Skip to main content

பிடித்த நான்கு - பகுதி 1

பிடித்த நால்வர், பிடித்த நான்கு?

இந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லும்போது எந்த நினைப்பில் இருக்கிறோமோ அதுவே முன்னே நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கொஞ்சம் புத்திசாலித்தனமாக நடந்துகொள்வதாக நினைத்துக்கொண்டு கொஞ்சம் ஜல்லியும் அடிக்கலாம். மனதில் இருப்பவற்றை வெளிப்படையாகவும் சொல்லலாம். எந்த அளவுகோலை எடுத்துக்கொண்டு இந்த நான்கை விவரிப்பது என்பதில் குழப்பமே உண்டாகிறது.

கொஞ்சம் ஜல்லியும், கொஞ்சம் மனதில் இருப்பதுமாக, கலவையாக்கி எழுதுகிறேன். எது ஜல்லி, எது மனதில் இருப்பது என்பது படிப்பவர்களுக்கு, அதாவது குழுக்களில் வலைப்பூக்களில் நம்மைப் படிப்பவர்களுக்கு நன்றாக விளங்கிவிடும்.

பிடித்த அரசியல் தலைவர்கள்:

அ. காயிதே மில்லத் இஸ்மாயீல் சாஹேப்:

சிறுபான்மையினராக இருந்துகொண்டு தேசியமும் பேசலாம் என்பதை வாழ்ந்துகாட்டிய இவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.

இந்தியாவின் தேசிய மொழியாக எதை வைக்கலாம் என்ற விவாதத்தின்போது தமிழை வைக்கலாம் என்று குரல் கொடுத்தவராம்.

பாராளுமனறத்தில் காரசாரமான விவாதங்களில் வாஜ்பாய் அவர்கள் இஸ்மாயீல் சாஹேபுடன் ஈடுபட்டிருந்த நாளில், பாராளுமன்ற வளாகத்திலிருக்கும் தபால் தந்தி அலுவலகத்தில் பெஞ்சில் வாஜ்பாய் சாஹேப் அமர்ந்திருக்க, அங்கே வந்த இஸ்மாயீல் சாஹேப் வரிசையில்
நின்றிருக்கிறார். அதனைக் கண்ட வாஜ்பாய் தான் எழுந்து நின்று தனது இடத்தில் காயிதே மில்லத்தை உட்காரச் சொல்லியிருக்கிறார்.

அரசியல் நாகரீகங்களை அனைவரும் கடைப்பிடித்த காலத்தில் வாழ்ந்த இஸ்மாயீல் சாஹேபை எனக்குப் பிடிக்கும்.

இந்தியா பாக்கிஸ்தான் பிரிவினையில் முஸ்லிம் லீக் முன்னணியில் நின்று நாட்டைத் துண்டாடிச் சென்றபோது, தான் அந்தப் பக்கம் சாயாமல்

இந்தியாவில் முஸ்லிம் லீக்கை வழிநடத்திச் சென்றவர்.

ஆ. எம்.ஜி.ஆர்.:

இவரை ஏன் பிடிக்கும் என்றெல்லாம் விளக்கத் தெரியாது. பிடிக்கும் அவ்வளவுதான். நடிகராகவா, அரசியல் தலைவராகவா, ஸ்டுடியோ அதிபராகவா என்றெல்லாம் கேட்டாலும், எல்லாவற்றுக்குமே பிடிக்கும். சார்பு நிலையென்று சொல்கீறீர்களா? சல்தா ஹை.

இ. ஷேக் ராஷித் (துபாய்):

சாதாரண கடற்கரையோரக் கிராமத்தை எப்படி முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லலாம் என்பதற்கு வழிகாட்டியவர். துபாயின் அபரிதமான வளர்ச்சியென்பது ஷேக் ராஷிதின் மறைவிற்குப் பின்னரே இருந்தாலும், இந்த வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைத்தவர் ஷேக் ராஷித்தான் என்பது துபாயின் சரிதம் அறிந்த அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடியது.

மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த போதும், பாட்டியா பிரதர்ஸ் போன்ற பெரிய நிறுவனத்தின் முதலாளி பென்ஸ் காரில் வர, இவர் பிக்அப்பில் வந்து பாட்டியா பிரதர்ஸுடன் கடற்கரையோரத்தில் உலா சென்றதாக பழைய துபாய் மக்கள் சொல்வார்கள். எளிமைக்கு உதாரணம் ஷேக் ராஷித்.

ஈ. ஆயிரம் விளக்கு உசேன் (திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.):

கொஞ்சமேனும் அருகில் ஒரு அரசியல்வாதியைப் பார்த்திருக்கிறேன் என்றால் இவர்தான்.

கழக பந்தாவெல்லாம் கிடையாது, மக்களோடு மக்களாக பள்ளிவாசலுக்கு வருவதும் போவதும், உறவினர் வீட்டுத் திருமணங்களில் எந்த பந்தாவும் இல்லாமல் தானுண்டு தன் ஸ்கூட்டர் உண்டு (இப்போது நான்கு சக்கர வண்டி) என்று வந்து கலந்துகொண்டதும், எம்.ஜி.ஆர். கணக்குக் கேட்ட கூட்டத்தைத் தலைமை தாங்கியிருந்த பின்னும் அ.தி.மு.க.வின் பக்கம் சாயாமல் தி.மு.க.விலேயே இருப்பதும், இப்படியாக பல விஷயங்களில் இவரை எனக்குப் பிடிக்கும்.

முக்கியமானதாக, புறநகரில் வீடு கட்டி மக்களிடமிருந்து ஒதுங்கியிருக்காமல், ஹவுஸிங் போர்டு குவார்ட்டர்ஸிலேயே இன்னமும் இருப்பது மிகவும் பிடிக்கும்.

*

பிடித்த இடங்கள்:

அ. பேஷவார்:

என்னவேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள். என்றைக்கு அமிதாபின் 'குதா கவா' பார்த்தேனோ அன்றிலிருந்து பட்டாணியர்களின்மேல் ஈர்ப்பு.

என்றைக்கு புஸ்தஷ்கி விளையாட்டை குதா கவாவில் பார்த்தேனோ அன்றிலிருந்து அந்த விளையாட்டின்மேல் ஈர்ப்பு. புஸ்தஷ்கி விளையாட்டை ராம்போ 3இல் ஸ்டாலேனும் விளையாடுவார்...

மற்றதை இரவு தொடர்வேன்.

அன்புடன்
ஆசாத்

Comments