Skip to main content

சுஜாதாவின் பத்து நூல்கள் வெளியீட்டு விழா - 3 (முடிவு)

6.
திருக்குறள் உரை குறித்துப் பேசவந்தவர் ஞானசம்மந்தம்(ன்?) அய்யா. அய்யாவின் நகைச்சுவை தமிழகம் அறிந்தது. அன்றைக்கு அவர் உதிர்த்த சில துணுக்குகள் அரதப்பழசானாலுமே சபை நாகரிகம் கருதி வைரமுத்து பேசும்போது 'எப்படி புதிது புதிதாகச் சொல்கிறீர்கள்' என்றார்.

எப்படி உரையை அமைத்துக்கொள்ளவேண்டுமென பயிற்சி பெற்ற பேச்சாளர்களுக்குத் தெரியும். அங்கங்கே நகைச்சுவை, பிறகு அரங்கத்தார் சிரிக்கும்போதே கருத்துகளை ஆழமாகச் சொல்வது, படிப்படியாக விளக்குவது, இதற்கு அய்யாவின் பேச்சு ஒரு எடுத்துக்காட்டு.

முதலில் சுஜாதாவின் ஆய்வுத்திறன் குறித்து விளக்கினார். கூடவே இலக்கண நூல்களில் கூறப்பட்டிருக்கும் ஆய்வுத்திறனுடன் சுஜாதாவின் திறனை ஒப்பிட்டு, இரண்டு மூன்று உதாரணங்கள்.

உரை எப்படி இருக்கவேண்டும் என்பதன் விளக்கம், அதற்கு சுஜாதாவின் நூலிலிருந்து உதாரணம்.

அதிகாரத்தின் தன்மைக்கேற்ப 'வான்சிறப்பு' அதிகாரத்தின் தலைப்பையும் 'மழை'யாக மாற்றியதை அடிக்கோடிட்டு, அதுவும் சரியானதே என்பதற்கான வாதங்கள்.

'துப்பார்க்குத் துப்பாய' குறளின் விளக்கம் எத்தனை எளிமையாக வந்திருக்கிறது என்பதின் விளக்கம்.

இன்னும் சிறிது நேரம் அய்யா பேசமாட்டாரா என நினைக்கவைத்து முடித்த உத்தி.

நான் ரசித்த பேச்சு.

7.
'திரைக்கதை எழுதுவது எப்படி' புத்தகத்தைப் பாராட்டவேண்டுமென்றால், அன்றைய மேடையில் ஷங்கரைவிடவும் பொருத்தமானவர் யார். ஷங்கரே பேசினார்.

தான் மிகவும் மதிக்கக்கூடிய, தந்தையின் இடத்தில் வைத்தும் மதிக்கக்கூடிய பெரியவர் சுஜாதா அவர்கள் எனத் துவங்கி, சுஜாவுக்கு திரையில் இருக்கும் ஞானத்தை விளக்கினார். புத்தகத்தில் தரப்பட்டிருக்கும் படிவத்தைப் பூர்த்தி செய்து அதன்படி திரைக்கதை அமைந்துவிட்டால், அது தோல்வியடைய வாய்ப்பே இல்லை என்பதாகச் சொன்னார்.

சுருக்கமான பேச்சு. அளவான பாராட்டு. சட்டென முடித்துக்கொண்டார்.

8.
சிலப்பதிகாரம் - எளிய உரை குறித்துப் பேசியவர் வைரமுத்து.

கூட்டத்திற்குத் தலைமை ஏற்ற வைரமுத்து அவர்கள் தனக்கென்றிருக்கும் பாணிக்கு எந்தக் குறையும் வைக்காமல்
'தமிழின் வேர்களும், மேற்கத்தியப் பூக்களும் கொண்டதுதான் சுஜாதாவின் எழுத்து'
'இவர் பெரியாழ்வாருடன் தீர்த்தமும் அருந்துவார், பில்கேட்சுடன் ராயல் சல்யூட்டும் அருந்துவார்'
'உனது எழுத்துகளால் தமிழுக்குள் மின்சாரம் பாய்ந்தது'
இப்படியாகத் துவங்கி விஷயத்திற்கு வந்தார்.

உரையின் துவங்கும்போது அவர் சொன்ன விஷயம் யோசிக்க வைத்தது.

'இது அறிவுஜீவிகளின் கூட்டம். இங்கே எந்தத் தடைகளும் இல்லாமல் பேசப்போகிறேன். சில மேடைகளில் நாங்கள் நாடகத்தன்மை காட்டுவதுண்டு. இன்றைக்கு அது தேவையில்லை'

அப்படியென்றால் வைரமுத்து அவர்கள் மற்ற மேடைகளில் பேசுவது நாடகத்தன்மை கலந்ததா என்ற அகழ்வாராய்ச்சியில் இறங்காமல், அரங்கத்திலிருப்போரை மகிழ்விக்க அவர் இதைச் சொன்னதாகவே எடுத்துக்கொண்டேன். வெளிநாட்டு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பல பிரபலமானவர்கள் மேடைக்கு வந்ததும் கிட்டத்தட்ட இதே அர்த்தம் தொனிக்கும் வாக்கியத்தைச் சொல்லி மக்களைக் குளிர்விக்கிறார்கள். சல்தா ஹை.

வைரமுத்துவின் பேச்சிலிருந்து கிடைத்த சுவையான துணுக்குகளுள் ஒன்று, ஔவை நடராசன் அவர்களின் தந்தையார் குறித்தது. "எனக்கு உட்கார்ந்து உட்கார்ந்து உரை எழுதியே மூலம் வந்தது" என்று சொல்வாராம்.

எளிமைப்படுத்துகிறோம் என்று சிலர் மலினப்படுத்திவிடுகிறார்கள் - இந்த வரிகள் கோடிபெறும்.

மூலத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக அவர் சொன்ன கதை சுவாரசியமானது.

'A drop of crocodile on the wall' கவிஞர் எழுதிவைத்துவிட்டுச் செல்கிறார். அவரது நண்பர்கள் இது என்னவாக இருக்கும் என மண்டையை உடைத்துக்கொள்கிறார்கள். முதலையைக் குறித்தே அனைவரின் கற்பனையும் விரிந்து வெவ்வேறு பொருளைக் கொடுக்கிறது. கவிஞர் திரும்புகிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தைச் சொல்கிறார்கள்.

"அடப் பாவிகளா! சுவரின் மேல் இருக்கும் பல்லியை அல்லவா நான் முதலையின் துளி என்று பாடினேன்" என்று கவிஞர் கூறினாராம்.

இப்படியே சென்றுகொண்டிருந்த பேச்சில் இடையே தமிழின் வீச்சு குறைந்து அங்கங்கே ஆங்கில வார்த்தைகள் வரத் துவங்கிவன. நாம் சாதாரணமாகப் பேசுவதுபோலவே, 'கான்ட்ரவர்சியெல்லாம் வேஸ்ட்' என கவிஞரும் மேடையில் பேசினார். விருது சமாச்சாரங்களை கவிஞர் தொட்டதில் வேறு எதுவும் அஜெண்டா இருப்பதாக எனது புரிதலுக்குப் படவில்லை.

'ஒருத்தருக்கு விருது கிடைத்தால் தொண்ணூறு பேர் வீடு இழவு வீடு போலாகிவிடுகின்றது' - கவிஞர் மேடையில் சொன்னது.

பிறகு சிலப்பதிகாரத்தைக் கொஞ்சம் தள்ளிவைத்து, சுஜாதாவின் திரை வசனத் திறனைப் புகழ்ந்துவிட்டு, சுஜாதா அவர்கள் ஒரு அகராதி தொகுக்கவேண்டும் என்ற விண்ணப்பத்துடன் தன் உரையை முடித்தார்.

9.
சுஜாதா அவர்களின் ஏற்புரை, ஏற்புரைக்கு இலக்கணம்.

ஒவ்வொருவராகப் பெயரிட்டு அழைத்து அவருக்கும் தனக்குமான உறவை ஒருவரியில் சொல்லி நன்றி சொன்னார். வைரமுத்துவைச் சொல்லும்போது, கவிஞர் பெற்ரிருக்கும் விருதுகளால் தனக்கேதும் பொறாமை இல்லையென புன்னகைத்துக்கொண்டே குறிப்பிட்டார்.

விழா இனிதே நிறைவுற்றது.

10.
இலக்கியக் கூட்டங்கள் குறித்து என்னால் கருத்து ஏதும் சொல்ல இயலாது. ஆனால், விழாக்களை, கூட்டங்களை ஏற்பாடு செய்யும் குழுவில் சில வருடங்களாக இருப்பதால், மற்ற ஏற்பாடுகளில் எனது பார்வையைப் பகிர்ந்துகொள்ள உத்தேசம்.

அ.
அறிவிப்பாளரும் ஒவ்வொரு முறையும் lecternஇற்கு வந்து அடுத்த பேச்சாளரை அழைப்பது நட்சத்திர விழாக்களில் வேண்டுமானால் இருக்கலாம். இலக்கிய விழாக்களில் தொகுப்பாளர் தனக்கென்று ஒரு ஒலிவாங்கியை வைத்துக்கொண்டு lecturn வரையில் வராமல் இருக்கும் இடத்திலிருந்தே தொகுத்து வழங்குவது சிறப்பு.

ஆ.
ஒளிப்பேழைக்காக அதிகமான வெளிச்சத்தை மேடையில் பாய்ச்சப்போகிறோம் என்பது தெரிந்திருப்பதால், பின்னால் கட்டப்படும் திரையின் பரப்பு ஒளியைப் பிரதிபலிக்கக்கூடிய (glossy) பரப்பாக இல்லாமல் matte finishஇல் இருப்பது நல்லது. இல்லையென்றால், பாதி நிகழ்ச்சியில் விளக்குகளை பக்கவாட்டில் மாற்றியமைக்கவேண்டியிருக்கும், இந்த விழாவில் செய்ததுபோல.

இ.
ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது இடியே விழுந்தாலும் மேடையின் குறுக்கே மேடையிலேயே மற்றவர்கள் நடக்கக்கூடாது.

ஈ.
ஒவ்வொரு உரைக்குமான நேரம் பதினைந்து நிமிடம் என்பதை சில பேச்சாளார்கள் இத்தனை பகிரங்கப்படுத்தியிருக்கக்கூடாது. ஏனென்றால், பின்னால் வந்த நட்சத்திரப் பேச்சாளர்கள் பதினைந்து நிமிடத்திற்கும் மேல் எடுத்துக்கொண்டார்கள்.

உ.
விற்பனைக்கென்று வெளியில் புத்தகங்களை அடுக்கிவிட்டு அரங்கத்திலிருப்போர் அதனை வாங்குவதற்கு நேரமே தரவில்லையென்பது எனது எண்ணம்.

ஊ.
செல்பேசி அழைப்புகளை 'சைலண்ட்'டில் வைக்கும்படியாக அறிவிப்பே செய்யலாம். தொல்லைக்குள்ளான பேச்சாளர்களே நாசூக்காக மேடையில் அறிவித்தும் அங்கங்கே 'ட்ரிங் ட்ரிங்' பலவிதமான ரிங்டோன்களில். கூட்டத்தினரும் ஒத்துழைக்கவேண்டும். அவர்களும் ஒத்துழைக்கவில்லை. 'நான் மீட்டிங்ல இருக்கேன்டா / பா / மச்சி' எல்லாம் கூடவே கேட்டன. நான் அரங்கினுள் சென்றதுமே 'சைலண்ட்'டில் போட்டுவிட்டேன்.

லகான் திரைப்படம் பார்க்கும்போது இப்படி தொல்லைக்குள்ளானது குறித்து நான் எழுதிய வெண்பா.

அய்யா ஒருநாளில் ஆமிர்கான் சித்திரத்தில்
நெய்யா யுருகியென் நெஞ்சிருக்க - பொய்யில்லை
மெல்ல மணியடித்து மேட்டினியைக் கொன்றார்கள்
செல்·போன் பிடிக்கும் சிலர்!

*

அன்புடன்
ஆசாத்

Comments

Yagna said…
பிரமாதம் ஆசாத் பாய். அந்த அரங்கின் உள்ளே நுழந்தவுடன் இருக்கை எண்ணிக்கைக்கான காரணம் சொல்லவே இல்லயே?
விழாவைப் பற்றியக் கட்டுரைக்கு நன்றி திரு.ஆசாத். கடைசியில் இருக்கும் அமீர்கான் சித்திர வெண்பா அருமை. பலமுறை படித்துச் சுவைத்தேன். நன்றிகள். :-)
Boston Bala said…
---ஒலிவாங்கியை வைத்துக்கொண்டு lecturn வரையில் வராமல் ---

ஆஸ்கார் போன்ற விருதுகளில் கூட இவ்வாறே கடைபிடிக்கிறார்கள்.

பதிவுக்கு நன்றி!
இனிய பாலா, ஜே, குமரன், யக்னா...பின்னூட்டத்திற்கு நன்றிகள்.

1.
பாலா, மாஸ்டர் ஆஃப் செரிமொனிதான் எப்பவுமே ஸ்டார்.

அவருக்குன்னு தனி மைக்கு, லெக்டர்ன் தந்துர்ரது எப்பவும் நல்லது. கடேசி நேரத்துல அவரு வந்துட்டாரு, இவரு வந்துட்டாருன்னு மாத்தி மாத்தி அறிவிக்கச் சொல்லுவாங்க. பேப்பர் பேனா வச்சு அத மாத்தி எழுதறதுக்காவது ஒரு எடம் தரணும்.

2.
ஜே கிட்டேர்ந்து பாராட்டுன்னா சந்தோஷமா இருக்கு. நடை..ம்ம்ம் நோட் பண்ணிக்கிட்டேன். இப்படியே எழுத முயற்சியும் பண்ணுவேன்.

3.
குமரன், வெண்பா நமக்கு ரொம்பப் புடிக்கும். அதான் எப்பவோ எழுதுனத பொருத்தமா இருக்கேன்னு இங்க போட்டேன்.

மத்தபடி தியேட்டர் வெண்பா இன்னும் கொஞ்சம் இருக்கு, அப்புறமா எடுத்துப்போடுறேன்.

4.
யக்னா, ஹெட் கவுண்டிங் நம்மோட பழைய பழக்கங்க. மவுண்ட்ரோடு தியேட்டர்கள்ள எதுல எத்தன சீட்டுன்னு மனப்பாடமா வெச்சிருந்தது ஒருகாலம்.

இப்ப ஜித்தாவுல எதாவது விழா நடக்கும்போது அரங்கத்துல நாற்காலி போட்டு, ஹெட் கவுண்டிங் பண்ணி, ஹோட்டல்காரங்க கிட்ட பில் செட்டில் பண்ணும்போது நெகோஷியேட் பண்ண வசதியா இருக்கு.

பாருங்க எல்லா பழக்கத்தாலயும் ஒரு அட்வாண்டேஜ் இருக்கு.

அன்புடன்
ஆசாத்
அடி பின்னிட்டிங்க தலைவரே ;) அருமையான நீளூரை. நிகழ்ச்சிக்கு போகாத குறை தீர்ந்தது.
//அய்யா ஒருநாளில் ஆமிர்கான் சித்திரத்தில்
நெய்யா யுருகியென் நெஞ்சிருக்க - பொய்யில்லை
மெல்ல மணியடித்து மேட்டினியைக் கொன்றார்கள்
செல்·போன் பிடிக்கும் சிலர்!


Venbaa vendare... welcome back!
Murali said…
Hello Azad

This is my first visit to your blog. I really enjoyed your report on Sujatha's book release function.

Will be visiting your blog often.

Keep up the good work.
Murali

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...