Skip to main content

Posts

நெடுஞ்சாலை - புதுக்கவிதை

அன்புடையீர், இது நீண்ட நாள்களுக்கு முன்னர் எழுதி ராயர் காப்பி க்ளப் மடலாற்குழுமத்தில் இட்ட கவிதை. இன்று மதீனாவிலிருந்து ஜித்தா வரும் வழியில் வண்டியை ஓட்டியபடியே செல்பேசியில் பிடித்த சில படங்களுடன் கவிதையை இடுகின்றேன். * நெடுஞ்சாலை நகர நெரிசலில் ஊர்ந்த உந்துகள் வெளி கிடைத்தவுடன் விண்வெளிக் கலங்களாகி விரையும் பின்னே கட்டடங்கள் சிறிதாகி மறைய முன்னே வாய் பிளந்து விழுங்கக் காத்திருக்கும் பாலையின் கருநாக்காக நீளும்! முந்தும் பிந்தும் வண்டிகள் மஞ்சள் விளக்கு பரிபாஷையில் பேசிக்கொள்ளும் பரமபதப் பாம்புகளென கிளைச்சாலைகள் பிரிய நேரே தொடுவானம் வரையில் நீண்டு தூரத்தில் கானலில் நெளிந்து மீண்டும் நீண்டு பாலைவனத்தை இரண்டாகப் பிரிக்கும் கருப்புக்கோடாக செல்லச் செல்ல இன்னும் நீளும்! எச்சரிக்கை அறிவிப்பில் ஒட்டகத்தின் உருவ நிழல் விரட்டி விரட்டி மூச்சிறைத்த வாகனங்கள் வழியில் ஆ வென வாய் திறந்து வெப்பத்தை வெளியேற்றும் எப்பொழுதாவது தோன்றி மறையும் எரிபொருள் நிலையங்கள் சிற்றூராய் விரிந்திருக்கும் இமைப்பதற்குள் காற்றைக் கிழித்துக் கடந்து சிறிதாகிப் புள்ளியாய் மறைந்த உந்துகள் நகரின் எல்லை தொட்டதும் வேகம் குறைந்து...

எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சி - நீரும் நெருப்பும்

அன்புடையீர், எனது பதிவுகளைப் படிப்போர்க்கு நான் சண்டைக் காட்சிப் பிரியன் என்பது தெரியும். இந்தியின் கோரா அவுர் காலா (ராஜேந்திர குமார்), தமிழில் நீரும் நெருப்பும் (எம்.ஜி.ஆர்.) என எடுக்கப்பட்டது. தமிழோவியத்தில் 'இந்தி - தமிழ்' பாடல்களால் ஒரு பாலம் என்னும் கட்டுரைத் தொடரை எழுதத் துவங்கியிருப்பதால், கோரா அவுர் காலாவின் பாடல்களையும் நீரும் நெருப்பும் படத்தின் பாடல்களையும் ஒப்பிட்டுப் பார்க்க அரைமணி நேரத்தை ஒதுக்கி பாடல்களைப் பார்த்தேன். அப்போது இந்த சண்டைக் காட்சியையும் பார்த்தேன். எம்.ஜி.ஆரின் சண்டைக் காட்சிகளில் என்னை நானே மூழ்கடித்திருப்பவன். இப்படி ஒரு சண்டைக்காட்சியைக் கண்டால் விடுவேனோ, பலமுறை பார்த்த இதனை மீண்டும் ஒருமுறை பார்த்தேன். ஷ்யாம் சுந்தர் + எம்.ஜி.ஆரின் நேர்த்தியை உங்களுடன் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன். வலது கையால் செய்யக்கூடியவற்றை அப்படியே பிம்பமாக இடது கையால் செய்வதற்கு பயிற்சி தேவை. அதிலும் சுழற்சி, தடுத்தல் போன்றவற்றிற்கு அதிகமான பயிற்சிகள் தேவை. வாள் சண்டையில் எம்.ஜி.ஆரின் பயிற்சியை தமிழகம் அறியும். இடது கரம் வலது கரம் என இரண்டு கரங்களாலும் வாட்போரிடுவது அவர...

கார்ப்பரேட் - திரைப்படம் எனது பார்வையில்

எழுதி வைத்துக்கொள்ளுங்கள், சப்னா முகர்ஜியின் 'ஓ சிக்கந்தர் சிக்கந்தர் ஓ சிக்கந்தர் ஜான்க்லே ஜான்க்லே தூ தில்கே அந்தர்' இந்தப் பாடல் எல்லா நடனக் கச்சேரிகளிலும் போடுபோடென்று போடப்போகிறது. திரிதேவ் படத்தின் 'திர்ச்சி டோப்பிவாலே' விற்குப் பிறகு சப்னா முகர்ஜிக்கு அப்படியொரு பிரபலம் இந்தப் பாடலால் கிடைக்கக்கூடும் என்பது எனது எண்ணம். இசை ஷமீர் டாண்டன் . பாயல் ரோஹாத்கி அம்மணிதான் ஆடியிருக்கிறார். பின்னணி பாடியவர் சப்னா முகர்ஜி. அனேகமாக பாடலாசிரியர் ஜாவீத் அக்தராகத்தான் இருக்கவேண்டும். பாடலைத் திரையில் பார்க்காமல், கேட்கும்போது கிறங்கடிக்கிறது. இப்படி மன்ஸர், பன்ஜர், முக்கத்தர், சிக்கந்தர் என இயைபாக ஒலிக்கும் வார்த்தைகளை அமைத்து விளையாடுவது கவ்வாலி வகைப்பாடல்களில் மரபு. கொஞ்சமும் மரபு மாறாமல் கலக்கியிருக்கிறார்கள். இன்றைக்குதான் சூஃபியிசத்தின் கவ்வாலி இசையில் நுனிப்புல் மேய்ந்துவிட்டு, வீர்-ஸாரா வின் 'ஆயா தேரே தர்பர் தீவானா' கவ்வாலி பாடலை மொழிமாற்றம் செய்தால் என்னவென நினைத்தேன். கார்ப்பரேட் டில் கவ்வாலியை ஐட்டம் நம்பராக்கி, மேலே தொடரும் வசனத்தில் நகைச்சுவையாக்கி போட்...

மரணத்தை நாளை ஏற்பேன்! - எண்சீர் விருத்தம் - போட்டிக்காக

மரணத்தை நாளை ஏற்பேன்! 1. மரணத்தை இனங்காட்டி என்னை இன்னும் ..மனங்குலைய வைப்பதுவும் வீண்வே லைதான்! அரணுக்குள் அரணோடு வாழ்ந்தோ ரெல்லாம் ..அப்படியே உள்ளாரோ நானும் வாழ? முரணன்று மனதிற்குள் வாழும் ஆசை ..முழுதாக உள்ளதுதான் ஆயின், சொல்வேன் நரனாகப் பிறந்தாலோ மரிக்க வேண்டும் ..நவில்கின்றேன் மரணத்தை நாளை ஏற்பேன்! 2. பூச்சாண்டி காட்டாதீர் இங்கே நீவிர் ..புதிதாக ஏதேனும் சொல்லிச் செல்வீர்! மூச்சாகி முன்னூற்றுச் சொச்சம் இந்த ..மூதுரையின் முழக்கத்திற் பஞ்சம் இல்லை! பேச்சாக வந்தாலும் பொரித்(து)எ டுக்கும் ..பேசாமல் ஒருகாதம் ஓடிப் போவேன்! வீச்சாக உரைக்கின்றேன் வீம்புக்(கு) அல்ல ..விருப்பந்தான் மரணத்தை நாளை ஏற்பேன்! 3. தள்ளாடிக் கூனோடு நரையும் வீழ்ந்து ..தகைசார்ந்த பெயரர்கள் நானும் பெற்று உள்ளாடும் ஆசையெலாம் உருவங் கொண்டு ..உள்ளறையில் சேவகனாய் நிற்கும் நாளில் சொல்லாடிச் செல்வேனென் சொத்திற் கெல்லாம் ..சொந்தங்கள் கண்டென்றன் சிந்தை துள்ளும்! நல்லாரே யிதுஆகப் பேரா சைதான்! ..நனவாக்கி மரணத்தை நாளை ஏற்பேன்! 4. 'கிண்ணத்தில் மதுவாகி வழியும் வாழ்வு' ..கிப்ரானின் சொல்லாடல் மாற்றம் உண்டோ? மண்ணிற்கும் விண்ணிற்...

'தேனீ' உமர் மறைவு - கேட்டவற்றைப் பகிர்ந்துகொள்கிறேன்.

அன்புடையீர், அனேகரைப் போலவே எனது வலைப்பதிவிலும் 'தேனீ' இயங்கு எழுத்துருதான் நண்பர்கள் அமைத்துத் தந்தார்கள். அதனைத் தந்த உமர் அவர்கள் மறைந்துவிட்டார் என்னும் செய்தி வருத்தத்தினை அளிக்கிறது. துபாயில் அவரது அறைத்தோழராக இருந்த எனது நண்பர் ரஃபியா அவர்களிடம் துக்கம் விசாரிக்கும்போது, உமர் அவர்கள் குறித்து அவர் பகிர்ந்துகொண்ட செய்திகளை இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். உமர் என்று நம்மால் அழைக்கப்படும் அவரது முழுப்பெயர் உமர் தம்பி . தஞ்சை அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர். அவருக்கு வயது 55 இற்குள்தான் இருக்கும். மாணவப் பருவத்திலிருந்தே வானொலிப் பெட்டி, ஒலிபரப்பு இவற்றில் ஆர்வம் மிக்கவராக இருந்திருக்கிறார். அந்த ஆர்வத்தால், மாணவப் பருவக் குறும்பாக, ஒருமுறை தான் பயின்ற காதர்மொய்தீன் உயர்நிலைப்பள்ளியிலிருந்து அலைவரிசையொன்றை உருவாக்கி அதிராம்பட்டினத்திலிருப்போர்கள் கேட்கும்படியாக உரையாடல்களை ஒலிபரப்பியிருக்கிறார். இப்படியான ஆர்வத்தால் அவரது தொழிலும் தொலைக்காட்சிப் பெட்டிகளைப் பழுதுபார்க்கும் பணியாகவே அமைந்து, ஒரு குழுவை முன்னின்று நடத்துவது வரையில் அவரது பதவி உயர்வு நிகழ்ந்திருக்கிறது. இர...

மரணம் - ஒலிவடிவில் ஒரு கானா - போட்டிக்காக

அன்புடையீர், போட்டியில் பரிசு வாங்கவேண்டும் எண்ணம் யாருக்குதான் இருக்காது. அதனால், என்னால் இயன்ற அளவிற்கு வித்தியாசமாக எதையாவது படைத்து மக்களிடம் வாக்கு வாங்கவேண்டும் என்னும் எண்ணத்தில் ஒரு கானாவை எழுதினேன். கானாக்களைப் படிப்பதைவிட பாடச் சொல்லிக் கேட்பதில்தான் சுவை அதிகமாக இருக்கும் என்பதால், நானே பாடிப் பதிவு செய்து வலையேற்றியிருக்கிறேன். வலையேற்றியது ஜியோசிட்டீஸில்தான். அதனால், ஒருவேளை உங்களால் சரியாக அதனை இறக்க முடியாமற்போனால், விரும்பினீர்களென்றால், தனிமடல் ஒன்று அனுப்பினீர்களென்றால், கோப்பினை அனுப்பி வைக்கிறேன். இங்கிருந்தே கானாவைக் கேட்கமுடிந்ததென்றால் மிகவும் மகிழ்வேன். இப்போது கானாவிற்கு, இந்த கானாவிலிருக்கும் சில வார்த்தைப் பிரயோகங்கள் சமீபத்திய சென்னை வட்டார கானாக்களில் இல்லாமற்போகலாம். இது பழைய பாணி கானா. தயைகூர்ந்து முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தங்கசாலைப் பகுதியை நினைவுகூர்ந்துகொள்ளுங்கள். தங்கசாலை மணிக்கூண்டு, வள்ளலார் நகர் பேருந்து நிலையம், கிருஷ்ணா திரையரங்கம், அதனை ஒட்டிச் செல்லும் காட்பாடா சந்து, குதிரை லாயம், சந்தின் முடிவில் சுடுகாடு, இடது புறம் திரும்பி நடந்தா...

டோஸ்ட்மாஸ்டர்ஸ் பதவிக்காலமும் கொஞ்சம் தற்பெருமையும் :)

மாதத்தின் ஒவ்வொரு முதல் புதன்கிழமைகளிலும் / மூன்றாவது புதன் கிழமைகளிலும் ஒரு சந்திப்பு, ஒவ்வொரு சந்திப்பிலும் ஐந்து நிமிடம் தலைமை உரைக்கான வாய்ப்பு, விடுமுறை நாள்களான 30 + 10 இல் வருகின்ற தோராயமான மூன்று புதன்களைக் கழித்தால், ஆண்டுக்கு இருபத்தியொரு முறை மேடையேறுகின்ற வாய்ப்பு. ஒருமுறைக்கு ஐந்து நிமிடங்களென்றபோது, மொத்தமாக ஆண்டொன்றில் ஒருமணி நேரமும் நாற்பத்தைந்து நிமிடங்களும் மேடையில் பேசுகின்ற வாய்ப்பு யாருக்குக் கிடைக்கும். ஏதாவதொரு டோஸ்ட்மாஸ்டர்ஸ் குழுமத்தில் தலைவராக இருந்தால் கிடைக்கும். எனக்குக் கிடைத்தது. எனது தனித்திறனை வளர்த்துக்கொள்ளவும், ஆர்வம் இருப்போர்களைக் குழுவில் அங்கத்தினராக்கி அவர்களின் பேச்சுத்திறனை வளர்க்கவும் இந்தப் பதவி உதவியது. முப்பது உறுப்பினர்கள் கொண்ட சிறிய குழுமம்தான். வெவ்வேறு பணிகளில் வெவ்வேறு வேலைகளில் இருப்பவர்களாதலால், ஒவ்வொரு சந்திப்பின்போதும் இரண்டு வாரங்களில் அனுபவித்த ஒற்றைத்தொனியில் (monotone) கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டு, புத்துணர்ச்சி போன்ற ஒன்று கிடைக்கும். புத்துணர்ச்சி என்று சொல்லமாட்டேன், ஒற்றைத்தொனியை விலக்கிய ஒரு உணர்வு. சென்ற மாதம் 22ம்தேதி முதல...