Skip to main content

சுட்டாச்சு சுட்டாச்சு - புத்தகம். எனது பார்வை

சுட்டாச்சு சுட்டாச்சு (புத்தகம்)

எம்.ஜி.ஆர். - எம்.ஆர்.ராதா குண்டடி வழக்கு குறித்த புத்தகம் இது.

திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகளில், குறிப்பாக, ஜானிஜான் கான் தெரு, டாக்டர் பெசன்ட் சாலை, ஷேக்தாவூத் தெரு பகுதிகளில் வாழும் நாற்பது + வயதில் இருக்கும் அனைவருக்குமே அந்தப் பகுதியில் நிகழ்ந்தவை ஒரே பாதிப்பை உண்டாக்கியிருக்குமோ. சுதாங்கன் அவர்களின் புத்தகத்தைப் படிக்கையில் அப்படித்தான் தோன்றுகிறது.

"உம்மா, அங்க போனாலும் அவரைப் பாக்க முடியாது. போலீசு கட்சிக்காரங்கன்னு பெரிய கூட்டம். ஆஸ்பத்திரி கிட்டவே போவமுடியாதுன்னா கேளேன்"

"எல, என்ன நீ அங்க கூட்டிட்டுப் போவப்போறியா இல்ல நானே போவவா. தோ இருக்கு ஆஸ்பத்திரி"

எம்.ஜி.ஆர். அவர்கள் குண்டடிபட்டு ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தபோது எங்கள் பகுதியில் (ஆறு வயதில்) நான் கேட்ட உரையாடல்களில் இதுவும் ஒன்று. இப்படிப்பட்ட உரையாடலைக் கேட்ட அனுபவம் அந்தப்பகுதியில் வசித்தவர்களுக்கு அனேகமாக இருந்திருக்கும்.

இதுபோன்ற நிகழ்வை, புத்தக ஆசிரியர் சுதாங்கன் அவர்களும் கண்டிருக்க, அந்த நிகழ்விலிருந்துதான் ஒரு நாவலைப் போல சுட்டாச்சு சுட்டாச்சு துவங்குகிறது. ராயப்பேட்டை சுற்று வட்டாரம், அங்கிருக்கும் 'போர்ஷன்' வகை குடியிருப்புகள், வாழ்க்கை முறைகள், ஷேக் தாவூத் தெரு அரசியல் பொதுக் கூட்டங்கள் போன்றவற்றின் விவரிப்புகளை வாசித்து அனுபவிக்க திருவல்லிக்கேணியில் வளர்ந்திருக்கவேண்டுமென்ற அவசியம் இல்லை. புத்தகத்தின் மூலக் கருவான 'சுட்டாச்சு'விற்குச் செல்லு முன்பே வாசகர்களுக்கு சென்னையின் ஒரு பகுதியின் அறிமுகம் கிடைத்துவிடும்.

தமிழகத்தின் முக்கியமான அந்நிகழ்வின் ஊடே 'நந்தா' என்னுக் கற்பனைப் பாத்திரத்தை உலவவிட்டு நந்தாவே நிகழ்ச்சிகளை விவரிப்பதாகப் புத்தகம் செல்கிறது. சுதாங்கன் அவர்கள் பத்திரிகையாளராக இருப்பதால், தான் பத்திரிகையாளராக அந்நேரத்தில் இருந்திருந்தால் அவரது அணுகுமுறை இந்நிகழ்வில் எப்படி இருக்கும் என்பதன் அடிப்படையில் புத்தகத்தை எழுதினாரோ என்னும் நினைப்பும் தோன்றுகிறது.

மருத்துவமனையிலிருந்து துவங்கி, விவரிப்பு, மெதுவாக வழக்கின் பின்னணியை ஆராய நம்மை 1967இற்குக் கொஞ்சம் முன்னே பின்னே, எம்.ஜி.ஆர். - எம்.ஆர்.ராதா இவர்களின் கலைத்துறை நடப்புகள் எப்படி இருந்ததென்னும் விவரத்திற்குச் செல்கிறது.

அத்தியாயம் பன்னிரண்டில் இருந்து இருபத்தியிரண்டு வரையில் ஐம்பது பக்கங்கள் எம்.ஜி.ஆர். - எம்.ஆர். ராதா இருவரின் பனிப்போரை முதலில் இருந்தே விளக்கும் வகையில் எம்.ஆர்.ராதாவின் கலைத்துறை வாழ்க்கை அலசப்படுகிறது. ராதா, அவரது துணிச்சல், அரசியல் தலைவர்களுடன் அவருக்கு இருந்த தொடர்பு, அப்போதைய அரசு அவரது நாடகத்திற்கு விதித்த தடைகள் வழியாக, குண்டடிக்குக் காரணமான சர்ச்சையான 'தொழிலாளி' திரைப் பட வசனத்திற்கு வரவும், எதுவோ விறுவிறுப்பான
நாவலைப் போல வழக்கின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்கிறது.

பிறகு விவரங்கள். குறுக்கு விசாரணைகள், வாக்குமூலங்களெல்லாம் 'கற்பனை நடையில், அத்தனைனயும் உண்மை' என்று அட்டையில் சொல்லப்பட்ட குறிப்பினை, வாசிப்பு அனுபவம் கொஞ்சம் மறக்க வைத்தது. நீதிமன்ற விவாதங்கள் கற்பனை நடையாகவே தோன்றவில்லை.

அந்தக் கால திரைத்துறை, அரசியல், காவல்துறை, நீதித்துறை அனைத்தையும்தொட்டு சுகமாக அறுபதுகளுக்கு பின்னோக்கிச் சென்று வரலாம்.

வழக்கின் தீர்ப்பிற்குக் காரணமாக இருந்தவை:
எம்.ஜி.ஆர்., எம்.ஆர்.ராதா, வாசு இம்மூவரின் வாக்குமூலங்கள், ராதா அவர்களின் வாக்குமூலத்தில் இருந்த முரண்பாடு, துப்பாக்கி, அதிலிருந்து வெளியான குண்டுகள், சுட்டபோது மூவரும் இருந்த நிலை (பொசிஷன்), ஆடையில் படிந்த ரத்தக் கறைகள், எம்.ஜி.ஆர். அவர்கள் காமராஜரைக் கொல்ல சதித் திட்டம் தீட்டியதான செய்தி (இது வதந்தி என மறுக்கப்பட்டுள்ளது), அதனால் கோபமடைந்த எம்.ஆர்.ராதாவின் மனநிலை, எம்.ஜி.ஆர். - எம்.ஆர்.ராதா இருவருக்கும் ஏற்கெனவே இருந்த பனிப்போர்.

தீர்ப்பு முடிந்ததும், ஒரே பக்கத்தில் நந்தா பாத்திரத்தை முடித்து சரியே. வழக்கின் சிந்தனையிலிருந்து வாசகர்கள் நந்தாவின் மேல் ஈர்ப்பு கொள்ளாமல் இருக்க அப்படி முடித்தது நல்லதாகவே தோன்றுகிறது. நந்தாவின் வருகையே வழக்கை சுவாரசியமாகச் சொல்லத்தானே, அது முடிந்ததும் அவரும் வாசகர்களை நோக்கி கையசைத்துவிட்டு உடனே விடைபெறுவதுதான் முறை.

சுட்டாச்சு சுட்டாச்சு
ஆசிரியர்: சுதாங்கன்
கிழக்கு பதிப்பகம்
விலை: ரூ. 120

அன்புடன்
ஆசாத்

Comments

Mookku Sundar said…
ஆசாத் பாய்,

நல்ல பதிவு. சுதாங்கனுடைய அரசியல் ஈடுபாடுகள் பற்றி ஏற்கனவே அறிந்திருப்பதால், புத்த்கமும் பல உள் விவகாரங்களை தாங்கி இருக்கும் என யூகிக்க முடிகிறது. படிக்க ஆவலாக உள்ளேன்.
City Doll said…
Oh My. Wish I could read what you've written!

http://citydoll.blogspot.com/
iniya naNbarkaL iruvarukkum nanRikaL.

Moorthy, ippathaan paakReen. Check paNreen antha English doll ennaNNu :)

anbudan
Azad

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...