Skip to main content

சமச்சீர்

சமச்சீரற்ற சமுதாயமாகத்தான் நாம் இருக்கிறோம் என்பதை நமக்குக் கற்றுத் தர கற்றது தமிழ் போன்ற திரைப்படங்கள் தேவையில்லை. கண்ணையும், காதையும், மனதையும் திறந்து வைத்திருக்கும் யாருக்கும் இதனை மற்றவர்கள் வந்து உணர்த்தவேண்டிய அவசியம் கிடையாது. அது ஒருபுறமிருக்க, தானாகவோ மற்றவர்கள் உணர்த்தியோ இதனை உணர்ந்தாலும், மாளிகை - குடிசை வாழ்க்கைத்தர வேறுபாட்டை மாற்றியமைக்கும் திறன் தனிமனிதனின் எல்லைகளுக்குள் கிடையாது. அசைக்க முடியாத நம்பிக்கைகளால் உந்தப்பட்டு சமநிலைச் சமுதாயம் மலர்ந்தே தீரவேண்டும் என உழைப்பவர்கள் உழைத்துக் கொண்டிருக்கலாம். அது அவர்களது நம்பிக்கை. குறிப்பிட்ட சமூகப் பிரிவின், உட்பிரிவின் எல்லைக்குள் மட்டுமே இத்தகைய உழைப்புகள் வெற்றியை அளித்துக்கொண்டிருக்கின்றனவேயன்றி, நாடளாவிய விதத்தில் வாழ்க்கைத்தர வேறுபாட்டை அடியோடு இல்லாமற்போகச் செய்வதானது பேச்சளவில் மட்டும் இருக்க வாய்ப்பு உண்டு.

சமீபமாக இந்த மாளிகை - குடிசை வேறுபாட்டிற்கு ஒட்டுமொத்தமாக தகவல் தொழில்நுட்பத் துறையையின் சம்பள விகிதம் காரணமாக காட்டப்படுகிறது. வலைப்பதிவுகளில் மட்டுமன்றி பரவலாக சென்னைக்குள் அங்கொன்றும் இங்கொன்றுமாக போதிய ஆதாரமற்ற மேலெழுந்தவாரியான விமர்சனங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. தனியார் அஞ்சல் நிறுவனமான 'ரெப்யூட்' தங்களது அஞ்சல் சேவைக்கான விலையுயர்விற்கு தங்கள் பணியாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள சம்பளத்தை உயர்த்தவேண்டியதாகிவிட்டதென்றும், ஏனென்றால் பல பணியாளர்கள் தகவல் தொழில்நுட்பத்துறையில் கிடைக்கும் உயர்வான சம்பளத்திற்கு மாற்றலாகிவிடுகின்றார்கள் என்றும் சிறிய சுவரொட்டி அச்சடித்து தங்கள் அலுவலக வளாகத்தில் வாடிக்கையாளரின் கண்களில் படும்படியாக ஒட்டிவைத்திருக்கின்றாகள். இது வரமா? சாபமா?

தகவல் தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சியால் அதற்குத் துணையாக இருக்கும் போக்குவரத்து ஏற்பாடுகள் முதல் ஆங்கில உரையாடல் பயிற்சி மையங்கள் வரையில் தொழில்கள் வளர்வதை உணர்ந்தும் குறிப்பிட்ட துறையினரின் சம்பள விகிதம் குறித்த அங்கலாய்ப்பும் ஏக்கமும் இருப்பதைத் தவிர்க்க இயலாத மனோபக்குவம் நம்மை ஆட்கொண்டிருப்பது வருந்தத்தக்கது.

இருப்பினும், விலைவாசி, நிலச்சொத்து இவற்றின் அதிரடி விலையுயர்விற்கும், அதிகமான பணப்புழக்கத்திற்கும், வாழ்வியல் வசதிகள் உயர்ந்ததற்கும் குறிப்பிட்ட துறையினரின் சம்பளம் மட்டும் காரணமாக இருக்கமுடியும் என்னும் கருத்தை முழுதாக ஒப்புக்கொள்ள இயலவில்லை. இந்தக் கூற்றின் சில உட்பிரிவுகளை விவாதித்து விடை கிடைத்த பின்னரே ஏற்பதும் மறுப்பதும் இயலும். தகவல் தொழில்நுட்பவியலார்களின் மூச்சுக்காற்று படாத சென்னையின் சில இடங்களிலும் விலைவாசியும், நிலச்சொத்தின் மதிப்பும் உயர்ந்தநிலையில்தான் இருக்கின்றன, நிலச்சொத்தின் மதிப்போ நடுத்தரவர்க்கத்தினர் தொடமுடியாத உயரத்தில்தான் இருக்கிறது. இங்கே நடுத்தரவர்க்கத்தைக் குறிப்பிடுவதால் வர்க்கம் குறித்த புரிதலையும் முன்வைக்கும் அவசியம் உண்டாகிறது.

வருமானம், சமூக அங்கீகார மதிப்பின் அடிப்படையில்,
1.வறுமைக்கோட்டிற்குக் கீழ் (lower-lower),
2.வறுமைக்கோட்டிற்கு சற்று மேல் (upper-lower),
3.கீழ்நடுத்தரம் (lower-middle),
4.நடுத்தரம் (upper-middle),
5.மேல்நடுத்தரம் (lower-upper),
6.மேல்தரம் (upper-upper).
இப்படிப் பிரிக்கலாம் என்கிறது டபுள்யூ. லாயிட் வார்னரின் சமூகப் பிரிவு விளக்கம்.

இந்தப் பிரிவுகளில் தகவல் தொழில்நுட்பவியலார் நடுத்தரம், மேல்நடுத்தரம் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் இருக்கின்றனர். இப்பிரிவுகளை இவர்கள் பங்கெடுக்க வருவதற்கு முன் அங்கே இருந்த நடுத்தரவர்க்கத்தினரான
1.ஓரளவு வெற்றி பெற்ற தொழில் வல்லுனர்கள் (Mederately successful professionals),
2.நடுநிலைத் தொழில் முனைவோர், இடைநிலை மேலாண்மைப் பிரிவினர் (Owners of medium size business and middle management)
இவ்விருவரும் எந்த விதத்தில் தகவல் தொழில்நுட்பவியலார்களின் வருகையால் உண்டான விலையேற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை விளங்கிக்கொள்ள இயலவில்லை.

அதற்கும் ஓரடுக்கு மேல்நிலையான மேல்நடுத்தரத்தில் இருக்கும்
1.பெருவணிகர்களும் (Founders of large businesses),
2.முன்னணி மருத்துவர்களும், வழக்கறிஞர்களும்(successful doctors and lawyers)கூட த.தொ.நு.வியலாரின் சம்பள விகிதத்தால் பாதிக்கப்படவில்லை.

பாதிக்கபட்டதாக சொல்லப்படுவதெல்லாம், கீழ்நடுத்தரமும் அவர்களுக்கும் கீழும்தான். ஆனால், அவர்களுக்குள்ளும், பணவரவைத் தருகின்ற த.தொ.நு.துறையின் ஊடுபயிராக வளர்ந்திருக்கும் கிளைத்தொழில்களைத் தேர்ந்தெடுத்து வாழ்க்கை வளத்தைப் பெருக்கிக்கொள்ள முனையும் சிலரையும் சமூகத்தில் காண முடிகின்றது. இப்படிப்பட்ட முயற்சிகள் சிறிய சமூக உட்பிரிவுகளில் துவங்கி, வளர்ந்து செழிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. அப்படி ஊடாடும் வாய்ப்புகளைக் கணித்து தன்னை மேம்படுத்திக்கொள்ள விழைந்து மாறிவரும் போக்கினை தனக்கு சாதகமாக்க முயற்சி செய்வதால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்குமேயன்றி, மற்றெந்த சுட்டுவிரல்களாலும் கேள்விக்கணைகளாலும் தீர்வெதுவும் வரப்போவதில்லை.

த.தொ.நு.வியலாரைச் சுட்டும் அதே குறையை இன்னொரு பிரிவினரின் மீது பொருத்திப் பார்ப்போம். சென்னையின் சில பகுதிகளில் ஐந்தாண்டுகளுக்கு முன் பதினைந்து லட்சம் பெருமானமாயிருந்த நிலச்சொத்தின் இன்றைய மதிப்பு ஒருகோடி. கிடைத்திருக்கும் மாத வருமானம் ஒருலட்சத்து நாற்பதாயிரம், உட்கார்ந்த இடத்தில்.

தொழிற்சாலைகளாக விரிந்திருக்கும் பகுதிகளில் நடந்த விலையேற்றங்களை ஒருவாதத்திற்காக ஒதுக்கிவிட்டு, இந்த விலையேற்றமும் த.தொ.நு.வியலாரால் வந்ததென்றே வைத்துக்கொள்வோம். எட்டாத உயரத்திற்குச் சென்றிருக்கும் இந்த நிலச்சொத்து விலையேற்றத்தை அனுபவிப்பவர்கள் யார். எத்தனை பேர் நிலத்தை விற்று வருகின்ற வருமானத்தில் வாழ்க்கை வசதிகளை கூட்டிக் கொள்கிறார்கள். விரல்விட்டு எண்ணிவிடலாம். நிலச்சொத்திற்குக் கூடுதல் கடனுதவி அளிக்கும் திட்டமெல்லாம் ஈர்க்கும் விளம்பரங்களாக வெளிவந்து த.தொ.நு.வினரைப் போலவே இன்னொரு பணப்புழக்கம் மிகுந்த பிரிவும் உண்டாகியிருப்பதை விளக்கினாலும், நாம் புரியத் துணிவதில்லை.

ஆக, பணவரவென்பது மாதாந்திர அடிப்படையில் அமைந்து நமக்குப் போட்டியாக கடைகளில் நிற்கும் த.தொ.நு.வியலாருடன்தான் நமக்கு மற்போரே தவிர, காதும் காதும் வைத்தாற்போல் வருடத்திற்கு பதினேழு லட்சம் மதிப்பு கூடுகின்ற நிலச்சொத்தை வைத்திருப்போருடன் அல்ல. உண்மையில் பார்க்கப்போனால், இருவருக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை, இருவரையும் தவிர்க்கவும் இயலாது.

அன்புடன்
ஆசாத்

Comments

Me said…
//கண்ணையும், காதையும், மனதையும் திறந்து வைத்திருக்கும் யாருக்கும் இதனை மற்றவர்கள் வந்து உணர்த்தவேண்டிய அவசியம் கிடையாது. அது ஒருபுறமிருக்க, தானாகவோ மற்றவர்கள் உணர்த்தியோ இதனை உணர்ந்தாலும், மாளிகை - குடிசை வாழ்க்கைத்தர வேறுபாட்டை மாற்றியமைக்கும் திறன் தனிமனிதனின் எல்லைகளுக்குள் கிடையாது//

சரியாக சொன்னீர்!

த.தொ.நு துறையை சேர்ந்தவர்கள் என்றாலே சமூக அக்கறையற்றவர்கள் என்ற மேம்போக்கான எண்ணம் மற்ற நடுத்தர / கீழ்மட்ட மக்களிடையே வளர்ந்து வருவது வருத்தமளிக்கிறது.
விலைவாசி ஏன் உயர்கிறது ?

நமது ரூபாயின் வாங்கும் திறன், 1947 இருந்ததை விட இப்போது சுமார் 160 மடங்கு குறைந்துள்ளது. அதாவது 1947 இன் ஒரு ரூபாய் இன்று 160 ருபாய்க்கு சமம். இதற்கு முக்கிய காரணம், அரசு நோட்டடித்து செலவு செய்ய்வதே ஆகும்.

சாதரணமாக பொருட்க்களுக்கான தேவை அதிகரிக்கும் போது அல்லது உற்பத்தி குறையும் போது, விலை ஏறுகிறது. மாற்றாக, புழக்கத்தில் இருக்கும் பணத்தின் அளவு மிக அதிகமானால் பணவீக்கம் ஏற்படுகிறது ; அதாவது அரசாங்கம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து செலவு செய்யும் போதும் விலைவாசி ஏறும்.

மத்திய பட்ஜட்டில் பல விதமான செலவுகளால், இப்போது ஆண்டுக்கு சுமார் 1.6 ல்ட்சம் கோடி துண்டு விழுகிறது. இதில், அரசாங்கம் ஒரு 70 ஆயிரம் கோடி கடன் வாங்குகிறது. மிச்ச்திற்க்கு (சுமார் 90,000 கோடி ரூபாய்) நோட்டடித்து செல்வு செய்கிறது. பணவீக்க்ம் உருவாகி விலைவாசி ஏறுகிறது. மிக அதிகமான ரூபாய் நோட்டுகள் மிக குறைவன எண்ணிக்கையில் உள்ள பொருட்க்களை துரத்தும் போது பொருட்க்களின் விலை ஏறுகிறது. புதிதாக உற்ப்பத்தி செய்ய முடியாத பண்டங்களான நிலம், ரியல் எஸ்டேட் போன்றவை மிக அதிகமாக விலை ஏறுகிறது.

வட்டி விகிதம், விலைவாசி உயர்வின் விகிததை ஒட்டியே மாறும். வட்டி என்பது, பணத்தின் வாடகையே. பணத்தின் மதிப்பு குறைய குறைய, வட்டி விகிதம் அதற்கேற்றாற் போல் உயரும். கந்து வட்டி விகிதம் பல மடங்கு அதிகரிக்க இதுவே காரணம்.

1930களில் காந்தியடிகள் கதர் இயக்கத்திற்காக வங்கியிலிருந்து 5 சதவித வட்டிக்கு கடன் வாங்க முடிந்தது. அன்றய பணவீக்கமும், விலைவாசி உயர்வும் அப்படி இருந்தன. பற்றாகுறை பட்ஜெட்களின் விலைவாக 1950 முதல் 1990கல் வரை பணவீக்கமும். விலைவாசியும், வட்டிவிகிதமும் தொடர்ந்து ஏறின.

ஊதியம் போதாதால், தொழிளாலர்கள் மற்றும் ஏழைகள் மிகவும் பாதிப்படைகிறார்கள். ஏழைகள், தங்கள் குழந்தைகளை தொழிலாளர்களாக அனுப்புகின்றனர். அதிக வட்டி விகிததில், கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலை. கூலி / சம்பள் உய்ரவு கேட்டு போராட வேண்டிய நிலை. அதனால் உற்பத்தி செலவு அதிகரித்து, விலைவாசி மேலும் உயர்கிறது. சம்பளம் போதாமல் அரசாங்க ஊழியர்கள் லஞ்சம் வாங்க முற்படுகின்றனர்.

ஜெர்மனி போன்ற நாடுகள் பணவீக்கதை மிகவும் கட்டுபடுத்தி விலைவாசியை ஒரே அளவில் வைத்துள்ள்ன. அதனால் அங்கு சுபிட்சம் பொங்குகிறது. இங்கோ வறுமை வாட்டுகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்ல்லை.

அரசின் வெட்டி செலவுகளுக்காக, பொது மக்கள் விலைவாசி உயர்வு என்ற மறைமுக வரியை சுமக்க வேண்டியுள்ளது. ஆனால் அடிப்படை பொருளாதார அறிவு இல்லாத இடதுசாரிகளோ தொழில் அதிபர்களையும், முதலாளிகளையும் காரணமாக சொல்கின்றனர்.

லார்டு கீய்யினஸ் சொன்னது : "..ஒரு நாட்டின் ஒழுக்கதையும், உயர்ந்த குணத்தைய்யும் அழிப்பதற்க்கு சிறந்த வழி என்ன்வென்றால், அந்நாட்டின் நாணய மதிப்பை வெகுவாக சீரழிப்பது மூலம்...." ; நாம் அதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இதை என்று உணர்வோம் ?
இனிய உறையூர்க்காரன்,

வருகைக்கும் பின்னூட்டிற்கும் நன்றிகள்.

*

இனிய அதியமான்,

வருகைக்கு நன்றிகள்.

நீங்கள் எழுப்பியுள்ள கேள்விகள் குறித்து சமயம் இருப்பின் அவசியம் பேசலாம்.

அன்புடன்
ஆசாத்
gulf-tamilan said…
//ஜெர்மனி போன்ற நாடுகள் பணவீக்கதை மிகவும் கட்டுபடுத்தி விலைவாசியை ஒரே அளவில் வைத்துள்ள்ன//
ithu unmaaiyaa??? k.r.athiyamaan pls.explain?
Anonymous said…
//சமச்சீரற்ற சமுதாயமாகத்தான் நாம் இருக்கிறோம் என்பதை நமக்குக் கற்றுத் தர கற்றது தமிழ் போன்ற திரைப்படங்கள் தேவையில்லை//

கற்றது தமிழ் அதைக் கற்றுத் தருவதற்காக வந்த படமென்று எனக்குத் தோன்றவில்லை. அந்தப் படம் அதையும் தாண்டியதென்றுதான் எனக்குத் தோன்றுகிறது

சாத்தான்குளத்தான்
Gulf-Tamilian

One of my relative visited W.Germany in 1967 and then ten years later in 1977 to find prices of all basic commodities unchanged !! impossible here.

Pls see :
http://en.wikipedia.org/wiki/West_Germany#German_Economic_Miracle
இனிய ஆசிப்,

கற்றது தமிழ் சொல்லிச் சென்றது சம்ச்சீர் குறித்தும், அதற்கு மேல் அதீத தமிழார்வம் குறித்ததும்தான் என்று நீங்கள் சொல்ல நினைப்பதாக அனுமானிக்கின்றேன், சரியா.

இப்படியான கரு மாலன் அவர்களின் (எனது நினைவு சரியாக இருக்குமானால் அது மாலனின் கதைததன்) சிறுகதையொன்றில் வந்திருக்கும் நினைவு. அக்கா தமிழ் முதுகலை பயில, தங்கை ஆங்கிலம் பயின்று இன்னும் சில மொழிகளும் பயின்று பன்னாட்டு விமான சேவையில் உயரே உயரே போவாள்.

தமிழ் பயின்ற அக்காவோ தமிழகத்தின் எல்லையைத் தாண்டமாட்டாள். வேலைக்குப் போவதில் துவங்கி ஒவ்வொன்றாக சிரமங்களை விவரிப்பார்.

கடைசியாக, 'ம்ம்ம் பத்து திருக்குறள் கொஞ்சம் மேடைப்பேச்சு பட்டிமன்றம் அபடி இப்படி என்று பொழுதுபோகிறது' என்பதாக சிறுகதை முடியும்.

அன்புடன்
ஆசாத்

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...