Skip to main content

மேடைப்பேச்சும் சில பகிர்தல்களும்

முதலில் ஆசிப் அழைத்தபோது மறுத்தேன். 'பட்டிமன்றத்தில் பேசுகிறீர்களா?'
என்றபோது இப்போதைக்கு அதிலெல்லாம் ஆர்வமற்றவனாக இருக்கிறேன் என்று சொல்லி
'வேண்டாமே' என்றேன், பிறகு இரண்டொரு நாள் கழித்து பேசினால் என்னவென்று
தோன்றியது, 'சரி நான் பேசுகிறேன், நீங்களும் பேசுங்கள்' என்றேன். அவர்
பேச இயலாதென்றும் என்னை மட்டும் பேசுமாறும் பணித்தார்.

'திரைப்படங்கள் படமா? பாடமா?' என்னும் வாதாடுகளத்தில் பாடங்களே என்று வாதாடினேன். தீர்ப்பென்னவோ படங்கள் படங்கள்தான் என்று கிடைத்தது. தோற்ற அணிக்குத் தலைவனாக இருந்ததில் வருத்தம் ஏதுமில்லை, சல்தாஹை!

அன்றைய பேச்சிலிருந்து ஒன்றைப் புரிந்துகொண்டேன். பார்வையாளர்களை பிரமிக்க வைத்து அந்த பிரமிப்பில் பேச்சை நகர்த்திச் செல்லும் உத்தி இன்னமும் காலாவதியாகவில்லை. பேச்சைத் துவங்கியதும் அதிகமாக புழக்கத்திலில்லாத விருத்தங்கள், திருப்புகழ், சித்தர் பாடல்கள் இவற்றிலிருந்து குறிப்புகள் எதுவுமில்லாமல் மனப்பாடமாக வரிகளைச்
சொல்லிக்காட்டி அதிலிருந்து ஒரு இழையைப் பிடித்துக்கொண்டு மெதுவாக பேச்சை
நகர்த்துவதை பெருவாரியான மக்கள் விரும்புகின்றார்கள்.

மேடைப்பேச்சினிடையே மக்களைக் கேள்விகள் கேட்டு ஆமோதிப்பையோ மறுப்பையோ
எதிர்பார்த்து அதிலிருந்து பேச்சை நகர்த்தும் உத்தி கைகொடுக்கவில்லை. கலந்தூடாட்டத்திற்கு (இண்டராக்ஷன்) வரவேற்பு இல்லை. அதாவது, மேடையில் இருக்கும்போது பேச்சாளன் சொல்வதைக் கேட்பதாகத்தான் மக்களின் சிந்தனை அடுக்கு உள்ளதேயன்றி பேச்சாளனின் கேள்விகளுக்கு பதிலளிப்பதில் பார்வையாளர்களுக்கு உவப்பில்லை.

ஓரளவிற்கு பேசவேண்டிய கருத்துகளை சொற்றொடர்களாக்கி மனதிற்குள் பதியவைத்துக்கொள்வது நல்லது. மேடைக்குச் சென்றபின் சொற்றொடர்களை உருவாக்கி முன்னேறிச் செல்கையில், அடுத்த கருத்தைச் சொல்ல வாக்கியத்தை அமைக்கும் சிந்தனை குறுக்கே மின்னல் கீற்றாகத் தோன்ற நாவழு (ஸ்லில் ஆப் தி டங்) உண்டாகின்றது. முந்தைய வாக்கியத்தில் நடிகர் திலகத்தைக் குறிப்பிட்டு சிறிய இடைவெளிக்குப் பின் மக்கள் திலகத்தைக் குறிப்பிடுகையில் நாவழு உண்டாகி நடிகர் திலகமென்றே சொல்ல நேர்ந்தது.
மேடைப் பயிற்சியின் காரணமாக அந்த வழுவால் குழப்பம் அடையாமல் மன்னிப்புக்
கேட்டுக்கொண்டு அடுத்த கருத்துக்குப் போக முடிந்தது, போதிய பயிற்சி மட்டும் இல்லையென்றால் அந்தக் குழப்பத்திற்குப் பின் பேசும் வாக்கியங்கள் அனைத்திலும் கவனக்குவியலாகி வேகம் தடைப்பட்டிருக்கும்.

பரவலாக அறியப்பட்ட செய்திகளையே திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தாலோ, நகைச்சுவை நிகழ்ச்சிகளின் மறுபதிப்பாக பேச்சு சென்றாலோ சிலரை மட்டுமே ஈர்க்க முடிகின்றதேயன்றி ஏதேனும் தகவல் அறிந்துகொள்ளவேண்டும் என்னும் நினைப்பிலிருபோரையும், தமிழ் ஆர்வலர்களையும் ஈர்க்கமுடியாது என்பது திட்டவட்டமாகப் புரிகின்றது. துணுக்குகளால் அந்த நேரத்திற்கு சிலரை சிரிக்கவைக்கலாம், ஆனால்,
பிரமிப்பை உண்டாக்க இயலாது. விவரம் அறிந்தவனின் பேச்சைத்தான் கேட்கிறோம்
என்னும் நினைப்பை பேச்சின் துவக்கத்திலேயே பார்வையாளர்களுக்கு அறிவிக்கவேண்டியது அவசியமாகின்றது.

மேற்சொன்னவை அனைத்தும் பட்டிமன்றப் பேச்சிற்கு மட்டுமே. வேறு சபைகளில், அதாவது, கருத்தரங்கம் போன்ற மேடைகளில் அவை முழுக்க அறிஞர்கள் நிறைந்திருக்கும்போது இந்த உத்திகள் கைகொடுக்காதென்றே எண்ணத் தோன்றுகின்றது. பண்டைத் தமிழிலக்கியங்களிலிருந்து வரிகளைச் சொல்லிக்காட்டி பேச்சை நகர்த்துவதை நல்ல வாசிப்பனுபவம் உள்ளவர்கள் ஏற்பதில்லை. வாசிப்பனுபவம் கொண்டவர்கள் அலங்காரங்களற்ற தெளிவான பேச்சுகளையே கேட்க விரும்புகின்றார்கள்.

மேடைப் பேச்சினை தமிழில் மூன்றாகப் பிரிக்கிறார்களாம். 1.ஆற்றொழுக்கு, 2.சிங்கநோக்கு, 3.பருந்தின் வீழ்வு.

ஆற்றொழுக்கு என்றால் சரளமாக எந்த விதமான தடைகளும் இல்லாமல் கருத்துகளை
சொல்லிச் செல்வது. இந்த வகையில் பேடைப் பேச்சினை அமைத்துக்கொள்வதே அறிஞர்கள் நிறைந்திருக்கும் சபைக்கு ஏற்றதாக இருக்கும். தேவையற்ற ஏற்ற இறக்கங்கள் இல்லாமல், நாடகத்தன்மை கலக்காமல், இடையில் நிறுத்தி பார்வையாளர்களுக்கு அவசியமற்ற எதிர்பார்ப்பை உண்டாக்காமல் சொல்லவந்ததை சொல்லிச் செல்வதே சிறந்தது.

பட்டிமன்றங்களுக்கு சிங்கநோக்கு ஏற்றதாக இருக்கும். சிங்கம் நடக்கும்போது சிறிது தூரம் நடந்து சென்றபின் தான் வந்த பாதையை திரும்பிப் பார்க்குமாம். கொஞ்சம் பேசிய பின், மீண்டும் ஒருமுறை தான் சொல்லியதை நினைவுகூர்வது நன்றாக இருக்கும். எங்களுக்கு பாடத்திட்டத்தில் இருந்த அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரையில் ஒவ்வொன்றாக விளக்கிச் சொல்லிய கருத்துகளை மீண்டும் ஒருமுறை (விளக்காமல்) சொல்லும் உத்தி கையாளப்பட்டதை நினைவுகூர்கிறேன். இப்படி திரும்பச் சொல்வது கற்றோர் சபையில் எத்தனை வரவேற்பைப் பெறும் என்பதை அறியேன். மாணவர்களிடையேயும்,
பேச்சாளனிடமிருந்து எதையாவது பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடன்
பார்வையாளர்கள் இருக்கும்போதும் இந்த உத்தி செல்லுபடியாகலாம்.

பருந்தின் வீழ்வு, அதாவது உயரே எங்கு சுற்றித் திரிந்தாலும் கவனம் என்னவோ
சொல்லவந்த கருத்தின்மேல்தான். நீண்ட நேரம் உரையாற்றவேண்டிய அரசியல்
மேடைகளுக்கே இது இப்போதைக்கு சரியாகும் என எண்ணத் தோன்றுகிறது. குட்டிக்
கதைகள், தகவல்கள், நகைச்சுவை என்று விரித்துச் சென்று சொல்லவேண்டிய
கருத்தைச் சொல்லிவிடுவது. மேடைப் பேச்சுப் பயிற்சிகள் அளிக்கும் நண்பர்
ஒருமுறை சொன்னார், 'ஆசாத், எப்பொழுதெல்லாம் தலைப்பிலிருந்து விலகி
குட்டிக்கதைகள், துணுக்குகள் சொல்கிறாயோ அப்பொழுதெல்லாம் மட்டுமே
உன்னுடன் பார்வையாளர்கள் இருப்பார்கள்'
. இந்தக் கருத்துடன் எனக்கு
முழுக்க உடன்பாடில்லையென்றாலும் அரசியல் மேடைகளில் இன்னமும் இந்த
உத்திகள்தானே கைகொடுத்துக்கொண்டிருக்கின்றன. கற்றவர்கள் சபையில்
மையக்கருத்தைவிட்டு பேச்சாளன் வெளியே போனாலே 'இந்த தென்னை மரத்தில்தான்
பசுமாட்டைக் கட்டுவார்களா'
(நன்றி: ஆசிப்) என பக்கத்திலிருப்போர்களிடம்
ஆளாளுக்குக் கேட்பார்கள் என்றே தோன்றுகிறது.

அவையோரின் தன்மையை பேச்சாளன் அறிந்திருக்காவிடில் குழப்பம்தான். ஒரு
கல்லூரியில் தமிழ் பயிலும் மாணவர்கள் இருந்த அவையில் பேசியபோது கஜல்
மேற்கோள்கள் அவர்களுக்கு கூக்ளிக்களாகிப் பொரித்தெடுத்தன. புதுக்கவிதைகளிருந்து இரண்டொரு காதல் கவிதைகள் சொன்ன பிறகே மாணவர்களுடன் எனக்கு கலந்தூடாட்டம் உண்டானது. அன்று மட்டும் இன்னும் சில நிமிடங்களுக்கு கஜல்களைச் சொல்லியிருந்தால் மாணவர்கள் கைதட்டி உட்காரச் சொல்லியிருப்பார்கள்.

தெரிந்ததைப் பேச அழைத்தால் மட்டுமே பேசவேண்டும் என்பதை தனியாகக்
குறிப்பிடவேண்டியதில்லை. மேடைப் பேச்சாக இருந்தாலென்ன மேசைப் பேச்சாக
இருந்தாலென்ன நாம் அறிந்தவற்றை மேதாவித்தனங்காட்டாமல் பகிர்ந்துகொண்டால்
வாசிப்பனுபவம் உள்ளவர்கள் கேட்பார்கள், தேவைப்படும் மேடை அலங்காரங்களைச்
சேர்த்தால் வாசிப்பனுபவம் இல்லாதவர்கள் கேட்பார்கள், நகைச்சுவைத்
துணுக்ககளாக அள்ளித் தெளித்தால்...ஒருவேளை தொலைக்காட்சி
பட்டிமன்றத்திற்கு வாய்ப்புகள் வந்தாலும் வரலாம்.

Comments

ஆசாத்,

நல்ல ஃபார்ம்ல இருக்கீங்கல போல இருக்கு. :-) அடிச்சு ஆடுங்க.
சிங்கை - திரு லீ குவான் யூ மற்றும் கோ சோக் தாங் இவர்களின் பேச்சு - பருந்தின் வீழ்வு வகையில் இருக்கும்.தேசிய தினத்தை ஒட்டி தொலைக்காட்சியில் இவர்கள் பேசும் பேச்சை கேட்பவர்கள் இருக்கையை(வீட்டில் கூட) விட்டு எழுந்திருக்க விடாமல் செய்துவிடும்.
Anonymous said…
எழுதுவதற்குள்ள பொறுமை படிப்பதற்கு
இல்லை. அன்பு சகோ.ஆசாத் உங்கள்
பொறுமையே கொஞ்சம் எனக்கு தருங்களே.
என்றும் அன்புடன் சகோ.அலாவுதீன்

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...