Skip to main content

நௌஷாத் சாஹேப்

இந்திப் பாடல்களையும் படங்களையும் அறிந்தோர்க்கு நௌஷாத் சாஹேபைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை. அவரின் பெயரைச் சொன்னாலே போதும் அவர் இசையமைத்த பாடல்கள் நினைவுக்கு வரும். தமிழ்ப் பாடல்கள் மட்டுமே கேட்போரென்றால், பழைய பாடல்களைக் கேட்போர்கள் நௌஷாத் சாஹேபின் இசையைக் கேட்டிருப்பார்கள்.

'கனாக் கண்ட காதல் கதை _ _ லாச்சே!
.நிலா வீசும் வானில் மழை _ _ லாச்சே!
.மழை _ _ லாச்சே'


அக்பர் திரைப்படத்தின் இந்தப் பாடல் நௌஷாத் அலியின் இசையில் உருவானது.

அதன் இந்திப் பதிப்பான,

'மொஹப்பத் கி ஜூட்டி கஹானிபே ரோயே!
.படே ச்சோட்டு காயி ஜவானிபே ரோயே!'


என்பதான வரிகளில் மதுபாலாவிற்காக வடக்கே பலர் உருகியிருக்கக்கூடும்.

இங்கே எனது வலைப்பதிவில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கும் காதல் கொண்டேன்
அஞ்சிடுவேனோ பாடலும், கவ்வாலி வடிவத்தை மொழிமாற்றம் செய்யவேண்டும் என்னும் ஆர்வத்தில் மொழிமாற்றம் செய்த 'உந்தன் சபையில்' பாடலும், எனது அபிமான இந்திப் படமான மொஹல்-ஏ-ஆஸம் திரைப்படத்தில் நௌஷாதின் இசையில் உருவானவை.

முகமது ரஃபியின் பாடல்களின் பட்டியலென்றால், 'ஓ துனியாகே ரக்வாலே' இல்லாமல் பட்டியல் கிடையாது. பண்டித நேரு அவர்கள் சிலாகித்துப் பேசிய பாடல் என்றும் சொல்லுவார்கள். விவரம் அறிந்தோர்களின் பேச்சுகளிலிருந்து இந்தப் பாடல் அமைந்திருக்கும் ராகம் தர்பார் என்று அறிந்திருக்கிறேன். 'சாந்துகோ டூண்டே பாகல் சூரஜ்! ஷாம்கோ டூண்டே சவேரா!' என்னும் வரிகளை உச்சரிக்கும்போது ரஃபி சாஹேப் தனது குரலில் வெளிப்படுத்தியிருக்கும் விரக்தியை, திரையில் பாரத் பூஷனின் நடிப்புடன் சேர்த்து பார்க்கின்ற வாய்ப்பு இதுவரையில் கிடைக்கவில்லை.

திருவல்லிக்கேணியில் மேடைக் கச்சேரியென்றால் நாகூர் ஹனீபா அவர்கள் கட்டாயம் துனியாகே ரக்வாலே (படம்:பைஜு பாவ்ரா) பாடலைப் பாடுவார் (எழுபதுகளின் இறுதியில்), அப்பொழுதெல்லாம் அந்தப் பாடலுக்காக பைஜு பபவ்ராவைப் பார்க்கவேண்டுமென்று நினைத்துக்கொண்டதுண்டு . இப்பொழுதும் நினைத்துக்கொள்கிறேன், கூடுதலாக, லதாஜியின் மொஹெ பூல்கயே சான்வரியான் என்னும் இன்னொரு பாடலையும் விருப்பத்தில் சேர்த்திருக்கிறேன். பைஜு பாவ்ராவின் இசையமைப்பாளர், நௌஷாத் அலி.

சோகப்பாடல்களைப் பல நேரங்களில் விரும்புவதில்லை. திரையில் பல நேரங்களில் யதார்த்தம் மீறப்படுவதும், சோகமான நேரத்தில் யார் அப்படி சந்தம் மாறாமல் பாடுவார்கள் என்னும் அணுகுமுறையும் சோகப்பாடல்களை நம்மிடமிருந்து பல நேரங்களில் விலக்கிவைக்கின்றன. ஆனால், நர்கீஸ் அவர்கள் நடித்த மதர் இண்டியா திரைப்படத்தின்,
'துனியாமே ஹம் ஆயேஹை ஜீனாஹி படேகா!
.ஜீவன் ஹை ஸஹர்தோ பீனாஹி படேகா!'
பாடலை நான் இதுவரையில் தள்ளிவிட்டுப் பார்த்ததில்லை. நர்கீஸின் நடிப்பாலா, ஷகீல் பதாயுனியின் வரிகளாலா, நௌஷாதின் இசையாலா என்பது ஒரு மாபெரும் அரட்டை அரங்கத்துக்கான தலைப்பு.

வெளிநாட்டில் வாழும் ஒரு மகன் தனது தந்தைக்கு என்னவெல்லாம் கடிதத்தில் எழுதுவான்? சேமிப்பு, காசோலை, வேலையில் சிரமம், விடுமுறை நாள் இப்படியாகவும் இருக்கலாம்; கொஞ்சம் இதைவிட்டு விலகியும் இருக்கலாம். அப்படி விலகி இருக்கும் விஷயங்களில் அரைப்பக்கத்திற்கு நௌஷாத் சாஹேபை சிலாகித்தும் எழுதலாம்.

நான் எழுதினேன்.

1984 அல்லது 85 ஆக இருக்கக்கூடும். நௌஷாத் சாஹேப் ஹஜ் பயணத்திற்கு வந்திருந்தார். இங்கே ஜித்தாவில் செய்தித்தாளில் அவரைப்பற்றிய கட்டுரை ஒன்றும் வெளியானது. அந்த வருடங்களின் சூழலுக்கு அதெல்லாம் அதிகம். கட்டுரை வெளியாவதற்கு ஓரிருவாரங்கள் முன்னர்தான் 'மேரே மெஹபூப்' திரைப்படத்தை ஏகப்பட்ட காட்சிகளை திரும்பத் திரும்பப் போட்டுப் பார்த்து ரசித்து வைத்திருந்தேன். கட்டுரையைப் படித்ததும் எனது தந்தையார் என்னுடன் பகிர்ந்துகொண்ட நௌஷாதின் திரைப்பட விவரங்கள் நினைவுக்கு வந்தன. தந்தையாருக்கு மேரே மெஹபூபின் பாடல்கள் குறித்தும் நௌஷாதை நானும் கேட்டு ரசிப்பது குறித்தும் ஒரு கடிதம் எழுதினேன்.

தந்தையார் மறைந்து வருடங்களாகின்றன. அவரும் நானும் விரும்பிக் கேட்ட /
கேட்கும் இசையமைப்பாளர் நௌஷாதின் மறைவு எனக்கு தந்தையாரையும் நினைவுக்குக் கொண்டுவருகிறது.

ஹெச்.எம்.வி. நிறுவனத்தார் வெளியிட்டிருக்கும் ஐம்பதாண்டு இந்திப் பாடல் தேர்வில் 57 முதல் 62 வரையிலான தேர்வில் இரண்டு பாடல்கள் நௌஷாதினுடையவை. ஒன்று மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் 'துனியாமே ஹம் ஆயேஹை' (மதர் இண்டியா) பாடல். இன்னொன்று மொஹல்-ஏ-ஆஸம் திரைப்படத்தில் இடம்பெற்ற 'மோஹெ பன்ஹட்பே நந்தலால் சேடு கயோரே'.

சென்ற வாரத்தில் இந்தப் பாடலைக் கேட்டபோது அருகிலிருந்த மகளிடம் இதன் இசையமைப்பாளர் நௌஷாத் அலி எனச் சொன்ன சமயத்தில்,

'சரிப்பா, பன்ஹட்னா என்ன?' என்றேன்.

'பானி-கா ஹட் பன்ஹட்டுன்னு ஆகியிருக்கும். குடம், பானை இந்த மாதிரி எதாவதா இருக்கலாம். பக்கத்துலயே நந்தலால்தான் வந்துட்டார. அந்த மாதிரிதான் எதாவது தண்ணி சம்மந்தப்பட்டதாத்தான் இருக்கும்' இது மகள் சொன்னது.

'பன்ஹட்டுன்னா நீர்நிலை, குளம், ஆறு தொடர்பான வார்த்தைன்னு சொல்றாங்க' இது நான்.

எனது தந்தையார் என்னுடன் நௌஷாத் குறித்த விவரங்களைப் பேசியதால் நௌஷாதின் மறைவு எனக்கு தந்தையாரைப் பற்றிய நினைவுகளைக் கிளறிவிட்டிருக்கிறது. நாளை என்றேனும் மகள் மோஹெ பன்ஹட்டுபே நந்தலால் சேடுகயோரே பாடலைக் கேட்கும்போது என்னைப் பற்றி நினைப்பாளோ.

அன்புடன்
ஆசாத்

Comments

Anonymous said…
Dear Azad

I was really moved by your writing about Naushad saab.
He is my all time best favorite composer in all languagea.
Although I am much older than you,I am pleased to know people of next generation have an appreciation for Naushad's saab's work.
Another famous song in Baiju Bawra,'Bhagwan' in the raga sung by Rafi in Malkauns raag,written by Shkaeel and composed by Naushad-all Muslims incidentally- about a Hindu God makes all the religious intolerance and squabbles inconsequential.
Please teach your daughter about the greatness of Naushad.
My best wishes to you.
Ramamurthy
Dear Ramamurthy sir,

Thanks for your comment and wishes.

//Shkaeel and composed by Naushad-all Muslims incidentally- about a Hindu God//

My friend and well wisher Ira.Murugan also shared this in Raayarkaapiklub (yahoo group) once.

anbudan
Azad
era.murukan said…
Dear Azad,

Wonderful write-up.

About 'Duniya-ke-rakwale' on screen : I watched it on a late night telecast but Bharath Bhushan somehow failed to impress me. I don't think ample justice was done to the marvellous song while rendering it visually. Much unlike Madhubhala enhanced 'pyar kiya to darna kiya' with her nonchalant looks and graceful body language in 'Mugal-e-azam'.

Do you remember that lingering whistle of the train towards the close of Pakeeza song (Lata)? I can still feel the anguish of Meenakumari and Rajkumar with that single note! HFM has lost its anmol treasure in Naushad's demise.
இனிய முருகனார்,

பாக்கீஸா - இரயில் வண்டியின் சீழ்க்கையொலி - லதாஜி - சல்தே சல்தே யூன்ஹி கோயி மில்கயாதா பாடல்தானே. கைஃபி சாஹேபின் வரிகள்.

பாக்கீஸாவின் இசையமைப்பை குலாம் மெஹம்மதிற்குப் பின்னரே நௌஷாத் ஏற்றுக்கொண்டதாக பல குறிப்புகளில் எழுதியிருக்கிறார்கள் (இணையத்தில் படிக்கக் கிடைத்தன).

ப்யார் கியாதோ டர்னா க்யா - எந்நேரமும் நான் விரும்பும் பாடல்.

அன்புடன்
ஆசாத்
Anonymous said…
Dear Azaad
Your writeup and Mr.Era.Murukan's followup about Pakeezah brought up lots of nostalgic memories.
I was in India at the time the film was released.
According to my understanding Naushad completed the music of Pakeezah after the demise of Ghulam Mohd.The transition is so seamless we cannot differentiate who created which tune.
I still can not get over Naushad's loss.
Ramamurthy

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...