Skip to main content

சென்னையில் தயாரான முதல் படம்

சென்னையில் தயாரான முதல் படம்

நண்பர் ராம்கியின் பரிந்துரையைக் கேட்டு எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய உலக சினிமாவை வாங்கியபின் இன்றுதான் கொஞ்சம் புரட்டிப் பார்க்க நேரம் கிடைத்தது. எழுநூற்றைம்பது பக்கங்கள் கொண்ட புத்தகம். ஒரே மூச்சில் படித்து முடிக்க மலைப்பாக இருந்ததால், பிடித்தமான பகுதிகளை முதலில் படிக்கத் துவங்கினேன்.

உலகின் நூறு சிறந்த படங்களாக புத்தகத்தின் தேர்வுக்குழு தந்திருக்கும் பட்டியலில்,
1. கான் வித் த விண்ட்
2. காந்தி
3. இ.டி.
4. த லாஸ்ட் எம்பரர்
5. டைடானிக்
6. பென்ஹர்
7. ஸ்டார் வார்ஸ்
8. த காட் பாதர்
இவ்வளவே பார்த்திருக்கும் என்னைப் பார்த்து 'நீயெல்லாம் படம் பாக்குறேன்னு சொல்லாத' என புத்தகம் சிரிப்பது ஒருபுறமும், பட்டியலில் பாதிக்கு மேல் கேள்விப் படாத படங்களாக இருப்பதால் மனதிற்குள் கொசுவாகிப்போன உணர்வுகளுடனும், பட்டியலையும், படங்களைப் பற்றியும் மேலோட்டமாக மேய்ந்துவிட்டு இந்திய சினிமாப் பகுதியைப் படித்தேன்.

இருபத்தேழு சிறந்த இந்திய இயக்குனர்களைத் தேர்ந்தெடுத்து தேர்வுக்குழு தந்திருக்கும் பட்டியலில் தமிழ்த் திரையிலிருந்து ஐவர்.

1.மணிரத்னம்
2.பாலசந்தர்
3.பாலுமகேந்திரா
4.மகேந்திரன்
5.பாரதிராஜா

இயக்குனரைக் குறித்து எழுதப்பட்ட கட்டுரையில் இணைப்பாக, சில படங்களையே சொல்லியிருக்கிறாகள் என்பதாகவே புரிந்து கொண்டேன். ஏனென்றால், பாலசந்தரின் பட்டியலில் சிந்து பைரவி, சொல்லத்தான் நினைக்கிறேன், பூவா தலையா, இன்னும் பல இல்லை. மணிரத்னத்தின் பட்டியலில் உயிரே, பம்பாய், அக்னி நட்சத்திரம், இன்னும் சில இல்லை. பாரதிராஜாவில் விடுபட்டவை நிழல்கள், புதிய வார்ப்புகள், இன்னும் சில. இப்படியே பாலுமகேந்திரா, மகேந்திரனுக்கும்.

உலகளாவியபடி எழுதப்பட்டிருக்கும் புத்தகத்தை இப்படிப் பிராந்தியத்திற்கு முக்கியத்துவம் தந்து வாசிப்பது எனது தவறுதான். அறிந்தவை அல்லவா, நினைவுக்கு வந்தன, அவ்வளவே.

*

புத்தகம் குறித்த எனது பார்வையை முழுதாகப் படித்த பின்னரே எழுத முடியும். இப்போதைக்கு ஒரு சந்தேகம்.

சென்னையில் பேசாப் படங்களின் முன்னோடி ஆர்.நடராஜ முதலியார். மோட்டார் வியாபாரம் செய்த இவர், மும்பைக்கு அடிக்கடிச் சென்று வந்ததில் திரைப் படத் தயாரிப்பினை அறிந்து, வேப்பேரி -மில்லர்ஸ் ரோட்டில் ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து 'கீசக பதம்' என்னும் படத்தினை உருவாக்கினார். இதுவே சென்னையில் தயாரான முதல் படமாகப் பெருமை பெருகிறது. இது நடந்தது 1917இல். (வரிக்கு வரி புத்தகத்தில் இருப்பதை எழுதவில்லை. புத்தகத்தின் 594ம் பக்கத்திலிருக்கும் செய்தி இது).

அறந்தை நாராயணன் அவர்களின் தமிழ் சினிமாவின் கதையிலும் இந்தச் செய்தி எழுதப்பட்டிருக்கிறது.

ஆனால், இரண்டிலும் எழுதப்பட்ட செய்திகளில் சிறிய வித்தியாசம் இருக்கிறது.

தமிழ் சினிமாவின் கதையில், படம் வெளியானதாகச் சொல்லும் வருடம் 1916. படத்தின் பெயர் 'கீசக வதம்'. தயாரான இடம் கீழ்ப்பாக்கம் - மில்லர்ஸ் ரோடு. (2002ம் வருடத்திய பதிப்பில் 12ம் பக்கத்தில் இருக்கும் செய்தி இது).

சந்தேகங்கள்:
1. படம் வெளியான வருடம், 1916ஆ அல்லது 1917ஆ.
2. படத்தின் பெயர், கீசக வதமா அல்லது கீசக பதமா.
3. உருவான இடம், கீழ்ப்பாக்கம் - மில்லர்ஸ் ரோடா அல்லது வேப்பேரி - மில்லர்ஸ் ரோடா.

அப்படியன்றும் தலைபோகிற சந்தேகம் இல்லையென்றாலும், தமிழ் சினிமாவின் முக்கியமான வரலாற்று நிகழ்வாதலால், எது சரியான பதிவு என்பதை அறிந்துகொள்ள நினைக்கிறேன்.

அறிந்திருக்கும் நண்பர்கள், பெரியவர்கள் விவரம் சொல்லவேண்டுகிறேன்.

அன்புடன்
ஆசாத்

Comments

புத்தகத்தைப் படிக்கப் படிக்க வலையில் அவ்வப்போது தகவல்களைத் தட்டிவையுங்கள் - அடுத்தமுறை வரும்போது வாங்கிப் படிப்பேன் எனினும், அவரவர் அனுபவத்தை எழுதிவைப்பதும் முக்கியமாகப் படுகிறது; நமது வாசிப்பில் தவறவிடுவதைப் பிறரதில் தெரிந்துகொள்ளச் சாத்தியமுள்ளது...
வாங்கிய உடனேயே ஒரு புரட்டு புரட்டிவிட்டு எஸ்.ராவிற்கு வாழ்த்தும் சில கேள்விகளையும் அனுப்பினேன். எல்லா விவரங்களையும் இந்த புத்தகத்தில் உள்ளடக்க முடியும் என்பது முடியாத காரியம், ஆனாலும், மனதில் பட்டது, ஹாலிவுட் தாண்டி, உலக அளவில் முன்னேறி வரும், நவீன இயக்குநர்கள் பற்றிய தகவல்கள் கொஞ்சமாய் உள்ளது. ஆனாலும், திரைப்படங்களைப் பற்றி பேசும் எவரும் வைத்திருக்க வேண்டிய இந்த ஆண்டில் வெளிவந்த மிக முக்கியமான பெட்டகமிது.
தமிழ் சினிமா என்றில்லை இந்திய சினிமாவையே புத்தகத்தில் கொஞ்சம் ஒதுக்கிதான் வைத்திருக்கிறார். மனிதருக்கு சினிமா விமர்சனங்கள் பற்றிய ஆழமான கருத்து இருக்கிறது. விமர்சனம் எப்படி இருக்கவேண்டும் என்பதைப் பற்றி சமீபத்திய விஜய் டிவியில் சொல்லியிருந்தார். அதெல்லாம் புத்தகத்தில் இருக்கிறதா என்பது தெரியவில்லை. மகேந்திரனை பற்றி ஒரே ஒரு பத்தியோடு முடித்துக்கொண்டது மனசுக்கு கஷ்டமாத்தான் இருந்துச்சு.

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சினிமாவை பத்தி ஒண்ணும் தெரியாது என்பதை பாபாவிலும் பாப்கார்னிலும் வெளிப்படுத்திவிட்டார் என்றெல்லாம் சொன்னவர்கள் இப்போ பேய்முழி முழிச்சுத்தான் ஆகணும்!
இனிய மாண்ட்ரீசர்,

படிக்கப் படிக்க இங்கே பதிவு செய்கிறேன்.

நன்றிகள் நாராய்ண்.

ராம்கி,

தெரிந்து வைத்திருப்பது வேறு, வெற்ரி பெறுவது வேறு என்றே நினைக்கிறேன். சரிதானா.

அன்புடன்
ஆசாத்
ராம்கி,
நீங்கள் சொன்னதை ஆமோதிக்கிறேன். இந்திய சினிமாவில் உச்சத்தை தொட்டவர்களை மட்டுமே காண முடிகிறது.

ஒரு திரைப்படத்தில் பணிபுரிவது என்பது வேறு. படத்தினை அலசுதல் என்பது வேறு. பாபாவின் தோல்விக்கான காரணங்கள் பலவாக இருந்தாலும், எஸ்.ரா ஒரு அமைப்பிற்குள் வேலை செய்தாக வேண்டிய கட்டாயமிருந்தது. அதில் சினிமாவின் எல்லைகளுக்குட்பட்டு என்ன செய்ய இயலுமோ அதைதான் செய்திருந்தார். கவுண்டமணியின் கூச்சல்களுக்கெல்லாம் எஸ்.ராவால் எழுத முடியும் என்று நினைத்துப் பார்த்தோமா? ஆக, அதை ஒரு பொருட்டாக பேசுதல் தேவையற்றது என்பது என் கருத்து.

மேலும் நாம் ஏன் எல்லோரும் எல்லாதுறைகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறோம். நல்ல சிந்தனையாக இருந்தாலும் கூட அதனை ஒரு எதிர்பார்ப்பாய் முன்வைத்து ஏமாறும்போது, ஜீரணிக்க இயலாமல் போகிறது.

இதற்கு மிகச்சரியான உதாரணம், கமல் தன் குருவாக சொல்லும் 'அனந்து'. பாலசந்தரின் 90% படங்களில் பணிபுரிந்தவர். உலக சினிமாக்களை கரைத்து குடித்து, கமல் போன்ற இளைஞர்களை அவர் காலத்தில் வழிகாட்டியவர். சினிமாவின் நுட்பங்களை கரைத்து குடித்தவர். இத்தனை தகுதிகள் இருந்தும் அவர் இயக்கிய "சிகரம்" (எஸ்.பி.பி ஹீரோ) படம் படு ப்ளாப். சில பாடல்களைத் தவிர படத்தில் ஒன்றுமில்லை என்று விமர்சனம் வந்தது.

ஆகவே, தெரிந்து கொள்ளுதல் வேறு. செயல் படுத்துதல் வேறு. சொல்லும் செயலும் ஒன்றாய் இருக்கவேண்டும் என்று எல்லாரும் நினைத்தாலும், அதனை சரியாக செய்பவர்கள் வெகு சிலரே.
//2. படத்தின் பெயர், கீசக வதமா அல்லது கீசக பதமா.//

வனவாசக் காலத்தில், திரௌபதிமேல் ஆசைப்பட்ட கீசகனை பீமன் கொல்வது. கீசக வதம் என்பதே சரி என்று நினைக்கிறேன்.
Anonymous said…
frankly speaking this book seems to be,from what i have read about the book, more an introductory book on global cinema than a treatise that gives an indepth knowledge.there are many books in english on indian films including books on stars,directors or a
film.and there are volumes that have diverse essays.so it all depends on what are you looking for.if you want an indepth discussion on films,popular
culture, film genres this book
may not be the relevant one.for that you need to read books by or
edited by ravi vasudevan,nandy,
madhav prasad among others.
இனிய நாராயண்,

நீங்கள் சொல்வது சரி. தெரிந்திருப்பதும் வெற்றி பெறுவதும் வெவ்வேறு.

இனிய அனானிமஸ்,

உங்கள் கருத்துடன் ஒத்துப்போகிரேன். கிட்டத்தட்ட அந்தப் புத்தகம் விவரங்களைக் கொண்ட கட்டுரைதான். தமிழில் நல்ல பதிப்பு அல்லவா, அதுதான் ஈர்ப்பு.

அன்புடன்
ஆசாத்

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...