Skip to main content

பிக்ரம் வோஹ்ராவும் காலித் மொஹம்மதும்

துபாய் நாள்களில் (1988-1994) பிக்ரமின் 'பிட்வீன் த லைன்ஸ்' பத்தி அறிமுகமானது.

"பை தி வே, ஆர் யூ ரீடிங் பிட்வீன் த லைன்ஸ்"

"நோ சர்"

(துபாயில் உருதுக்காரர்கள் சொல்லித்தந்தது இது, நமது வழக்கப்படி 'சார்' கிடையாது, 'சர்'தான். மேலாளர் பஞ்சாபியாகவும் நமக்குக் கொஞ்சம் நெருக்கமானவராகவும் இருந்தால் 'சர்ஜி')

"ட்ரை டு ஸ்டார்ட் இட், யு வில் என் ஜாய்"

பிக்ரமின் பத்தியுடன் அறிமுகம் இப்படித்தான் துவங்கியது.

அப்பொழுது பிக்ரம் கல்ஃப் ந்யூஸ் பத்திரிகையில் இருந்தார். பின்னர் அவர் கலீஜ் டைம்ஸுக்கு மாறியபோது பிட்வீன் த லைன்ஸ் கலீஜ் டைம்ஸில் தொடர்ந்தது, இப்போது பிட்வீன் த லைன்ஸ் பஹ்ரைன் ட்ரிப்யூனில் தொடர்வதால் பிக்ரம் பஹ்ரைன் ட்ரிப்யூனில் இருக்கிறார் என்பதை தனியாக எழுதத் தேவையில்லை. கொஞ்சம் அரசியல், அதிகமாக அனுபவம் / நிகழ்வுகள் என்பதாக பிக்ரமின் எழுத்துகள் அப்போது இருந்தன.

ஆண்கள் 39 வயது பூர்த்தியாகி 40ஐ எட்டும்போது வழமையாக உதிர்க்கும் சில தத்துவங்கள், இந்தியாவில் இருக்கும் நண்பர்கள் அவர்களது வளைகுடா வருகையின்போது தங்களுக்கு சமமான தொழிலைச் செய்து சமமான அதிகாரத்தில் இருக்கும் வளைகுடாவாசிகளின் வாழ்க்கைத் தரத்தை வியப்பது, வேலைக்குப் போகும் மனைவி தன்னுடைய கணவன் மூக்கடைப்பு காய்ச்சலால் அவதிப்படும்போது அதனை எப்படி அணுகுவார், அலுவலகத்தில் நடக்கும் எலிப்பந்தயங்கள், மேலதிகாரிகள் இப்படி சில பத்திகளின் உள்ளடக்கங்கள் எனது நினைவில் இருக்கின்றன.

'இந்திய அரசியலில் நல்லது நடந்தாலுமே அதன் பின்னணியில் அரசியல்வாதிகளின் தனிப்பட்ட (சொந்த) வெற்றி / தோல்விகள் இருப்பது விதியாகிப்போனதில் வருத்தம்'. காங்கிரஸிலிருந்து வெளிவந்த பின் வி.பி.சிங் அடைந்த முதல் வெற்றியின்போது பிக்ரம் எழுதிய பத்தியின் கடைசி வாக்கியம் இது.

அலுவலகத்தில் எதுவுமே செய்யாமல் பதவி உயர்வு பெறுகின்றவர்களைப் பற்றி பிக்ரம் எழுதியதை வெட்டியெடுத்து தனது பையில் வைத்துக்கொண்டு மனச்சோர்வு உண்டாகும் போதெல்லாம் அதைப் படித்து மகிழ்ந்த நண்பர் ஒருவர் இருக்கிறார். நான் துபாயை விட்டு சவூதி சென்று சில வருடங்கள் கழித்து துபாய்க்கு பயணம் சென்றபோது நேரம் ஒதுக்கி என்னைக் காண வந்திருந்தார். விட்டுப்போன வருடங்களில் நிகழ்ந்தவற்றை மேலெழுந்தவாரியாகப் பகிர்ந்துகொண்ட அந்த சில நிமிடங்களிலும்,

"நீ இப்போதும் பிக்ரமைப் படிக்கிறாயா? அவர் கலீஜ் டைம்ஸில் இருக்கிறார்"

"இல்லை. கலீஜ் டைம்ஸ் வாங்குவதில்லை. அது சரி, நான் இங்கிருக்கும்போதே கலீஜ் டைம்ஸுக்குச் சென்றுவிட்டாரே"


(கவனிக்க, அது ஜித்தாவில் இணைய இணைப்பு இல்லாத நேரம்)

"அடடா, நீ துபாயை விட்டுச் சென்று அவ்வளவு நாள்களாகிறா? நேற்றுபோல் இருக்கிறதே"

இப்படி சில வரிகள் பிக்ரமைத் தொட்டுச் சென்றன. இணையம் வந்த பிறகு ஏற்பட்ட பல தொடர்புகளில், வாசிப்புகளில், பிக்ரமைத் தொடர்வது குறைந்துபோனது.

*

திரை விமர்சனம் படித்தும் ஆங்கில அறிவு வளர்ந்தது என்றால் இணையத்தார்க்கு நம்புவதற்கு சிரமமாக இருக்கும்; தமிழ் வழிக் கல்வியில் பள்ளி இறுதியாண்டு வரையில் படித்துவிட்டு, தொழிற்கல்வி பயின்று வேலையில் சேர்ந்து வளைகுடாவில் மலையாளிகளுடனும், பாகிஸ்தானிகளுடனும், வடக்கத்தியர்களுடனும் தட்டித்தடவும் உரையாடல்களில் போராடிய ஒருவனின் கோணத்தில் பார்த்தால் விளங்கும்.

காலிதின் திரை விமர்சனங்கள் எனது ஆங்கில மொழித்திறன் வளர்ச்சிக்கு உதவியிருக்கின்றன. மொழியறிவு வளர்வதற்கு படிக்கும் ஆர்வம் முக்கியம் அல்லவா? எந்தத்துறையில் ஆர்வம் இருக்கிறதோ அது தொடர்பான எழுத்துக்களைப் படிப்பதில்தானே ஆர்வமும் இருக்கும். ஏற்கெனவே இருந்த இந்திப்பட ஆர்வத்திற்கு துபாய் வாழ்க்கை தீனி போட்ட நேரத்தில், நண்பர் ஒருவர் 'டைம்ஸ் ஆஃப் இண்டியாவுல காலித் மொஹம்மதோட ரிவ்யூஸ் படியேன்' என ஒருபொறியைப் போட்டதும், பற்றிக்கொண்டது.

டைம்ஸ் ஆஃப் இண்டியாவில் துவங்கி இப்போது காலித் இருக்கும் இடம் இந்துஸ்தான் டைம்ஸ் என நினைக்கிறேன்.

படிக்கும் ஆர்வமுள்ள மரபுசார் மொழியார்வலர்களுக்கு காலிதின் மொழிநடை பிடிக்காமற்போக வாய்ப்பு உண்டு. அவர் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்ட திரைவிமர்சனங்களுக்கு அவரது மொழிநடை சரியென்பது எனது எண்ணம். காலிதைப் படிக்கும்போது அவர் எழுதியிருக்கும் பொருள்புரியாத வார்த்தைகளை பக்கத்தில் காகிதத்தை வைத்து குறித்துக்கொண்டு, பிறகு சாவகாசமாக அகராதியிலிருந்து பொருளைத்தேடிப் புரிந்து மீண்டும் விமர்சனத்தைப் படிப்பது எனது அப்போதைய வழக்கமாக இருந்தது.

காலிதின் விமர்சனம் குறித்து சில சமயம் ஒவ்வாமை இருந்தாலும், அவரது எழுத்து பாணி எனக்குப் பிடித்தது. குறிப்பாக, ஜாக்கி ஷ்ராஃப் + அனில் கபூர் + நானா படேகரின் 'பரிந்தா'வை ஆஹா ஓஹோ என்று பாராட்டி, டானியின் 'கோஜ்'ஐ அந்த நேரத்தில் அவர் கிண்டலடித்து அத்தனை நடுநிலையான விமர்சகர் அல்லர் என்று அறியப்பட்டாலும், அந்நேரத்தில் (எண்பதுகளின் இறுதிக்காலங்களில்) காலிதின் தீவிர வாசகனாக இருந்தேன்.

*

காலிதுக்கும் பிக்ரமுக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இருவருமே தங்கள் எஜமானர்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். 'செய்யும் தொழிலில்தான் ஈடுபாடு; எஜமான விசுவாசத்தில் அல்ல' என்பது இருவருக்குமே பொருந்தும்.

காலித் திரை விமர்சனத்தை விடுத்தும் பல எல்லைகளைத் தொட்டிருக்கிறார். ஆனால், பிக்ரம் அங்கேயே நிற்கிறாரோ என நினைக்கத் தோன்றுகிறது. தற்போது பிக்ரமின் எழுத்துகள் கொஞ்சம் பொரித்தெடுப்பதாக (போரிங்) ஒரு எண்ணம். வாசகனின் கண்ணோட்டங்கள் விரிவடையும்போது எழுத்தாளரின் பழைய அணுகுமுறையின்மேல் சலிப்பு ஏற்படுவது நடப்புதான். இருப்பினும், எனக்கு ஆங்கில வாசிப்பில் செய்திகள், திரை தொடர்பானவை, அதிவிற்பனைகள் (பெஸ்ட் ஸெல்லர்ஸ்) ஆகிய எல்லைகளைக் கடந்து மற்றவற்றையும் படிக்கும் ஆர்வத்திற்கு அடியெடுத்துக் கொடுத்தவை பிக்ரமின் எழுத்துகள்.

பிட்வீன் த லைன்ஸ்:
நல்ல நண்பர்கள் கிடைத்தால், நல்ல வாசிப்பு அனுபவம் அறிமுகமாகும் (இப்போதும் அது தொடர்கிறது. அந்த வகையில் சமீபத்திய கணக்கில் சேர்ந்திருக்கும் புத்தகம், FREAKONOMICS).


அன்புடன்
ஆசாத்

Comments

Mohandoss said…
வாழ்த்துக்கள் ஆசாத் பாய்.
Anonymous said…
ஆசாத் பாய்

நட்சத்திர வாழ்த்துகள்!!

காலித் எல்லாரையும் 'டபாய்ச்சுட்டு' 'ஃபிதா' எடுத்தபோது அவரை எல்லாரும் மொத்தின கதையையும் சொல்லியிருக்கலாம். எனக்கு அவர் கிட்ட புடிச்ச ஒரே விசயம் கமல் முன்னாடி நீங்கள்லாம் என்னடா நடக்கிறீங்கன்னு வடக்கத்தி ஆட்களை தைரியமாக் கேட்ட காரணத்துக்காக

சாத்தான்குளத்தான்
இனிய மோகன்தாஸ்,

நன்றிகள்.
*

இனிய ஆசிப்,

நன்றிகள்.

காலிதின் திரைப்பயணம் அவரது திரை விமர்சனங்களைப்போல் பெயர்பெறவில்லையென்பது மாபெரும் உண்மை.

அன்புடன்
ஆசாத்
Anonymous said…
thangalin ezhuthu nadai wasikka arumai!
இனிய ஜெஸிலா,

நன்றிகள்.

அன்புடன்
ஆசாத்
Anonymous said…
அண்ணே

இவங்க ஜெசிலா
அவங்க (நீங்க நெனச்சவங்க)ஜெஸிலா
அதாவது இவள் அவள் இல்லைன்னு சொன்னா பெண்ணீய அவ்மதிப்பாயிடும்கறதால
இவங்க அவங்க இல்லை :-)

சாத்தான்குளத்தான்
ஆஹ்ஹா,

சரி இனி ஜெசிலா என்றே எழுதுகிறேன்.

அன்புடன்
ஆசாத்

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...