Skip to main content

கிஸ்னா

கிஸ்னா

முன்னணி நிறுவனத் தயாரிப்பு, முன்னணிக் கதை சொல்லி சுபாஷ் கை, முன்னணி இசையமைப்பாளர்கள் ஏ.ஆர்.ரகுமானும் இஸ்மாயில் தர்பாரும், முன்னணிக் கவிஞர் ஜாவீத் அக்தர், முன்னணி ஒளிப்பதிவாளர் அஷோக் மேத்தா, முன்னணி நடன அமைப்பாளர்கள் சரோஜ் கானும் ஷைமக் தவாரும், இப்படி எல்லா முன்னணிகளும் இருந்தும் கதைப் பின்னணி எதையும் தொடாமல் இங்கும் அங்கும் அலைந்ததன் விளைவோ என்னவோ, கிஸ்னா ஏமாற்றத்தையே தந்தது.

பிரிட்டனைச் சேர்ந்த காத்தரீன், இந்தியாவுக்கு வந்து மூவாயிரத்து ஐநூறு கோடி ரூபாயினை தர்ம காரியங்களுக்குத் தருவதற்கு முன்வருகிறார். இந்திய அரசின் சுற்றுலாத்துறை அவருக்காக ஏற்பாடு செய்யும் 'பாரத் தர்ஷன்' சுற்றுலாவை மறுத்துவிட்டு, உண்மையான இந்தியாவை தனக்குக் காட்டவேண்டுமென்றால் தான் சொல்லும் இடத்திற்கு அழைத்துச் செல்லச் சொல்கிறார்.

*தேப்ரியாக், உத்ராஞ்சலில் பாகீரத் நதியும், அலக் நந்தன் நதியும் இணைந்து கங்கையாகும் இடத்திலிருக்கும் புண்ணியஸ்தலம். ரிஷிகேஷிற்கும் ஹரித்வாருக்கும் மேலே. அங்கே தன்னை அழைத்துச் செல்லச் சொன்னதும், கதை ·ப்ளாஷ் பேக்கில் சொல்லப்படுகிறது.

(* வசனத்தில் ஒருமுறை கேட்டதை அப்படியே எழுதுகிறேன். பிழையிருக்கலாம்)

பிரிட்டிஷ் இந்தியாவில் 1935இல் கதை துவங்குகிறது. மலைப்பிரதேசமாக இருக்கும் அந்த ஊரின் பிரிட்டன் அதிகாரியின் மகளான காத்தரீனுக்கும், அவர்களின் மேற்பார்வையில் இருக்கும் இந்தியரின் மகன் கிஸ்னாவுக்கும் குழந்தைப் பருவத்தில் நல்ல நட்பு இருக்கிறது. அந்த நட்பில் விருப்பமில்லாத காத்தரீனின் தந்தை அவளை பிரிட்டனுக்கு அனுப்பிவிடுகிறார்.

சில வருடங்கள் கழித்து இந்திய விடுதலைப் போராட்டத்தின் பலன் கிடைக்கும் நேரத்தில் காத்தரீன் இந்தியாவிற்கு வருகிறாள். பழைய நட்பால் கிஸ்னாவும் காத்தரீனும் சந்தித்துக்கொள்கிறார்கள். அவர்களிடையே காதல் இல்லை. அந்த நேரத்தில் கிஸ்னாவிற்கு அவனையே நினைத்து வளர்ந்த இன்னொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது.

இந்தியாவிற்கு விடுதலை அறிவிக்கப்பட்டு அனைத்து அதிகாரிகளையும் பிரிட்டனுக்குத் திரும்புமாறு பிரிட்டன் அரசு அறிவிக்கையில், அவர்களது ஊரில் ஆங்கிலேயருக்கு எதிரான வன்முறையில், சதியில், காத்தரீனின் தந்தை கொல்லப்படுகிறார். தாய் போன இடம் தெரியவில்லை. காதரீனைக் காப்பாற்றி கிஸ்னா தனது வீட்டிற்கு அழைத்து வருகிறான்.

காத்தரீனைப் பத்திரமாக டெல்லிக்கு அழைத்துச் சென்று பிரிட்டன் அதிகாரிகளிடம் சேர்க்கும் பொறுப்பு, கிஸ்னாவிடம் அவனது தாயால் ஒப்படைக்கப்படுகிறது. ஆங்கிலேயப் பெண்ணை கிஸ்னா காப்பாற்றி அழைத்துச் செல்வது பிடிக்காத கிஸ்னாவின் அண்ணன் முறையுள்ளவரும், மற்ற உறவுகளும் கிஸ்னாவையும் காத்தரீனையும் கொல்லப் புறப்படுகின்றனர்.

அனைத்துத் தடைகளையும் மீறி அவளை அழைத்துச் செல்லும் வழியில் இருவருக்கிடையில் லேசான காதல் மலர்கிறது. அதனை ஏற்க மறுத்து, காதரீனை பாதுகாப்பாகக் கொண்டுசேர்ப்பது தனக்கிடப்பட்ட கடமை என்றும், நிச்சயித்த பெண்ணையே மணப்பது தர்மம் என்றும் சொல்லி கிஸ்னா விடை பெறுகிறான்.

·ப்ளாஸ்பேக் முடியவும் காதரீன் அதே ஊரில் வாழும் கிஸ்னாவின் மனைவியை சந்திக்கிறாள். அவளும் கிஸ்னா உன்னைக் காதலித்தான் என்று சொல்லி அழவும் 'கிஸ்னா' முடிகிறது.

கிஸ்னாவாக விவேக் ஓபராய், காதரீனாக பெர்னாத், கிஸ்னாவின் மனைவியாக ஈஷா ஷ்ரவானி கூடவே ஜரீனா வஹாப், விக்ரம் கோக்லே, அம்ரீஷ் பூரி, ஷர்மா, விவேக் முஷ்ரான், சுஷ்மிதா சென், ஓம் பூரி என்று ஏகப்பட்ட நட்சத்திரக் குவியலில் யார் என்ன பேசுகிறார்கள் என்பதே விளங்காமல் போகிறது.

இந்தியத் திரையின் இசை ஹெவிவெயிட்கள் இஸ்மாயீல் தர்பார், ஏ.ஆர்.ரகுமான் இருவரின் இசையில் பின்னணி இசையையும், மந்திர உச்சாடனங்களும், முஜ்ராவும், மெல்லிசையும், ஆங்கில நடனமும் நம்மை வேறு உலகிற்கு அழைத்துச் சென்றாலுமே, படத்தைத் தூக்கி நிறுத்தவில்லை.

கிராமிய, ஆங்கிலேய இசையை, தால், லகான் இவையிரண்டில் ரகுமானும், இந்திய இசையை தேவ்தாஸ், ஹம் தில் தேசுக்கே சனம் இவையிரண்டில் தர்பாரும் இழைத்து அளித்திருப்பதால் எந்தப் பாடலை யார் அமைத்தார்கள் என்பதை அறித்துகொள்ள முடியவில்லை.

எனது அபிமான கேசட் கடைக்காரர் "சாப், ஸாங்ஸ் அச்சா நஹீ நிக்லா. இஸ்மாயில் சாப் அவுர் ரஹ்மான் சாப்கே நாம்ஸே கேசட் சல்ரஹாஹை" என்னும் பொன்னான விமர்சனத்தை முன் வைத்தார். இந்த கேசட் கடைக்காரரைப் பற்றி எனது கஜல் புத்தகத்தில் (கிழக்கு பதிப்பகம்) விரிவாக எழுதியிருக்கிறேன்.

ஷைமக் தவார் பற்றி அறிந்தவர்கள் படத்தில் வரும் ஆங்கில நடனத்தைப்பார்த்து வியந்து போகமாட்டார்கள். நவீன குழு நடனங்களில் இந்திய அளவில் பேர் சொல்லப்படும் நடன அமைப்பாளர். மற்ற நடனங்கள் சரோஜ் கான். ஏக் தோ தீனில் மாதுரியின் துள்ளலை அமைத்தவர். ஷ்ரவானியிக்கு நடனம் அமைக்கையில் ஏனோ அக்ரோபாடிக்ஸிற்கு முக்கியத்துவம் கொடுத்து நடனத்தைப் பின்னே வைத்து விட்டார். அந்தப் பெண் கயிற்றில் அந்தரத்தில் பத்மாசனமெல்லாம் செய்து காட்டுகிறது.

வில்லன் தேவையென்று ஒரு மகாராஜவைக் காட்டி அவரை காத்தரீனின் பின்னால் ஓட விட்டிருக்கிறார்கள்.

பண்டைய இந்தியாவைக் காட்டும்போது லக்னவ் நவாப் இல்லாமலா? நவாபும் முஜ்ராவுமாக, சுஷ்மிதா சென் குழைந்து குழைந்து பேசி, முஜ்ரா என்றால் ரேகாதானா, நானும் இருக்கிறேன் என நிரூபிக்கிறார். அவரது உதவியாளராக ஓம்பூரி, லக்னவ் ஷிஷ்தியாக பெண்மை கலந்த உருது பேசி ஓரிரு காட்சிகள் வந்தாலுமே கலக்குகிறார்.

அம்ரீஷ் பூரி வழக்கம் போல வீணடிக்கப்படவும், ஷர்மா வழக்கம் போல கத்தியைத் தூக்கவுமே பயன்பட்டிருக்கிறார்கள். அப்தக் சப்பனில் தனக்குக் கிடைத்த முக்கியமான பாத்திரத்தில் ஷர்மா கலக்கியதைப் போல் இதில் கலக்கவில்லை. பாவம். விவேக் ஓபராயின் அண்ணன் முறையாகி வாட்போரில் தோற்றுக் காதலை வாழவைத்து அழுகிறார்.

விடுதலைப் போரென்றால் இந்து முஸ்லிம் கலவரங்களைக் காட்டவேண்டுமே, அதற்கும் ஒரு காட்சி.

"நீ யார்? இந்துவா முஸ்லிமா? அவிழ்த்துக் காட்டு"

"அவர் இரண்டுமல்லர். கிறிஸ்துவர். என் கணவர். எங்களை விட்டுவிடுங்கள்" அந்தப்பெண் பொய் சொல்லி அழுகிறது.

"·பிர் க்யூன் யஹான் மர்னே ஆயே ஹோ. பாக் ஜா". தேவையில்லாத காட்சி.

இப்படிச் சில்லறை சில்லறையாகக் காட்சிகளை அமைத்து, எதுவுமே கோவையாக இல்லாமல், காதலும் ஆழமாகக் காட்டப்படாமல், கடமையும் ஆழமாகக் காட்டப்படாமல்கதை அங்கும் இங்கும் தடுமாறி முடிவதற்குள் ரசிகர்களை 'தம்' அடிக்க இரண்டு முறையாவது அனுப்பிவைக்கும்.

பிரிட்டிஷ் இந்தியா தொடர்பாக 'லகான்' உண்டாக்கிய பாதிப்பு இன்னும் மனதில் இருப்பதால், 'கிஸ்னாவின் கதைப் பின்னணி அறிந்ததுமே அதை லகானுடன் என்னையுமறியாமல் ஒப்பிட்டு குழப்பிக்கொண்டேனோ, தெரியவில்லை.

அன்புடன்
ஆசாத்

Comments

சுபாஷ் கை படத்தையும் லகானையும் ஒப்பிடுவது ராம நாராயணன் படத்தையும் மணி ரத்னம் படத்தையும் ஒப்பிடுவதற்குச் சமானம்!

பர்தேஸ் படத்தின் ஆரம்பத்தில் வரும் அதீத தேசபக்திக்காட்சிகள், எல்லா படத்திலும் வரும் ஸ்டீரியோடைப் பாத்திரங்கள் - சுபாஷ் கை அளவுக்கு மீறி மதிப்பிடப்படுகின்றார்!
kisna paarkkalaamnu iruthaa ippadik kavuththutteengaLae aNNaachi. :(

sari. sari. eppadiyum vivek oberoikkaaha paarththuthaan aavaen. :D epponnuthaan theriyaathu.

company paarthuttaen - ASATHTHAL!

hindu 'alaipaayuthae' & yuva paarkkaNum. lets see...

ippadikku vivek abimani. ;)
kasi'yoda code sariyaa pOdalai aNNaachi. koncham paarunga. thittuthu. :(
இனிய சுரேஷ்,

கிஸ்னா - லகான் ஒப்புமைக்கு இராம.நாராயணன் - பாலுமகேந்திராவை சொல்லலாமா. சுபாஷ் கை பெரிய ஷோமேன்தான், சந்தேகமில்லாமல். கிஸ்னா சறுக்கிவிட்டதற்காக, அவரை அப்படியே இறக்குவிடுவது சரியா?

அன்புடன்
ஆசாத்
வாங்க மதி,

விவேக் ரசிகர் மன்றத் தலைவி பதவிக்கு ஒரு எடம் இருக்காம், முயற்சி பண்ணலாமா.

மதி, என்னங்க இன்னும் 'கம்பெனி'லயே இருக்கீங்களே. க்யூன் ஹோகயானாவையும் பாத்துருங்களேன். விவேக் ஓபராய் ரசிகர்கள்/ரசிகைகள் பார்க்கவேண்டிய படம்.

வருகைக்கு நன்றி.

காசியோட லிங்க் கரெக்டாத்தான போட்டேன். இன்னும் தொழில் நுட்ப ஜிகிடி சரியாப் பழகலியே. இன்னிக்கு என்னண்ணு மீண்டும் பாத்துடறேன்.

அன்புடன்
ஆசாத் அண்ணாச்சி