
டிசம்பர் முதல் வாரத்தில், காலையில் துபாய் மாலில் கூட்டம் சேருவதற்கு முன்னரே சென்று சேர்ந்தேன். முன்னமேயே கேள்விப்பட்டதால் நண்பன் சொல்லிவிட்டதால் கடையின் பிரம்மாண்டம் வியப்பில் ஆழ்த்தவில்லை. கடையின் பரப்பளவு மொத்தம் 68850 சதுர மீட்டர்கள் என்கிறார்கள் (நமது கணக்கில் சொல்வதென்றால் 308 கிரவுண்டில் ஒரு புத்தகக்கடை).
உள்ளே நுழைந்ததும் பெரிய்ய்ய 'த எர்த்' புத்தகம் வரவேற்கிறது. மொத்தமே 2000 பிரதிகள் மட்டுமே அச்சடிக்கப்பட்டிருப்பதான அறிவிப்பைச் சுமந்து நிற்கும் பெரிய புத்தகம். அட்டையைத் திருப்ப இரண்டு முட்டை குடித்துவிட்டு வரவேண்டும் போன்றதான கனமாக இருக்கிறது. யாரோ ஒரு மலையாளக்கரையோரச் சேச்சி கேரளாவை அதில் பார்த்தால்தான் ஆயிற்று என அடம்பிடித்து விடாப்பிடியாக புத்தகத்தைப் பிடித்துக்கொண்டு நகராமல் இருந்தார், வேலைக்காகாது என நான் எனது சுற்றுலாவைத் துவங்கினேன்.

வழமையான அதிவிற்பனை அடுக்குகளில் துபாயின் புத்தகக்கடைகளைக் குத்தகைக்கு எடுத்திருக்கும் காலித் ஹொஸைனியின் கைட் ரன்னரும், எ தௌஸண்ட் ஸ்ப்லெண்டிட் சன்ஸும் இங்கேயும் இருந்தன. ராமச்சந்திர குஹாவின் இண்டியா ஆஃப்டர் காந்தியும் இருந்தது. வளைகுடாவில் ரஜா அல்சனியாவின் அந்த கேர்ள்ஸ் ஆஃப் ரியாதை விடமாட்டார்கள் போலிருக்கிறது. சவூதியில் தடையென்பதால் இங்கே போட்டு தாக்குதாக்கென்று தாக்குகிறார்கள். ஹருகி முராகுமி, மார்ட்டின் லூத்ர் கிங் என்று ஏகமாக விரியும் அதி விற்பனை அடுக்கிற்கு அடுத்து பிராந்திய ஆர்வம் (லோக்கல் இண்டரெஸ்ட்). வளைகுடா குறித்த புத்தகங்கள், ஆட்சியாளர்கள் பற்றிய புத்தகங்கள், புகைப்படங்கள் கொண்ட புத்தகங்கள் என அதுபாட்டிற்கு நீள்கிறது.
பயணம், அமெரிக்கா, ஆசியா, உலக சரித்திரம், தத்துவம், சுயமுன்னேற்றம், அரசியல் விஞ்ஞானம், சமயம், அதிவிற்பனைகள், பொருளாதாரம், கணிதம், பொறியியல், மருத்துவம், திரைப்படம், உலகத் தலைவர்கள், புகைப்படக்கலை, அரங்கம், குழந்தைகள், காமிக்ஸ், என்று நீட்டி எதையும் விட்டுவைக்காமல் வகைக்கு புத்தகங்களாக அடுக்கியிருக்கிறார்கள். புதிய கடை என்பதால் கடைசியில் சில அடுக்குகள் புத்தகங்கள் வைக்கப்படாமல் வெற்றாக இருக்கின்றன.

ஹொவார்ட் எம். சச்சாரின் (Howard M.Sachar) ஜூ(வ்)ஸ் இன் த மாடர்ன் வேர்ல்ட் புத்தகத்தைப் பார்த்ததும் ஒரு நண்பர் கினோகுனியா மிகவும் சுதந்திரமாக இருக்கிறது என ஒரு நண்பர் சொல்லியது விளங்கியது.
பொதுவாகவே வளைகுடாநாடுகளில் புத்தகம் தொடர்பான தணிக்கைகள் கெடுபிடியானவை என்பது பரவலான கருத்து, இங்கே கினோகுனியாவில், பைபிள், கிறிஸ்துவன் ஒரு அறிமுகம், சாயிபாபா படத்தை அட்டையில் கொண்ட சாயிபாபா, கீதை, உபநிஷத், ஓஷோ என்று புத்தகங்கள் கிடைக்கையில் சமீபத்தில் தணிக்கை விதிகள் மாற்றப்பட்டுள்ளனவோ என்னும் எண்ணம் தோன்றுகிறது.
தமிழில் வெளியான புத்தகமான 'ஐநூறு படங்கள்' வகையறாக்களின் நதிமூலத்தைப்போலிருக்கும் புத்தகங்கள் காணக்கிடைத்தன. தமிழில் உலகத் திரைப்படப் புத்தகங்களெல்லாம் இவற்றிலிருந்து வந்த மொழிமாற்றங்களோ என்னும் விதத்திலும் ஒன்றிரண்டு புத்தகங்கள் காணக் கிடைத்தன.
இந்தியா முந்நூற்று அறுபத்தைந்து நாள்கள் என ஒரு புகைப்படம் தொடர்பான புத்தகம், ஏன் இவர்கள் கலாசாரத்தைக் காட்டுகிறேன் என்று நமது இன்னொரு முகமான எளிமையை மட்டுமே பிரதானப்படுத்தி இதுதான் இந்தியா என மேற்கிற்குக் காட்டுகிறார்களோ என நினைக்கத் தோன்றுகிறது. சரி... சல்தாஹை...அதுவும் நமது இன்னொரு முகம், அந்த முகம் இந்தப் புகைப்படக்காரருக்குப் பிடித்திருக்கிறது.
இரண்டு மணிநேரத்திற்கு மேல் சுற்றிவிட்டு குறுக்கு தெறிக்கும் நிலைவந்த பின்னரே அமர்ந்தேன். அடடா லேசான குறுக்கு வலியுடன் மெதுவாக அமர்வது இருக்கிறதே...சுகம் சுகம். பணம் கொடுத்துவிட்டு வெளியே வரும்போது நல்லவேளையாக 'த எர்த்' புத்தகத்தின் அருகில் யாரும் இல்லை, சும்மா இரண்டு திருப்பு திருப்பி இந்தியாவுக்கு அவர்கள் ஒதுக்கியிருக்கும் இரண்டு பக்கங்களைப்
பார்த்துவிட்டு புறப்பட்டேன்.

அத்தனை பெரிய கடையில் வாங்கியவை இரண்டே இரண்டு புத்தகங்கள்
1. எ தௌசண்ட் ஸ்ப்ளெண்டிட் சன்ஸ் - காலித் ஹொசைனி
2. இண்டியா ஆஃப்டர் காந்தி - ராமச்சந்திர குஹா
Comments
Today I was exercising at home and listening to my ipod songs. All 1980s sweet melodious tamil songs. After all that suddenly you "katpadda gaaanvula paattudaa" played.
Very nice and enjoyed your lyrics and voice.
When are you going to post the next one like that.
Seemachu.
போக ஏதாவது வழி தென்படுகிறதா? என்று பார்ப்போம்.