Skip to main content

பட்டியல் - திரைப்படம் எனது பார்வையில்

மீன் சந்தை, மோட்டார் படகுகள், குறுகலான சந்துகள், மருந்துக் கடை, பேருந்து நிலையம் என எல்லாமே தினசரி கண் முன்னே விரியக்கூடிய, திரைக்காக யாதார்த்தத்தை மீறியிருக்காத காட்சியமைப்புகள். எந்த வீட்டுக் கூரையிலிருந்து சென்னை இத்தனை அழகாகத் தெரிகிறது என்றெல்லாம் மண்டையை உடைத்துக்கொள்ளவைக்காமல், உள்ளதை உள்ளபடி அலங்காரமே இல்லாமல் படம் பிடித்ததற்காக இயக்குனரைப் பாராட்டியே தீரவே
வண்டும்; இதற்காக மட்டும்தான். முதன்முறையாக இப்படி எடுக்கிறார்கள் என்பதல்ல; சமீபத்தில் காதலில் இருந்தே இவை திரையை ஆக்கிரமிக்கின்றன.

பாடல் காட்சியின் இந்தி வரிகளும் நடனமும் மட்டுமே விதிவிலக்கு. வினியோகமும் ஆகவேண்டுமல்லவா, யதார்த்தத்தை மட்டுமே அறைந்து படமெடுத்து விருது வாங்குவதற்கு நமது திரையுலக இரசாயனம் இன்னமும் இடங்கொடுக்கவில்லையென்றே நினைக்கத் தோன்றுகிறது.

பிரகாஷின் விமர்சனம் படிக்காமல் இருந்திருந்தால் இப்படி அவசரமாக பட்டியலைப் பார்த்திருப்பேனா என்பது சந்தேகமே. ஆரவாரமான நிழலுக ஆசாமிகளின் பட்டியலான தீவாரில் துவங்கி, பரிந்தா வழியாக சத்யா, கம்பெனி என கலக்கிக்கொண்டிருக்கும் தாதாக்கள் வரிசையில் நாமும் கோடம்பாக்கத்திலிருந்து நமது பங்கை அளிக்கிறோம். சல்தா ஹை.

சேரித் தெருக்களில் அநாதைகளாகச் சுற்றிக்கொண்டிருக்கும் இரண்டு நண்பர்களின் கதை. இடைத் தரகர் வழியாக புகைப்படமும் பணமும் வந்துசேர, நண்பர்கள் 'போட்டுத் தள்ளு'கிறார்கள். நண்பர்களில் ஒருவன் குடிகாரன், இன்னொருவன் உடலியல் ரீதியான சவாலுக்குத் தயாரானவன், காது கேட்காது, வாய் பேச முடியாது. கூலிக்கு ஆள்களைக் கொன்றுபோடும் இவர்கள் இருவர் மனதிலும் காதலை உண்டாக்க இரண்டு பெண்கள். வினை விதைத்தவன் வினையையே அறுப்பான் என்பதற்கு இன்னொரு விளக்கமாக இருவரும் அடித்தே கொல்லப்படுகிறார்கள். இதுதான் கதை.

மும்பையைப் பார்த்து கொஞ்சம் நாமும் சூடு போட்டுக்கொண்டதாகவே தோன்றுகிறது. சென்னையின் அடுக்கு மாடிக் கட்டடக்காரர்களைப் பொறுத்தவரையில் இன்னமும் நிழல் உலகின் பிடிக்குப் போகாதவர்களாகவே தோன்றுகிறது. அரசியல் பின்புலம் இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதே தவிர தாதாக்கள் உலகமும், போட்டுத் தள்ளல்களும் சென்னையின் கட்டடக்காரர்களை நெருங்கிவிட்டதா என்பது சந்தேகமே. கதையில் அப்படி ஒருவர் தீர்க்கப்படுகிறார். இந்தக் காட்சியமைப்பு எனக்கு அன்னியமாகத் தோன்றியது.

மீன் சந்தையில் ஏற்கெனவே ஒரு தாதா இருக்க, இந்த நண்பர்கள் இருவரும் அடியாள் வேலை செய்வது அவருக்குத் தெரியவந்தும், ஏதோ பங்கு பிரித்துக்கொள்வதைப் போல தாதாவிடம் 'உனது ஆள்களை நாங்கள் தொடமாட்டோம்' என்று சொல்லிச் செல்வதும் தாதாவும் விட்டுவிடுவதும் நடக்கக்கூடிய காரியமாகத் தெரியவில்லை. ஒரே பகுதியில் இரண்டு குழுக்கள் தாதா வேலை செய்வது நம்பக்கூடியதாக இல்லை.

சேரிகளையும், மோட்டார் படகுகளையும், வன்முறைகளையும் நன்றாகப் படம் பிடிப்பதால் மட்டுமே நிழலுகைக் காட்டிவிடமுடியும் என நினைப்பது தவறு. ஒருவேளை நிழலாளிகளின் காதலைத்தான் இயக்குனர் முன்னிலைப்படுத்த விரும்புகிறாரென்றால் அதுவும் சரியாக தொடப்படவில்லை. மூக்கடைப்பிற்கு மருந்து கேட்பதும், அடுத்த நாள் வீடு வரையில் கொண்டு விடுவதும் மட்டுமே காதல் மலர்வதற்கு சாத்தியமானவைகளா என்னும் ஆராய்ச்சியில் இறங்குவதற்குக் காரணம் இருக்கிறது. படம் மசாலாதான் என்பதைத் தெளிவாகச் சொல்லியிருந்தால் இதனை நினைத்தும் பார்க்கமாட்டோமே. கதாநாயகத் தன்மையே அவர்களிடம் தெரியாமல் கதையை நகர்த்திச் சென்று இப்படி திடீரென காதல் மட்டும் திரையின் இலக்கணப்படி வருவதால்தான் கொஞ்சம் ஆராய்ச்சி செய்யத் தோன்றுகிறது.

நிழல் உலகின் திட்டமிடல்களையும் தெளிவாகக் காட்டாமல், அவர்களது காதலையும் தெளிவாகக் காட்டாமல், வாழ்க்கையையும் தெளிவாகக் காட்டாமல் அங்கே இங்கே திரிந்து ஒருமாதிரியாக படத்தை முடித்திருக்கிறார்கள்.

பூஜா, பத்மப்பிரியா இருவரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். கொடுத்த வாய்ப்பை முழுவதுமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆர்யாவும் பரத்தும் அவரவர் வேலையை சரியாகவே செய்திருக்கிறார்கள். குத்துப் பாட்டு, மழைப் பாட்டு, இடுப்பாட்டப் பாட்டு என யு.ஷ.ரா. ஒலிநாடா - குறுவட்டுகளின் விற்பனையை மனதில் வைத்து சரியாகவே செய்திருக்கிறார். பா.விஜய் ஒரு நல்ல திரைப் பாடலாசிரியராகி வருடங்கள் ஆகின்றன, தக்கவைத்துக்கொள்வார். இவர்கள் எல்லோரையும் இணைத்த விஷ்ணுவர்த்தன் மட்டும்...நண்பர் பிரகாஷ் சொல்வதைப் போல இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தாரென்றால் ஒரு நல்ல திரைப்படம் கிடைத்திருக்கும்.

*

நேற்றைய தினம் ஸ்டார் ப்ளஸ்ஸில் ஷாயாஜி ஷிண்டே தாதாவாக நடித்த சௌத்வீன்கா சாந்த் பார்த்தேன். ஸ்டார் பெஸ்ட் ஸெல்லர்ஸ் என்ற தலைப்பில் வெளியாகும் அரைமணி முக்கால்மணி நேரக் கதைகள். திரையில் குருதத்தின் நடிப்பைப் பார்த்து அதைப்போலவே தனக்கும் காதல் வேண்டும் என்ற ஏக்கத்தில் தனது வலிமையை உபயோகித்து ஷாயாஜி அடிக்கும் கூத்துகள்தான் கதை.

திரைக் காதலை உண்மையென நினைத்து மொட்டை மாடிக்கு நடிகையை அழைத்துச் சென்று காதலியாக நடிக்கச் சொல்வதும், அடுத்த மாடியில் ஷாயாஜியைப் போட்டுத்தள்ள துப்பாக்கியுடன் ஒருவன் நின்றிருப்பதும், பொழுது புலரும்போது எதையுமே காட்டாமல் துப்பாக்கிச் சத்தத்துடன் கதையை முடித்ததும்...இன்னொரு பதிவில் எழுதுவேன்.

*

அன்புடன்
ஆசாத்

Comments

Unknown said…
எனது மனதில் தோன்றிய எண்ணங்களை அப்படியே படம் பிடிச்சுக் காட்டி இருக்கிங்க :-).

படத்திலே மருந்துக்கு கூட போலீஸ் வராததும் ஒரு நெருடலே.

இருக்கிற குறையெல்லாம் மறந்துட்டு பார்த்தால் பார்க்கக்கூடிய படமே...

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...