Skip to main content

சவூதி அரேபியாவும் இந்தியர்களும் - எனது பார்வை 2

சவூதி அரேபியாவும் இந்தியர்களும் - எனது பார்வை 2

(சிவா அவர்களுக்கென குறிப்பாக தலைப்பிட்டதை 1 என எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன். இது இரண்டாவது பதிவு)

மேற்கத்திய வாழ்வில் கிடைக்கும் சுதந்திரமும், மேற்கத்திய போலீஸார்களிடம் இருக்கும் பெருந்தன்மையான விசாரிப்புகளும் வளைகுடா வாழ் இந்தியர்கள் அனுபவித்துப் பார்காதவை. இது மட்டுமே நமது பதிவுகளுக்கான தலைப்பு என்றால், தலைப்பை சிறிது மாற்றி எழுதிவிட்டு அப்படியே ஒப்புதல் கொடுத்துவிட்டு அவரவர் தங்களது வாழ்வியல் முன்னேற்றங்களில் கவனத்தைச் செலுத்தலாம்.

தலைப்பை எப்படி மாற்ற வேண்டும்?

மேற்கத்திய வாழ்வில் கிடைக்கும் சுதந்திரமும், மேற்கத்திய போலீஸார்களிடம் இருக்கும் பெருந்தன்மையான விசாரிப்புகளும் சவூதியில் வாழ் இந்தியர்கள் அனுபவித்துப் பார்க்காதவை. இப்படியாகத் தலைப்பை மாற்றிவிட்டு, 'ஆமாங்க, நமக்கெல்லாம் மேற்கத்திய வாழ்க்கைய அனுபவிக்றதுக்கு சுழி இல்லைங்க' எனச் சொல்லி கைகுலுக்கிக்கொண்டு அவரவர் வழியே செல்லலாம். போதும்.

சிவா அவர்கள் தனது அனுபவத்தைச் சொல்கிறார், ஆசாத் தனது அனுபவத்தைச் சொல்கிறார், அவரவர் அனுபவம் அவரவர்க்கு. நான் சொல்வதை ஏற்கவேண்டுமென்ற அவசியம் அவருக்கு இல்லை; அவர் சொல்வதை ஏற்கவேண்டுமென்ற அவசியம் எனக்கு இல்லை. இந்தப் பதிவில் இதுதான் எனது நிலைபாடு.

'நன்றியுணர்வு என்பது அரேபியரின் அகராதியில் இல்லை' என்று சிவா அவர்கள் சொல்வதால் நாளையே அனைத்து நாடுகளும் தங்களது உறவை அரேபியர்களிடமிருந்து முறித்துகொண்டு வெளியே வரப்போவதுமில்லை.

'அரேபியர்கள் நல்லவர்கள்' என்று ஆசாத் சொல்வதால், நாளையே அரேபியாவை எதிர்க்கின்ற எல்லோரும் விமானம் பிடித்து ஓடிவந்து அரேபியர்களை ஆரத்தழுவிக்கொள்ளப் போவதுமில்லை.

ஆனாலும், இந்தப் பதிவில் என்னை எழுதத் தூண்டும் விஷயங்கள் இரண்டு.

முதலாவது, அனுபவம்.

இருபத்துமூன்றாவது ஆண்டாக இந்தப் பகுதியில் எனது வாழ்க்கை தொடர்கிறது. மதீனா நகரில் உஹத் மலையை நோக்கியிருந்த அல் அயூன் லேபர் கேம்ப்பிலும் வாழ்ந்திருக்கின்றேன்; நுனிநாக்கு ஆங்கிலத்துடன் நட்சத்திர விடுதிகளிலும் தங்கியிருக்கிறேன்.

லேபர் கேம்ப் சென்று இலவசமாக ஆங்கில வகுப்புகள் எடுத்ததால் அவர்கள் வாழ்க்கை முறையும் தெரியும்; இந்தியத் தூதரை விருந்துக்கு அழைப்பவர்களுடன் தொடர்பு இருப்பதால் அவர்களது வாழ்க்கை முறையும் தெரியும்.

இந்த அனுபவமானது, சில விஷயங்களை எழுதச் சொல்கிறது.

இரண்டாவது, இந்தியர்களின் வேலைவாய்ப்பும், இந்திய - சவூதி உறவுகளும்.

பதினான்கு லட்சம் இந்தியர்கள் சவூதி அரேபியாவில் பணியில் இருக்கிறார்கள். ஒன்றேகால் லட்சத்திற்கும் மேற்பட்ட ஹாஜிகள் வருடாவருடம் வந்துபோகின்றார்கள். நமது எண்ணெய்த் தேவைகளில் பெரும்பகுதியை சவூதியிலிருந்து வாங்குகின்றோம். கல்வித்துறையில் மேற்கத்தியர்களையே பெரிதாக நினைத்ததுபோக இப்போது இந்தியாவின் பக்கமும் கல்வித்துறைக்காக சவூதியின் கவனம் திரும்பியிருக்கிறது. இவற்றோடு வழமையான வணிகப் போக்குவரத்துகள்.

இப்படிப் பல தளங்களில் இந்திய - சவூதி உறவு இருப்பதால், ஏதோ ஒரு சவூதி என்னைப் பார்த்து எனது மனைவியின் முகத்தை மூடச்சொன்னார் என்பதற்காக சவூதிகள் அனைவருமே அத்தகைய குணம் பொருந்தியவர்கள்தான் என்னும் முடிவுக்கு வர இயலவில்லை. இக்காமா (அடையாள அட்டை) சோதனை, ஓட்டுனர் உரிமம், முகத்தை மூடுதல், இவற்றிற்கும் மேல் கொஞ்சம் பரந்த தளத்தில் எனது பார்வையை வைத்துக்கொள்வதில் தவறில்லை என்னும் முடிவுக்கு வந்து நாள்களாகின்றன.

ஆக, இந்த இரண்டு விஷயங்களால், எனக்கு நேரம் கிடைக்கும்போது நான் பார்த்த நல்லவற்றை எழுதிவைக்கத் தோன்றியது, எழுதுகிறேன். எனது எழுத்தில் முகத்தை மூடச் சொன்ன சவூதியின் செயலைப் பெரிதாகப் பேசாமல், தும்பை மொய்தீனை சவூதிக்கு வந்து கல்லூரி துவங்குமாறு அழைத்த ஷேக் ஒமர் பின்லேடன் குறித்துப் பேசுவதில் தவறில்லையென்றே தோன்றுகிறது.

Ajman College Makes Big Strides
Arab News

JEDDAH, 28 May 2006: Sheikh Omar Binladin, chairman of the executive board of Saudi Binladin Group, visited Gulf Medical College and GMC Hospital in Ajman recently and commended the achievements of Thumbay Moideen, president of the two successful institutions in the United Arab Emirates.

நன்றி: அரப் ந்யூஸ்

கொஞ்சம் கூகிளில் உலவுங்களேன் இன்னமும் அதிகமாகப் படிக்கலாம். அரப் ந்யூஸ்காரர்கள் தனது வலைத்தளத்தில் கொஞ்சம் செய்தியைக் கொடுத்து, மற்றவற்றிற்கு எங்கள் பிரிண்டட் வர்ஷனைப் படியுங்கள் என சொல்லிச் செல்வார்கள்.

அன்புடன்
ஆசாத்

Comments

//'நன்றியுணர்வு என்பது அரேபியரின் அகராதியில் இல்லை' என்று சிவா அவர்கள் சொல்வதால் நாளையே அனைத்து நாடுகளும் தங்களது உறவை அரேபியர்களிடமிருந்து முறித்துகொண்டு வெளியே வரப்போவதுமில்லை.

'அரேபியர்கள் நல்லவர்கள்' என்று ஆசாத் சொல்வதால், நாளையே அரேபியாவை எதிர்க்கின்ற எல்லோரும் விமானம் பிடித்து ஓடிவந்து அரேபியர்களை ஆரத்தழுவிக்கொள்ளப் போவதுமில்லை. //

உண்மை ஐயா.
ஆனால், கோயபல்ஸ் உத்தி - வெறுப்பு வளர்த்து ஆதாயமடைகிறார்களே.

அவர்களுடைய டிஸ்க்ளெய்மர்களை அவர்களே மதிப்பது இல்லை என்பதை வேற்று பதிவு பின்னூட்டங்களில் அவர்களே நிரூபித்து வரும் நிலையில் ஏன் பொய்முகமாய் ஒரு டிஸ்க்ளெய்மர்? என்பதே என் கேள்வி.
இனிய சுட்டுவிரல் அய்யா,

பதிப்புகள் என்றிருந்தால் ஆதரவாக சிலவும், எதிர்ப்பாக சிலவும் இருக்கத்தான் செய்யும். எதிரானவைகளே இல்லாமல் இருக்கமுடியுமா?

எதிராக இருப்பவற்றிற்கு முடிந்தால், தேவைப்பட்டால் விளக்கம் தரலாம். ஏற்க விருப்பமுள்ளவர்கள் ஏற்கலாம்; முன்முடிவுடன் இருப்பவர்கள் மறுக்கலாம்.

சட்டம் என்பதற்குதான் கட்டுப்படமுடியுமே தவிர சுதந்திரமான சிந்தனையைக் கட்டுப்படுத்த முடியாது.

அன்புடன்
ஆசாத்
அன்பின் ஆசாத் அவர்களுக்கு

டிஸ்கிளைமர் என்று ஒன்று போட்டு விட்டு எதை வேண்டுமானாலும் எழுத முடியும் என்பது கடைந்தெடுத்த அயோக்கியத் தனம் அல்லாது வேறென்ன? சொல்லப் போனால் டிஸ்கிளைமர் போட்டுவிட்டுத் தன் உள்மன விகாரங்களைப் பலபேர் அரங்கேற்றி வருவது நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டியதில்லை.

கொஞ்சம் போனால் உங்களையும் சவூதியின் கொ.ப.செ என்று பட்டம் கட்டுவார்கள்.

உங்கள் தொடர்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
ஓகை said…
பாய் சாப்,

அல்லாத்தயும் வுடுங்க பாய் சாப். இன்னிக்கி தேன்கூட்ல இன்றைய வலைப் பதிவாளர் யாரு தெர்தா? சாட்ச்சாத் நம்ம பாய் சாப் தான்.

அரப்பிளேட் பிர்யானி தால்ச்சாவோட அட்சிட்டு அந்த ரவா பாயாசம் குட்ச்சாமாறி கீது பாய்.

வாழ்த்த எனுக்கு வைசு கீது பாய்.

வாழ்த்திகினேன் வாழ்த்திகினேன்.
ஓகை நடராஜன்.

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...