Skip to main content

டோஸ்ட்மாஸ்டர்ஸ் பதவிக்காலமும் கொஞ்சம் தற்பெருமையும் :)

மாதத்தின் ஒவ்வொரு முதல் புதன்கிழமைகளிலும் / மூன்றாவது புதன் கிழமைகளிலும் ஒரு சந்திப்பு, ஒவ்வொரு சந்திப்பிலும் ஐந்து நிமிடம் தலைமை உரைக்கான வாய்ப்பு, விடுமுறை நாள்களான 30 + 10 இல் வருகின்ற தோராயமான மூன்று புதன்களைக் கழித்தால், ஆண்டுக்கு இருபத்தியொரு முறை மேடையேறுகின்ற வாய்ப்பு. ஒருமுறைக்கு ஐந்து நிமிடங்களென்றபோது, மொத்தமாக ஆண்டொன்றில் ஒருமணி நேரமும் நாற்பத்தைந்து நிமிடங்களும் மேடையில் பேசுகின்ற வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும்.

ஏதாவதொரு டோஸ்ட்மாஸ்டர்ஸ் குழுமத்தில் தலைவராக இருந்தால் கிடைக்கும்.

எனக்குக் கிடைத்தது.

எனது தனித்திறனை வளர்த்துக்கொள்ளவும், ஆர்வம் இருப்போர்களைக் குழுவில் அங்கத்தினராக்கி அவர்களின் பேச்சுத்திறனை வளர்க்கவும் இந்தப் பதவி உதவியது. முப்பது உறுப்பினர்கள் கொண்ட சிறிய குழுமம்தான். வெவ்வேறு பணிகளில் வெவ்வேறு வேலைகளில் இருப்பவர்களாதலால், ஒவ்வொரு சந்திப்பின்போதும் இரண்டு வாரங்களில் அனுபவித்த ஒற்றைத்தொனியில் (monotone) கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டு, புத்துணர்ச்சி போன்ற ஒன்று கிடைக்கும். புத்துணர்ச்சி என்று சொல்லமாட்டேன், ஒற்றைத்தொனியை விலக்கிய ஒரு உணர்வு.

சென்ற மாதம் 22ம்தேதி முதல் அடுத்த தலைவரிடம் பொறுப்புகளைத் தந்துவிட்டு, இப்போது வட்டத்திற்குச் சென்றுவிட்டேன். டோஸ்ட்மாஸ்டர்ஸில் அப்படித்தான். ஒரு இடத்தில் பணி முடிந்ததும் குழு, தொகுதி, வட்டம், மாவட்டம், மாநிலம், நாடு என்று போய்க்கொண்டே இருக்கும். உலகெங்கும் தொண்ணூறு நாடுகளில் பத்தாயிரத்தைனூறு குழுமங்கள் கிளைட்டிருக்கின்றன என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

இதனாலெல்லாம் நானென்னவோ மேடைப்பேச்சு வித்தகன் என்பது பொருளளன்று. மேடைப்பேச்சில் ஆர்வம் உள்ளவன் என்பது வரையிலேயே உண்மை.

டோஸ்ட்மாஸ்டர்ஸைப் பொறுத்தவரையில் உத்திகளையும், கருத்தையும் மட்டுமே பார்பார்களாதலால் உங்கள் பின்புலம் குறித்த எந்தக் கேள்வியும் எழாது. மேலும், டோஸ்ட்மாஸ்டர்ஸின் எந்த உரையிலும் பாலியல், மதம், அரசியல் இம்மூன்றைக் குறித்தும் பேசவே கூடாதென்பதால், சிற்றுரையால் ஏற்படும் கருத்து வேறுபாடென்பது எழுவதற்கு வாய்ப்புகள் இல்லை.

டோஸ்ட்மாஸ்டர்ஸ் விடுத்த மற்ற அவைகளில் பேசும்போதுதான் கத்திமேல் நடப்பதான உணர்வு. சம்பிரதாயமாகத் துவங்கினால் சிலருக்குப் பிடிக்காது, பாடல் வரிகளை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு வரியாகச் சொல்லி நமது ரசிப்புத் தன்மையைச் சொன்னால் சிலர் முகம் சுளிப்பார்கள். இணையத்தில் தேடி இதற்கென்று பண்டைத் தமிழ் படைப்புகளிலிருந்து பாடல்களை மேற்கோளாகச் சொன்னால் சிலர் ரசிப்பார்கள் - சிலர் ரசிக்கமாட்டார்கள். யார் யார் கூட்டத்தில் அமர்ந்திருக்கிறார் என்பதே தெரியாது.

எதைப் பேசினாலும், நன்றாகத் தெரிந்த ஒன்றைப்பற்றியே பேசுவது நல்லது. அதாவது, ஒரு தலைப்பில் அரைமணிநேரம் பேசுவதற்கான குறிப்புகளை எடுத்துக்கொண்டு, அதிலிருந்து ஐந்து நிமிடத்திற்கான குறிப்புகளை மட்டுமே உபயோகித்துக்கொள்வது நல்லது. இது எனக்குப் பிடித்தமானது. ஏனென்றால், பேசி முடித்த பின்னர் விவரமறிந்தோர்கள் நம்மைச் சுற்றிலும் நின்று அதே தலைப்பில் விவாதிக்க வாய்ப்பு உண்டு. ஐந்து நிமிடம் வரையில்தான் பேசுவதற்கு நம்மிடம் விஷயம் இருந்தது, அதற்கு மேல் இல்லையெனும் பட்சத்தில் நமது மதிப்பு பார்வையாளர்களிடம் குறைந்து போக வாய்ப்பு உண்டு.

டோஸ்ட்மாஸ்டர்ஸுக்கு வருகிறேன். பதவிக்காலத்தை வெற்றிகரமாக முடித்து அடுத்தவர்களிடம் பொறுப்புகளைத் தந்த அந்நிகழ்ச்சி நேற்றைக்குதான் 'community watch' பகுதியில் வெளியானது. இணையப் பதிப்பில் கம்யூனிட்டி வாட்ச் இல்லாததால் சுட்டி கொடுக்க முடியாது. அதனால், செய்தியின் நகலை வலையேற்றியிருக்கிறேன். புகைப்படத்தில் என்னைத் தேடாதீர்கள். இது புதிய நிர்வாகக் குழுவின் புகைப்படம். நகல் சரியாக இல்லையென்றால் திட்டாதீர்கள். சல்தாஹை சொல்லிவிடுங்கள் :)



சவூதி கெசட் நாளிதழுக்கு நன்றிகள்.

வருடத்தில் ஓரிருமுறைகள் இப்படி நகரச்செய்திகளில் பெயரைக் காட்டும் வாய்ப்பு கிடைக்கிறது. இதனினும் இன்னும் ஒருபடி மேலே போக முயற்சி செய்கிறேன். நிறைவேறும், இன்ஷா அல்லாஹ்.

அன்புடன்
ஆசாத்

Comments

murali said…
தலைவரே முக்கியமான ஆளே நீங்கதானே உங்க புகைப் படத்த போடாம விட்டுட்டிங்களே.

நம்ம க்ளப்போட பெயருக்கு
(ஹோப்)ஏத்த மாதிரி நிச்சயமா டோஸ்ட்மாஸ்டர்ஸ்; உறுப்பிநர்களோட மனசுசுல நம்பிக்கையை வளர்க்குது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...