Skip to main content

புதுரக இருசக்கரச் சந்தையின் இலக்கு இளைஞர்களே! (140சிசி, 150சிசி, 160சிசி வகைகள்)

150சிசி ரக மோட்டார் சைக்கிள்களில் போட்டாபோட்டி காட்டாகுஸ்திதான் நடந்துகொண்டிருக்கிறது.

'கற்றது தமிழ்' திரைப்படத்தின் வசனத்தில் பல்சர் (பஜாஜ்) பெயரைச் சொல்லி அதனை பக்கத்து வீட்டுக்காரன் வாங்கியதால் பொறாமை உண்டானதாக எழுதி எந்தச் செலவுமே இல்லாமல் என் போன்ற இருசக்கர ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விளம்பரமாகச் செயல்பட்ட வசனத்தை விளம்பரத்துறையின் வழக்குப்படி 'ப்ராடக்ட் ப்ளேஸ்மென்ட்' என்று சொல்லலாமா என அறியேன். ஆனால், பல்சர் இளைஞர்களின் கனவு என்பதை நன்றாகவே அறிவேன்.

அதே (பஜாஜ்) தயாரிப்பின் 135சிசி டிஸ்கவர் ரகமும் என்னென்னவோ இளைஞர்களைக் கவரும் விளம்பரங்களுடன் வந்தபோதும் பல்சரின் சந்தைக்கு எந்தவிதமான பாதிப்பும் நிகழாது என்பதை தயாரிப்பாளர்கள் அறிந்தே இருப்பார்கள். அவர்களுடைய இன்னொரு தயாரிப்பான அவென்ஜர் தனது படுக்கையான இருக்கையுடன் 180சிசி திறனுடன் சந்தையில் இருந்தபோதும் அதுவும் பல்சரின் பங்கை அசைத்தும் பார்க்காதென்பதும் உண்மை.

இப்படியிருக்கையில் செந்தழல் வண்ணத்தில் (ஹோண்டா) யூனிகார்ன் 150சிசி சந்தையில் தலையைத் தூக்கியது. ஒற்றைத்தாங்கி (Mono suspension - பின் சக்கரத்திற்கு இரண்டு ஷாக்அப்ஸார்ப்பர்கள் இல்லாமல் ஒன்றுமட்டுமே மையத்தில் இருக்கும்) தனித்தன்மையுடன் சந்தையில் வலம் வந்து தன் பங்கை எடுத்துக்கொண்டது. தமிழகத்தில் 'ஸாரி கார்ட்' (சேலைத் தடுப்பு) போட்டு அந்த ஒற்றைத்தாங்கி தனித்தன்மையை மறைத்துக்காட்டும் வாகன உரிமையாளர்களை என்றாவது "இப்படி மறச்சு வெக்கத்துக்கா மோனோ சஸ்பென்ஷன் வாங்குன சார்" என என்றாவது கேட்டுவிட்டு அவர் துரத்துமுன் ஓடிவிட உத்தேசம். என்றைக்கு, எந்தப் போக்குவரத்து சந்திப்பில், எந்தப் புண்ணியவான் எனது கேள்விக்கு ஆளாகப் போகிறாரோ?

பல்சரின் சந்தைக்கு யூனிகார்ன் (ஹோண்டா) போட்டியா? பட்டிமன்றமே நடத்தலாம். சாலையில் நிறைய யூனிகார்ன்கள் காணக்கிடைக்கின்றன. அண்ணாசாலையிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதியின் விநியோகப் பட்டறையில் வரிசையாக யூனிகார்ன்கள் நிற்பதும் வெளியேறுவதும் தினசரி நிகழ்வு. விலையும், மைல்திறனும் (மைலேஜ்) பல்சருக்கு கொஞ்சமே மேலே கீழே. நான்கைந்து மாதத்திற்கு முன்பென்றால் நிலைமை இப்படி அல்ல. யூனிகார்ன்கள் சாலையில் குறைவாகவே காணப்பட்டன. திடீரென்ற உயர்வு மூன்று மாதங்களாகத்தான். மோட்டார் விகடனார்கள் பொறுத்திருந்து பார்க்கலாம் யூனிகார்னை என்று எழுதியதாக ஒரு நினைவு.

பொறுத்தாகிவிட்டது. 150சிசி யில் பல்சர் - யூனிகார்ன் போட்டி காட்டா குஸ்திதான்.

செந்தழல் வண்ணத்தில் யூனிகார்ன் என்றால், மஞ்சள் வண்ணத்தை முன்னிறுத்தி அறிமுகமாகியது அப்பாச்சி 160சிசி (டி.வி.எஸ்.). 'இப்பொழுது இல்லையென்றால் எப்பொழுதும் இல்லை' என்கிற விளம்பர வாசகம், குறும்புக்கார இளைஞன், வட்டுத்தடையால் (disc brake) முன்சக்கரத்தை நிறுத்தி பின்சக்கரங்களை உயர்த்தும் சாகசமெல்லாம் காட்டி தொலைக்காட்சி விளம்பரங்கள் வந்தவண்ணமாக இருக்கின்றன. சமீபத்திய விளம்பரத்தில் நியூட்டனின் முதலாம் விதி பின்னணியில் ஒலிக்க சீராகச் செல்லும் வண்டி ஒரு பெண் கையைக் காட்டியதும் பின்சக்கரத்தை உயர்த்தி நிறுத்தி சாகசம் செய்ய, ஏன் வகுப்புக்கு தாமதம் என வினவும் ஆசிரியரிடம் 'ம்ம்..ப்ராக்டிகல்ஸ்'...அப்பாச்சியின் விளம்பரங்கள் அல்வா-ஜி.

வாகனத்தில் அமர்ந்தால் ஓட்டுனர் இருக்கையுடன் ஒட்டியபடி கால்களை வைக்கும்படி பெட்ரோல் கொள்கலனின் அமைப்பு அட்டகாசமாக இருக்கின்றது. ஆனால், மைல்திறன் லிட்டருக்கு 42.1கி.மீ. என்கிறார்கள். இது கிட்டத்தட்ட தண்டர்பேர்டின் (ராயல் என்ஃபீல்ட்) அளவிற்கல்லவா வருகிறது. இருந்தும், இளைஞர்கள் விரும்புகிறார்கள். காட்டாகுஸ்தியில் அப்பாச்சி அதன் அளவிற்கு விளையாட்டைக் காட்டிக்கொண்டுதான் இருக்கிறது.

சாகசங்கள் செய்யும் காட்சியில் பல்சர்காரர்கள் கேடயக்குறிப்பு (டிஸ்க்ளெய்மர்) போடுவதைப்போல் (அதாவது: இந்த சாகசங்கள் தொழில்முறை சண்டைக்கலைஞர்களால் செய்யப்படுகிறது. நீங்கள் முயற்சி செய்யவேண்டாம்...ப்ளா..ப்ளா) அப்பாச்சிக்காரர்கள் கேடயக்குறிப்பெதுவும் போடுவதில்லை. இதற்கும் மேலான சாகசங்களை செய்தால்தானே இந்திய நகரங்களில் வண்டியோட்ட முடியும் என நினைத்தார்களோ என்னவோ?

150சிசி காட்டா குஸ்திக்கு அண்ணன் ஹங்க் (ஹீரோ ஹோண்டா) உருவாகப்போவது 140சிசி தம்பி சிபிஸி எக்ஸ்ட்ரீமுக்கு முன்னமே தெரியுமோ தெரியாதோ, மேற்படி போட்டியாளர்களிடம் ஹீரோ ஹோண்டாவின் பெயருக்காகவே காட்டாகுஸ்தியில் இவரும் கலந்துகொண்டது. பின்புறமாக நின்று நேர்கோணத்தில் பார்த்தால் காளை நிற்பதுபோலவே தோன்றும். பின்இருக்கையின் பின்னுள்ள பிடியானது இணைந்த அமைப்பாக இல்லாமல் காளையின் கொம்புகளைப்போன்ற அமைப்பில் அப்படி இருக்கும். தடுக்கி விழுந்தால் நகருக்குள் ஒரு பஜாஜ் பராமரிப்பு முகவரின் பட்டறையில்தான் விழுவீர்கள். அத்தனை உண்டு.

சிபிஸி எக்ஸ்ட்ரீம் காட்டாகுஸ்தியில் சரியான புஜபலத்தைக் காட்டவில்லையோ ஹங்க்கை 150சிசி சந்தையில் இறக்கப் போகிறார்கள்.

ஹங்க்கின் விளம்பரத்தில் சில இளைஞர்கள் உடற்பயிற்சி செய்து தோள்பலத்தோடு நிற்கிறார்கள். ஹங்க்கிற்காக தயாராகு என விளம்பரம் சொல்கிறது. ஆக, புஜபலம் கொண்டவர்களுக்கே ஹங்க் என இளைஞர்களுக்கு தூண்டில் போட்டாகிவிட்டது. 150சிசி சந்தையில் நடக்கப்போவது உண்மையான காட்டா குஸ்தியாக இருக்கும். யூனிகார்னில் இருப்பதைப் போலவே பொத்தல் விழாத பின்சக்கர வளைகள் ஹங்கிலும் இருப்பதாகச் செய்தி.

எனது அனுமானத்தில் ஹங்க் (ஹீரோ ஹோண்டா) வெளிவந்த பிறகு, யூனிகார்ன் (ஹோண்டா), பல்சர் (பஜாஜ்) என மும்முனைப் போட்டிதான் நிற்கும் என்று தோன்றுகிறது. 160சிசியாக இருக்கும் அப்பாச்சியும், 140சிசியாக இருக்கும் சிபிசி எக்ஸ்ட்ரீமும் இம்முன்றின் பங்கினைப் பங்குபோடுமா என்பது எனக்கு சந்தேகமே.

ஹங்க் வெளியாகி ஒருவருடம் கழித்துதான் சரியான பதிலைச் சொல்ல முடியும்.

பல்சர்: ரூ.63,000/= (தோராயமாக)
யூனிகார்ன்: ரூ.63,000/= (தோராயமாக)
ஹங்க்: ரூ. ? - எத்தனை நிர்ணயிக்கப்போகிறார்களோ அதுவும் சந்தையில் அதிமுக்கியமான சாவி.

மேற்படி வாகனங்கள் ஏதாவதொன்றின் ஒருவிளம்பரத்திலாவது நடுவயது ஆசாமியைக் காட்டுகிறார்களோ? ம்ஹூம் அவர்களின் குறி இளைஞர்கள் மீதே.

(100சிசி முதல் 125சிசி வரை அடுத்த பதிவில் பார்க்கலாம்)

அன்புடன்
ஆசாத்

Comments

Anonymous said…
வயசாயிடுச்சுன்னா கம்முன்னு இருக்க வேண்டியது தானே பாய்... சும்மா என்னை மாதிரி இளைஞர்களை ஏன் வம்புக்கு இழுக்கறீங்க :)

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...