Skip to main content

கல்ஃப் பைக் எக்ஸ்போ-09 - சில படங்கள்

சென்னையில் வளர்ந்தோர் சிலரிடம் இருக்கும் இருசக்கர மோகத்திலிருந்து தப்பியவன் நானல்லன். ஜாவா, எஸ்டி, ராஜ்தூத், புல்லட் வகையறாவிலிருந்து இன்றைய யூனிகார்ன், பல்சர், க்ளாடியேட்டர் வகையறாக்கள் வரை ஓட்டிப் பார்க்கவேண்டும் என்னும் ஆர்வம் இன்றும் சிறிதும் குறையாமல் இருக்கிறது. இப்படிப்பட்ட ஆளுக்கு இங்கே நடந்த கல்ஃப் பைக் எக்ஸ்போவை கல்யாண பிரியாணி என்றும் சொல்லலாம். நேற்றும், இன்றும் நாளையுமாக மூன்று நாள்களுக்கு இருசக்கரக் கண்காட்சியும், அமெரிக்க, சவூதிய, குவைத்திய, அமீரக சாகசக் கலைஞர்களின் தீரச் செயல்களுமாக இருசக்கர ரசிகர்களை ஈர்க்கும் விழா.

வழமையான வெள்ளிக்கிழமை நெய்ச்சோறு, தாள்ச்சா, கோழி பொறியல் சகிதமாக மூக்குமுட்டத் தின்றுவிட்டு கண்ணயராமல் வண்டியக் கிளப்பிக்கொண்டு புறப்பட்டேன். வெள்ளிக்கிழமை மதியம் இரண்டரை மணிக்கு வளைகுடா நாடுகளின் சாலைகளில் வண்டியோட்டுவது சுகம். நகருக்குள் விரியும் ஐந்துவழிப்பாதையில் ஈ காக்காய் இல்லாததுபோல் இருக்கும். வேகக் கட்டுப்பாட்டிற்குள் சரியாக ஓட்டவேண்டுமென்றால் வெள்ளி மதியம் இரண்டு முதல் மூன்று வரையில் ஓட்டலாம், மற்ற நேரங்களில் சில சமயம் ஊர்ந்தும் செல்லலாம். துபாய் நீர் முனை (வாட்டர் ஃப்ரண்ட்) அருகில் இருக்கும் துபாய் விழா நகரில் (துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி) கண்காட்சி இருந்தது.

சலாஹுத்தீன் சாலை பிடித்து, விமான நிலையம் வந்து, விழா நகருக்காக வலப்புறம் திரும்பி, சாலை முடிவில் இடப்புறம் திரும்பி, லேசாக வலப்புறமாக ஒதுங்கி பிரம்மாண்டமாக விரியும் வண்டி நிறுத்தத்திற்குள் நுழைந்தேன். இரண்டாம் தளத்தில்தான் நிறுத்தம் கிடைத்தது. உள்ளே நுழையும்போதே அத்தனை பெரிய இடத்தில் இருசக்கரக் கண்காட்சிக்கு வருவோர் திண்டாட வேண்டாம் என 'கண்காட்சி - டாய்ஸ் ஆர் அஸ் அருகில்' என வழிகாட்டி வைத்து டாய்ஸ் ஆர் அஸ்ஸிற்கு விளம்பரத்தைத் தந்துகொண்டிருந்தார்கள்.

விழா நகருக்குள் ஏதேனும் வாங்குவதென்றால் மாக்ருடி புத்தகக் கடையிலும், புக் ப்ளஸ் புத்தகக் கடையிலும் வாங்கலாம். மற்றபடி பலபொருளங்காடிகளில் ஏதேனும் வாங்கலாம், மற்றபடி வேறெங்கும் வேறெதுவும் வாங்க எனக்கு வசதி கிடையாது. கொஞ்சம் ஆடம்பரமாக இருப்போமே என நினைத்தால் 'செகண்ட் கப்'பில் ஒரு காப்பி அவ்வளவே. மற்றெதற்கும் வழியில்லை. சாளரக் கொள்முதல்தான் (விண்டோ ஷாப்பிங்) சிறந்த வழி.

சாளரக் கொள்முதலை முடித்துக்கொண்டு டாய்ஸ் ஆர் அஸ் சென்று கீழிறங்கி வெளியே வந்து கண்காட்சிக்குள் நுழைந்தேன். முப்பது திர்ஹம் நுழைவுக் கட்டணம். கிட்டத்தட்ட மூன்றரை மணிக்கு நான் நுழையும்போது தீரச்செயல் காட்சி துவங்கிவிட்டது. பாதியிலிருந்துதான் பார்த்தேன். அடுத்து ஐந்து மணிக்கு இன்னொரு முறை நிகழ்த்துவார்களென்பதால் வருத்தமில்லாமல் ரசிக்கத் துவங்கினேன். அமெரிக்க வீரர்கள் முடித்த பின் உள்ளூர் வீரர்கள் துவங்கினார்கள். அப்பாச்சி விளம்பரத்தில் வரும் முன்சக்கரத்தை நிறுத்தி வண்டியை உயர்த்துவதை என்னவோ மைசூர்பா சாப்பிடுவதுபோல் செய்துகாட்டினார்கள். இவர்களுக்கு எதற்கு இருசக்கரவாகனம் ஒருசக்கரம் போதுமே என நினைக்கத் தோன்றியது.

இந்த சாகசக்காரர்கள் இருக்கையில் அமர்ந்து ஓட்டுவதை பெரிய பாவமாக நினைக்கிறார்கள். பெட்ரோல் கொள்கலனின் மேற்புறம் உட்காருவதற்கு வசதியாக பள்ளமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. சடக்சடக்கென கொள்கலனில் மேல் உட்கார்ந்துகொள்கிறார்கள். சக்கரத்தை உராய்த்து ரப்பரால் தரையில் வட்டம் போடுவது பத்தாதென, இரண்டு வீரர்கள் எதிரெதிரே நின்று பின்சக்கரத்தைச் சுழற்றி தரையில் உராய விட்டு, புகையைக் கிளப்பி சக்கரம் உராய்ந்து, தேய்ந்து, கிழிந்து தொங்கும் வரையில் வ்வ்ர்ர்ர்ர்ரூமிவிட்டு சக்கரம் கிழிந்ததும் வண்டியைச் சாய்த்துவிட்டு ரசிகர்களின் கைதட்டல்களுக்காக எழுந்து நிற்கிறார்கள். பின் சக்கரம் கிழிந்து தொங்கும் வண்டியை உதவியாளர்கள் டடக்முடக்கென தள்ளிச் செல்கிறார்கள். உராய்ந்து உதிர்ந்து கிடக்கும் ரப்பர்த் துகள்களை அள்ளிப்போட உதவியாளர்கள் ஓடி வருகிறார்கள். ஒரு நிகழ்ச்சிக்கு ஒரு சக்கரத்தை சாகசத்தில் வீணடிக்கிறார்கள். சல்தாஹை!

உள்ளூர் தீரர்களின் சாகசம் முடிந்ததும் கண்காட்சிக்குள் நுழைந்தேன். ஒவ்வொரு வரிசையும் ஏக்கப் பெருமூச்சுவிடவைத்தது. ஒரு 'உள்ளே' ஒரு 'வெளியே' கிடையாது. திடலில் எங்கிருந்தும் நுழையலாம் எங்கும் வெளியாகலாம். இதுதான் முதல் வரிசை, இது கடைசி என்பதெல்லாம் இல்லை. ஒருபுறத்தில் டுகாட்டி, ஒருபுறத்தில் யமாஹா, ஒருபுறம் சுசுகி, ஒருபுறம் ஹோண்டா என வகைவகையாக இருசக்கரங்கள் வரவேற்றன. விக்டோரியா, பி.எம்.டபுள்யூ, ரிட்லி, என உயர் ரக இருசக்கரங்கள் பயமுறுத்தின.

இருசக்கரங்களுக்கு அலங்காரம் செய்யும் க்ரோம் அண்ட் கார்பன் பல வண்ணங்களில் கலக்கிக்கொண்டிருந்தார்கள். நமது பக்கத்திலும் இப்படி வண்டியை முகம் மாற்றுபவர்கள் உண்டு. பல்சரின் முன்பக்கத்தை மாற்றியமைத்து இரட்டை முன்விளக்கு வைத்து ஏதோ வேற்றுக்கிரக வாகனத்தைப் போல சிலர் செய்திருக்கிறார்கள். கரீஸ்மாவின் அமைப்பில் முன்சக்கரம் திரும்புவதை மறைக்கும் அமைப்பை பலர் கரீஸ்மா அல்லாத வண்டிக்கும் பொருத்திக்கொள்கிரார்கள். இவையெல்லாம் வட்டாரப் போக்குவரத்து ஆணையரிடம் அனுமதி பெற்று மாற்றுகிறார்களா? மாற்றிய பின் அந்த வண்டிக்கான காப்பீடு எப்படி கணக்கிடப்படுகிறது? இதுபோன்ற சில்லறைக் குழப்பங்கள் சென்னையில் எனக்கு நிறைய வருவதுண்டு. வண்டியின் அமைப்பே அப்படி இருக்கையில் ஆணையருக்கும், காப்பீட்டு நிறுவனத்துக்கும் எந்தப் பிரச்சனையும் கிடையாது. குழப்பம் வருவது தோற்றமாற்றத்தால்தால்தான். சாலையில் நாலு பேர் பார்த்தால் சரி, சப் சல்தாஹை!

கண்காட்சியைப் பார்த்துவிட்டு சரியாக ஐந்து மணிக்கு சாகசங்களைக் காண்பதற்காகத் திடலுக்கு வந்துவிட்டேன். அறிவிப்பாளருக்கும் துறையைக் குறித்த அறிவும் அனுபவமும் இருப்பது எத்தனை நல்லது என்பதை இன்றும் அனுபவபூர்வமாக ரசித்தேன். சும்மா ஒரே இடத்தில் நின்று அரிவிப்பு செய்யாமல் இவரும் ஒரு நான்குசக்கர பாலைப் பூச்சியை (டெஸ்ர்ட் பக்) ஓட்டிக்கொண்டே சாகசங்கள் செய்துகொண்டே அறிவிப்பு செய்தார். ஆணும் பெண்ணுமாகச் சேர்ந்து சாகசம் செய்தவர்கள் திருமணம் செய்துகொள்ளப் போகின்றார்களாம். அது ரசிகர்களின் உற்சாகத்துக்காக அறிவிப்பாளர் சொன்னதா அல்லது உண்மைதானா என ஆராயும் எண்ணம் தோன்றாமல் இல்லை. இவர் வண்டியை ஓட்ட அந்த அம்மணி பின்னால் அமர்வதும் முன்னால் அமர்வதும் படுத்துக்கொள்வதுமாக என்னென்னவோ செய்தது. இடையில் இறங்கி ஆடி பிறகு ஏறி அமர்ந்துகொண்டது. நாம் மிதிவண்டியில் ஓடி பின்னால் அமர்ந்துகொள்வதுபோல விதவிதமான பாணியில் இறங்கி, ஏறி, அமர்ந்துகொள்கிறது. அரைமணி நேரம் போனதே தெரியவில்லை.

கண்காட்சிக்கு வருபவர்களின் இருசக்கரங்களையும் கண்காட்சியில் இணைத்திருந்தார்கள். வந்தவையெல்லாம் அப்படிப்பட்ட வண்டிகள். கண்காட்சிக்கு உள்ளே பார்த்த வண்டிகளுள் ஒன்றிரண்டு வெளியேயும் காணக்கிடைத்தன. கண்காட்சிக்கென சவூதி அரேபியாவில் இருந்து சாலை வழியாக வந்திருந்த ஹார்லி-டேவிட்சன் குழுவினரைப் பார்த்தேன். வண்டியின் பின்புறம் ஹார்லி-டேவிட்சன் கொடியும் சவூதி அரேபியக் கொடியுமாக பறக்கவிட்டபடி அந்த மனிதர் அம்மணி பின்னால் இருக்க நிறுத்தத்திற்குள் நுழைந்தார்.

தேனீயைப் போலவே வடிவமைக்கப்பட்ட வண்டி, வழமையான ஹார்லி-டேவிட்சன், விக்டோரியா, டுகாட்டி, சுசுகி என நிறுத்தத்திலும் ஏகப்பட்ட வண்டிகள். கண்காட்சிக்கு இணையாக நிறுத்தமும் இருந்தது. கண்காட்சிக்குச் சென்றவர்களில் பெரும்பாலானோர் நிறுத்தத்திற்கும் வந்து வண்டிகளைப் பார்த்துவிட்டுதான் சென்றார்கள்.

நிறுத்தத்தில் காணப்பட்டவையெல்லாம் அரபிய, அமெரிக்க, ஐரோப்பிய முகங்களேயன்றி இந்திய, பாகிஸ்தானிய முகங்களைக் காணோமே நாமெல்லாம் என்ன என்னைப் போலத்தானா என நினைத்துக்கொண்டிருக்கும்போது ஒரு இந்தியர் (அநேகமாக இந்தியர்தான்) துணைவியாருடன் அட்டகாசமாக ஹார்லி-டேவிட்சனை கிளப்பிக்கொண்டிருந்தார். அந்த அம்மையார் வண்டியில் அமர்வதற்காக தலையை ஒதுக்கி குல்லாயைப் போட்டு மூக்கைச் சுற்றி துணியைக் கட்டி மூக்குக்கண்ணாடி அணிந்து தலைக்கவசம் அணிந்த வேகத்திலிருந்தே தெரிந்துவிட்டது அவர்கள் அதிகமாக இருசக்கரத்தில் அதிவேகமாகப் பயணிப்பவர்கள் என்பது. அவரும் எல்லா முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு கவசங்களுக்குப் பின்னர் வண்டியைக் கிளப்பினார். சராசரி இந்தியனாக கொஞ்சம் மகிழ்ந்துகொண்டேன்.

கண்காட்சி முடித்து வெளியே வந்து செகண்ட் கப்பில் காப்பிக்குப் பிறகு எனது 'மாஸ்டா-6'ஐ கிளப்பிக்கொண்டு வழமையைவிட சிறிது வேகமாக ஓட்டிக்கொண்டு வந்தேன் (மாஸ்டா-6 மகிழுந்துதான் இருசக்கரம் அல்ல).

இளகத் துவங்கியிருக்கும் எனது புல்லட் கனவு இப்படி ஏதாவது நிகழ்வால் இறுகத் துவங்கிவிடுகின்றது.

என்னைப் போலவே எங்கள் வீட்டிலிருக்கும் இன்னொரு இருசக்கரப் பைத்தியம் எனது மகள் இந்தக் கண்காட்சியைப் பார்க்க இப்போது என்னுடன் துபாயில் இல்லையே என்பதில் எனக்கு சிறிய வருத்தம் உண்டு.

வளைகுடா வாழ்க்கையில் இப்படிப்பட்ட சின்னச்சின்ன வருத்தங்கள் சுவாசத்தைப் போல...சல்தாஹை!






யோவ்! எங்கூர்ல ஆட்டோவுக்கு டாப் கழட்டுனா இப்படித்தான்யா இருக்கும்! அப்ப அத்தையும் எக்சிபிஷன்ல வெச்சுரலாமா?






நியாயமா பாத்தா எங்கூரு வண்டிங்களுக்குதான் இவ்ளோ பெரீ ஷாக் அப்சார்ப்பர் வேணும்!




இந்த வண்டிய கண்டி கர்ணன் பாத்திருந்தார்னா எங்க பாட்டன் சொத்துல ஜெய்சங்கருக்கு குதிரைக்கு பதிலா இத்தக்குட்திருப்பாரு ஆங்!




பாடர் தோட்டத்துல குட்தா இப்படி ரீமாடல் பண்ணிரமாட்டாங்க!




சவூதிலேர்ந்து வந்தவரு.




வயித்துலேர்ந்து பொக வந்துச்சு இந்த போட்டோ எடுக்கும்போது :-)






நான் ஒண்ணும் சொல்லல படத்த பெருசு பண்ணி பெரியவர் அங்க இன்னா எழுதியிருக்காருன்னு நீங்களே படிச்சுக்கோங்க.






நம்ம கேசு.




போட்டோவுக்கு போஸ் குடுக்றது எல்லா ஊர்காரவுங்க கிட்டயும் இருக்கு.




எம்.டிவிக்காரவுங்களோட ஒரு ஓசி ஸ்னாப் அடிச்சுக்கினேன். எனக்கு அவங்களத் தெரியாது, அவங்களுக்கும் என்னத் தெரியாது.




சூப்பர் மோனோ சஸ்பென்ஷன்.




தேனீ மாதிரியே வண்டிய டிசைன் பண்ண்யிருந்தாங்க. போட்டோவுல செரியா வரல. என்னோட தப்புதான்.






மேடம், எச்சூஸ்மி, ஹெல்மெட் கலர் மாத்துனா வண்டி கலர மாத்திடுவீங்களா?




ஹுக்க்கா வேணும்னா குடிச்சுக்கலாம். அரபி விசிட்டர்ஸ் நெறைய இல்லீங்களா?




இந்த ஸ்டண்ட்டுக்கு அப்புறம் டயர் கிழிஞ்சு வண்டிய தள்ளிக்கினுதான் போனாங்க.




வண்டில பின்னால பொண்ணா அடக்கமா உக்காருன்னா கேக்குதா?




ப்ரேக் அடிச்சு, ஸ்டாண்ட் போட்டு, ஜம்ப் பண்ணி எல்லாம் ஒரு செகண்டுலங்க!




திரும்பவும் பாருங்க, பின்னால் ஒக்காரச் சொன்னா நிண்ணுக்குனு வருது.




எக்சிபிஷன்ல அவ்ளோ வண்டிங்கலுக்கு நடுவுல நம்ம யூனிகார்ன் ஒண்ணும் நின்னுக்கினு இருந்துச்சு.




அவ்வளவுதான்.

Comments

ரவி said…
கலக்கலான பதிவு மேன்...சூப்பர்...
ம் இதுக்கெல்லாம் குடுத்து வச்சிருக்கனும்.
நானும் ஒரு தபா ஓட்டிருக்கேன், கவாசகி நிஞ்ஜான்னு ஒரு வண்டி 20 வருசம் முன்னாடி, அப்ப எனக்கு வயசு 17 வயசு. மெக்கானிக்கா இருந்தேன், ஒரு வெள்ளைக்காரன் நம்ம ஊர் ரோட்டில விழுந்து எந்திருச்சி வந்து சரி பண்ண விட்டார், அப்ப டிரையல் பாத்தது.
அதுக்கு அப்புறம் 7 வருசம் முன்னாடி எலிமினேட்டர்லயும், புல்லட் தண்டர்பேர்ட்ல ஊட்டம்வோட ஊட்டி
போனேன். ம் சுகமான அனுபவம். இரண்டுமே கோவைல முதல் வண்டி அறிமுகமானது.
அருமையான பதிவு.

குவைத்தில் மாலை நேரத்தில் கடற்கரை சாலையில் அடிக்கடி பைக்கில் சர்க்கஸ் நிகழ்த்துவார்கள் இளைஞர்கள். அதுவும் அழகானப் பெண்கள் சொகுசு கார்களில் வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம்.
மற்ற வண்டிகளைப்பற்றி கவலையே படாமல் கடலைப்போட்டுக்கொண்டும் சர்க்கஸ் செய்துக்கொண்டும் வருவார்கள்.
வனம் said…
வணக்கம்

ம்ம்ம் என்னாலதான் போகமுடியல னு இருந்தேன், அந்த கவலையை போக்கிவிட்டீர்கள்

நன்றி

இராஜராஜன்
Unknown said…
//இந்த வண்டிய கண்டி கர்ணன் பாத்திருந்தார்னா எங்க பாட்டன் சொத்துல ஜெய்சங்கருக்கு குதிரைக்கு பதிலா இத்தக்குட்திருப்பாரு ஆங்!//

:-)))))))))))))))

//வயித்துலேர்ந்து பொக வந்துச்சு இந்த போட்டோ எடுக்கும்போது :-)//

வராம என்ன செய்யும். அந்தூருல வெயிலு மட்டும் இல்லையின்னா அண்ணன் Mazda-6க்கு பதிலா HDயில்ல வாங்கிருப்பிங்க :-) [பா.கா.பா.அ]
ரிதன்யா,
மஞ்சூரார்,
ராஜராஜன்,
ராஜா,

நன்றிகள்.
*

ராஜா,

HD வாங்கலாம். வசதியை இறைவன் தந்திருக்கிறான். ஆனாலும், எனது சமூக அந்தஸ்துடன் ஒவ்வாது.

டிப்பிகல் - மிடில்க்ளாஸ் - இண்டியன் எக்ஸ்பாட்ரியேட் கம்யூனிட்டி ஆசாமி HD வைத்திருப்பது சமூக அந்தஸ்து + வழமையுடன் ஒத்துப்போகாது.

அடுத்தது வயது. அதனைக் கடந்துவிட்டதாகவே நினைக்கிறேன்.

விலை...ம்ம்...எனது 'ஃபுல் ஆப்ஷன்' மாஸ்டா-6இன் விலைக்கு HDஇல் FXSTC - SOFTAIL CUSTOM - 1584CC / 6SPD வாங்க இயலும்.

ஆனால், அதை வைத்துக்கொண்டு அலுவலகம் போவதோ, அலுவலக வேலையாகப் போவதோ இயலாது.

சரி அலுவலகத்திற்கு நான்கு சக்கரம். ஹார்லியை பொழுதுபோக்கிற்கு வைத்துக்கொள்ளலாம் என்றால், HD வைத்திருக்கவேண்டும் என்ற அடக்க இயலாத ஆசையுடன் மேற்சொன்ன காரணிகளும் ஒத்துப்போனால் எனது இப்போதைய வசதிக்கு XL883C - CUSTOM - 883CC / 5SPD வேண்டுமானால் வாங்கி ஓட்டலாம்...ஆனா முடியாது :-)))