அதில் சிகப்பு வண்ண அம்புக்குறியிட்டு மஞ்சள் வண்ணத்தில் எடுப்பாகவும் காட்டியிருக்கிறேன்) உடனே கொக்கியின் அருகில் சென்று இரும்புக்கயிற்றை சரிசெய்த வேகம், சில நிமிடங்கள் மக்களை அசத்திவிட்டார்.

இப்படியும் சில அதிகாரிகள் இருப்பதால்தான் சென்னையின் போக்குவரத்து கொஞ்சமாவது ஒழுங்காக நடக்கின்றது என்பது எனது எண்ணம்.

ஓரிரு நாள்கள் வெயிலில் சுற்றினாலே Mometasone Furoateஐத் தேடி ஓடும் நகரில், வெயிலில் சுற்றுவதால் UV கதிர்களால் தாக்கப்பட்டு நிறமாற்றமடையும் முகத்திற்கு whitening moisturiser தேடி ஓடும் நகரில், சிகப்பழகை நோக்கி ஆண்களும் படையெடுக்கும் நகரில், சுட்டெரிக்கும் சென்னை வெயிலில் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் காவலர்கள் மீதும், அதிகாரிகள் மீதும் எனக்கு மரியாதை உண்டாவதில் வியப்பேதும் இல்லை.

அன்புடன்
ஆசாத்

Comments

ஆசாத்,

உண்மைதாங்க

அதே மாதிரி, நந்தனம் சிக்னல், SIET சிக்கனல், சேம்மியர்ஸ் சாலை சிக்கனலில் கூட கொஞ்சம் திறமையான ஆட்களை பார்கலாம். நான் பார்த்திருக்கேன். இப்ப எப்படியோ!
gulf-tamilan said…
hello sir
location-chennai???.
jeddah kidaaiyathaa??
நன்றாக இப்படி வேலை செய்பவர்களை பிரபலப்படுத்தினால் மற்றவர்களும் motivate ஆவார்கள். நல்ல பதிவு
Boston Bala said…
---இப்படியும் சில அதிகாரிகள் இருப்பதால்தான்---

:)

Nanri Azad
ஒருத்தர் கடமைய செஞ்சாலே பாராட்ட வேண்டிய நிலைமைல நாடு இருக்கு :(
சிவபாலன்,

நந்தனம் இன்னும் அப்படித்தான்.

சிகப்பு எரிந்தாலும் இதோ சென்றுவிடுவோம் என்று கடப்பவர்களும், அவர்களை நிறுத்தி உபதேசம் செய்யும் காவலர்களும் இன்றும் உண்டு.

*
கல்ஃப் தமிழன்,

சென்னைதான்.

*
முரளி,

பின்னுட்டிற்கு நன்றிகள்.

*

பாலா,

:-)

*
ரவிசங்கர் அய்யா,

அவர் தனது கடமைக்கும் மேலே சென்று மாநகரப் போக்குவரத்து ஊழியர்கள் தவற விட்ட கொக்கியில் மாட்டும் பணியையும் செய்திருக்கிறாரல்லவா.

இது எனது பார்வை; உங்கள் பார்வை அவர் கடமையைச் செய்ததாக மட்டுமே...இருக்கலாம்.
*

அன்புடன்
ஆசாத்
பல சாலை சந்திப்புகளில் முகக்கவசம் கூட இல்லாமல் அவ்வளவு பேருந்து வாகனங்களில் வெளியிடும் புகைக்கு நடுவே நிற்கும் காவல் அதிகாரிகளை பார்க்கும் போது செம கோபம் வரும் ஆனால் யார் மீது கோபப்படுவது என்பது தான் தெரியவில்லை.
சென்னையில் உள்வசதி கட்டமைப்பு சுமார் 10 ஆண்டுகள் பின்தங்கியுள்ளது.
நல்ல பதிவு.
Jazeela said…
எனக்கு துபாய் போலீஸை பார்க்கும் போதெல்லாம், எப்போது நம் நாட்டு காவல்துறை இப்படி கடமையே கண்ணாக வேலை பார்க்கப் போகிறார்கள் என்று தோன்றும். சென்னை வெய்யிலை விட இங்கு அதிகம் என்பது உங்களுக்கு தெரிந்ததே அதனால் என் ஆதங்கம் புரியுமென நம்புகிறேன். ஆமா அந்த படத்துல ஒருத்தரை வெட்டியிருக்கீங்களே ஏன்?
டெல்ஃபின், வடுவூர் குமார், ஜெஸிலா, லொடுக்கு, அனைவருக்கும் நன்றிகள்.
*

குமார்,

சல்தாஹை :-)

*

ஜெஸிலா,

வாகனத்தில் இருந்த பெண்ணின் படம், மற்றும் வாகனங்களின் எண்கள், விளம்பரப்பலகையில் இருந்த எண்கள் அனைத்தையும் வெட்டிவிட்டேன்.

எல்லா படங்களிலும் இப்படிச் செய்வேனா தெரியாது. தோன்றியது...வெட்டிவிட்டு பதிவில் போட்டேன். அவ்வளவே.

எண்பதுகளில் துபாய் போக்குவரத்துக் காவல் (ஷுர்த்தா) வண்டிகள் அனைத்தும் பென்ஸ்தான். ஆனால், வண்டிகளில் குளிர் சாதனம் கிடையாது. அந்த வெயிலில், ஈரப்பதத்தில் பென்ஸாக இருந்தாலுமே அது கொடுமை. அதிலும் துபாய் ஷுர்த்தாக்கள் தங்கள் பணியை சிறப்பாகச் செய்வார்கள்.

அந்த அதிகாரமும், சம்பளமும், அரசியல் குறுக்கீடில்லாத நிலையையும் இங்கே தந்தால் நமது காவலர்களும் அப்படித்தான் பணிபுரிவார்கள்.

அன்புடன்
ஆசாத்
நல்ல செய்தியினை நன்றாக எழுதியிருக்கிறீர்கள், இப்படிப் பட்ட நற்செயல்களை பிரபலப் படுத்துவதினால் மற்றவர்களையும் ஊக்கப் படுத்த முடியும் என்பதில் எந்தவிதி சந்தேகமும் இல்லை !!
தோழர் ஆசாத்,
பதிவை ஆங்கிலம் கலக்காம எழுதியதற்கு நன்றி!

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...