Skip to main content

என்.ஆர்.ஐ.களுக்கான வாக்குரிமை

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு, அதிலும் குறிப்பாக அரபு நாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிப்பது குறித்து பிரதமர் பேசியுள்ளார். அது தொடர்பாக எனது கருத்துகள்.


என்.ஆர்.ஐ.யா? ஓ.சி.டபுள்யூ.வா?:

அரபு நாடுகளில் வேலைசெய்யும் இந்தியர்கள் தங்களை என்.ஆர்.ஐ.களாக நினைத்துக்கொள்வதில் தர்க்கப்படி தவறேதும் இல்லையென்றாலும், உண்மையில் மற்ற நாடுகளில் வசிக்கும் என்.ஆர்.ஐ.களுக்கும் அரபு நாடுகளில் வசிப்பவர்களுக்கும் வித்தியாசம் உள்ளது.

அரபு நாடுகளைப் பொறுத்தவரையில் அனைத்து வெளிநாட்டவரும் வேலை செய்ய வந்திருப்பவர்களே. ஏதாவது நிறுவனத்தின் / தனிப்பட்ட முதலாளிகளின் / அரசின் சார்பில் வழங்கப்படும் 'வேலை வாய்ப்பு விசா'தான் வெளிநாட்டவர் அரபு மண்ணில் தங்கியிருப்பதற்கான உரிமையை அளிக்கிறது. தூதரக அதிகாரிகள், தூதரகங்களில் பணிபுரிவோர், அரசு விருந்தினர், இத்தியாதிகள் நீங்கலாக, வேலைசெய்வோர் அனைவருக்கும் இது பொருந்தும்.

அமீரகத்தில் முதலீட்டாளர்களுக்கு 'தங்கும் உரிமம்' வழங்கப்படுகிறது, அவ்வளவே. மற்றபடி, வேலைசெய்வோர்க்கு சிங்கப்பூரில் இருப்பதுபோன்ற பி.ஆர். சமாசாரங்கள் இங்கே கிடையாது. அரபு நாட்டின் குடிமகனாகவோ, நிரந்தரமாகத் தங்கும் உரிமம் பெற்றவராகவோ ஆகிவிடக்கூடிய வாய்ப்பு முற்றிலும் கிடையாது.

இப்படியிருக்கையில், அமீரகத்தில் 'ஃப்ரீ ஹோல்ட் ப்ராப்பர்ட்டீஸ்' எனப்படும் அசையாச் சொத்துகளில் முதலீடு செய்யும் மிகமிகச் சொற்பமான இந்திய முதலீட்டாளர்களை விடுத்துப் பார்த்தால் பெருவாரியான இந்தியர்கள் வேலை வாய்ப்பு விசாவைத் தாங்கி பணியில் இருப்பவர்கள். இவர்கள் தங்களைத் தாங்களாகவோ, இந்திய அரசு அழைக்கும் முறைப்படியோ என்.ஆர்.ஐ. என அழைத்துக்கொண்டாலுமே உண்மையில் அனைவரும் வெளிநாடு வாழ் ஒப்பந்தப் பணியாளர்கள் (ஓவர்சீஸ் காண்ட்ராக்ட் வொர்க்கர்ஸ்).


வாக்குரிமை:

வெளிநாட்டிலிருந்து அனுப்புகின்ற பணத்திற்கான வருமான வரியைச் செலுத்தவேண்டாம் என்கிற விதிவிலக்கைத் தவிர, இந்தியாவில் இருப்பவர்களுக்கும் என்.ஆர்.ஐ.(ஓ.சி.டபுள்யூ.)களுக்கும் வேறெந்த வித்தியாசமும் தற்போது கிடையாது. வெளிநாட்டில் சம்பாதித்து இந்தியாவுக்கு அனுப்புகின்ற பணத்திற்கும் வரிகட்டவேண்டும் என்னும் நிலைமையை நாளையே இந்திய அரசு அமல்படுத்தியதென்றால், அரபு நாட்டில் வசிக்கும் இந்தியருக்கும், இந்தியாவில் வசிப்போர்க்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.

எனவே, இந்தியாவில் வசிப்போர்க்கும், அரபு நாடுகளில் வேலை செய்வோர்க்கும் வாக்குரிமையில் எந்த வித்தியாசமும் இருக்கவும் வாய்ப்பில்லை.

அரபு நாட்டில் வேலை செய்தாலும், வாக்காளர் அடையாள அட்டைக்கான செயல்முறைகள் நடக்கும்போது இந்தியாவில் இருக்கும் வாய்ப்பைப் பெற்று, பிறகு, தேர்தல் சமயத்திலும் இந்தியாவில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தால், இந்தியக் குடிமகனாக தேர்தலில் வாக்களிப்பதில் ஏதும் சட்டப் பிரச்சனை இருப்பதாகத் தெரியவில்லை.

இதன் அடிப்படையில், இருக்கின்ற வாக்குரிமையை புதிதாதகத் தருவதாகச் சொல்வதுபோன்ற வாசகங்கள் எத்தனை பலமானவை என்பது புரியவில்லை. சரியாகச் சொல்வதென்றால், அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிக்கும் வழிமுறையைத்தான் அரசு பரிசீலிக்கின்றதே தவிர, 'வாக்குரிமை' என்னும் பிரச்சனைக்கே இங்கே இடமில்லை என்பது எனது கருத்து.


வாக்களிப்பது யாருக்கு?:

நமது பொதுத் தேர்தல்கள் தொகுதியின் அடிப்படையில் நிகழ்பவை.

அரபு நாடுகளில் வாழும் இந்தியர்கள் வாக்களிப்பதற்கான வழிகளை தூதரகத்தின் மூலமாக அரசு செய்தாலுமே, யார் யார் எந்தத் தொகுதி வேட்பாளருக்கு வாக்களிப்பது என்பதில் பிரச்சனை வரக்கூடும்.

தனது பெயரைத் தூதரகத்தில் பதிவு செய்து வைத்திருக்கும் இந்தியர்கள் ஆயிரங்களில்தான் இருப்பார்கள். பதிவு செய்து வைத்திருப்போர் தவிர மற்றவர்களுக்கும் தூதரகத்திற்கும் உள்ள உறவு, கடவுச்சீட்டைப் புதிப்பிப்பதற்கும், சான்றிதழ்களில் ஒப்பம் வாங்குவதற்கும், பவர் ஆஃப் அட்டார்னி வாங்குவதற்கும்தான்.

ஐந்து வருடங்களுக்கு ஒருமுறையே நிகழும் இந்தத் தொடர்பை வைத்து வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதும், தொகுதி வாரியாக வாக்காளர்களைப் பிரிப்பதும் நடக்கக்கூடிய காரியம் அன்று.

இந்தியாவில் கடவுச்சீட்டிற்காக விண்ணப்பம் செய்தபோது வாழ்ந்த முகவரி வேறாகவும், தற்சமயம் இந்தியா சென்றால் வசிக்கக்கூடிய முகவரி வேறாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது. அப்படி முகவரி மாற்றம் உள்ள இந்தியரை எந்தத் தொகுதிக்கு வாக்களிக்க அனுமதிப்பது என்னும் குழப்பம் தூதரக அதிகாரிகளுக்கு ஏற்படும்.

வெளிநாடு வாழ் இந்தியருக்கென்று தனியாக ஒரு நாடாளுமன்ற வேட்பாளரோ, சட்டமன்ற வேட்பாளரோ தேர்தலில் போட்டியிடாதவரையில் இந்தக் குழப்பத்தை நீக்குவது சிரமம்.

ஏற்கெனெவே இருக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுடன் இன்னொன்றைக் கூட்டவேண்டுமா என்பதை அரசு நாடாளுமன்றத்தில் வைத்து விவாதித்து முடிவுக்கு வராதவரையில் யாருக்கு வாக்களிப்பது என்னும் குழப்பம் தீராது. இருபத்தைந்து லட்சம் வாக்காளர்களுக்காக தனித் தொகுதி ஒன்றை உருவாக்கவேண்டுமா என்னும் கேள்வியும் எழலாம்.


தேவைதான் என்ன?

1.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்கும் முறையைக் கொண்டு வருவதில் கவனம் செலுத்துவதற்கு முன், குறிப்பிட்ட அமைச்சகத்தின் சேவைப் பணிகளை முடுக்கிவிடலாம்.

2.
இந்தியாவில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு இணையாக இறுதியாண்டுத் தேர்வில் மதிப்பெண்களை எடுப்பதென்பது வெளிநாட்டில் வாழும் மாணவ மாணவியர்க்கு இயலாததாகவே இருக்கின்றது. இதற்கான காரணங்கள் பலவாக இருப்பினும், வெளிநாட்டில் மேல்நிலைப் படிப்பு (+2) படித்தவர்களுக்கு கல்லூரிகளில் ஒதுக்கீட்டை வழங்கலாம்.

(2007 இற்குள் ஒரு சதவீதம் [1%] ஒதுக்கீடு செய்வது கல்வித்துறையிடம் பரிசீலனையில் உள்ளது).

சுயநிதியில் லட்சக்கணக்கில் பணம் செலுத்தி சேரக்கூடிய ஒதுக்கீடு (எம்.ஆர்.ஐ. கோட்டா) இப்போது இருந்தாலுமே அது சாதாரண ஓ.சி.டபுள்யூ.வின் தகுதிக்கு அப்பாற்பட்டது.

3.
கட்டாயச் சேமிப்புத் தொகையை அறிமுகப்படுத்தலாம். கடவுச் சீட்டைப் புதிப்பதை இதனுடன் தொடர்புபடுத்தி சேமிப்பைக் கட்டாயமாக்கலாம்.

(வெளிநாடு வாழ் ஃபிலிப்பினோக்கள் ஒரு சதவீதம் வரி கட்டியிருக்கிறார்களா என்று பார்த்த பிறகே கடவுச்சீட்டு புதுப்பிக்கப்படுகிறது).

இந்திய அரசு கட்டாயமாக்குவது சேமிப்பைத் தானே, வரியை அல்லவே என்பதால் அதிகமான எதிர்ப்புகள் இல்லாமல் அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடும்.

4.
வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனுக்கென மாநில அளவில் அமைச்சகம் வைத்துக்கொள்வது அந்தந்த மாநில அரசின் விருப்பத்திலேயே உள்ளது.

கேரளாவிலும், ஆந்திராவிலும் இதற்கென்று தனியாக ஒரு துறை உள்ளது போல் தமிழகத்தில் இல்லை. அப்படியல்லாமல் எல்லா மாநிலங்களிலும் இதனைக் கட்டாயமாக்கலாம்.

5.
தூதரகங்களில் கலாசாரம், வணிகம், கடவுச்சீட்டைப் புதுப்பித்தல், சான்றிதழ் வழங்குதல் போன்ற பணிகளுக்கான பிரிவுகள் இருப்பதைப் போல, நலத் திட்டங்களை அறிவித்து அதற்காகவும் ஒரு புதிய பிரிவை அறிமுகப்படுத்தி சேவைகளைத் துவங்கலாம்.

இவற்றால்தான் வெளியே வாழும் இந்தியர்களுக்குப் பலனேயன்றி வாக்களிக்கும் வழிகளை அறிமுகப்படுத்துவதால் ஜனநாயக உரிமையைச் செயலாற்ற வாய்ப்பு கிடைத்தது என்னும் ஒரே ஒரு உணர்வைத் தவிர வேறெந்த நன்மையும் விளையப்போவதில்லை.

அன்புடன்
ஆசாத்

Comments

''அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் தேர்தலில் வாக்களிக்கும் வழிமுறையைத்தான் அரசு பரிசீலிக்கின்றதே தவிர, 'வாக்குரிமை' என்னும் பிரச்சனைக்கே இங்கே இடமில்லை என்பது எனது கருத்து.''

sahee!
murali said…
VERY GOOD. GULF WORK FORCE NEED MORE SUPPORT FROM INDIAN GOVERMENT.LATER WE THINK ABOUT VOTING AND ALL.

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...