Skip to main content

தாலிபான் என்னும் தவறு

தாலிபான் என்னும் தவறு

தாலிபான் என்றால் மாணவர் இயக்கம் என்பது போன்ற பொருள்.

தாலிபான்கள் குறித்து நினைக்கும்போதெல்லாம் சில கேள்விகள் எழுவதுண்டு.

தாலிபான்களின் தலையாய பிரச்சனை இஸ்லாத்தை நிலைநாட்டுவதா?

தங்கள் நாட்டிற்குக் கிடைக்கவேண்டிய பல நன்மைகள் இன்னொரு நாட்டின் தலையீட்டால் விலகிப்போவதை அறியாதவர்களாகவே இருக்கின்றார்களா?

தாங்கள் உருவாக்கப்பட்டதில் இன்னொரு நாட்டின் உளவுத்துறைக்கு தலையாய பங்கு இருக்கிறது என்றும் அறியாதவர்களாக இருக்கிறார்களா?

அந்த அளவிற்கு மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறார்களா?

அல்லது இவற்றை மீறிய ஏதோ ஒன்றா?

ஆங்கிலேயர் இந்தியாவை விட்டுச் சென்றபோது அங்கே இங்கே அவர்களிடமிருந்த ஆப்கானின் பகுதிகள் பாகிஸ்தானுக்குக் கிடைத்தன. அதனைத் திரும்பப் பெறுவதற்கு தாலிபான் அமைப்பு முயற்சிகள் செய்திருந்தால் அது பத்திரிகை உலகால் கவனிக்கப்படாமல் இருந்திருக்குமா?

விவரமறிந்த ஆப்கானிகள் சிலருக்கு தாலிபான்களின் மேல் தீராத வெறுப்பு இருக்கிறது. ஒரு தலைமுறையையே கூலிப் போராளிகளாக மாற்றிவிட்டார்கள் என்றும் அவர்கள் சொல்வதுண்டு. ஆப்கானை சில நூற்றாண்டுகள் பின்னால் அழைத்துச் சென்று முன்னேற்றத்தை அழித்ததுதான் தாலிபான் ஆப்கானுக்கெனச் செய்தது.

இவர்களின் இந்த அராஜகத்தின் அடிப்படை என்ன?

எந்த அடிப்படையிலுமே நியாயப்படுத்த முடியாத காட்டுமிராண்டுத்தனமான செயலாக சூர்ய நாராயணாவைக் கொன்றுவிட்டு, ஆப்கனில் இருக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் சவால் விட்டுக்கொண்டு எதனைச் செய்யத் துடிக்கிறார்கள்.

நண்பர் ஆசிப் மீரானின் வலைப்பதிவில் இருக்கும் பின்னூட்டங்களில் விவாதித்த கருத்துகளின்படி தாலிபான்கள் இந்துக்களைக் கொல்கிறார்களோ இந்தியர்களைக் கொல்கிறார்களோ அது பார்ப்பவரின் கண்ணோட்டப்படி இருக்க, என்னைப் பொறுத்தவரையில் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய காட்டுமிராண்டித்தனத்தைத்தான் நிறைவேற்றுகிறார்கள்.

தப்பித்து ஓடியதால் சுட்டுவிட்டதாகவும் பிறகுதான் கழுத்தை அறுத்ததாகவும் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது. இது என்ன கழுத்தை அறுத்த மனிதத்தன்மையற்ற செயலை நியாயப்படுத்தி சப்பைக்கட்டு கட்டவா? சுட்டுக் கொன்ற பின் கழுத்தை அறுத்ததாகச் சொல்வதை நம்புதற்கில்லை. ஒருவேளை அப்படி அறுத்திருந்தால் அது மிருகத்தனத்திலும் கேவலமானது.

மறுமை வாழ்வில் எனக்குள்ள நம்பிக்கையின் அடிப்படையில், தாலிபான்கள் செய்திருக்கும் அநியாயங்களுக்கு இந்த உலகில் இல்லையென்றாலும் மறுமை உலகில் தண்டனை கிடைக்காமற்போகாது.

*

பாகிஸ்தானில் செட்டில் ஆகிவிட்ட ஒரு ஆப்கானியிடம் சற்று முன்னர் பேசும்போது கேட்டேன்.

'ஏனய்யா இப்படி நடக்கிறது?'

'சகோதரா! நான் ஐந்தாயிரம் வருடங்களாக ஆப்கானி! ஆயிரத்து நானூறு வருடங்களாக முஸ்லிம்! ஐம்பதாண்டுகளாக பாகிஸ்தானி! நான் இப்போது ஆப்கானியல்லன்! போதுமா!' என்று துவங்கி பதினைந்து நிமிடங்களுக்கு தாலிபான்களைப் பொறிந்து தள்ளிய விஷயங்களை நேரம் கிடைக்கும்போது இன்னொரு பதிவில் எழுதுவேன்.

*

அன்புடன்
ஆசாத்

Comments

Anonymous said…
//'சகோதரா! நான் ஐந்தாயிரம் வருடங்களாக ஆப்கானி! ஆயிரத்து நானூறு வருடங்களாக முஸ்லிம்! ஐம்பதாண்டுகளாக பாகிஸ்தானி! நான் இப்போது ஆப்கானியல்லன்! போதுமா!'//

எப்போதான் மனுஷனா மாறப்போறாராம், கேட்டீங்களா?
ஓகை said…
நெஞ்சம் கொதித்துபோய் என் உணர்வுகளை இங்கே -http://oagaisblog.blogspot.com/2006/04/blog-post_114646614738261325.html எழுதியிருக்கிறேன்

நடராஜன்
இனிய நடராஜன் அய்யா,

படித்தேன். மனக்குமுறல்களை எழுத்தில் கொட்டிருக்கிறீர்கள்.

*

இனிய அனானிமஸ்ஜி,

அவர் நல்ல மனிதர்தான்.

தாலிபான்களைப் பற்றி அவர் குமுறலுடன் சொல்வதைத்தான் அப்படிக் குறிப்பிட்டார். பொருள்களை ஜாடையாகப் பேசுவது நம்மைப்போலவே உருதுவிலும் ஒரு மரபு.

அன்புடன்
ஆசாத்

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...