Skip to main content

துபாயின் நிலச்சொத்து மதிப்பீடு உண்மையா? நீர்க்குமிழா?

துபாயின் நிலச்சொத்து மதிப்பீடு உண்மையா? நீர்க்குமிழா?

சென்ற இரண்டாண்டுகளாகவே முதலீட்டாளர்களிடையே இந்தக் கேள்வி உலவி வருகின்றது. ஆனாலும், விலையேற்றத்தில் சரிவையோ, சொத்து கைமாறுதல்களில் தேக்க நிலையையோ இதுவரையில் காணமுடியவில்லை. இத்துடன் மேன்மேலும் முடுக்கிவிடப்படுகின்ற கட்டுமானப் பணிகளும் உடன்சேர்ந்து முதலீட்டாளர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துகின்றனவேயன்றி, துபாயின் நிலச்சொத்து மதிப்பீடு நீர்க்குமிழ்தான் என்னும் சந்தேகத்தை உறுதிப்படுத்தவில்லை.

நடுத்தர மக்களின் எட்டுதலுக்குள் எனப்படும் குடியிருப்புகளில் சதுர அடிக்கு தோராயமான விலை 1750திர்ஹம்கள் என்ற அளவில் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை இருக்கின்றது. கட்டுமான நிறுவனத்திற்கு சந்தையில் இருக்கும் மதிப்பின்படி இந்த விலை இன்னும் அதிகமாகும். அடுக்குமாடிக் குடியிருப்புகளில்லாமல் நட்சத்திர அந்தஸ்த்துள்ள தனிவீடுகளென்றால் விலையை அப்படியே மூன்று நான்கு மடங்காக்கிக்கொள்ளுங்கள், நகரை விட்டு ஒதுங்கியுள்ள இடங்களில்தான் வீடும் கிடைக்கும்.

இப்படி விலையேறிப்போனதன் காரணம்தான் என்ன?

எனது தனிப்பட்ட கருத்தாக நான் சொல்வது, இந்த முன்னேற்றத்திற்குக் காரணம், ஆட்சியாளர்களின் அணுகுமுறை.

என்னதான் சுதந்திரமான நாடாக இருந்தாலும்
குற்றங்கள் குறைவாக நிகழ்வது,
நட்சத்திர உயர் அந்தஸ்த்து வாழ்க்கை இருப்பதை பல பணக்காரர்களுக்கு விளக்கி அவர்களை ஈர்ப்பது,
இந்திய, அரபு நாட்டைச் சேர்ந்தவர்களை மட்டுமல்லாமல் ஏகப்பட்ட அளவில் ஐரோப்பியர்களை ஈர்த்தது,
வரியில்லாத வருமானம்,

இப்படியாக ஒவ்வொன்றாக அடுக்கிக்கொண்டே போகலாம்.

அனைத்திற்கும் மேலாக, துபாயில் அன்னியர்கள் நிலச்சொத்து வாங்கலாம் என்னும் சட்டத்தை அறிவித்தது. 2002இல் இந்த அறிவிப்பு வந்தது. அமெரிக்க, ஐரோப்பிய, கனடிய, சிங்கப்பூரிய இடங்களில் வசிக்கும் வெளிநாட்டவர்க்கு இது ஒன்றும் புதிதல்ல; வளைகுடாவாசிகளுக்கு ஐந்தாவது வருடமாக இது புதிது.

இந்தப் புதிய அறிவிப்பிற்குப் பின்னர் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலையேற்றம் அவற்றைப்போலவே விண்ணை நோக்கி உயர்ந்துகொண்டிருக்கிறது.

இது செயற்கையான விலையேற்றமா என்னும் சந்தேகம் இரண்டாண்டுகளாகத்தான் சந்தையில் நிலவுகிறது. அதுவரையில் விலையேற்றம் குறித்து யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஒருபக்கம் சந்தேகம் அது பாட்டிற்கு சந்தையில் நிலவிக்கொண்டிருக்க மறுபக்கம் வங்கிகள் மக்களுக்கு பணத்தைக் கடனாக வழங்கி சொத்தினை வளைத்துப்போட வைத்துக்கொண்டிருக்கின்றன.

வங்கிகள் கடன் வழங்கும் முறையில் நமது நாட்டிற்கும் துபாய்க்கும் பெரிய வித்தியாசமெல்லாம் கிடையாது. குறிப்பிட்ட சதவீதத்தை முதலீட்டாளர் தரவேண்டும், குறிப்பிட்ட தேதியில் குடியிருப்பு கைக்கு வரும், மீதித்தொகையை 10 முதல் 20 வருடத்தில் மாதாந்திரத் தவணையாகத் திருப்பித் தரலாம்.

நமக்கு வீடு வாங்கப் பணம் தரும் முகவர்களுடன் சேர்ந்து விற்பனையாளர்களும் சொல்வதைப் போலவே இங்கேயும்,

'பொஸஷன் எடுத்துட்டு ரென்ட்டுக்கு வுடுங்க சார். ரென்ட்ட வாங்கி ட்யூ கட்டுங்க சார். பத்துப்பதினஞ்சு வருஷத்துல ப்ராப்பர்ட்டி நம்மள்து. ப்ரைசும் ஃபோர் டைம்ஸ் அப்ரிசியேட் ஆகிரும். கை மாத்திவுட்டுட்டா லைஃபுல செட்டில் ஆகிடலாம்'

போன்ற ஆசை வாசகங்கள் உண்டு.

யோசித்துப் பார்த்து ஓரளவிற்கு மற்ற முதலீடுகளையும் வைத்துக்கொண்டு துபாயில் நிலச்சொத்து வாங்கலாமே தவிர, இதுவே பிரதானமான முதலீடு என்றால், வாங்காமலிருப்பதே நல்லது. ஆனால், நமது வயது 25 முதல் 30இற்குள் இருக்கையில் இன்னமும் பதினைந்து வருடங்களுக்கு துபாயில் வேலை வாய்ப்பை எதிர்பார்க்கலாம் என்னும் திட்டத்தில் இருப்போர்க்கு இது நல்ல முதலீடாக அமையலாம். வாடகைக்கு இருப்பதற்கு தவணை முறையில் வீட்டை வாங்கலாம். (மீண்டும் அதே அதே...மற்ற நாடுகளில் குடியிருப்போர்க்கு இது புதிதல்ல).

விலையேற்றம் நீர்க்குமிழ்தான் என்னும் சார்பு நிலையான முடிவிற்கு வருகின்ற அதே சமயத்தில்,

1.
எம்மார் ப்ராப்பர்ட்டீஸ் என்னும் நிறுவனம் தனது புர்ஜ் துபாய் புறத்திட்டிற்காக (Project) ஒதுக்கியிருக்கும் தொகை இருபதாயிரம் மில்லியன் அமெரிக்க டாலர்கள். துபாயைத் தலைமையகமாக கொண்டு இயங்கும் இந்த எம்மார் ப்ராப்பர்ட்டீஸ், சவூதி அரேபியாவில் வரவிருக்கும் மன்னர் அப்துல்லாஹ் பொருளியல் நகரில் (King Abdullah Econimic City) முதலீடு செய்யவிருக்கும் தொகை பத்தயிரம் மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

2.
துபாய் வணிக விழாவிற்கு வரும் வெளிநாட்டவரின் எண்ணிக்கை ஒரு மில்லியன் நபர்கள்.

3.
வணிக விழா நாள்களில் மட்டுமான விற்பனையின் மதிப்பு ஆயிரத்தெண்ணூற்றிருபது மில்லியன் அமெரிக டாலர்கள்.

4.
2005ம் ஆண்டின் கணக்கெடுக்கப்பட்ட சிறுகொள்முதல் வாங்கும் திறன் (Estimated retail potential) ஒன்பதாயிரத்து ஐநூறு மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

இப்படிப்பட்ட கணக்கெடுப்புகளால் விலையேற்றம் நீர்க்குமிழி அன்று; முதலீட்டிற்கேற்ற வருமானத்திற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்னும் முடிவுக்கும் வரவேண்டியதாக இருக்கிறது.

அன்புடன்
ஆசாத்

புள்ளி விவரங்களுக்கான ஆதாரம்: MEED, ஏப்ரல் 2006.

துபாயின் கட்டுமானப் பணிகள் குறித்த எனது இன்னொரு கட்டுரை மரத்தடியில்.

Comments

அன்பின் ஆசாத் அவர்களுக்கு

இதை நீங்கள் துபாய் ரியல் எஸ்டேட் குறித்த உண்மை நிலையாக வைத்துள்ளீர்கள். இதையே நீங்கள் உங்கள் உண்மை பெயரில்லாமல் ஒரு அலம்பலோடு வைத்தால் ஆகா ஓகோ என்பார்கள். இப்போது உங்களுக்கு கிடைக்கப் போவது கொ.ப.செ. பட்டம் மட்டுமே.

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...