Skip to main content

பெருநாளின் பிறைவிடு தூது! - கவிஞர் தா.காசிம்

நாகூர் ஹனீபா அவர்களின் பழைய பாடல்களைக் கேட்டிருப்போர் கவிஞர் தா.காசிம் அவர்களின் வரிகளைக் கேட்டிருப்பார்கள். இளையராஜாவின் திரையுலக வெற்றிக்குப் பிறகு நாகூர் ஹனீபா பாடிய கச்சேரிகளில் 'இளையராஜா மெட்டமைத்துத் தந்த பாடல்' என்னும் அறிவிப்போடு பாடபட்ட பாடல்,
'தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு! கொஞ்சம் நில்லு! - எங்கள்
திருநபியிடம் போய்ச் சொல்லு சலாம் சொல்லு'
இந்தப் பாடலை இயற்றியவர் கவிஞர் தா.காசிம்.

'தீன்குலக் கண்ணு! - எங்கள்
திருமறைப் பொண்ணு!
மாண்புகளைக் காத்து நிற்கும்
மஹ்ஷரின் கண்ணு'
இதை இயற்றியவரும் தா.காசிம்.

மடலாற்குழுமங்களில் அறிமுகமான நல்லோர்களால் யாப்பிலக்கணத்தின் அடிப்படைகளை அறிந்துகொண்ட பின், மரபுக் கவிதைகளை வாசிக்கையில் அவற்றின் எதுகை, மோனை, அசை, சீர், ஓசைநயம் இவைகளை, ரசிகன் என்னும் நிலையத் தாண்டி மாணவன் என்னும் நிலையில் இருந்து அணுகிப்பார்த்த நாள்களில் தா.காசிமின் 'உதயங்கள் மேற்கே' என்னும் நூல் படிக்கக்கிடைத்தது. சிறுவயது முதலே கேட்டு வளர்ந்த 'தாயிஃப் நகரத்து வீதியிலே' பாடலும், 'தீன்குலக் கண்ணு' பாடலும் நூலின் துவக்கத்திலேயே இருக்க, கவிஞரின் வரிகளுடன் ஏற்கெனவே உண்டாகியிருக்கும் தொடர்பு, அவரது விருத்தங்களைப் படிப்பதில் கூடுதல் ஆர்வத்தை உண்டாக்கியது. முந்தைய பதிவில் குறிப்பிட்டதுபோல், ஆர்வம் இருக்கும் துறையில் வாசிப்பு அதிகமாகியது. அங்கே வண்டிகள்; இங்கே விருத்தங்கள்.

*

'பெருநாளின் பிறைவிடு தூது!', திரவியம் தேடும் பாதையில் மனைவியைப் பிரிந்திருக்கும் நண்பர்களுள் எத்தனை பேர் இதனை வாசித்திருப்பார்களென அறியேன். ரசனையும், தனிமையும் இந்த விருத்ததின் சுவையை இன்னமும் அதிகமாக்கூடும்.

நவீன கவிதைகளின் ரசிகர்கள் இவற்றையெல்லாம் தாண்டி வெகுதூரம் கவிதை வந்துவிட்டதே இன்னுமென்ன பழைய விருத்தங்களில் ஆழ்வது
என எண்ணலாம். அதுவும் ஒருகோணம்.

நட்சத்திர வாரம் எனக்குத் தரப்பட்டிருப்பதால் வழமையைவிடவும் அதிகமான நண்பர்கள் இடுகையினைப் படிக்க வாய்ப்பு இருக்கிறது. இதனை ஒரு வாய்ப்பாக எண்ணி, என்னைக் கவர்ந்த எண்சீரை அதிகமான வாசகர்களிடம் பகிர்ந்துகொள்ள நினைத்ததன் விளைவுதான் இந்த இடுகை.

*

பெருநாளின் பிறைவிடு தூது!

மேற்றிசையின் வானத்து வெள்ளிக் கீற்றாய்
. மின்னுகின்ற பெருநாளின் பிறையே வந்தாய்!
ஏற்றுதற்கும் போற்றுதற்கும் இனிய நாளை
. எழில்செய்ய இளம்பிறையே தோன்றிவிட்டாய்!
நோற்றுவந்த பெருநோன்பை முற்ற வைத்தாய்;
. நோன்புக்குப் பெருநாளோ நாளை என்றாய்!
சாற்றுகிறேன் என்நெஞ்சக் கிடக்கை யெல்லாம்
. சந்தித்தே என்னவரில் சொல்லு வாயே!

அரும்பள்ளிக் குழல்பின்னி முடிக்க வில்லை
. அழகுமுகம் கண்ணாடி பார்க்க வில்லை
குறும்பாகச் செவ்விதழ்கள் விண்ட தில்லை
. குமுதவிழி அஞ்சனத்தைக் கொண்டதில்லை
கரும்பான மொழிபேசக் கேட்ட தில்லை
. கண்ணென்றும் மணியென்றும் சொன்ன தெண்ணி
துரும்பான என்னுடலம் இருப்பதெல்லாம்
. தூரதேசம் சென்றவரின் வருகைக் கன்றோ!

நல்லுணவை என்கையால் படைத்து வைப்பேன்
. நறும்நெய்யை ஊற்றியதில் தோய வைப்பேன்
அள்ளியள்ளி அவருண்ணப் பார்த்தி ருப்பேன்
. அவருண்டு மீந்ததைநான் அமுதம் என்றே
உள்ளினிக்க நாவினிக்க உண்டி ருப்பேன்
. உடனவர்க்கு வெற்றிலையும் மடித்த ளிப்பேன்!
அள்ளியுண்ண அவரில்லை மீதம் இல்லை
. அறிந்திருந்தும் மறந்தாரே பேதை என்னை!

நித்தமிங்கே உம்முருவை மனதில் தாங்கி
. நெஞ்சத்தின் சுமையாலே வதங்கு கின்றாள்!
கொத்து மல்லிச் சரமள்ளிக் குழலிற் சூடி
. குமுதமலர் முகம்காட்ட ஏங்கு கின்றாள்!
இத்தரையில் உமையல்லால் ஏது மில்லை
. என்றிருக்கும் ஏந்திழையைக் காண்பாய் என்றே
வித்தகரைக் கண்டுரைக்க மாட்டா யாநீ
. விண்ணேற்ற முதற்பிறையே என்ற னுக்காய்!

(கவிதையின் நீளம் கருதி இடையிலிருந்த எட்டு அடிகளைத் தட்டச்சவில்லை)

----

அன்புடன்
ஆசாத்

Comments

நாகூர் திரு ஹனிபா எங்கூருக்கு பக்கத்து ஊர் என்ற காரணத்துக்காக இல்லாமல் அவர் குரலில் இருக்கும் ஏதோ ஒரு ஈர்ப்புக்கு நானும் அடிமை.
சீர்காழியார் போல் கணீர் என்ற குரல்.
jeevagv said…
நல்லது, பிறை விடு தூது, பிரகாசிக்கிறது.
ஹனிபா அவர்களில் குரல் அமுதக்குரல் என்பதில் இயமில்லை.
கவிஞர் தா.காசிம்,
இறையருட்கவிமணி கா.அப்துல்கபூர்,
கவிஞர் நாகூர்சலீம் என்று பலரின் கவிதைகளை நாகூர் ஹனீபாவின் குரலுடன் அசைபோட வைத்தது இப்பதிவு.
Anonymous said…
ஏங்க ! இசையே ஹராம் தானே இஸ்லாத்ல?
இனிய சிங்கை குமார்,

உங்கள் தொடர்ந்த வருகையும் பின்னூட்டங்களும் நிறைவை அளிக்கின்றன். நன்றிகள்.

*

இனிய ஜீவா,

நன்றிகள்.

*

இனிய இப்னுஹம்துன்,

சாரண பாஸ்கரன், புலவர் ஆபிதீன் இவ்விருவரையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

*

இனிய வைத்தி,

வருகைக்கு நன்றிகள்.

இஸ்லாத்தில் இசை விலக்கப்பட்டது அல்ல.

அன்புடன்
ஆசாத்
koothanalluran said…
இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை

பாடலை விட்டுவிட்டீர்களே அனைத்து மதத்தினரும் விரும்பும் பாடல். 1999 ல் அகில உலக இஸ்லாமிய இலக்கிய மாநாடி சென்னையில் நடந்தது. அதில் நிறைவு விழாவிற்கு கலைஞர் கலந்து கொள்வதாக நிகழ்ச்சி. வழக்கம் போல் கலைஞர் தாமதமாக வருவார் என செய்தி கிடைத்ததும் இறுதி நிகழ்ச்சியாக் இருந்த நாகூர் ஹனிபாவின் கச்சேரியை முன்னே கொண்டுவந்து விட்டோம். மேலே குறிப்பிட்டிருந்த பாடலை நாகூரார் வழக்கம் போல் 8 கட்டை சுருதியில் பாடிக்கொண்டிருந்த போது கலைஞர் மேடைக்கு வந்து விட்டார். பாடலை நிறுத்தச் சொல்லி சைகை காட்டியதும் கலைஞர் வேண்டாம் அப்பாடல் எனக்கு விருப்பமான பாடல் மீண்டும் அதை முதலிலிருந்து பாடச் சொல்லுங்கள் என்றார்.
RATHNESH said…
தூது கவிதைகளில் இருக்கும் உள்ளார்ந்த சோகத்தை உணர்ந்து அனுபவிக்க அதற்கான மனநிலை வேண்டும். நீங்கள் யாரைக் குறி வைத்து எழுதி இருக்கிறீர்களோ அவர்களுக்கு நிச்சயம் ஆறுதல் தந்திருக்கும் இப்பதிவு. வாழ்த்துக்கள்.
இனிய கூத்தாநல்லூரான், ரத்னேஷ்,

நன்றிகள்.

அன்புடன்
ஆசாத்

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...