Skip to main content

அமீரக வலைப்பதிவர் சந்திப்பு (28.8.09)

பணிநிமித்தமாக ஷார்ஜாவுக்கு பலமுறை சென்று வந்திருந்தபோதும், எனது வண்டியை எடுத்துக்கொண்டு ஷார்ஜாவுக்குள் செல்வது இது இரண்டாவது முறை. இரண்டாவது முறையும் நண்பர் ஆசிபின் வீட்டிற்குச் செல்லவேண்டிதான் ஷார்ஜா விஜயம். ஓராண்டுகால வாகனயோகம் ஷார்ஜா நுழைவிற்கு ஏனோ அதிக வாய்ப்பளிக்கவில்லை. உம்-அல்-குவைன், அஜ்மான் என்று பரவிக்கிடக்கும் நண்பர்களின் வீட்டிற்குச் செல்லும்பொழுதெல்லாம், ஷார்ஜாவுக்குள் நுழைந்து வெளியேறி அடுத்த நகருக்குள் நுழையத்தான் வாய்ப்பு கிடைத்திருக்கிறதே தவிர, உள்ளே நுழைந்து ஒவ்வொரு ரவுண்டாணாவாகச் சுற்றி நகரின் நீள அகலங்களில் கவனம் செலுத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

எனது வண்டியில் முதன்முறை ஆசிபின் வீட்டிற்குச் செல்லும்போது எந்தக் குழப்பமும் இல்லாமல் சென்றேன். நேற்று சென்றபோது மிகவும் குழப்பிவிட்டது. துபாயிலிருந்து அல்கான் பகுதி வரையில் சரியாகச் சென்று அல்கானில் ஒரு ரவுண்டாணாவைத் தவற விட்டதால், எங்கெங்கோ சுற்றி ஒருவழியாக இடத்தைப் பிடித்தோம்.

திரும்பும்போதும் ஒரு நேர்வழியைத் தேர்ந்தெடுத்து சென்றுகொண்டிருக்கையில் திடீரென்று சந்தேகம் வந்து இடையில் நிறுத்தி நண்பர் சுபைரை இறங்கி வழிகேட்கச் சொல்லி சரியான பாதையைப் பிடித்து வந்தாகிவிட்டது. ஷார்ஜாவில் இருக்கும் நண்பர்களுக்கு அவர்களுடைய பாதையெல்லாம் கரதலப் பாடமாக இருக்கும். துபாய்வாசிகளை, அதிலும் என்னைப்போன்ற 'தேரா' வணிகவீதிவாசிகளை ஷார்ஜா குழப்பத்தான் செய்யும். அதிலும், 'என்ன இது இன்னுமா துபாயை அடையவில்லை' என்று தொலைபேசியில் சிலர் கேட்கும்போது இந்த சின்னச்சின்ன ரவுண்டாணாக்களைத் தாண்டி அனாயாசமாக துபாய் செல்லும் திறனை எப்படியாகினும் பெற்றே தீரவேண்டும். இனி வியாழன் வெள்ளி நாள்களில் ஷார்ஜாவிற்குள் கொஞ்சம் சுற்ற வேண்டும் என்பது மயான / பிரசவ வைராக்கியம் போலவே மனதிற்குள் எழுந்தது.

இது அந்நேரத்திய வைராக்கியமா இல்லை அடிக்கடி சென்று ஷார்ஜாவிலும் வண்டி ஓட்டிப் பழகப்போகிறேனா என்பது தெரியாது. உட்பாதைகள் பழகும் வரையில் அது உபாதையாகத்தான் இருக்கும்.

அமீரகம் அதிகமான வலைப்பதிவர்களைக் கொண்டிருகிறது. இஸ்மத் பாயின் பதிவில் இருக்கும் முப்பதுக்கும் மேற்பட்டவர்களின் பெயர்ப் பட்டியல் இதற்குச் சான்று. புதிதாக வருவோர் தவிர அனைவரிடமும் எனக்கு அறிமுகம் உண்டாகியிருக்கிறது. கேலியும் கிண்டலுமாக இளைஞர்கள் அரட்டை அடிக்கையில் தப்பித்தவறி நாமும் எதையாவது சொன்னால், 'பாய், நீங்களுமா' என குசும்பன் சரவணன் கேட்கிறார். தலைநரைக்கிரீடம் என்பது வண்ணம் பூசுவதால் மட்டும் நிறம் மாறிவிடுவதில்லை. மரியாதைகளும் சில நேரங்களில் தூரத்தைத் தருகின்றன.

அமீரகத்தில் எந்தக் கூட்டமென்றாலும் நன்பர் ஆசிப் நடுநாயகம் என்பதை அனுபவபூர்வமாக உணர்கிரேன். தமிழ் மன்றப் பணிகள், வானொலி, வலைப்பதிவர் கூட்டங்கள் இவற்றில் அதிகம் புழங்குவதாலும் இயல்பாக வாய்த்திருக்கும் நல்ல தமிழ் உரையாடலும் அவருக்கு அந்த இடத்தைத் தந்திருக்கின்றன. நேற்றைய வலைப்பதிவர் இஃப்தார் சந்திப்பிலும் ஆசிப் நடுநாயகம். சிங்கை வலைப்பதிவரின் மருத்துவச் செலவில் அமீரகப் பதிவர்களும், நண்பர்களும் பங்கேற்ற விவரத்திலிருந்து துவங்கி, வழமையான உரையாடல்களுக்கு விரைந்தோம். சின்னச்சின்ன வட்டங்களில் அவரவர் உரையாடலில் ஈடுபட்டது நிகழ்வின் முடிவிற்குப் பின்னரே நடந்தது. வழமைபோலவே புத்தக அலமாரியை சுத்தப்படுத்தும் பணியில் இரண்டொரு பதிவர்கள் இருந்தார்கள்.

பழைய நண்பர்கள் 'பினாத்தல்' சுரேஷ், 'நண்பன்' ஷாஜி, முத்துக்குமரன் இவர்களையும் நேற்று சந்தித்ததில் மகிழ்ச்சி.

புகைக்கும் பதிவர்கள் இடையிடையே ஓய்வெடுக்க கீழே செல்வதும் வருவதுமாக இருந்தோம். ஒரு புகை இடைவெளியில் கற்றது தமிழ் தொடர்பானவையும், இன்னொரு புகை இடைவெளியில் ஈழம் தொடர்பானவையும் உரையாடல்களில் அதிகமாக வந்து போயின. இடைவெளி நேரம் தவிர்த்து கூடத்துள் இருந்தபோதெல்லாம் பாதி உரையாடலும் மீதி வெடிச்சிரிப்புகளுமாகத்தான்.

சுந்தரின் விருந்தோம்பல் சிறப்பு. எப்பொழுதும் வடை எடுத்துவரும் அவர், நேற்று பழங்களும் பனிக்குழைவும் எடுத்து வந்திருந்தார். விளையாட்டிற்காக 'சுந்தர்ஜி வடை ஏன் இவ்ளோ லேட்டு' என்று கேட்டாலும், மிகவும் பொறுப்பாக பழங்களை நறுக்கித் துண்டுகளாக்கி முப்பது பேர் சாப்பிடுமளவிற்கான பாத்திரத்தில் போட்டு எடுத்து வந்திருந்ததும், நாங்கள் மாலைத் தொழுகைக்கு நின்றிருந்தபோது அதனைப் படம் எடுத்துக்கொண்டதும், தான் மட்டுமல்லாமல் மனைவி, மாமியார், குழந்தை என எல்லாரையும் அழைத்துவந்து இஃப்தார் விருந்தில் கலந்துகொண்டதும் அவர் மேல் வைத்திருக்கும் மதிப்பை இன்னமும் கூட்டுகின்றன.

'இண்டியா கேட் லாங்க் க்ரெய்ன் பாசுமதி' அரிசியில் செய்யப்பட்ட பிரியாணிக்கு நான் என்றுமே ரசிகன். நான் விழுங்கும் Aztor 10 மாத்திரையானது பிரியாணி நாள்களில் இரைப்பைக்குள் கொழுப்பைக் குறைக்க முடியாமல் திணறும் என்பது தெரிந்திருந்தும் எங்கள் திருவல்லிக்கேணியின் வாசம் பிரியாணியில் வீசினால் அதிகமாக இட்கொள்கிறேன். நேற்று கீழை ராஜா அவர்கள் ஏற்பாடு செய்திருந்த சமையல்காரர்கள் திருவல்லிக்கேணிக்காரர்கள். கூடத்தில் நுழைந்ததுமே யார் சமையல் என்றதற்கு அவர் பெயரைச் சொன்னார்கள். 'அடடா இன்று கொழுப்பு கூடப்போகிறதே' என்று வருந்திக்கொண்டேன்.

இன்னமும் நாவைக் கட்டுப்படுத்தாமல் இப்படி சாப்பாட்டு ரசிகனாக இருப்பதால் என்ன பயன் என அடிக்கடி அறிவு விழித்துக்கொள்கிறது. தெரிந்தே இப்படித் தவறுகள் செய்வது இன்னும் எத்தனை நாள்களுக்குத் தொடருமோ? நேற்றைய தவறின் பொறுப்பு நண்பர் கீழை ராசாவையே சாரும். நல்லவேளையாக வெள்ளரியும் வெங்காயப் பச்சடியும் வைத்திருந்தார்கள். அதனைக் கூட்டிவிட்டு ஓரளவிற்கு பிரியாணியின் வியாபிப்பைக் குறைக்க முடிந்தது.

இஃதார் சந்திப்பென்பதால் பெரும்பகுதியான் நேரம் நோன்பு திறப்பதற்குக் காத்திருப்பதிலும், சில நிமிடங்கள் தொழுகையிலும் கடந்துவிட உரையாடலுக்கு நேரமிருக்காதென நினைத்தேன், ஆனால், தொழுகைக்குப் பின் நீண்ட நேரம் நடந்த அரட்டைக் கச்சேரி எனது கணிப்பைத் தவறாக்கியது. வழமையிலிருந்து மாறுபட்ட இன்னொரு வழமை என்பதைவிடவும், வலைப்பதிவு, மடலாற்குழுமங்கள் இவை இரண்டை மட்டுமே நடுவாகக்கொண்டு நண்பர்கள் கூடுவதும் உரையாடுவதும் என்பது அலுவலகம், உறவினர், ஊர்க்காரர், இப்படியான வட்டத்திற்கும் வெளியே இன்னொரு வட்டமாக அமைந்துவிட்டது. எனது உறவினர்களோ, ஊர்க்காரர்களோ, அலுவலகத்தினரோ யாரும் இந்தப் பதிவர் வட்டத்தில் இல்லை.

அப்படி இல்லாமல் இருப்பதால் பதிவில் பகிர்வது தவிர்த்து நமது மற்றெந்த முகமும் முன்னே தெரிவதில்லை.

Comments

அண்ணே...ஆசாத்...நேற்றை விட இப்போ நல்லா கலக்கிட்டீங்க....
சந்திப்புகள் தொடர வாழ்த்துக்கள்.
நான் இப்பதான் தமி்ழ் எழுத துவங்கி உள்ளேன்.
அருமையாக எழுதிவிட்டீர்கள் அண்ணாச்சி.. உங்கள் தமிழை படிக்கும்போதே ஆசையாக இருக்கிறது! உங்களையும் நம் நண்பர்களையும் இஃப்தார் நிகழ்ச்சியில் சந்தித்ததில் மகிழ்ச்சி...

என்னை ரூம் வரையில் டிராப் செய்ததற்க்கு ஸ்பெஷல் நன்றி அண்ணே!!
அருமை அப்பிடியே நிகழ்வினை படம் பிடித்து காட்டியது போல் உள்ளது. இது போன்ற் ஒரு சந்திப்பின் மூலம் தங்களைப் போன்ற மூத்த பதிவர்களை காணும் வாய்ப்பு கிடைத்ததற்கு அண்ணன் ஆசிப் மீரான் அவர்களுக்கும், நண்பர் கீழைராசா அவர்களுக்கும் நன்றி...
அன்புடன்
சிம்மபாரதி
அருமையானதொரு சந்திப்பின் அழகானதொரு பகிர்வு :)

//பாய், நீங்களுமா' என குசும்பன் சரவணன் கேட்கிறார். தலைநரைக்கிரீடம் என்பது வண்ணம் பூசுவதால் மட்டும் நிறம் மாறிவிடுவதில்லை. மரியாதைகளும் சில நேரங்களில் தூரத்தைத் தருகின்றன.//

அதிருக்கட்டும்!

அவர் இன்னுமா யூத்தாகவே இருக்கிறார் :)))))
//எனது வண்டியில் முதன்முறை ஆசிபின் வீட்டிற்குச் செல்லும்போது எந்தக் குழப்பமும் இல்லாமல் சென்றேன்.//

இந்த முறை குழப்பம் கூடவே ஏழரைய கூட்டிக்கிட்டு வந்ததால் இருக்கும் பாய்:))

// தலைநரைக்கிரீடம் என்பது வண்ணம் பூசுவதால் மட்டும் நிறம் மாறிவிடுவதில்லை.//

என்னது???உங்களுக்கு தலைமுடி நரைத்துவிட்டதா? பொய் சொல்லாதீங்க பாய் சும்மா பித்த நரையாக இருக்கும்:) இனி நீங்க யூத்துதான் இனி நான் அப்படி கேட்கமாட்டேன்:)
உங்களெஐ சந்திக்க விறும்புகிறேன்.

புதுகை அப்துல் கலாம்
ஆசாத் அண்ணே..நீங்க தான் சரியாக சாப்பிட வில்லையே? பிறகு ஏன் என் மீது பழி..?

அருமையான பதிவு...நல்ல தமிழ் வார்த்தை பிரயோகம்...தொடருங்கள் தோழரே...
அமீரக வலைப்பதிவர் சந்திப்பு நடைப்பெறும் பேது நனும் கலந்து கொள்ள விரும்புகிறேன்