Skip to main content

அரவிந்த் அடிகாவின் தி ஒயிட் டைகர் - எனது பார்வையில்

கதையை முன்னமே அறிந்திருந்தாலும் இந்த நாவலைப் படிப்போர்க்கு ஆர்வமின்மை உண்டாகாது, ஏனென்றால், நாவலின் துவக்கத்திலேயே கதையை நாயகனே சொல்லிவிடுகின்றான். 'எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்' எனச் சொல்லிய பின்னரே கதை துவங்குகின்றது. அதனால், நானும் இங்கே கதையைச் சொல்வதால் எந்த நட்டமும் கிடையாது. ஒரு கிராமத்தான் நகரத்திற்கு வந்து வெல்கிறான், இதுதான் கதை.

இந்தக் கதையை இந்தியாவுக்கு வரவிருக்கும் சீனப் பிரதமருக்கு எழுதும் கடிதமாக நாவலை நகர்த்திச் செல்கிறார், அரவிந் அடிகா. இந்த நாவலைப் படித்து முடித்ததும் தீவாருக்குப் பிறகு வந்த ஓரிரு அமிதாப் படங்களைப் பார்த்தது போலத்தான் இருந்தது. ஆங்கில வாசிப்பில் எனக்கு இருக்கும் அனுபவக் குறைவால் இப்படிப்பட்ட குறுகிய மனப்பான்மையுடன் இதனை அணுகுகின்றேனோ என்று என்னையே கேட்டுக்கொண்டு பிறகு ஆற அமர யோசித்துப் பார்த்து தெளிந்தேன். அப்படி அல்ல, நாவலே அந்த வகைதான் என்பது புரிந்தது.

முக்கத்தர் கா சிக்கந்தரில் இடுகாட்டில் அமர்ந்திருக்கும் முஸ்லீம் பாபாவிடம் பேசும்போது அங்கே அமிதாபுக்கு ஞானோதயம் கிடைப்பதாகக் காட்சியமைப்பு. அரவிந்த அடிகாவின் 'தி ஒயிட் டைகரி'லும் நாயகன் பழைய புத்தகக் கடை வைத்திருக்கும் ஒரு முஸ்லிம் பெரியவரிடம் உருதுக் கவிதையின் விளக்கத்தைக் கேட்கும்போது பொறி போடப்படுகிறது. இந்தித் திரையில் 'தலைவிதி உந்தன் காலடியில்' என்பது பாபாவின் வாசகமாக இருந்தது, இந்தப் புத்தகத்தில், 'சாவியைத் தேடுகிறாய்; கதவு திறந்தே இருக்கிறது' என்பது புத்தகக் கடைக்காரரின் வாசகமாக இருக்கிறது.

வணிகப் படங்களில்தான் ஞானோதயம் கொடுக்க முஸ்லிம் பெரியவர்களைக் காட்டுகிறார்களென்றால் நாவலிலுமா? நாயகனில் பாலகுமாரனும் இதில் விதிவிலக்கு கிடையாது, 'நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா....' இத்தியாதிகள்.

தீவார் திரைப்படத்தில் ஒரு சிறுவன் காலணிகளை சுத்தமாக்கி பணம் சம்பாதிப்பான். அவனிடம் காலணியை சுத்தமாக்கிக்கொள்ளும் கடத்தல்காரர் ஒருரூபாய் நாணயத்தை வீசியடிக்க, கோபத்துடன் சிறுவன் எழுந்து 'அந்த நாணயம் எனது உழைப்பிற்கான கூலி அதனைக் கையில் கொடுங்கள்' என சண்டைபோடுவான். கடத்தல்காரரும் சிறுவனின் பேச்சுக்குப் பணிந்து காசைக் கையில் கொடுத்துவிட்டு 'இந்தச் சிறுவன் மிகப்பெரிய ஆளாக வருவான்' என்கிறார். சிறுவன் வளர்ந்து அமிதாப்பச்சனாகி பெரிய கடத்தல் மன்னனாகி...இதே மசாலா காட்சி அரவிந்த் அடிகாவின் புத்தகத்தில் இருக்கிறது.

கிராமத்துச் சிறுவர்களிடம் இல்லாத கூர்மை நாயகனிடம் இருப்பதால் அவன் மிகப் பெரிய ஆளாக வருவான் என்று அவனது பள்ளி ஆசிரியர் அவனிடம் சொல்கிறார், அங்கேதான் அந்த ஒயிட் டைகர் என்னும் பட்டத்திற்கான தோற்றுவாய். அவனும் பெரிய ஆளாகின்றான்.

இந்த இரண்டு காட்சிகளும் நாவலை முடித்த பின் நினைவுக்கு வர, பின்னர் இலவச இணைப்பாக சஞ்சய் தத்தின் பிதா, பண்டார்க்கரின் பேஜ்-3, ஒருசில மொழிமாற்ற தெலுங்குப் படங்களெல்லாம் நினைவுக்கு வந்து போயின.

தினமும் அதே வாழ்வைச் சந்தித்து, அதன் ஒரு சில பிரதிபலிப்புகளை திரையில் பார்த்துக்கொண்டிருக்கும் சராசரி இந்தியனை இந்த நாவல் ஈர்க்காது, மேலும், கொஞ்சமேயான வாசிப்பனுபவமும், கொஞ்சமேயான சென்னை வாழ்க்கை அனுபவமும் பெற்றிருப்போருக்கும் இந்த நாவலின் கதைக்களன், மொழி, வருணனை எல்லாம் மேம்போக்காக இருப்பதாகவும், அரவிந்த் அடிகா உட்டாலக்டி அடித்து வைத்திருப்பதாகவும் தோன்றும்.

சென்னைத் தெருக்களில் அடிதடியில் ஈடுபட்டு, அரசியலில் நுழைந்து, பெரிய தொழிலதிபராகியிருக்கும் சிலரின் கதைகளைக் கேட்ட நமக்கு அடிகாவிடம் படிக்க ஏதுமில்லை. வில்லங்க நிலச்சொத்துகளை ஆணையரின் உதவியுடன் மடக்கிப் போட்டுக்கொள்ளும் பெருந்தனக்காரர்களின் கதைகளைக் கேட்டிருக்கும் நமக்கு ஒயிட் டைகரின் கதாபாத்திரங்கள் அத்தனை ஆழமாகத் தோன்றாது. இதற்கான காரணம் அவரது விவரிப்பில் இருக்கும் மேம்போக்கு.

தினசரி நாம் காணும் உண்மை நபர்கள் நாவலில் உலாவரும்போது நம்மை வியப்பில் ஆழ்த்தி பாத்திரத்தின் பெயரைச் சொன்னாலே சிலிர்க்கும் கதாபாத்திரங்கள் தமிழில் இருக்கின்றன. அவை அனைத்துமே நாவலாசிரியர்கள் செதுக்கி வைத்த பாத்திரங்கள். அவர்களுடைய ஒவ்வொரு உணர்வுக்குள்ளும் சென்று அக்குவேறு ஆணிவேராகப் பிரித்து வாசகனுடன் ஐக்கியமாகும் தன்மையில் கதாபாத்திரங்கள் உலவினாலே ரசிக்க முடிகின்றது. ஒயிட் டைகரில் நாயகனாக வரும் பல்ராம் ஹல்வாயியின் உணர்வுகள் ஏகப்பட்ட ஏரண ஓட்டைகளுடன் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் திரிந்து கொலை செய்வதற்கான காரணமும் ஆழமாக சித்தரிக்கப்படாமல், புசுக்கெனப் போனதாக எனக்குத் தோன்றுகிறது.

கதைச்சுருக்கத்திற்கு வருகின்றேன்.

முன்னா என்னும் பல்ராம் ஹல்வாயியின் தாயாரின் தகனத்தின் விவரிப்புகளில் மெதுவாகக் கதை துவங்குகின்றது. பள்ளியில்தான் அவனுக்கு பல்ராம் எனப் பெயர் கிடைக்கிறது. 'கணக்கிலடங்காத இந்துக் கடவுள்களையும், கிறித்துவர்களின் திரித்துவத்தையும், முஸ்லிம்களின் அல்லாஹ்வையும் சேர்த்து இந்தியர்களுக்கு துணைக்கிருக்க மூன்றுகோடியே அறுபது லட்சத்து நான்கு கடவுள்கள்' என்னும் எள்ளலோடு ஆரம்பிக்கும் தாக்குதல் நாவல் முழுக்கத் தொடர்கிறது.

பள்ளியில் படிக்கும் பல்ராம் படிப்பை பாதியில்விட்டு உள்ளூர் தேநீர்க்கடையில் மேசை துடைக்கிறான். வீட்டாரிடம் கெஞ்சிக்கூத்தாடி ஒரு ஓட்டுனரிடம் சேர்ந்து வண்டியோட்டப் பழகிகுறான். இடையில் ரிக்ஷாக்காரரான தந்தையார் காசநோயால் மருத்துவமனையில் கவனிப்பாரற்று இறக்கிறார். மருத்துவமனை ஊழல்கள் குறித்து மேம்போக்கான சித்தரிப்புகள்.

ஓட்டுனரானதும் உள்ளூர் பண்ணையார் வீட்டில் வேலைக்கு சேர்கின்றான். அங்கே, இந்து என்று பொய்சொல்லி ஓட்டுனராக வேலைபார்த்துகொண்டிருக்கும் முஸ்லிம் ஓட்டுனர் ஒருவரை வேலையிலிருந்து தூக்குகின்றான். இவனுக்கு பதவி உயர்வு கிடைக்கின்றது. தில்லி பயணத்தின்போது பண்ணையாரின் மகனுக்கு ஓட்டுனராக தில்லிக்குச் செல்கிறான். தில்லியிலேயே, பண்ணையாரின் மகனுடன் தங்கி அவர்களுக்கு ஓட்டுனராக இருக்கிறான்.

நகரவாழ்க்கையின் ஒழுங்கீனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பல்ராமைப் பிடிக்கத் துவங்குகின்றன. ஒரு மழைநாளில் பண்ணையாரின் மகனைக் கொன்றுவிட்டு பணத்துடன் தப்பித்துவிடுகின்றான். மும்பை சென்றால் மாட்டிக்கொள்வோம் எனும் எண்ணத்தால் பெங்களூருவுக்குச் செல்கிறான். அங்கே ஏராளமாகப் பரவிக்கிடக்கும் பி.பி.ஓ. நிறுவனங்களுக்கு வண்டியோட்டத்துவங்கி தொழில் பெருகி பெரிய முதலாளி ஆகின்றான். அவ்வளவுதான்.

இதில் ஈர்ப்பு ஏற்படமால் போனதற்கு மிக முக்கியமான காரணம். ஏகப்பட்ட அளவில் நாவலில் விரவிக்கிடக்கும் ஏரண ஓட்டைகள். ஏனோ தானோவென நிகழ்வுகளை அமைத்திருப்பது பொரித்தெடுக்கிறது. பல்ராமை வேலைக்குச் சேர்க்கும்போது பண்ணையார் மிகத் தெளிவாக பல்ராமின் குடும்பப் பின்னனியை விசாரித்துக்கொள்வதாகவும் மிகக் குறிப்பாக பல்ராமின் சாதியைக் கேட்டுத் தெரிந்துகொள்வதகாவும் சித்தரிப்பு வருகின்றது. அப்ப்டியிருக்கையில் பல்ராமிற்கு முன்னர் பண்ணையாரின் வீட்டில் ஓட்டுனராக இருக்கும் முஸ்லிம் எப்படி பண்ணையார் கண்ணில் மண்ணைத் தூவி வேலைக்குச் சேர்ந்து நம்பிக்கைக்குப் பாத்திரமானார். அதுவும், அத்தனை வருடங்களாக ரமதான் மாதத்தில் நோன்பு நோற்காமல் பல்ராம் வேலைக்குச் சேர்ந்ததும்தான் நோன்பு நோற்று பள்ளிவாசலுக்குச் சென்று பல்ராமிடம் மாட்டிக்கொண்டாரா?

பண்ணையாரின் மகன்களில் பல்ராம் போட்டுத்தள்ளியிருக்கவேண்டுமென்றால் கொடுமைக்கார மகனைத்தான் போட்டுத் தள்ளியிருக்கவேண்டும். அவன் மீதுதான் இவனுக்கு வெறுப்பு உண்டாகின்றது. அவனை விடுத்து அமெரிக்காவிலிருந்து வந்து இந்தியாவில் இருக்கும் ஊழல் பெருச்சாளிகளைப் பிடிக்காமல் பண்ணையார் சொல்கிறாரே என்பதற்காக தில்லியில் இடைத் தரகர்களுடன் சுற்றும் நல்ல பிள்ளையைப் போட்டுத்தள்ளுவது பெரிய சறுக்கல். அந்தக் கொடூரமான காட்சிக்கான வித்து பல்ராமின் மனதில் ஊன்றப்படுவதான சித்தரிப்பே கிடையாது.

நாடறிந்த கொலைகாரனாக ரயில் நிலையங்களிலெல்லாம் புகைப்படம் ஒட்டப்பட்டு காவல்துறையால் தில்லியில் தேடப்பட்டுவரும் ஒரு குற்றவாளி, பெங்களூருக்குச் சென்று விடுதியில் ஆறேழு வாரங்கள் தங்கியிருந்து பின்னர் தைரியமாக காவல்துறை உதவி ஆய்வாளரிடம் நேரிடையாகவே சென்று பேரம் பேசி வண்டியோட்டும் தொழிலைத் தொடங்க முடியுமா? ஓட்டுனர் உரிமத்தில் இருக்கும் முகவரியை யாரும் பார்த்தே இருக்கமாட்டார்கள், வண்டி வாங்குவதற்காக நிரந்தர முகவரி தந்தது லஷ்மண்கட்(ர்) முகவரியென்றால் அதனை காவலர்கள் உருதிப்படுத்திக்கொள்ளவே மாட்டார்கள். தில்லி காவல்துறையால் தேடப்பட்டு வரும் கொலையாளி பகிரங்கமாக கர்நாடக காவல்துறையின் ஊழல் நடவடிக்கைகளால் பகிரங்கமாக 'கால் டாக்சி, பிக் அப் - ட்ராப்' தொழிலைத் தொடங்க முடியுமா? புரைக்கேறும் மசாலா நெடி கொண்டிருக்கும் தெலுங்குப் படங்களில்கூட இப்படிப்பட்ட ஏரண ஓட்டைகள் இருக்காதென்பது எனது எண்ணம்.

நான்கு கவிஞர்களை பல்ராமுக்கு மிகவும் பிடிப்பதான விவரிப்புகள். ஜலாலுத்தீன் ரூமி, அல்லாமா இக்பால், மீர்சா காலிப். அந்த நான்காவது கவிஞர் யாரென்பது பல்ராமுக்கு நினைவுக்கு வரவே இல்லை, கடைசி வரையில். கவிஞர்களைப் பற்ரிக் குரிப்பிடும்போது சீனப் பிரதருக்கான கடிதத்தில் பல்ராம் கேட்கிறார், 'எப்படிப்பட்ட விதி பார்த்தீர்களா? இந்திய முஸ்லிம்களில் அதிகமானோர் படிப்பரிவில்லாமல் இருக்கிறார்கள். ஆனால், அவர்களிடமிருந்துதான் அற்புதமான கவிஞர்கள் பிறந்திருக்கிறார்கள்'. இது குத்தலோ, உண்மையோ. இப்படித்தான் நாவல் முழுக்க பல குத்தல்கள். பேருந்து நடத்துனர் ஒருவர் பண்ணையாரின் தயவால் தில்லியில் மிகப் பெரிய ஆளாக ஆகும் நிகழ்வு ஒன்றும் இருக்கிறது. அவர் பெரிய மனிதராகும் பாதையில் நடிகராவதான சித்தரிப்பு இல்லை. ஓட்டுனரில் இருந்து நேரிடையாக அரசியலில் குதிக்கிறார்.

கதைக்களன் நடப்பது, லஷ்மண்கர், தண்ட்பாத், தில்லி, பெங்களூரு என்பதால் திரைத்துறை சார்ந்த நடவடிக்கைகள் எதுவுமே நாவலில் இல்லை. இந்தியாவில் நடக்கும் பல ஊழல்களை, மக்களாட்சி கேலிக்கூத்துகளை, அரசியல் இடைத் தரகர்களை, அதிவிலை வணிக வளாகங்களை, வாடகைப் பெண்களை, ஓட்டுனர்களை, சிறுவர்களை பாலியலுக்கு உட்படுத்துவோர்களை, மருத்துவமனை ஊழல்களை, பள்ளிக்கூட ஊழல்களை, முதலாளியம்மாக்களின் ஆடைக் குறைப்பை, ஐந்து நட்சத்திர விடுதி விலைமாதர்களை என எங்கெங்கோ தொட்டு இந்தியா முழுக்க நல்லவைகளே கிடையாது என்பதை நிரூபிப்பதையே தனது நாவலின் மையமாகக் கொண்டு (இதைத் தவறாகச் சொல்லவில்லை) நகர்த்திச் செல்லும் அரவிந்த் அடிகா, எந்த இடத்திலும் இந்த அரசியல்வாதிகளுக்குத் துணைபோகும் பத்திரிகைத் துறை குறித்தோ, இந்தியர்கள் மயங்கும் இன்னொரு மாபெரும் துறையான திரைத்துறை குறித்தோ எங்கும் தவறாகப் பேசவில்லை. குடித்துவிட்டு வண்டியோட்டி சாலையோர ஏதிலிகளின் மேல் வண்டியேற்றிக் கொன்றுவிட்டு நிற்காமல் செல்லும் சித்தரிப்பு அந்த நடிகரின் வழக்கை நினைத்துப் பார்க்க வைத்தது. வேறெதுவும் மருத்துக்குக்கூட திரையை நினைவுபடுத்தவில்லை.

மொத்தத்தில் இந்தியா குறித்து எள்ளி நகையாடும் இன்னொரு படைப்பு, வேறு எதுவும் இதில் கிடையாது. சல்தாஹை!

இது உண்டாக்கிய ஏமாற்றத்தால் கொஞ்சம் மூளையைக் கழட்டிவைத்து ஓய்வெடுப்பதற்காக முதல் நாள் நள்ளிரவுக்காட்சி ஆ தேக்கேன் ஸரா சென்றுவிட்டு வந்தேன். மசாலா என்றால் ஆ தேக்கேன் ஸரா போல சொல்லிவிட்டுச் செய்யுங்களேன். 'ரசிகா, வா! இது மசாலாதான், மல்டிப்ளக்ஸ் டிஜே உட்டாலக்கடி சமாசாரம்தான், ஏரணம் யதார்த்தமெல்லாம் இதில் தேடிக்கொண்டிருக்காதே' எனத் தெளிவாகச் சொல்லிவிட்டுச் செய்யும் பிபாஷா + நீல் + ஜஹாங்கீர் கூட்டணியை தாராளமாக ரசிக்கலாம்.

பதிவர் சன்னாசியவர்கள் அரவிந் அடிகாவின் ஒயிட் டைகர் குறித்து எழுதியிருப்பதைப் படிக்க இங்கே சுட்டவேண்டுகிறேன்.

Comments

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...