Skip to main content

பொல்லாதவன் - விமர்சனம் அல்ல

பாடல்கள் குறித்து:
நீண்ட நாள்களாகவே நினைத்துக்கொண்டிருப்பதுதான், ஒரு படத்தில் நான்கைந்து பாடலாசிரியர்கள் பாடல்கள் எழுதியிருக்கையில் பெயர் காட்டும்போதே யார் எந்தப் பாடலை எழுதியது என்று அதிகப்படியான விவரத்தை ஏன் திரை உலகோர் தருவதில்லை. அடிமைப்பெண், காதல் ஓவியம் இந்த இரண்டு படங்களில் அப்படிப் பார்த்தது சட்டென நினைவிற்கு வருகிறது. இன்னும் சில படங்களில் இருந்திருக்கலாம். ஒருவேளை இன்றைய பொல்லாதவனிலும் அப்படி அவர்கள் ஏதாவது விவரம் காட்டி நான் பார்க்கத் தவறிவிட்டேனோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

இது என்ன உத்தியோ? ஒலிநாடாவை வாங்கிப் பார்த்துக்கொள் என்கிறார்களோ? சில படங்களில் ஒலிநாடாவின் அட்டையிலும் கவிஞர்களின் பெயரைப் போடுவதில்லை. அப்படி என்னதான் திரைக்கவிஞர்களின் பாடல்களை அடையாளம் காட்டுவதில் இவர்களுக்குத் தயக்கம் என்பது விளங்கவில்லை. ஒலிப்பேழையை இன்னும் வாங்காததால், இணையத்தில் ம்யூசிக் இண்டியா ஆன்லைனைப் பிடித்து பாடல்களின் கவிஞர்கள் யார் யார் என்பதைப் பார்க்கவேண்டியதாக இருக்கிறது.

1.
எங்கேயும் எப்போதும் பாடலின் மறுகலவைக்குத் தேவைப்பட்ட வரிகளை யுகபாரதி எழுதியிருக்கிறார்.

2.
அலிபாபா தங்கம்
யாரும் உரசாத அங்கம் - களியாட்டப் பாடலுக்கும் யுகபாரதிதான் கவிஞர்.

டேனியல் பாலாஜி திரையில் இருந்தாலே இப்படியான பாடலும் இருக்க்வேண்டுமோ.
இன்று (23.11.07) சன் ம்யூசிக்கில் டேனியல் பாலாஜி வந்திருந்தார். வழமையான 'நான் உங்க ஃபேன் சார்' சமாசாரங்கள்தான்.

3.
மின்னல் கூத்தாடும் - நா.முத்துகுமார்.

புதுபேட்டை நிழலுகப்பாடல் (கமல் பாடியது) பலருக்கு நினைவிருக்கலாம், இவர்தானே கவிஞர். பார்த்தாலே பரவசத்தின் 'முத்தத்தால் வன்முறை செய்வாயா' நான் ரசித்த வரிகளுள் ஒன்று. நா.மு.தான் கவிஞர். தற்போதைய கற்றது தமிழில் 'வலிக்கும்போதுதான் தெரிகிறது உயிரோடிருக்கிறேன் என்பது; விழிக்கும்போதுதான் தெரிகிறது நீ அருகில் இல்லை என்பது' வரிகள் கொஞ்சம் மாறியிருக்கலாம். நா.மு.வேதான்.

4.
படிச்சுப் பாத்தேன் ஏறல
குடிச்சுப் பாத்தேன் ஏறிடுச்சு
சிரிச்சுப் பாத்தேன் சிக்கல
மொறச்சுப் பாத்தேன் சிக்கிக்கிச்சு - கபிலன்.

குத்துப்பாடல்களின் வித்தகராகிவிட்டார். அய்யாவிடம் நாம் எதிர்பார்ப்பது இன்னொரு 'உப்பா சர்க்கரையா'வை.

5.
முத்தம் வேண்டும்
மோகம் தீருமா (தணியுமா?)


அடுத்த வரியை எழுத இயலவில்லை - வைரமுத்துவின் வரிகளில் சிருங்கார ரசம் அதிகம். சிருங்காரம் எழுதுவது தவறென்று கவிப்பேரசிற்குச் சொல்லும் அளவிற்கு நான் வளர்ந்தவனோ அறிந்தவனோ அல்லன். வாலியவர்களின் 'நான் காசுக்கும் மாஸுக்கும் எழுகிறேன்' என்ற வரிகளில் அனைத்து திரைக்கவிஞர்களும் அடக்கம். நாளை எங்கேனும் ஆயிரத்தில் ஒன்றாக ஒரு வாய்ப்பு கிடைத்து நான் எழுதினேன்றாலும் இயக்குனர் சொல்வதைச் செய்து போவதைத் தவிர வேறு வழியில்லை. வெளியில் இருந்து வலைப்பூவில் சுட்டிக்கொண்டிருக்கலாம், உள்ளிருக்கும் கவிஞர்களே அழுத்தத்தினை அறிவார்கள். எனினும், அய்யாவின் உயரத்திற்கு 'எச்சில்' போன்ற வார்த்தைகளெல்லாம் தேவையில்லையென்பது எனது தாழ்மையான கருத்து.

சண்டைக் காட்சிகள் குறித்து:
எங்கேயும்ம்ம்ம் எப்போதும்ம்ம்ம் அதிகம் பேசப்படாத ஆசாமிகள் இவர்கள், சண்டைப் பயிற்சியாளர்கள்.

படத்தில் ரயிலடி வாரவதியின்மேல் கழுத்தை வெட்டிச் சாய்க்கும் காட்சியில் பாதி உடல் உள்ளும், பாதி வெளியுமாக தொங்கிய சண்டைக்கலைஞரை இயக்கியது யார்? அந்த அதிரடி தானியோட்டக் (ஆட்டோ) காட்சிகளெல்லாம் இவரது மேற்பார்வையில்தானே. வண்டியோட்டும்போது வீசப்படும் அரிவாளை ஓட்டிய நிலையிலிருந்தே மல்லாந்து தவிர்த்து வாகனத்திலிருந்து வீழ்ந்த தனுஷின் போலியை (டூப்) இயக்கியவர் இவர்தானே.

இந்தப் படத்தின் சண்டைப் பயிற்சியாளர் ராம்போ ராஜ்குமார் எனப் பார்த்த நினைவு (நாளை ஏ.வி.எம்.ராஜேஸ்வரி வழியாகப் போகும்போது உறுதி செய்துகொள்வேன்). இவரில்லாமல் இந்தப் படமில்லை. சிறிய இடைவெளிக்குப் பிறகு இயல்பான சண்டைக் காட்சிகளைப் பார்க்க முடிகிறது. அதென்ன அது இயல்பான சண்டைக் காட்சி என வினவலாம். தேவர் மகனில் கமல் - நாசர் சண்டைக் காட்சிகளைப் போல் இருந்தால் அது 'இயல்பான' என்பது எனது பார்வை.

கடைசி சண்டைக் காட்சியில் கதாநாயகனை தோரணையில் உயர்த்த வேண்டிய அவசியத்தில் கொஞ்சம் சமாதானப்படுத்திக்கொண்டுள்ளார். அதைத் தவிர்த்து மற்றவை அருமை. குறிப்பாக நெடுஞ்சாலையில் கிஷோர் - டேனியல் பாலாஜி - குழுவினர் போடும் சண்டை, அதில் கிஷோர் அரிவாள் வீசி இங்கும் அங்குமாக நகர்ந்து எதிரிகள் ஒருமித்துவிடாமல் பிரிக்கும் காட்சியை ரசித்தேன்.

'பரிந்தா'வில் ஜாக்கி ஷ்ரோஃபின் சண்டையில் நொடிக்கு ஒருவனை வீழ்த்தி உச்சிக்குச் சென்று எதிரியை நோக்கும் காட்சியை ரசித்தேன்.

'டான்'னில் ஷாருக்கான் சங்கி பாண்டேயை வீழ்த்தும் காட்சி பிடிக்கும்.

'ட்ராய்'யில் ப்ராட் பிட்டின் பக்கவாட்டுத் துள்ளலும் வாள் வீச்சும் பரவசப்படுத்தியிருக்கின்றன.

இவற்றுடன் இப்போது பொல்லாதவனில் கிஷோரின் சண்டைக் காட்சியையும் சேர்த்துக்கொள்கிறேன் [கவனிக்க தனுஷின் சண்டைக் காட்சி எதையும் நான் எனது ரசனைக்குத் தேர்ந்தெடுக்கவில்லை].

தனுஷின் சண்டைக் காட்சிகளில் முன்னேற்றம் தெரிகிறது. அவரது, புதுக்கோட்டையிலிருந்து சரவணன் சண்டைக் காட்சிகள் எனக்கு சிறிதும் பிடிக்காமற்போனது. இதில் அப்படியல்ல. தனுஷ் சண்டைக் காட்சிகளிலும் முன்னேறியிருக்கிறார். தனுஷ் - டேனியல் பாலாஜி மோதும் கடைசி சண்டைக் காட்சி தனுஷ் ரசிகர்களுக்கு விருந்து. அதிலும், வடசென்னை வட்டாரங்களில் பிரபலமான 'நாக் அவுட்' வீச்சை [கீழ்த்தாடையின் கீழ்ப்புறத்தில் மேல்நோக்கிக் குத்துவது] குறுநகர்வில் (ஸ்லோ மோஷன்) படம் பிடித்திருக்கும் விதம் நிச்சயமான விருந்து.

கதையும் மற்ற விவரங்களையும்தான் லக்கிலுக்கும் சில நண்பர்களும் சொல்லிவிட்டார்களே.

ம்ம்ம்... விடுபட்ட செய்தி ஒன்று சொல்கிறேன், படத்தில் இளைஞர்களுக்குப் பிடித்தமான பல்சர் வண்டியும் நடித்திருக்கிறது.

அன்புடன்
ஆசாத்

Comments

Veera said…
தெரியாத்தனமா அழகிய தமிழ் மகனுக்கு போய்ட்டேன். அந்த படத்திற்கு அப்புறம், தீபாவளி படங்கள் எதயும் பார்க்க கூடாதுன்னு நெனச்சிருந்தேன். உங்க பதிவிற்கு அப்புறம் 'பொல்லாதவன்' பார்க்கலாம்னு நெனக்கிறேன். என் வலைபதிவு வோட்டிங்ல கூட 'பொல்லாதவன்' முதல்ல இருக்கு!!
எங்கேயும், எப்போதும் பாடல்களில் வரும் தமிழ் rap பாடகர் யோகி பி-யை விட்டு விட்டீர்களே!

அவருடைய "மடைத் திறந்து" ரீமிக்ஸ் இங்கே
http://www.youtube.com/watch?v=ZHG6FJTcJR8
Anonymous said…
Troy படம் நல்லா இருக்குமா ? உங்க கருத்து என்ன ?
பல சமயம் பாடல் வரிகளை ரசிக்கும் போது எந்தக் கவிஞர் என்று தெரிந்து கொள்ளும் வரை ...பாடலசிரியர் பெயரைத் தொலைக்காட்சியிலாவது பாடலுடன் போட்டாலென்ன என்று தோன்றும்..

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...