Skip to main content

இந்தியச் சந்தைக்கு ஹார்லி டேவிட்சன் இருசக்கரம்

சென்னையில் வாகனம் குறித்த பேச்ச்சைத் துவங்கினாலே உடன் வரும் இன்னொரு கேள்வி, 'மைலேஜ் என்ன?'. இப்போதைக்கு அதிகமாகப் புழங்கும் இருசக்கரங்கள் லிட்டருக்கு 45கி.மீ. முதல் 60கி.மீ. வரையில் தருகின்றன. தயாரிப்பு, சி.சி., வண்டியின் பராமரிப்பு, நகருக்குள் ஓட்டுவது, நெடுஞ்சாலையில் ஓட்டுவது இன்ன பிற காரணிகளால் இது மாறுபடும்.

இருசக்கரங்களில் மைலேஜ் மட்டுமே பயனரின் குறிக்கொள் அல்ல என்பதற்கு உதாரணமாக ஆக்டிவா இருக்கிறது. 35கி.மீ. முதல் 40கி.மீ வரைதான் கிடைக்கும். வேரியோமேட்டிக் கியரில் சுசுகி அக்ஸஸின் மைலேஜ் குறித்து தகவல்களை இன்னும் சரிபார்த்துக்கொள்ளவில்லை.

லிட்டருக்கு 35கி.மீ. தரும் ராயல் என்ஃபீல்டும் பல ரசிகர்களைக் கொண்டிருக்கிறது.

பெட்ரோல் குடிக்கும் சூப்பர் பைக் வகையறாக்களில் தலையாய கரீஸ்மாவும் நாடறிந்த பயனர் சிலம்பரசனைக் கொண்டிருக்கிறது.

ஒரு பக்கம் மைலேஜைக் கேட்டு, சி.சி.யைப் பார்த்து, பராமரிப்புச் செலவைப் பார்த்து என்னைப்போன்ற நடுத்தரவர்க்கத்தினர் இருசக்கரத்தைத் தேர்ந்தெடுத்தாலும், இன்னொரு பக்கம் மைலேஜ் குறித்து கவலையேபடாத பயனர்களும் இருக்கிறார்கள்.

அப்படி மைலேஜ் குறித்து கவலைப்படாத மேட்டுக்குடி இருசக்கர ரசிகர்களுக்கு இன்றைய செய்தி இனித்திருக்கலாம். ஹார்லி டேவிட்சன் இருசக்கர நிறுவனத்தார் இந்தியாவுக்கு வரப்போகிறார்களாம்.

http://economictimes.indiatimes.com/articleshowpics/4941910.cms

விலைப்பட்டியல் எப்படி இருக்கும், என்னென்ன மாடல்களை இந்தியச் சந்தைக்கு விடப்போகின்றார்கள் போன்ற விவரங்களெல்லாம் இன்னும்சில நாள்களில் தெரியவரலாம்.

இறக்குமதிக்கான வரியைத் தவிர வேறெந்த உள்ளூர் வரிகளும் இல்லாத அமீரகத்தில் ஹார்லி டேவிட்சனில் ஆகக்குறைந்த விலையுள்ள வண்டியென்றால் அவர்களுடைய ஸ்டாண்டர்டைச் சொல்லலாம். அதன் விலை 31500திர்ஹம்கள். கிட்டத்தட்ட நான்கு லட்சம் இந்திய ரூபாய்கள். நமது புல்லட்டின் 350சி.சி.க்கு இருமடங்கிற்கு மேல், இது 883சி.சி. மைலேஜ் என்று பர்த்தால் 20கி.மீ. முதல் 25கி.மீ. வரையில் இருக்கக்கூடும். இது பேஸிக் மாடலுக்குதான். ஹார்லியின் எனக்குப் பிடித்த ஸாஃப்டெய்ல் கஸ்டம்ஸின் விலை 71500 திர்ஹம்கள், கிட்டத்தட்ட 9 லட்சம் இந்திய ரூபாய்கள்.

இந்தியச் சந்தை குறித்து ஒன்றும் கணிக்க இயலாது. அமீரகத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் ஹுயுண்டாய் அக்ஸெண்டும், மிட்சுபிஷி லான்சரும் இந்தியாவில் அமீரக விலையை விடவும் அதிகம். இது இருசக்கரங்களில் பல்சருக்கும் பொருந்தும்.

ஹார்லி டேவிட்சனார்கள் இந்தியச் சந்தைக்காக எந்த சமரசமும் செய்துகொள்ளாமல் விலயை நிர்ணயித்தார்களென்றால் அவர்களுடைய ஸ்டாண்டர்ட்டின் விலை ஐந்து லட்சங்கள் வரையில் செல்ல வாய்ப்பு இருக்கிறது. விலைக்கொள்கையில் இந்தியச் சந்தைக்காக டேவிட்சனார்கள் சமரசம் செய்துகொண்டார்களென்றால் இது கொஞ்சம் குறையலாம். ஆனால், ஹுயுண்டாய், லான்சர், டொயோட்டா இவர்களைப் பார்க்கையில் நான்கு சக்கரங்களில் இந்தியச் சந்தைக்காக விலைக்கொள்கையில் சமரசங்கள் ஏதுமில்லை. டேவிட்சனார்களும் அப்படியே இந்தியாவில் இயங்கும் வாய்ப்புகள் ஏராளம்.

இன்றைய நட்சத்திரம் புல்லட் நமக்கு ஒருலட்சத்துக்கும் மேலாகிறது. அதனினும் ஐந்து மடங்கு அதிக விலைக்கு தனது ஆககுறைந்த மாடலை ஒரு இருசக்கர நிறுவனம் இந்தியாவில் வெளியிடத் துணிகிறது. மேலான மாடல்களின் விலை அமீரகத்தில் 155000திர்ஹம்கள், கிட்டத்தட்ட 20லட்சம் இந்திய ரூபாய்கள். ஆக, ஐந்து லட்சத்தில் துவக்கி இருபது லட்சம் வரையில் விலை நிர்ணயமாகப்போகும் இருசக்கர வாகனம் இந்தியச் சந்தைக்குள் நுழையவிருக்கிறது.

ஹார்லியின் இந்திய விலைப்பட்டியலுக்காகக் காத்திருக்கிறேன், வாங்குவதற்கு அல்ல; பெருமூச்சு விடுவதற்கு.

Comments

Unknown said…
வாங்க, HDஐப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டே ராயல் என்ஃபீல்டிலாவது போகலாம் :-)
//ஹார்லியின் இந்திய விலைப்பட்டியலுக்காகக் காத்திருக்கிறேன், வாங்குவதற்கு அல்ல; பெருமூச்சு விடுவதற்கு//

அடிக்கடி அவர்கள் வலைபக்கம் போய் லேட்டஸ் மாடல் வண்டிகளை பார்த்து பார்த்து உங்களை போல் பெருமூச்சு விடும் பக்கத்து தெரு வாசி!
எனக்கு பிடித்த மாடல் FAT BOY

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...