Skip to main content

குண்டு வெடிப்பு - சில கோவையற்ற எண்ணங்கள்

எழுதுபவரின் வாழ்வின் ஒருபகுதியாக இல்லாத அக்கறைக்காக அவர் எழுதும் அக்கறையான விவரங்கள் எழுத்தளவில் இருக்கவே தகுதியுள்ளவை. அதாவது, சமூக அக்கறை குறித்த எந்த எழுத்தும், எழுதுபவரின் வாழ்வின் நீட்சியாக இருக்கும்பட்சத்தில்தான் அந்த எழுத்தின் தாக்கம் படிப்பவர் மனதில் நிலைக்கும், இல்லையெனில் அவை வெறும் அச்சடித்த காகிதங்களே. விவரங்களின் தொகுப்பாக வேண்டுமானால் அப்படிப்பட்ட எழுத்துகள் இருக்கலாம், சமூக அக்கறையின் பிரதிபலிப்பாக வேண்டுமானால் அந்த விவரணப் பதிவை ஏற்றுக்கொள்ளலாமேயன்றி, அந்த எழுத்து அது எழுதப்பட்ட அக்கறையான விஷயத்திற்காக சமூகத்தில் ஏதும் மாற்றத்தைத் தராது. இது எனது தீர்மானமான புரிதல். இதன் அடிப்படையில் சமூக அக்கறையுடன் ஏதாவது எழுதத்தலைப்படும்போது மனம் ஒப்புவதில்லை.

எந்தவிதமான துயர்மீட்பு சேவை மையங்களுடனும் தொடர்பில்லை, காவல்துறையிலோ, ராணுவத்திலோ சேர்ந்து நாட்டுக்காக உழைக்கவில்லை, தனக்கென்று வாழாமல் பிறர்க்கென வாழ்ந்து அங்கும் இங்கும் ஓடி துன்பப்படுவோரின் இன்னல் தீர்ப்பதில்லை, தன்னைச் சுற்றி இத்தனை நடக்கிறதே எனப் பொங்கி எழுந்து புரட்சிக் கவிதைகள் வடித்து எந்த இயக்கத்திற்கும் பாடுபடுவதில்லை.

முதல் பக்கத்தில் உ.பி. குண்டு வெடிப்பிற்காக அதிர்ந்து செய்தித்தாளின் உள்ளே செல்லச் செல்ல அதிர்வு குறைந்து கடைசிப் பக்கத்தில் மாதுரி தீக்ஷித்தின் மறுவருகையைப் படித்துவிட்டு செய்தித்தாளை வைக்கின்ற மனப்பக்குவம்தான். இதுவரையில் குண்டு வெடிப்பால் இறந்தோர் எண்ணிக்கையை சன் தொலைக்காட்சி பட்டியலிட்டுக் காட்ட, அதைப் பார்த்த கையோடு என்.டி.டி.வி. ஹாட் ப்ராப்பர்ட்டீஸில் சென்னை - காட்டுப்பாக்கத்தில் அந்த தமிழர் நிறுவனம் கட்டிக்கொண்டிருக்கும் அடுக்குமாடியின் 63.7லட்ச மூன்று படுக்கையறையின் அமைப்பைப் பார்க்க விழையும் மனநிலைதான்.

என்ன செய்வது, இருக்கின்ற சொகுசு வட்டத்தை விட்டு வெளியே வந்து களப்பணி செய்ய விருப்பமில்லாத சராசரிக் குடிமகனாக, தினசரி கண்களில் படுகின்ற செய்திகளைப் பார்த்து கேட்டு வருத்தத்தில் ஓரிரு வரிகள் எழுதலாம். அந்த எழுத்துகளால் எந்த விதமான மாற்றமும் வந்துவிடப்போவதில்லையென்றாலும், 'உயர்-நுட்ப டீக்கடை பெஞ்ச்' என்ற அளவிலாவது பதிவில் வருத்தங்கள் இருந்துவிட்டுப்போகட்டும் என்பதான சமாதானத்துடனேயே சமூகச் சிந்தனை தொடர்பான அக்கறையை, விருப்பமிருப்பின், பதிய முடிகின்றது.

மீண்டும் குண்டுவெடிப்பு. ரத்தமும் சதையுமாக உடலைக் கிழித்து உயிருக்கு மதிப்பளிக்காத வெறித்தனம். எங்கோ நடக்கும் தங்கள் இழப்புகளுக்கு அப்பாவிகளைப் பலியாக்கி உலகத்தின் கவனத்தை ஈர்த்து இதனால் நாளையே தேடுகின்ற தீர்வு கிடைப்பதான அணுகுமுறை. அதீத வெறித்தனத்துடன் இயங்கும் இவர்களுக்கு இவர்களை இயக்குபவர்களுடைய எதிர்காலத் திட்டத்தின் முழுவடிவும் தெரியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. இவர்கள் ஏதோ தெருமுனையில் வேலையற்றுத் திரிந்து சங்கிலியறுப்பும் ஜேப்படியும் கூலிப்படையுமாகத் துணிந்து நிழலாளிகளாகப் பதவி உயர்வு பெறுகின்ற சமூகவிரோதிகளல்ல; திசையற்ற கொள்கைகளாலும் எஜமான விசுவாசத்தாலும் புடம்போடப்பட்டு தன்னைச் சேராத எவரையும் கொல்லலாம் என்னும் தீவிரவாத மனப்பக்குவத்திற்கு ஆளாகிபோன சமூகப் புரைகள். நிதி ஒதுக்கீடு முதல், வெடிப்பொருள் கடத்துதல் வரையில் நுணுக்கமான நிர்வாகத்திறனுடன் அணுகும் திறன் மிக்கவர்கள்.

தனக்கு எதிரான அரசை முழங்காலிட்டு வருந்தச் செய்யும் முயற்சியில் அப்பாவிகள் உயிரழப்பது தவறல்ல, ஏனெனில், எனது கூட்டமும் இதைப்போல் கண்முன்னே அழிகின்றது என்னும் சித்தாந்தத்தால் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள்.

அல்லது,

எனது இனத்திற்கு, மதத்திற்கு, இந்த அரசும் அதன் குடிகளும் ஏதோ விதத்தில் கடும் எதிரிகளாக இருக்கிறார்கள், அவர்களுக்கு பாடம் புகட்ட சில உயிர்களைக் கொல்வது சரியே, இப்படியொரு மூளைச் சலவை.

எனது மதம் புனிதமானது, எனது மதத்தைத் தவிர மற்றவர் யாரும் எனது மதத்தின் புனிதத்தைக் கெடுக்க முயல்பவர்களே, அதனால் அவர்களைக் கொல்வது இறைவனுக்குப் பிரியமானதே, இப்படியொரு மூளைச்சலவை அல்லது தவறான புரிதல்.

எந்த வழியாக இருப்பினும், செய்வது தவறல்லவெனும் எண்ணம் மனதில் உதித்த பிறகோ அல்லது மூளைச்சலவையால் உண்டான பிறகோ வேறெதுவுமே பொருட்டில்லாமற் போகின்றது.

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெரிகட்டும் விதத்தில் எங்கோ எப்படியோ நடக்கும் தீவிரவாதங்களுக்குப் பின்னால் பின்னிப் பிணைந்து ஓரிழை எடுக்க அது எங்கோ சென்று இன்னோர் இழையைப் பிடிக்கும் பன்னாட்டு அரசியல் பின்னல்களும் இவர்களுடன் சேர்கின்றன. பின்னணி கண்டுபிடிக்கப்பட்டபோதும் நாட்டின் ரகசியம் கருதியோ மக்களின் வாக்கு வங்கி கருதியோ அவை எவையுமே வெளிவராமற்போகும் விந்தைகள். முன்பகை பின்பகை இடைப்பகை எல்லாமுமாகச் சேர்த்து தீவிரவாதியைத் தேடும் போக்கில் சந்தேகத்திற்கிடமென்று குறிப்பிட்ட சமூகத்தையே சந்தேகத்திற்கு உள்ளாக்குதல். ஒருபக்கம் தீவிரவாதிகள், மறுபக்கம் வகுப்புவாதிகள் எந்தப் பக்கத்திலிருந்து இடி எப்போது விழும் என்னும் விவரமறியாத அப்பாவிகள் நிறைந்திருக்கும் அமைப்பில்தான் - சில சமயம் அந்த அப்பாவிகளுள் ஒருவராகவும் - வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

காலைச் செய்தி கேட்டு இப்படியான மனநிலைகளில் செய்துதானே ஆகவேண்டும் என எதிர்காலத்தைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் சில பத்திரிகைகளைப் பிரிக்கையில், 'While we have made transition into behaviour like workers and consumers of an economy growing at 9 percent, our investments habits remains ancient.' வகையறாக்கள் கண்ணில்படும்போது, சற்று முன்னரே பார்த்த குண்டுவெடிப்புச் செய்தியானது இடைக்கால மறதிக்குச் செல்வது கொடுமை.

என்ன செய்வது, இருக்கின்ற சொகுசு வட்டத்தை விட்டு வெளியே வந்து களப்பணி செய்ய விருப்பமில்லாத சராசரிக் குடிமகனாக...

அன்புடன்
ஆசாத்

Comments

Sindhan R said…
vanakkam nanbare ... thankalai patri ariyalaamaa?
சும்மா கிடந்து
சோம்பலில்லாமல் நடந்து
சமன் சற்றேனும் குலையாமல்
நண்பா -
கொஞ்சம் விராந்தியாய் இரு.

- சுந்தர ராமசாமி (பெயர் நினைவில் இருந்து எழுதப்படுகிறது.)

உங்கள் பதிவு இக்கவிதையைத்தான் நினைவூட்டியது. ஒரு சமூகக் கொடுமையை கண்டிக்க நாம் ஒரு சமூக சேகவனாகத்தான் இருக்க வேண்டும் அல்லது செயல்பட வேண்டும் என்பதான தர்க்கம் சரியா?

ஒரு சமூக அமைப்பு இல்லாமல் நீங்களும் நானும் சாத்தியமில்லை. அப்படியிருக்க என்னால் செயல்பட முடியவில்லை அதனால் இதனை கண்டுகொள்ளாமல் விடுவது என்பது நியாயமா?

நம்மால் செயல்பட முடியாமைக்கு நமது பலவீனம்தான் காரணம். முதலில் அதனை விமர்சித்துக் கொள்வது அவசியம்.

இருப்பினும் கண்டிக்க வேண்டிய இந்த கொடும்பாதகச் செயலை 'கோவை'யாக இல்லாவிட்டாலும் உ.பி்.யாகவாவது (உணர்ந்த பிறகாவது) எழதியதற்கு பாராட்டுக்கள்.

அடுத்து நீங்கள் கூறும் தொலைக்காட்சி அல்லது செய்தி ஊடகங்கள் வழியாக மாதிரி தீக்ஷித் அல்லது வேறு ஒரு பிளாட் பற்றியவற்றில் முடிவடைவது என்பது ஏற்படுத்தம் ஒரு உணர்வானது.. இன்றைய உலகின் hyper reality ஆல் வருவது. இப்படித்தான் ஊடகங்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு ஒன்று முரணான பலவற்றையும் கொட்டுகின்றன. இன்றைய உலகம் என்பது ஒருவகை மீயதார்த்த உலகம்தான். அந்த உணர்வு உங்கள் பதிவில் வெளிப்படுகிறது. இவை செயலூக்கத்தைவிட செயலின்மையையே அதிகம் தூண்டக் கூடியவை. இன்றைய உலகை கட்டமைப்பதும் இந்த ஊடகங்கள் குறிப்பாக தொலைக்காட்சிதான் என்றால் மிகையாகாது.
//முதல் பக்கத்தில் உ.பி. குண்டு வெடிப்பிற்காக அதிர்ந்து செய்தித்தாளின் உள்ளே செல்லச் செல்ல அதிர்வு குறைந்து கடைசிப் பக்கத்தில் மாதுரி தீக்ஷித்தின் மறுவருகையைப் படித்துவிட்டு செய்தித்தாளை வைக்கின்ற மனப்பக்குவம்தான்//

அனைவருக்கும் பொதுவான அனுபவம்..எதார்த்தம்..மிகச் சரியாக, அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
இனிய ஜமாலன்,

சமூகக்கொடுமையைக் கண்டிக்க சமூக சேவனாகத்தான் இருக்கவேண்டும் என்று பொதுமைப்படுத்திச் சொல்லுதல் இயலாது. அது சரியான தர்க்கம் அல்ல.

எனது எண்ணம் என்னவென்றால், சொகுசான வாழ்க்கைப் பின்னணியை அமைத்துக்கொண்டு, களம் இறங்கத் தயங்காமல், சமூகக் கொடுமை குறித்து பேசும் பேச்சுகள், எழுத்துகள் அனைத்தையும் உள்ளக்கிடக்கையின் பிரதிபலிப்பு என்னும் அளவில்தான் ஏற்றுக்கொள்ள இயலும்.

அந்தப் பேச்சுகளால், எழுத்துகளால் பிரச்சனைக்கு தீர்வென்பது கிடையாது.

என்னால் முடியவில்லை அதனால் கண்டுகொண்டு என்ன ஆகப்போகிறது என்னும் மனநிலை என்று அதனைச் சொல்லமுடியாது. கண்டுகொள்ளுதல் வேறு, பேசுவது வேறு, பேசுவதால் விளைவுகளை ஏற்படுத்துவது வேறு. அனைத்திலும் விஷயம் மட்டுமே பொது; அணுகுமுறை வெவ்வேறு.

இத்னை எழுதிக்கொண்டிருக்கையில் எதிரில் இருக்கும் செய்தித்தாளில் 'க்ளாஷஸ் இன் கௌஹாட்டி' உள்ளது. படிக்கிறோம், வருத்தப்படுகிறோம், சராசரி மனிதனாக என்று விடியுமோ என்கிறோம், அவ்வளவே.

அறியப்பட்ட தொழில்முறை அரசியல் கட்டுரை ஆசிரியனாக இல்லாமல், எழுத்துகள் சம்மந்தபட்ட / பாதிக்கப்பட்ட சமூகத்தினரால் படிக்கப்படாமல், வேறுதளத்தில் எண்ணங்களைப் பதிவதை 'எண்ணம்' என்ற அளவில் ஏற்றுக்கொள்வதில் எனக்கு உடன்பாடு உண்டு; அதற்கும் மேல் உயர்த்திச்சொல்வதில் உடன்பாடில்லை.

அன்புடன்
ஆசாத்

*

இனிய இரா. சிந்தன்,

எனது வலைபதிவின் முகப்பிலேயே எழுதியுள்ளேனே சொல்வதற்குப் பெரிதா ஒன்றுமில்லையென...உண்மையும் அதுதான். அண்ணாசாலையில் நிற்கையில் உங்களைக் கடக்கும் ஆயிரம் மோட்டார்சைக்கிள்களின் என்னுடையதும் ஒன்று :-) அவ்வளவுதான்.

*

இனிய பாசமலர்,

நன்றுகள்.

அன்புடன்
ஆசாத்
Sindhan R said…
இதுவும் ஒரு வகையில் தப்பித்துக்கொள்ளும் எண்ணம் தாணே நண்பா?

....

என்ன செய்வது, இருக்கின்ற சொகுசு வட்டத்தை விட்டு வெளியே வந்து களப்பணி செய்ய விருப்பமில்லாத சராசரிக் குடிமகனாக...

முடிந்ததை செய்யுங்கள்

ஆசாத் எண்ற பெயருக்கு இது போண்ற பசலைத் தண்ங்கள் பொறுத்தமில்லை

மாற்றத்திற்காய் உழைக்காத வரை ... எதுவும் மாறாது ...

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...