Skip to main content

ஆடலுடன் பாடலைக் கேட்டு - சில கோவையற்ற எண்ணங்கள்

'ஷ்ஹாங் ஷ்ஹாங்' என ஆறு முறைகள் மூச்சு வாங்கும் இந்தப் பாடலை சுசீலா அம்மையார்தான் பாடியிருக்கவேண்டுமா என்று பலமுறைகள் நினைத்ததுண்டு. அதே போல் பக்கத்து வீட்டுப் பருவ மச்சான் பார்வையிலே படம் புடிச்சான் பாடலையும் அவருக்குக் கொடுத்திருக்க வேண்டுமா என்றும் சில சமயம் நினைப்பதுண்டு. சல்தா ஹை.

நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என காதல் தேவதை சொன்னாள், நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் என்றெல்லாம் எல்.ஆர்.ஈஸ்வரி அந்தப் பக்கம் வளைய வந்தபோது இவரும் இப்படி மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும் பாடல்களைப் பாடும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.

இந்த வகையில் வெள்ளி விழா படத்தில் மென்மையான பாடலான காதோடுதான் நான் பாடுவேனிற்கு எல்.ஆர். ஈஸ்வரியையும், துள்ளலான பாடலான நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேனிற்கு பி.சுசீலாவையும் வேண்டுமென்றே மாற்றித் தந்ததாக எம்.எஸ்.வி. குறிப்பிட்டதை எங்கோ படித்த நினைவு.

ஆடலுடன் பாடலைக் கேட்டு பாடலின் பின்னணி மிகவும் சுவாரசியமானது. முதலில் இசையமைத்து எம்.ஜி.ஆரின் ஒப்புதலுக்காக் காட்டியபோது, ஒப்புதல் தர மறுத்திருக்கிறார். இசை மிகவும் துள்ளலாக இருக்கிறது, உடன் ஆடப்போகிறவர் எல்.விஜயலட்சுமி - தொழில்முறை நடனக் கலைஞர், என்னால் இந்த இசைக்கு ஆட முடியாது என்றும், வேறு ஒரு மெட்டுப் போடுமாறும் எம்.எஸ்.வி.யுடம் சொல்லியிருக்கிறார். பிறகு, நடன அமைப்பாளர் சோப்ரா வந்து உங்களால் முடியும், நன்றாக வரும் என்றெல்லாம் சமாதானம் சொன்ன பிறகே ஒப்புதல் அளித்திருக்கிறார்.

தமிழ் திரைப் பாடல்களில் பஞ்சாபி இசை என்றால் உடனே எனக்கு நினைவுக்கு வருவது இந்த பாடல்தான்.

இன்றைக்கு வேண்டுமானால் தொலைக்காட்சிகள், ஒலிநாடாக்கள் உபயத்தில் குருதாஸ் மான் முதல் சுக்வீந்தர் வரை பஞ்சாபி மெட்டுகளுடன் நமது வரவேற்பறைக்கு வருகிறார்கள். ஆனால், அன்றைக்கு இப்படி ஒரு வசதி இருந்ததாகத் தெரியவில்லை. எம்.எஸ்.வி. தந்தால் அதுதான் பஞ்சாபி.

கல்நாயக் வந்திருந்த நேரத்தில் அல்காவின் தீவிர ரசிகனாகி சோலிகே பீச்சேயை உரத்த சத்தத்தில் வைத்துக் கேட்டு, 'தும்ஹாரே ஷொஹர்க்கு க்யா ஹோகயா' என பக்கத்து வீட்டு கராச்சி பாபிக்களிடம் துணைவியாரை பேச்சுக் கேட்க வைத்திருக்கிறேன். பிறகும் பாடலை விடாமல் ஹெட்ஃபோனை மாட்டிக்கொண்டு கேட்டதுண்டு. பாடலின் இறுதியில் லட்சுமிகாந்த் ப்யாரிலால் அடித்த ராஜஸ்தானி மேளஒலிக்கு இன்றைக்கும் நான் ரசிகன்.

அந்த மேளஒலி தருகின்ற கிறக்கத்திற்குச் சற்றும் குறையாத கிறக்கம் எனக்கு ஆடலுடன் பாடலைக் கேட்டுவின் கடைசியில் அடிக்கப்படும் பஞ்சாபி மேளஒலியிலும் கிடைக்கும். ஹெட்ஃபோனை மாட்டிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டால், எல்.விஜயலட்சுமி அம்மையார் பம்பரமாகச் சுழல்வது கண்களுக்குள் தெரியும். இடையில் வரும் புல்புல்தாரா (பேஞ்சோ) மெட்டிற்கும், தபேலாவின் பக்கத் துணைக்கும், அம்மையார் தலையைப் பக்கவாட்டில் திருப்பித் திருப்பி திமிராகப் பார்க்கும் பார்வையும் தவறாமல் ஒவ்வொரு முறையும் கண்களை மூடும்போது கண்களுக்குள் தெரியும்.

நுணுக்கமாகப் பார்த்து அவரது நடன அசைவுகள் பஞ்சாபியர் பாணியில் அமைக்கப்பட்டவைதானா எனச் சொல்லும் திறன் இப்போதும் எனக்கு இல்லை. ஆனாலும்,
'மன ஊஞ்சலின் மீது பூமழை தூவிட உரியவன் நீதானே' விற்கும்,
'உன் பாதையி லேநான் ஊர்வலம் வருவேன் புதுமையை நீ பாடு' விற்கும், ஒற்றைக்காலில் நொண்டியடிக்கும் பாவத்தில் ஒரு சுற்று சுற்றுவாரே அது அச்சு அசல் பஞ்சாபி பாணி என்பதை மட்டும் என்னால் கூற இயலும்.

இதனை எழுதுகின்ற இந்த நேரத்தில், எத்தனை அழகாக உரி-யவன் கருவிளம், புது-மையை கருவிளம். இரண்டு 'ஐ'கள் அருகருகில் வந்தபோதும் அது நிரையசையாகவே இருக்கிறது என எண்ணும் இந்த நேரத்தில், ஆசிரியர் ஹரியண்ணா அவர்களும், அய்யா மதுரபாரதி அவர்களும் இணையத்தில் யாப்பிலக்கணம் சொல்லித்தந்தபோது இந்த 'ஐ'யின் பயன்பாட்டைத் தெளிவாக விளக்கியது நினைவுக்கு வருகிறது.

பாடலில், வேண்டியதைப் பெறலாம் துணிவோடூஊ ஓஹொஹோய்ங் என இழுக்கும்போது இதனை எல்.ஆர்.ஈஸ்வரி பாடியிருந்தால் எப்படி இருக்கும் என்றும் சில சமயங்களில் நினைத்ததுண்டு.

மேலே சொல்லியிருக்கும் பாடல்களான நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் (ராமன் தேடிய சீதை), நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் (எங்க வீட்டுப் பிள்ளை) பாடல்கள் மட்டுமல்லாமல் எம்.ஜி.ஆரின் சில பாடல்களை எல்.ஆரும் உடன் பாடியிருக்கிறார்.

உன் விழியும் என் வாளும் சந்தித்தால் (குடியிருந்த கோயில்)
துள்ளுவதோ இளமை (குடியிருந்த கோயில்)
கட்டோடு குழலாட (பெரிய இடத்துப் பெண்)
பவழக் கொடியிலே (ஹம்மிங் மட்டும் - பணக்காரக் குடும்பம்)
காலத்தை வென்றவன் நீ (சுசீலாவுடன் - அடிமைப் பெண்)
முத்தமோ மோகமோ (பறக்கும் பாவை)
[ஆஹ்ஹா..காஞ்சனா மேடம் - எல்.ஆர்.ஈஸ்வரின்னு ஒரு லிஸ்ட்டு போடலாம் போல இருக்கே. பட்டத்து ராணியும் இதுவும் மட்டுந்தானா இல்ல நெறைய்ய இருக்கா]
ருக்குமணியே (ஒளிவிளக்கு)

பொறுமையாக யோசித்தால் இந்தப் பட்டியல் இன்னமும் நீளும். (தேவைப்பட்டால் TFMஇலும் தேடிப்பார்க்கலாம், இன்னும் தேடவில்லை)

அரபு நாடுகளில் அவர்கள் பாணி நடன இசையைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு எல்.ஆரின் நினைவு வருவதை மட்டும் தவிர்க்க இயலவில்லை.

ஜோர்டான் சென்றிருந்தபோது ஒரு திருமண வரவேற்பில் அரேபிய இசையில் பாடலையும் பக்க வாத்தியத்தையும் கேட்டபோது எனக்கு, 'காடு சென்ற பூங்கொடி நாடு வந்த காரணம் ஒருமுறை எண்ணிப் பார்'தான் நினைவுக்கு வந்தது.

எகிப்தில் க்ளப் அல்லைல்இல் யாரோ ஒரு அம்மையார் திருமண விருந்தில் ஆடியபோதும் பட்டத்து ராணிதான் நினைவுக்கு வந்தது.

எனக்கு அப்படி ஒரு ஈர்ப்பு எல்.ஆரிடமும் இருப்பதால்தானோ என்னவோ ஆடலுடன் பாடலைக் கேட்டுவையும் எல்.ஆர். பாடியிருந்தால் எப்படி இருந்திருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது.

அன்புடன்
ஆசாத்

Comments

நன்றாகவே இருந்திருக்கும். நீங்கள் ரசிக்கும் பாடல்கள் எல்லாம் என்றும் கேட்கும் இனிய நாதங்கள்.தொட்டிலில் பாப்பாவைப் போட்டுக்கொண்டு தமிழுக்கும் அமுதென்று பேர் பாடியவர்கள் நாங்கள்.சில சமயம் பாடலைப் பார்க்காமல் கேட்டால் மட்டுமே இன்பம் வரும்.எத்தனையோ விதமான நல்ல அனுபவங்களைக் கொடுக்கும் பாடல்களை டி வி யில் பார்க்கும்போது ரசனை போய்விடுகிறது. நன்றி ஆசாத்.
Unknown said…
ஒரு எம்.ஜி.ஆர் டூயட் ஹிட்ஸ் MP3 CD பார்சேல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல் (எனக்கு தான்).

சும்மா இருந்த மனசை இப்போ எம்சியாண்ட பாட்டா முணுமுணுக்க வச்சிட்டிங்களே, இது நியாயமா???
இனிய வள்ளி அவர்களே,

//எத்தனையோ விதமான நல்ல அனுபவங்களைக் கொடுக்கும் பாடல்களை டி வி யில் பார்க்கும்போது ரசனை போய்விடுகிறது//

உண்மை.

எம்.ஜி.ஆர். படங்களில் காவல்காரனுக்குப் பின் வந்தனவற்றிலும், சிவாஜி படங்களில் ராஜபார்ட் ரங்கதுரைக்குப் பின் வந்தனவற்றிலும் பாடல் காட்சிகளை, குறிப்பாக காதல் பாடல்களை திரையில் பார்த்தால் ரசனைக் குறைவு உண்டாக வாய்ப்பு இருக்கிறது.

அவர்கள் மேலிருக்கும் ஈர்ப்பினால் அது பெரிதாகத் தோன்றுவதில்லை.

*

ராஜா,

பார்சல் அனுப்பிட்டாப் போச்சு.

அன்புடன்
ஆசாத்
Chandravathanaa said…
வணக்கம் ஆசாத்,
ரசனையுடன் கூடிய உங்கள் எண்ணக் கோர்வையை ரசித்தேன்.

காதோடுதான் நான் பாடுவேன் பாடலை எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய போது எனக்கு ஆச்சரியம் வரவில்லை. ஆனால் நான் சத்தம் போட்டுத்தான் பாடுவேனை பி.சுசிலா பாடும் போது ஏன் இதற்கு எல்.ஆர்.ஈஸ்வரியை விடவில்லை என யோசித்தேன். இன்று உங்கள் பதிவில் தகவலை அறிந்து கொண்டேன். நன்றி.

தொடர்ந்தும் தகவல்களையும் எண்ணங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இனிய சந்திரவதனா,

நன்றிகள்.

பகிர்ந்துகொள்வேன்.

அன்புடன்
ஆசாத்

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...