Skip to main content

வணிக இலச்சுத் தூதுவர்கள் (brand ambassadors)

வடக்கிற்கு காஜோல், தெற்கிற்கு திரிஷா என மிகத் தெளிவாக சந்தையைப் பிரித்துக்கொண்டு, அவர்கள் இருவரையும் தமது வணிக இலச்சின் தூதர்களாக்கிய டாடா இண்டிகாமைப் போலவே, சமீபத்திய வோடோஃபோனும் சந்தை விளம்பரத்தை (வணிக இலச்சு தூதர்களை) வடக்கு தெற்காக பிரித்துக்கொண்டது. வடக்கே இர்ஃபான் கான், தெற்கே பிரகாஷ் ராஜ்.

இந்த வடக்கு தெற்கு விவகாரத்திற்கே ஆளாகாமல் அகில இந்திய அளவில் ஷாருக்கானிற்கு இருக்கும் பிரபலத்தின்மேல் அபார நம்பிக்கை வைத்து தமிழ் டப்பிங் குரலுடன் ஷாருக் தென்னகத்தில் ஏர்டெல்லை சந்தைப்படுத்துகிறார்.

திரைப்படம் வெளிவருவதற்கு முன்னர் விமர்சனங்கள் வருவதைப்போல ஏர்செல்லின் இந்த விளம்பரம் வெளிவருவதற்கு முன்னரே சூர்யாவின் விதவிதமான ஒப்பனைகள் குறித்த கருத்துகள் வெளிவந்தன.

இந்த பரபரப்பு எதிலும் கலந்துகொள்ளாமல் பி.எஸ்.என்.எல். தங்களை பிரீத்தி ஸின்தாவை முன்னிறுத்தி அடையாளம் காட்டிக்கொள்கிறார்கள்.

இப்படி அனைத்து தொலைதொடர்பு சேவையரும் யாரேனும் ஒரு பிரபலத்தை தங்கள் வ.இ.தூதராக முன்னிறுத்தி செயல்படுவதால் மட்டுமே அவர்களது சந்தைப் பங்களிப்பு தேவைப்படும் விகிதத்தில் இருப்பதில்லை. விளம்பரமும் வ.இ.தூதர்களும் குறிப்பிட்ட தயாரிப்பின் தன்மையையும், இருப்பையும் வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பவை. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வரும் வாடிக்கையாளர்க்கு சரியான சேவை அளிப்பதன் மூலமே அடுத்த கட்ட வெற்றி. வாடிக்கையாளரை அழைத்து வரவே வ.இ.தூதர்.

சாமானியர்களால் எளிதில் அணுகக்கூடிய பொருள்களை பிரபலங்களை முன்னிறுத்தி சந்தைப்படுத்துவதற்கு மட்டுமே இது பொருந்தும். சாமானியர்கள் உபயோகிக்காத பொருள்களும் பிரபலங்களை முன்னிறுத்துவது பொருளின் தனித்தன்மைக்குதான், ஏனெனில் அந்த மேல்தட்டுச் சந்தைக்கு இந்த விளம்பரங்களைப் பார்ப்பதற்கு நேரமில்லை.

உதாரணாமாக, TAG HEUER கைக்கடிகாரங்கள். குறைந்தபட்ச விலையாக லட்சம் பெறுமானமுள்ள கைக்கடிகாரத்தை வாங்கும் தகுதியுள்ளோர் நடிகரைப் பார்த்து கைக்கடிகாரம் வாங்குவாரென்பது ஏரணமாக (லாஜிக்) இல்லை. TAG HEUERஇன் வ.இ.தூதராக வரும் ஷாருக்கையோ (இந்தியா), டைகர்வுட்ஸையோ (பன்னாட்டு) வசீகரமானவர்கள் அல்ல என்று சொல்லவில்லை. அத்தனை விலையுள்ள கைக்கடிகாரங்களை வாங்கும் தகுதியுள்ளோர் வ.இ.தூதர்களால் ஈர்க்கப்பட வாய்ப்புகள் குறைவு.

அற்புதமாக நடனம் ஆடக்கூடிய ஹ்ரித்திக், சோனி எரிக்சன் செல்பேசியின் 'வாக்மேன்' வசதியைக் காட்ட நடனமாடி வ.இ.தூதராக இருப்பதை ஏற்றுக்கொள்ளும் மனம், அவரே மடிக்கணினிக்கும் வந்து விசிலடிப்பது சொல்வது அவதிப்படுத்துகிறது.

ஆட்டமே ஆடாமல் தலையசைத்து அபிஷேக் பச்சன் மோட்டொரொல்லாவின் வ.இ.தூதராக இருப்பினும் சமீபகாலமாக அந்த விளம்பரங்களை தெற்கே காணமுடிவதில்லை.

நம்மவர் மாதவனும் யூனிவர்செல்லின் விளம்பரத்தில் வந்தாலும் அனைத்து தயாரிப்புகளும் விற்கப்படும் கடையின் விளம்பரத்தில் நடித்திருக்கும் அவரை யூனிவர்செல்லின் வ.இ.தூதர் எனச் சொல்வதில் எனக்குக் கருத்து வேறுபாடு உண்டு (இந்துவின் கட்டுரையில் மாதவனை யூனிவர்செல்லின் ப்ராண்ட் அம்பாசிடராக அடையாளப்படுத்திய படம் பார்த்த நினைவு).

இன்னொரு பக்கத்தில் திரைப் பிரபலங்கள் பெப்ஸி, கோக், மிரிண்டா, சார்பெட் குடிப்பதுபோல் சானியா மிர்சா ஸ்ப்ரைட் குடிக்கிறார். யஹீ ஹை ரைட் சாய்ஸ் பேபெ ரிமோ ஃப்ர்னாண்டஸ் குடித்து வரிசையாக கிரிக்கெட் வீரர்களும் குடிக்கையில், தாகம் டென்னிசுக்கும் தொற்றியதில் வியப்பில்லை. இருப்பினும் கிரிக்கெட் அல்லாத இன்னொரு விளையாட்டுத் துறையில் இருப்பவர் வ.இ.தூதராக வந்ததில் மகிழ்ச்சியே.

இதைச் சொல்லும் நேரத்தில் சாமுத்ரிகா பட்டிற்கும் (மீரா ஜாஸ்மின்), தனித்தனி ரகங்களுக்கும் (பிரகாஷ் ராஜ், சிம்ரன்) திரைப் பிரபலங்களை அழைத்து வந்தவர்கள் (போத்தீஸ்), கர்னாடக சங்கீத உலகிலிருந்தும் சுதா ரகுநாதனை அழைத்து வந்து, அவர் நடித்த சமீபத்திய (ஆயிரம் மலர்கள் பட்டுச் சேலை) விளம்பரத்தையும் பிரபலப்படுத்தியதைக் குறிப்பிடவேண்டும்.

ஒட்டு மொத்தக் குத்தகையாக, அமிதாப், அக்ஷய், சல்மான், பிரியங்கா என இந்திப்படவுலகினர் சூட் துணிகளின் விளம்பரங்களைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் நேரத்தில், கோவாவின் மரியோ மிராண்டா (கார்டூனிஸ்ட்) நினைவிற்கு வருகிறார். எந்த சூட் துணிக்கு அவர் வ.இ.தூதராக வந்தார் என மண்டையை உடைத்துப் பார்க்கிறேன் நினைவிற்கு வரவில்லை.

ஒருவேளை அவர் திரைத்துறையிலிருந்து வந்திருந்தால் நினைவில் வைத்திருப்பேனோ...

முன்பொருமுறை கைக்கடிகார வி.இ.தூதர் மூவர் குறித்து எழுதியது.

குறிப்பு:
Brand ambassador இதனுடைய தமிழாக்கமாக வணிக இலச்சுத் தூதுவர் அத்தனை பொருத்தமாக இல்லையென நினைக்கிறேன். நண்பர்கள் பொருத்தமான் தமிழாக்கம் தந்தார்களென்றால் மகிழ்வேன்.

அன்புடன்
ஆசாத்

Comments

Anonymous said…
//உதாரணாமாக, TAG HEUER கைக்கடிகாரங்கள். குறைந்தபட்ச விலையாக லட்சம் பெறுமானமுள்ள கைக்கடிகாரத்தை வாங்கும் தகுதியுள்ளோர் நடிகரைப் பார்த்து கைக்கடிகாரம் வாங்குவாரென்பது ஏரணமாக (லாஜிக்) இல்லை. TAG HEUERஇன் வ.இ.தூதராக வரும் ஷாருக்கையோ (இந்தியா), டைகர்வுட்ஸையோ (பன்னாட்டு) வசீகரமானவர்கள் அல்ல என்று சொல்லவில்லை. அத்தனை விலையுள்ள கைக்கடிகாரங்களை வாங்கும் தகுதியுள்ளோர் வ.இ.தூதர்களால் ஈர்க்கப்பட வாய்ப்புகள் குறைவு//

அது அப்படி இல்லை. இந்தத் தூதுவர்கள் அவர்கள் விளம்பரப்படுத்தும் கைக்கடிகாரங்களையே அணிவார்கள் (ஒப்பந்தப்படி). உ.ம், ஷாருக், ப்ரியங்க்கா - Tag Heuer, ஐஸ்வர்யா - Longines, சோனாலி - Omega இப்படி.
இது ஷாருக் கான் கட்டும் வாட்ச் அப்படின்னு நம்மாளுங்களுக்கு டேக்-கை அறிமுகப்படுத்துவது சுலபமல்லவா?
இல்லாட்டி டேகோ, ஒமேகாவோ நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

- a Tag owner.
அன்புடையீர்,

நன்றிகள்.

அய்யா, உங்கள் மின்னஞ்சலை தனிமடல் இடலாமே.

எனக்கும் டேக் கனவுகள் உண்டு.

நீங்கள் இன்றைய ஓனர்; நான் நாளைய.

அன்புடன்
ஆசாத்

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...