Skip to main content

+2 வினாவங்கிப் புத்தகம் - சில எண்ணங்கள்

கற்றது தமிழில் பரிந்து பேசபட்ட கூட்டம்தான், ஸ்பென்ஸர் ப்ளாசாவிற்கு வெளியில் நிற்கும் பெருவாரிமக்கள்தான், மத்தியதரம்தான், நின்றிருந்த ஒன்றிரண்டு இருசக்கரங்களும் மத்தியதரத்தைப் பறைசாற்றும் பேஷன், சிடி100 வகையறாக்கள்தான், எல்லாருடைய கண்களிலும் தெரிந்த ஒரே விருப்பம்: தனது குழந்தை +2வில் நல்ல மதிப்பெண்கள் வாங்கவேண்டும் என்பதே.

சென்னை - கல்லூரிச் சாலையிலிருக்கும் ஈ.வி.கே.சம்பத் மாளிகையின் அருகே அமைந்திருக்கும் குட்டிக்குட்டி கட்டடங்களில் இயங்கும் புத்தக விற்பனை நிலையங்களுள் ஒன்றில் +2, 10ம் வகுப்பிற்கான வினாவங்கிகள் தொகுக்கபட்டு, பாடநூல் நிறுவனத்தாரின் மேற்பார்வையில் வெளியிடபட்டு விற்கப்படுகின்றன.

ஒருமணிநேரக் காத்திருப்பிற்குப் பின்னரே நமது முறை கிடைக்கின்றது. அத்தனை கூட்டம். ஒரே ஒரு அலுவலர் மட்டுமே சீட்டு எழுதுவதற்கும், புத்தகத்தை எடுத்துக்கொடுப்பதற்கும், பதில் சொல்வதற்குமாக இருந்தால் அப்படித்தானே இருக்கும்.

இடையிடையே வெளியே வந்து "+2 எகனாமிக்சும், கம்ப்யூட்ட சைன்ஸும் ஸ்டாக் தீந்துருச்சுங்க" என அறிவிப்புச் செய்வதும் அவரே. அறிவிப்போடு கூடவே தாளில் அச்சடித்து அவ்வப்போது வெளியே வந்து ஒட்டியும் விடுகின்றார். அதையும் கவனிக்காமல் கூட்டத்தில் புத்தகப் பட்டியலைச் சொல்லும்போது "+2 கம்ப்யூட்டர் சைன்ஸ்" என்று சொல்லி அவர் அதற்கு "என்னங்க ஸ்டாக் இல்லன்னு இப்பத்தான அங்க போஸ்டரே ஒட்டிட்டு வந்தேன்" என்று பதில் சொல்ல, "அப்பொ எப்பொ சார் கிடைக்கும்?" "ரெண்டு வாரம் ஆவுங்க", "ராயபுரத்துலேர்ந்து வரேன் சார்" இப்படியான எரிச்சலூட்டும் கேள்விகளுக்கும் பதில் சொல்லிக்கொண்டும் அந்த அலுவலர் படும்பாட்டை நினைக்கும்போது இவருக்கென்ன சம்பளம் இருக்கும், 'டீலிங் வித் கஸ்டமர்ஸ், கஸ்டமர் சர்வீஸ்' என்றெல்லாம் உட்டாலக்டி அடிக்கும் சில பன்னாட்டு நிறுவனங்களின் அலுவலர்களுக்கு இணையாக இப்படி பொறுமையாக பதில் சொல்லும் இந்த அரசு அலுவலர் என்ன சம்பளம் வாங்கிவிடப்போகிறார் என்னும் நினைப்பு எனக்குத் தோன்றக் காரணம் கற்றது தமிழ் பார்த்தது மட்டுமல்ல.

தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் சங்கம் இந்த வினாவங்கியைத் தயாரித்திருக்கிறது, தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் ஒப்புதலுடன் வினாவங்கி வெளியிடப்பட்டுள்ளது. அதிகமான விலையொன்றும் கிடையாது. அதிகபட்ச விலை - கணிதம் - ரூ.50, குறைந்தபட்ச விலை - வணிகம் - ரூ.20.

இந்த வினா வங்கியின் விற்பனை குறித்து எங்கும் விளம்பரங்கள் கிடையாது. பள்ளி ஆசிரியர்கள் சொல்லித்தான் விவரம் கிடைத்தது.

இதுதான் புதிராக இருக்கின்றது. கல்வியும் கிட்டத்தட்ட நுகர்பொருள் அளவிற்கு விற்கப்படக்கூடிய நிலைக்கு வந்தபின்னும் (எனது வரிகளில் சந்தேகம் இருந்தால் கணினி கற்பிக்கும் நிறுவனங்கள் புரவலர்களாக இருக்கும் விளம்பரதாரர் நிகழ்ச்சிகளில் ஆடம்பரத்தைப் பாருங்களேன், ஒப்புக்கொள்வீர்கள்) இப்படி ஒரு வினாவங்கி விற்பனைக்குக் கிடைக்கின்றது என்னும் விவரம் பரவலாக எங்கும் பேசப்படவில்லை.

தமிழ்நாட்டில் (ஸ்டேட் போர்ட்) பயிலும் +2 மாணவ மாணவியரின் எண்ணிக்கை மிகக் குறைவானதோ அல்லது வினா வங்கிக்கு சந்தை கிடையாதோ என்பதெல்லாம் வாதமே கிடையாது.

சென்ற வருடம் (+2 ஸ்டேட் போர்டு பிரிவில்) தேர்வு எழுதிய மாணவ மாணவியரரின் எண்ணிக்கை 5,62,710 என்கிறது இந்தச் சுட்டி. இந்த வருடமும் அதே எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டு, அவர்களுள் பாதிப்பேர் வினாவங்கியை வாங்கப்போவதில்லை என அனுமானித்து, மீதிப்பேரில் இரண்டு மாணவர்க்கு ஒரு வினாவங்கிப் புத்தக ஈடு (question bank book set) என அனுமானித்தாலும் தோராயமாக ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ஈடுகள் (செட்ஸ்) சந்தைக்கு தேவைப்படுகின்றன.

தமிழ், ஆங்கிலம், கணிதம், இயல்பியல், வணிகம் இப்படி தேவைக்கேற்ப புத்தகங்களை வாங்கினால் ஒரு ஈடு ரூ.150 முதல் ரூ.200 வரையில் செலவாகலாம். குறைந்தபட்சமாக ரூ.150ஐ எடுத்துக்கொண்டாலும் 1,40,000 x 150 = 2,10,00,000, (குறைந்தபட்ச மதிப்பீடாக) இரண்டு கோடியே பத்துலட்சம் ரூபாய்க்கான சந்தையாக இது இருக்கலாம், முறைப்படி விளம்பரம் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டால்.

ஒரு நாளில், ஒரு பாடப் பிரிவிற்கு, ஒரே ஒரு மாதிரி வினாத்தாளை வெளியிடும் செய்தித்தாள்கள்கூட அதன் விளம்பரத்தை அச்சடித்து கடைகளில் தோரணமாகவும், தொலைக்காட்சிகளில் விளம்பரமாகவும் வெளியிடும் அளவிற்கு +2 வினாக்களுக்கான சந்தை இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும், பாடநூல் நிறுவனம் இதனை சந்தையாக்க விரும்பவில்லையென்றே நினைக்கத் தோன்றுகிறது.

சந்தையாக்க விரும்பாமல் தாழ்நிலையாக இதனைச் செய்யும்போதே இத்தனை கூட்டம் இருக்கையில், ஒருவேளை இதனை அவர்கள் விளம்பரபடுத்தியிருந்தார்களென்றால் எத்தனை கூட்டம் இருக்கும் என்பதும் இதில் துணைக்கேள்வி.

அரசுத்துறை நிறுவனங்கள் செய்யும் இப்படிப்பட்ட சில சின்னச்சின்ன சேவைகள் / செயல்கள் வெளிச்சத்திற்கு வருவது கிடையாது.

பேருந்து நிறுத்த நிழற்கொடைகளிலும் இன்னாரின் தொகுதி மேம்பாட்டிற்கான ஒதுக்கீட்டிலிருந்து இன்னாரின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட நிழற்கொடை என்றெல்லாம் விளம்பரம் தேடும் அரசியலார்கள் கொஞ்சம் ஓட்டுவங்கிக்கான களப்பணிகளிலிருந்து சற்றே விலகி அரசுத்துறைகள் செய்யும் இப்படிப்பட்ட சின்னச்சின்ன லாபநோக்கற்ற செயல்களை வெளிச்சம் போட்டுக் காட்டினால் புண்ணியம் கிட்டலாம்.

குறிப்பு:
தோராயமாக 180 முதல் 200 பக்கங்கள் கொண்ட புத்தகம் ரூ.30. இது லாபகரமானதா இல்லையா என்பதை பதிப்பகத்தார் யாரேனும் சொன்னால்தான் உண்டு.



இந்தப் பதிவில் ஏதோ ஒரு பேய் மாளிகையைப் போல் தோற்றமளிக்கும் இந்தப் படம் எதற்கென்று சிலர் நினைக்கலாம். புத்தகம் வாங்க வரிசையில் நின்றபோது எதிரில் இருந்த கட்டடத்தைப் படம் பிடித்தேன். முன்னொரு காலத்தில் அங்கு ஏதேனும் அலுவலகம் இயங்கியிருக்கலாம். இப்போது கேட்பாரற்றுக் கிடக்கிறது. சென்னை - கல்லூரிச் சாலையின் நில மதிப்பீடு தெரிந்தோர்கள் பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம்.

அன்புடன்
ஆசாத்

Comments

Azad, absolutely this is the best blog in recent times.

I just cut'n pasted and forwarded your write-up to my friends with due credits to you.

Thank you so much.
Anonymous said…
சற்றே தாமதமான மறுமொழி. பதிவிற்கு மிக்க நன்றி!

வெளியூரில் இருப்பவர்கள் மணிஆர்டர் அனுப்பி +2 வினா வங்கிப் புத்தகங்களை வாங்கலாம் எனத் தெரியவந்தது. அந்த அலுவலகத்திறுகு குறிப்பிட்ட சில வினா வங்கிப்புத்தகங்களின்விலையத் தெரிந்து கொளவதற்காக தொலைபேசியில் தொடர்பு கொண்டால் யாருமே எடுத்துப்பேசவில்லை. தங்கள் பதிவைப் பார்த்த பிறகு தான் ஒரே அலுவலர் இருப்பதுதான் காரணம் எனத்தெரியவந்தது. ஓரிரு நாள்களுக்குப் பிறகு தொலைபேசியில் மறுபடியும் தொடர்பு கொண்டபோது விலை விபரம் சொன்னார்கள். தற்போது மணி ஆர்டர் அனுப்பி உள்ளேன்.

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...