Skip to main content

சாலை விபத்தும் சில பகிர்தல்களும்

நேற்று காலை (20.11.07) 7.15 மணியளவில் எங்கள் பகுதியில் ஏற்பட்ட விபத்தின் விளைவுகளைக் காண நேர்ந்தது.

எனது இருசக்கரம் அந்தப் பகுதியைக் கடந்தபோது முன்பக்கம் நசுங்கி கண்ணாடிகள் நொறுங்கிய டெம்போவும், ஹெட்லைட்டின் பேனல் உடைந்து சிதறிய இருசக்கரமும் நின்றிருந்தன. உணர்வற்ற நிலையில் தரையில் ஒருவரை சாலையில் கிடத்தி சோடா தெளித்து எழுப்ப முயற்சி செய்தார்கள். அவரால் எழமுடியாமற்போனதும் அப்படியே தூக்கிக்கொண்டு சென்றார்கள். தரையில் கிடந்தவருக்கு உள்காயமும், அதிர்வும் உண்டாகியிருக்க வேண்டும், வெளியே எந்தக் காயமும் தெரியவில்லை.

சாலையின் இன்னொரு பக்கத்தில் இருசக்கரத்திலிருந்து விழுந்தவரை கைத்தாங்கலாக அழைத்து வந்தார்கள். அவரும் நிலைகுலைந்திருந்தார். மூக்கு உடைபட்டு ரத்தம் கசிந்துகொண்டிருந்தது, முகத்தில் காயங்கள். மழையின் காரணமாக அடர்த்தியான ரெயின்கோட் அணிந்திருந்ததால் அதன்மேல்தான் சிராய்ப்புகளைக் காண முடிந்தது. அவருக்கு கால்களில்தான் காயம் இருந்திருக்கவேண்டும், நடை மிகவும் தளர்வாக இருந்ததால் ஊகிக்க முடிந்தது. சற்று முன்னரே அந்த விபத்து நடந்திருக்கவேண்டும். மழை தூறிக்கொண்டிருந்தது. ஏராளனமானோர் கூடி உதவிகள் செய்யத் துவங்கியிருந்தார்கள்.

ஆறுமாதங்களுக்குள் இரண்டு விபத்துகளின் விளைவுகளைக் கண்ட அனுபவமும், ஒரு விபத்தைக் கண்டு அதில் பாதிக்கப்பட்டவர்க்கு உதவுவோருடன் என்னையும் இணைத்துக்கொண்ட அனுபவமும் இருக்கின்றன. இந்த மூன்று விபத்துகளிலும் பாதிக்கபட்டவர்களுக்கு அருகிலிருப்போரின் உதவி உடனடியாகக் கிடைத்திருக்கிறது. சோடா வாங்குதல், தெளித்தல், சாலையோரத்தில் படுக்கவைத்தல் இப்படியான செய்கைகளைச் செய்யும் மனிதாபிமானம் மிக்கவர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். பரவலான அபிப்ராயம் இருப்பதைப்போல் சென்னைவாசிகள் விபத்தில் ஒருவர் அடிபட்டுக்கிடக்கையில் பார்க்காமல் போகும் கல்நெஞ்சக்காரர்கள் அல்லர்.

நேற்று நிகழ்ந்த விபத்தின் மூலகாரணமாகச் சொல்லப்பட்டது ராங் சைடில் வந்த வண்டி. இடப்புறம் நின்றுகொண்டிருக்கும் வண்டி கிளம்பும் வரையில் பொறுமையில்லாமல், இன்னொரு வண்டி அதனை ஓவர்டேக் செய்ய ராங் சைடில் சாலையின் வலப்புறத்தை ஆக்கிரமித்து புறப்படத் துவங்கியிருக்கிறது, அதுவரையில் நின்றிருக்கும் வண்டியின் கணிப்பில் எதிர்புறம் ஒழுங்கான பக்கத்தில் வந்துகொண்டிருந்த இன்னொரு வண்டியோட்டி, சடாரெனத் தோன்றிய ராங் சைடு வண்டியை எதிர்பார்த்திருக்கவில்லை. மோசமான மோதல் நிகழ்ந்திருக்கிறது. காயம், போக்குவரத்து நெரிசல், எஃப்.ஐ.ஆர்., விபத்துக் காப்பீட்டின் க்ளெய்ம் எனத் தொடரும் பல விளைவுகள்.

*****

சில பகிர்தல்கள்:

இரண்டு வாரங்களுக்கு முன்னர் இருசக்கர ஓட்டுதலின் சூட்சமங்கள் நன்கு அறிந்த நண்பரொருவர் பின்னால் அமர்ந்திருக்க சென்னையின் மிக நெரிசலான பகுதிகளில் வண்டியோட்டிய அனுபவம் கிடைத்தது. இருசக்கரம் நன்றாக ஓட்டத்தெரிந்தவர்கள் பின்னால் அமர்ந்து வருவதற்கும் ஓட்டத்தெரியாதவர்கள் அமர்ந்து வருவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.

நெருங்கி அமர்ந்து கால்களை வண்டியுடன் ஒட்டியபடி அட்டகாசமான பேலன்சுடன் அமர்ந்திருந்தார். பின்னால் ஆள் இருக்கிறாரா இல்லையா என்னும் சந்தேகம் ஏற்படுமளவிற்கு அவரது பேலன்ஸ் இருந்தது. அலுவலகம் முடிந்து மக்கள் வீட்டிற்குச் செல்லும் வேளைகளில் வண்டியலை அடிக்கின்ற நூறுஅடி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை சந்திப்பில் நீந்தி திருமங்கலம், அண்ணாநகர் மேற்கைத் தொட்டு, பாலப் பணிகள் நடந்துகொண்டிருக்கும் பகுதியில் அதிமோசமான லெவல் க்ராசிங்கினைத் தாண்டி, எம்.டி.எச். சாலையில் வில்லிவாக்கம் வரை செல்வதற்குள் நுரைதள்ளும், ஆனாலும், பழகிவிட்டதால் உணர்வதில்லை. அவஸ்தைகளும் அனிச்சையாகிப்போவது சென்னைப் போக்குவரத்தில்தான்.

பின்னால் அமர்ந்திருந்த நண்பர் குறிப்பிட்டார், 'மினிமம் டிசிப்ளின் / சிஸ்டம் இல்லாத ட்ராஃபிக் பாய் இது.' வண்டியோட்டும்போது அடிக்கடி நினைத்துக்கொள்ளவேண்டிய வாசகம் அது.

'விதிப்படி அனைத்தும் நிகழும்' என்னும் வேதாந்தச் சிந்தனை இருந்தாலுமே நமது பக்கத்திலிருந்து எந்தத் தவறும் இல்லாமல் பார்த்துக்கொள்ளும் மனநிறைவையாவது அடைவதற்காக நான் கடைப்பிடிக்கும் சில பாதுகாப்பு நடவடிக்கைகள் சில உண்டு.

சரியாகச் சொல்வதென்றால் அனைவரும் கட்டாயமாகச் செய்யவேண்டியவைதான், சென்னைச் சாலைகளில் அப்படிப்பட்ட முறைமையை நிறைய வண்டியோட்டிகள் கடைப்பிடிக்காததால் இப்படி ஒழுங்காகச் செய்யும் அவசியமானவைகளை ஏதோ பெரிய காரியமாகச் சொல்ல நேர்வதில் வருத்தமே. நகரும் முன், திருப்பங்கள், ஓவர்டேக்குகள், எதிர்த்திசை ஹெட்லைட்டுகள் இப்படியான சிலவற்றில் நான் கடைப்பிடிக்கும் முறைகள்.

1.வலம் இடம் அலைபாய்தல்:
சத்தியமாக திருப்பம் வந்தவுடன் சடாரென லேன் ஜம்பிங் செய்து மற்றவர்களைத் திகைக்க வைப்பதில்லை.

அண்ணா மேம்பாலத்திலிருந்து வந்து பீட்டர்ஸ் சாலை செல்வதென்றால், மேம்பாலைத்திலிருந்து இறங்கியதுமே ஒழுங்காக இண்டிகேட்டரைப் போட்டு வலப்புறம் ஒதுங்கி கார்களுக்கும் பின்னால் பொறுமையாகச் சென்று வலப்புறம் திரும்பி பீட்டர்ஸ் சாலையில் ஏறுவதுவது வழக்கம். நெரிசல் குறைவாக இருக்கும் நேரங்களில், எமிரேட்ஸ் ட்ரைவிங் ஸ்கூலில் கற்றுத் தந்த 'ஷோல்டர் செக்' செய்து பின்னால் வண்டிகள் எதுவும் இல்லையென்றாலே கொஞ்சமாக ஓவர்டேக் செய்து வலப்புறம் திரும்புவேன். இல்லையேல் இரண்டு சிக்னல்கள் கடந்தாலுமே பொறுமை இழக்காமல் திரும்புவேன்.

2.நின்றிருக்கும் வாகங்களை ஓவர்டேக் செய்தல்:
பக்கத்திலிருப்போரின் 'கவரில்' மெதுவாக எட்டிப்பார்த்து ஒரு வண்டி தெரிந்தாலும், 'நீங்க போங்க சார்' என ஹெல்மெட்டிற்குள் எதிரொலிக்க அடுத்தவரை விட்டுவிடுவேன். வண்டிகள் ஏதும் இல்லாத பட்சத்தில்தான் நகர்வேன்.

3.கிளைச் சாலையிலிருந்து சாலைக்குள் நுழைதல்:
எனக்கும் நண்பர்களுக்கும் இன்றுவரையில் நடக்கும் விவாதம் இதுதான். கிளைச்சாலையிலிருந்து சாலைக்குள் நுழையும்போது நிறுத்துவதான முஸ்தீபுடன்தான் வருவேன்.

'ஏன்?' என்பார்கள் நண்பர்கள்.

'ஒரு சேஃப்டிதான்' என்பேன் நான்.

தெருக்கள் என்றாலே அப்படிப் பக்குவமாக நுழைவேன். போக்குவரத்து மிகுந்த சாலையென்றால் கிளைச்சாலையின் முடிவில் சற்றே நிறுத்தி நுழைவது பாதுகாப்பானது என உறுதிசெய்த பின்னரே நுழைவேன். சந்திப்புகளில் 'ஹால்ட் அன் கோ' பலகை இல்லையென்றாலும் நானாக அப்படிச் செய்வதுண்டு.

4.எதிர்த்திசை ஹெட்லைட்டுகள்:
இதில் மட்டும் சென்னைவாசிகள் எல்லோருக்கும் பயிற்சி உண்டு. இரவுநேரங்களில் எதிர்த்திசையில் வரும் வண்டிகளின் ஹெட்லைட்டை மறந்தும் தலையுயர்த்திப் பார்ப்பதில்லை. விழிகள் குவிவது ஹெட்லைட்டைத் தவிர்த்த சாலையில்தான்.

கீழே படத்தில் இருப்பதுபோல்.



இரவு நேரத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மதுரவாயிலில் பணிகள் நடந்துகொண்டிருக்கும் பகுதியில் இருசக்கரம் ஓட்டியிருக்கும் நண்பர்கள் இந்தப் பயிற்சியில் வித்தகர்களாக இருப்பார்கள்.

துவக்கநிலையிலேயே இவற்றைக் கடைப்பிடித்துவிட்டோமென்றால், பாதுகாப்பு நடவடிக்கைகள் பழகி ஆபத்தை நாமாக வரவழைக்காத நிலையில் வண்டி ஓட்டலாம்.

'பாய்! சல்தாஹை பாய்' என நண்பர்கள் சொல்வது கேட்கிறது :-)

அன்புடன்
ஆசாத்

Comments

Kasi Arumugam said…
நட்சத்திர வாழ்த்துக்கள் ஆசாத். நிறைய சாலைப் போக்குவரத்து, வாகனம் பற்றி எழுதுகிறீர்கள். ஆர்வமா, அல்லது சாலையில் அதிகம் பயணிக்க நேரும் பணியா?:-)

நீங்கள் சொன்ன யோசனைகள் நல்ல பயனளிக்கக் கூடியவை. நானும் என் பங்குக்கு ரெண்டைச் சொல்கிறேன்.
1. நின்று கொண்டிருக்கும் பெரிய வாகனத்தை கடந்து செல்ல நேரும்போது, வாகனத்தின் டயர்களுக்கு நடுவே பாதங்கள் தேன்படுகிறதா என்று பார்ப்பது. சிலர் வாகனத்தின் முன்பக்கமாக சாலையைக் கடக்க முயற்சித்தால் நாம் வாகனத்தைக் கடக்கும்போது மோதிக்கொள்ள நேரிடும். இப்படி பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டால் இதைத் தவிர்க்கலாம்.
2. நமக்கு முன்பாக சென்று கொண்டிருகும் காரின் முன் பின் கண்ணாடிகளூடே அதற்கும் முன் இருக்கும் போக்குவரத்தி அவதானித்தல். இதன் மூலம் நமக்கு முன் உள்ள கார் திடீரென நிறுத்தப்பட நேரிட்டால் சுதாரித்துக்கொள்ள நமக்கு கால அவகாசம் கிடைக்கும்.

மேலும் பயனுள்ள பல இடுகைகளுக்கு வரவேற்பு:-)
Anonymous said…
சென்னையில நாம் பாதுகாப்பா வண்டி ஓட்டுனா மட்டும் போதாது ஆசாத் அண்ணே! கிளைச்சாலையிலிருந்து முக்கிய சாலைக்குள் நுழையும்போது நிறுத்த முனைந்தால் பின்னால் வருபவன் சென்னையின் மிகச்சிறந்த வசவுகளை அள்ளி விட மாட்டானா?
'ஊரோடு ஒட்ட ஒழுகிடுங்க' பாய் :-)

நாம துபாயிலேயே சென்னை மாதிரி வண்டி ஓட்டுற ஆளுன்னு உங்களுக்குத்தான் நல்லா தெரியுமே

சாத்தான்குளத்தான்
இனிய காசி,

நன்றிகள்.

சாலையில் அதிகம் பணிக்கநேரும் பணி, இருசக்கரவண்டிகளின்மேல் ஆர்வம். இரண்டுமாகச் சேர்ந்து எழுதவைக்கின்றன.

நீங்கள் சொல்லிய இரண்டும் நல்ல யோசனைகள்.

இன்னொரு யோசனை:
இருசக்கரத்தில் நான்கு சக்கரங்களை மிக நெருங்கித் தொடரும்போது, ஏதாவது ஒருபக்கத்தையொட்டி வாகனத்தை வைத்துக்கொள்வது நல்லது. நடுவில் பள்ளம் இருந்தால், அநன்குசக்கரத்துக்கு ஒன்றுமில்லை; அவர்களை நெருங்கித் தொடரும் நம் கண்ணில் படாமற்போக வாய்ப்புண்டு.

*

இனிய ஆசிப்,

10 - 15 வினாடிகளுக்கு ஒருமுறை கண்ணாடியில் பின்னால் கவனிக்கும் பழக்கம் தொடரும்வரையில் பின்னால் வருபவர் வசவிடாத வகையில் வண்டி ஓட்டலாம்.

எல்லாம் E.D.I.ல 93ல பழகுனதுதான்.

அந்த லான்சர் இந்நேரம் ஒங்கள விட்டுட்டுப் போயிருக்குமே :-))) துபாய் நாள்களில் ஒரு நாள்கூட நான் உங்களைப் போல் வண்டி ஓட்டத் துணியவில்லை.

வண்டியா ஓட்றீங்க, விமானமுல்ல :-)))

அன்புடன்
ஆசாத்
ஆசாத்,

மிக நுண்ணியமான அவதானிப்புகள். நான் பின்பற்றும் சில. எப்போதும் விபத்து நேரும் என்கிற முன்னெச்சரிக்கையோடே வண்டியோட்டுங்கள்.

சிக்னலில் நிற்கும் போது கால் கியர் இருக்கும் இடப்புறத்தில் தரையில் இருக்கட்டும், ப்ரேக்கில் ஒரு கால் எப்போதும் வையுங்கள். நமக்கு சிக்னல் வந்தால், எதிரேயோ, அருகேயோ சிக்னல் முடியும் கடைசி தருணத்தில் ஒரு ஆட்டோ உள்ளே போகலாம், ஆகவே கால் ப்ரேக்கின் மீதே இருக்கட்டும்.

உங்கள் வாகனம் தவிர பிறர் வாகனம் எடுத்தவுடன் இன்டிகேட்டர், முன்/பின் பிரேக்குகள் மற்றும் வளைவுகளை பரிசோதித்த பின்னரே ஒட்டுங்கள். அவரவருக்கு இலகுவாக ப்ரேக் அமைந்திருக்கும்.

ஹெல்மெட் அணியும் எல்லா வண்டிகளிலும், rear view mirror இருக்கிறதா என்பது பெரும் கேள்வி. கவசம் தலையில் இருக்கும்போது பின்னால் வருவது தெரியாது, ஆகவே RVM மிக அவசியம்

சென்னையின் மிக டேஞ்சரான சாலையோட்டிகள் இருவர் மட்டுமே - சைக்கிள் ஒட்டுபவர்கள், ஷேர் ஆட்டோ ஒட்டுபவர்கள். ஷேர் ஆட்டோ ஒட்டுபவர்கள் பின்னாடி போவது என்பது எமனோடு டின்னர் சாப்பிட அழைப்பு விடுப்பது போல :)
நல்ல பதிவு திரு ஆசாத். அனைவரும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்தாலே.. விபத்துக்களும் போக்குவரத்து நெரிசலும் பெருமளவு குறையும்
இரண்டு நாட்களுக்கு முன்பு தான் கத்திப்பாரா சந்திப்பு பற்றி படங்களுடன் பதிவு போட்டேன்.
இந்த சந்திப்பை கடப்பவர்களுக்கு உடனே லைசன்ஸ் கொடுத்துவிடலாம்.
Jazeela said…
நட்சத்திர வாழ்த்துகள். தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்கவும்.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக உதவுவது என்பது,இன்ஸூரன்ஸ் போன்றதுதான். விபத்து ஏற்ப்படாத மற்ற்வர்கள் அனைவரும் சேர்ந்து விபத்து ஏற்ப்பட்டவரின் கஷ்டத்தில் கொஞ்சம் பங்கெடுத்துக் கொள்வது...

பாய், எப்ப மதுரை வருவதாக உத்தேசம்?
விபத்தில் சிக்குபவர்களுக்கு உதவ வேண்டியது ஒரு மனிதாபிமான/சமூக கடமையாகும்.

//பரவலான அபிப்ராயம் இருப்பதைப்போல் சென்னைவாசிகள் விபத்தில் ஒருவர் அடிபட்டுக்கிடக்கையில் பார்க்காமல் போகும் கல்நெஞ்சக்காரர்கள் அல்லர்//

உதவவேண்டும் என்ற எண்ணம் நிறைய பேருக்கு இருக்கிறது, ஆனால் சிலவேளைகளில் அதன் பின்னால் வரும் சிக்கல்களினால் (போலீஸ், கோர்ட்) உதவத் தயங்குகிறார்கள்.

இப்பொழுது சற்றுப் பரவாயில்லை என நினைக்கிறேன்.

எனக்கு நேர்ந்த ஒரு அனுபவத்தை வாசித்துப் பாருங்கள்.

http://aathibagavan.blogspot.com/2006/12/blog-post_7203.html
Anonymous said…
நல்ல பதிவு. சென்னை வாசிகளுக்கு சிகப்பு, பச்சை - விளக்குகளின் அர்த்தம் தெரிந்த அளவுக்கு மஞ்சள் வெளிச்சத்தின் அர்த்தம் தெரியவில்லை.

சென்னையில் நான் கற்றுக் கொண்ட புதிய அர்த்தம்: மஞ்சள் விளக்கு வந்தால், பச்சை வரும் வரை தொடர்ந்து ஹார்ன் அடித்தல் !
RATHNESH said…
சமூக அக்கறையான பதிவு. வாழ்த்துக்கள். எனக்கு வாகனம் ஓட்டப் பழக்கித் தந்தவர் சொல்லித் தந்த ஒருவரி வேதம்: "எதிரே வருபவன் வாகனம் ஓட்டத் தெரியாதவன் என்கிற எண்ணத்துடனேயே வண்டி ஓட்டு"
இனிய

நாராயண்,
வாக்காளன்,
குமார்ஜி,
ஜெஸிலா,
வக்கீலய்யா,
ஆதிபகவன்,
சேவியர்கி,
ரத்னேஷ்,

வருகைக்கும் பின்னூட்டிற்கும் நன்றிகள்.

அன்புடன்
ஆசாத்

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...