Skip to main content

ராம்சந்த பாகிஸ்தானி

இந்திய-பாகிஸ்தான் எல்லை தாண்டலை கதையின் மையக் கருவாகக்கொண்டு இதற்கு முன்னர் வந்திருக்கும் வணிகப் படங்களுள் தற்சமயம் நினைவுக்கு வருபவை மூன்று படங்கள். ஒன்று ராஜ் கபூரின் கனவென்று எடுக்கப்பட்ட 'ஹென்னா' (ரிஷி கபூர் + ஸீபா பக்தியார்), இரண்டாவது 'ரெஃப்யூஜி' (அபிஷேக் பச்சன் + கரீனா. இருவரும் திரைக்கு அறிமுகமான படம்), மூன்றாவதாக வீர் - ஸாரா (ஷாரூக்கான் + ப்ரீத்தி ஸின்டா + ரானி முகர்ஜி). அதிமசாலா நெடியேறிய பார்டர், கதர் வகையறாக்களை கருத்தில் கொள்ளவில்லை. இம் மூன்றுமே எல்லையைத் தாண்டி வருவதில் இருக்கும் பிரச்சனைகளை திரைக்கதையாக்குவதில் வெற்றி பெற்ற படங்கள். இவற்றில் வணிகத்திற்கான காட்சியமைப்புகளும் பின்னல்களும் இருந்தன.

இந்தோ-பாக் எல்லைப் பிரச்சனைகளை வணிகத் திரைப்படங்களின் பாதிப்புகளைக் கலக்காமல் இந்தப் படம் ராம்சந்த் பாகிஸ்தானி சொல்லிச் செல்கிறது. வணிகப் படங்களில் மூழ்கி கலைப் படங்களை ரசிப்பதில் அதிகமான அனுபவமில்லாத என்னாலும் ராம்சந்த் பாகிஸ்தானியை ரசிக்க முடிந்தது.

வீட்டில் அம்மாவுடன் நடக்கும் செல்லச் சண்டையால் ஏதோ நினைவில் கால்போன போக்கில் செல்லும் எட்டு வயதுச் சிறுவன் தவறுதலாக பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி இந்திய எல்லைக்குள் வந்துவிடுகிறான். இந்திய எல்லையில் அவனைக் கைது செய்கிறார்கள். மகனைத்தேடி வருகின்ற அப்பாவும் கைது செய்யப்படுகிறார். கணவனையும் மனைவியையும் பிரிந்த பெண் தனியாக வாழ்கிறாள். கணவனின் கடனை அடைக்க அடகுக்காரரிடம் மூன்றாண்டுகள் வேலை செய்யவேண்டும் என முடிவாகிறது. வேலை செய்கிறாள். நான்கு வருடங்களுக்கும் அதிகமான நாள்களை சிறையில் கழித்த பின் மகன் விடுதலையாகி பாகிஸ்தானுக்குச் செல்கிறான். சில நாள்களில் தந்தையும் விடுதலையாகி அவர்கள் நலமாக வாழ்வதான அறிவிப்புடன் திரைப்படம் முடிகின்றது. இந்த இடைப்பட்ட நாள்களில் சிறையில் நடக்கும் நிகழ்வுகளும் கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளுமாக திரைப்படம் நகர்கிறது. முடிவு தெரிந்துவிட்டதால் ஆர்வமிழக்கவைக்கும் படமல்ல இது.

படத்தின் துவக்கத்தில் இரண்டு மூன்று நிமிடங்களில் ராம்சந்த் என்னும் சிறுவனின் போக்கு நமக்குக் காட்டப்படுகிறது. வெளியில் சும்மாவேனும் திரிவது, பாறையின் மேல் நின்று சுதந்திரமாக சிறுநீர் கழிப்பது, இந்தப் பொம்மை என்ன விலை என்று கடைக்காரனை நச்சரிப்பது, நின்றுகொண்டிருக்கும் சுமையுந்தில் ஏறி ஓட்டுவதாக பாவனை செய்வது, இப்படியாகத் தொடர்ச்சியான குறும்புடன் ஓடிக்கொண்டிருக்கும் சிறுவனாக ராம்சந்த்தின் (சைய்யத் பசல் ஹுசைன்) பாத்திரம் பதிவாகிறது.

கணவன் மகன் இருவரிடமும் அன்பு பாராட்டும் குடும்பத்தலைவியாக அறிமுகமாகிறார், சம்ப்பா (நந்திதா தாஸ்).

உழைப்பாளித் தந்தையாக அறிமுகமாகிறார், ஷங்கர் (ராஷித் பரூக்கி).

படத்தில் அவர்கள் வாழும் கிராமமான பீம்ரா (பாகிஸ்தான்), அவர்கள் வைக்கப்படும் பூஜ் சிறைச்சாலை (இந்தியா), இவற்றைத் தொடர்புபடுத்தி இயக்குநரின் இணையதளத்தில் தரப்பட்ட விவரங்களில் உலவியதில் தோராயமாக திரைப்படத்தில் அவர்கள் தாண்டும் எல்லைப் பகுதியானது, பூஜ் (குஜராத்) நகரின் வடகிழக்குத் திசையில் நேர்கோட்டில் பயணம் செய்தால் குறுக்கே வெட்டப்படும் இந்தோ-பாக் எல்லைக்கோடாக இருக்கும் எனத் தெரிகிறது.

முட்கம்பிகள், விரைப்பான சீருடையில் முகத்தை உம்மென்று வைத்திருக்கும் வீரர்கள், இவை எதுவும் இல்லாமல், வெள்ளைக் கற்கள் வரிசையாகப் பதித்து வைக்கப்பட்டு, புறநகரில் உருவாகவிருக்கும் புதிய குடியிருப்புகளை உயர்ந்த இடத்திலிருந்து பார்ப்பது போலவே இந்த எல்லை காட்டப்படுகிறது, சிறுவனை இழுத்துச் செல்லும்போது தொலைவில் ஒரு காவல் கோபுரம் காட்டப்படுகிறது. இப்படியும் சில எல்லைகள் இருக்கும் என விவரம் அறிந்த சிலர் சொன்னார்கள். இதனுடைய நம்பகத்தன்மையைக் கேள்விகேட்கும் அளவிற்கு எனது இப்போதைய அறிதலுக்குத் திறன் இல்லை. மீரா நாயரின் ஒரு வரி விமர்சனம் இந்தப் படத்தை, 'க்ரேட் ஆத்தண்டிசிட்டி' என்கிறது, அதனால் இந்த எல்லைக்கோடு குறித்து வேறெப்போதாவது விவரம் அறியவரும்போது தொடர்புபடுத்திக்கொள்ளலாம் என விட்டுவிடுகிறேன்.

காவலர்களால் சிறைப்பிடிக்கப்படும் சிறுவனை சோதிக்கும்போது அவன் வைத்திருக்கும் கவட்டை வில் சிக்குகிறது, எல்லைக் காவல் வீரர் துப்பாக்கியை நீட்டி நின்று அவனது கவட்டை வில்லைப் பார்த்து, 'ஹத்யார் லாயஹை சாத்மே! கஷ்மீர் ஆசாத் கரேகா!' (ஆயுதம் கொண்டு வந்திருக்கிறான், காஷ்மீரை விடுதலை செய்வான்) என்று சொல்லும்போது நகைச்சுவை தோன்றவில்லை. மகனைத் தேடிக்கொண்டு வரும் தந்தையும் கைது செய்யப்படுகிறார். இந்தக் காட்சியில் பின்னணி இசையாக ஏகப்பட்ட வயலின்கள் திரைமுழுக்கத் தெரியும் முகபாவங்கள் எதுவும் கிடையாது, சுழன்றடிக்கும் காற்றின் ஓசையும் காலணிகளின் ஓசையும்தான். இந்தக் கைது காட்சி முடிந்ததும், கிராமத்தில் நடக்கும் திருமணவிழாவைக் காட்டி அதில் நடனமாடிக்கொண்டே சம்ப்பாவின் (நந்திதா) கண்கள் கணவனும் மகனும் வந்துவிட்டார்களா எனத் தேடுவதான அமைப்பும், பின்னணியில் ஷுபா முத்கலின் 'தேரே மேரே ப்ரீத்து சாஜன்' பாடலும் பார்க்க / கேட்க வேண்டியவை.

'ஐஸே குஸ்கயாயானா தேரா டிசம்பர்கோ பார்லிமெண்ட்மே. நா பொலிஸ் தேக்கி நா பவ்ஜ்....அக்பார் பட்தா கே நை'

(இப்படித்தான டிசம்பர் 13ல பார்லிமெண்டுக்குள்ள நுழைஞ்சீங்க. போலீஸும் பாக்கல, ராணுவமும் பாக்கல....பேப்பர் படிக்றதுண்டா இல்லியா)

கைது செய்யப்பட்டு 'முறைப்படி' விசாரிக்கப்பட்ட பின்னர் தந்தையும் மகனும் சிறைக்கு மாற்றப்படுகிறார்கள். 'அஹமதாபாத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கச் சொன்னால் கைதிகளை அதிகரிக்கிறார்கள்' என்ற எள்ளலுடன் புதிதாக வந்த இரண்டு கைதிகளை வரவேற்கும் அந்த சிறை அதிகாரி பாத்திரம் ஓரிரு காட்சிகள் வந்தாலுமே ஈர்க்கிறது. ராம்சந்தின் தாயை விசாரிக்கும் காட்சி, எப்படியும் உனது தந்தையையும் விடுதலை செய்ய நான் உதவுவேன் என்னும் காட்சி என இரண்டு காட்சிகளை குறிப்பாகச் சொல்லலாம்.

கணவனும் மகனும் காணாமல்போனதை காவல் நிலையத்தில் பதிவுசெய்து அடிக்கடி சென்று விசாரித்து வருகிறாள், சம்ப்பா. எல்லைக் கோட்டைத் தாண்டியவர்கள் வீடு திரும்பியதில்லை எனும் செய்தியால் மனம் உடைந்து தற்கொலைக்குத் துணிகிறாள். கணவனும் மகனும் திரும்பிவிடுவதான பிரமை துரத்த தற்கொலை முயற்சியைக் கைவிடுகிறாள். கணவன் வாங்கிய கடனுக்காக அடகுக்காரரிடம் மூன்றாண்டுகள் வேலை செய்யவேண்டி ஒப்பந்தமாகிறது. கணவன் உயிருடன் இருக்கிறானா இல்லையா என்பதே கேள்விக்குறியதாக இருக்கும் அந்நேரத்தில் உள்ளூர் வளையல் வியாபாரி (எல்லைக்கோட்டு விவகாரங்களுக்கு போலீஸ் இன்ஃபார்மராகவும் வளையல் வியாபாரி இருப்பதாக ஒரு வசனம் படத்தில் உண்டு) அவளுக்கு சின்னச்சின்ன உதவிகள் செய்ய முன்வருகிறான். அவள் மறுக்கிறாள். பிறகு அவனுக்காக இரண்டு நாள்கள் உணவு சமைத்துத் தந்து தனது புன்சிரிப்பை உதிர்க்கும் சமயத்தில், வயலில் கங்காணியாக இருப்பவன் வளையல் வியாபாரியை எச்சரித்துப் போகிறான். 'ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணின் பின்னால் சுற்றுகிறாயே உனக்கு வெட்கமாக இல்லையா' (ஏக் அச்சுத் அவ்ரத் கே பீச்சே அப்னா பீம் தபாவ் கர்ரஹாஹை, ஷரம் கர்) என்ற வசனத்தை இந்த இடத்தில் அமைத்திருக்கிறார்கள்.

மெதுவாக சம்ப்பா வளையல் வியாபாரியிடம் மனதை இழக்கும் காட்சிகளின் படமாக்கம் எனக்குப் பிடித்திருந்தது. முதலில் அவனது பின்தொடரல்களை வெறுத்து, அவனது தன்மைகளைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சமாக மாறி அவனுக்காக உனவு சமைத்துப் போகும்போது தனக்கு மிகவும் விருப்பமான கண்மை (சுர்மா) பூசுவதும், புதிய உடை வாங்குவதும், புதிய உடையைப் பார்த்து 'இன்றென்ன தீபாவளியா' என்னும் உறவினரிடம் திகைப்பதும், 'அழகாக இருக்கு' என்னும் தோழியால் மகிழ்வதும், வளையல் வியாபாரி தூவிய ஹோலி வண்ணப்பொடிக்கு வெட்கத்துடன் சிரிப்பதும், 'தாழ்த்தப்பட்ட பெண்' என்ற வார்த்தையைக் கேட்டதும் குறுகிப்போய் ஒடுங்குவதுமாக நந்திதா நன்றாக நடித்திருக்கிறார். அந்தக் காதலின் கீற்று, மேற்சொன்ன வசனத்துடன் முடிந்துபோகிறது.

தந்தையும் மகனுமாக சிறையில் அவர்களுடைய பொழுது நிச்சயமற்றுக் கழிகிறது. உடனிருக்கும் கைதி பீடி புகைக்கும் பழக்கத்தை ராம்சந்திற்கு உண்டாக்குவதைத் தடுக்கவும், தவறான எண்ணத்துடன் ராம்சந்தை சுவற்றுக்குப் பின்னால் அழைத்துச் செல்லும் இன்னொரு கைதியிடமிருந்து ராம்சந்தைக் காப்பாற்றுவதுமாக போராட்டத்துடன் ஷங்கர் என்னும் கதாபாத்திரம் மனதில் நிறைகிறது. இப்படிப்பட்ட நிகழ்வுகளில் சிறைவாழ்க்கை நடந்துகொண்டிருக்கும்போது அந்தச் சிறைக்கு மாற்றலாகி வருகின்ற பெண்போலீஸ் அதிகாரி ராம்சந்தின் வாழ்வில் மாற்றத்தை உண்டாக்குகிறார். சிடுசிடுவென பேசினாலும் அவர் வந்ததும் முதல் வேலையாக ராம்சந்திற்கு அவனது அளவிற்குப் பொருந்தும் உடைகளைத் தருமாறு காவலர்களுக்கு ஆணையிடுகிறார். தனது அறையைத் துடைக்கும் வேலைக்கு ராம்சந்தை நியமிக்கிறார். அவனுக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுக்கிறார். ஸ்ரீதேவி நடித்த படமென்றால் விரும்பிப் பார்க்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அந்த நடிகையின் பெயர் மாரியா வஸ்தி. பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் நடிப்பவராம். வாய்ப்பு கிடைத்தால் இந்தித் திரையில் அக்கா, ஆசிரியை, அண்ணி பாத்திரங்களில் ஒரு வலம் வரலாம், ஆனால், இப்போதைய சூழலில் இது நிகழுமா என்பது தெரியவில்லை.

நான்காண்டுகளில் ராம்சந்த் வளர்ந்து பதின்ம வயதை எட்டியபோது வளர்சிதை மாற்றத்தில் இந்த போலீஸ் அதிகாரியிடம் மனதை இழக்கத் துவங்குகின்றான். ஒருநாள் தலையைப் படிய வாரி, நல்ல சட்டை அணிந்து, ஸ்ரீதேவி ஒலிநாடாவை எடுத்துக்கொண்டு அவர் அறைக்குச் செல்கிறான். தொலைக்காட்சியின் முன்னே இரண்டு நாற்காலிகளை அருகருகில் போடுகின்றான், பிறகு இடைவெளி விட்டுப்போடுகிறான், பிறகு நெருக்கிப்போடுகிறான். அதிகாரி வந்ததும், ஸ்ரீதேவி படம் 'சாந்தினி' என்கிறான். சரி படத்தைப் போடு என அவர் உட்காருகிறார். இவனை உட்காரச் சொல்கிறார், அருகில் நாற்காலி இருந்தும் இவன் தரையில் உட்காரப் போகிறான், 'டேய் மேல உக்கார்ரா' என்கிறார். அவர் படத்தை ரசிக்க இவன் அவரைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது அதிகாரிக்கு அவரது காதலனிடமிருந்து அழைப்பு வருகிறது. படத்தைப் பாதியில் விட்டு அவர் புறப்பட்டதும் ராம்சந்திற்கு மனப்புழுக்கம் உண்டாகிறது. இதுவும் எந்தவிதமான திரைத்தனமும் இல்லாமல், காமிரா உத்திகள் இல்லாமல் இயல்பாக, ஆனால், அழுத்தமாக வந்துபோகும் காட்சி.

ஆண்டுகளுக்குப் பிறகு, விடுதலையாகும் கைதிகளின் பட்டியலில் முதலில் ராம்சந்தின் பெயர் வருகின்றது.

'முதலில் என்னை அம்மாவிடமிருந்து பிரித்தீர்கள். இப்போது அப்பாவிடம் இருந்தும் பிரிக்கிறீர்கள். இத்தனை வருடங்களில் எனது அம்மா உயிருடன்தான் இருக்கிறார் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது? எங்களைப் பிரிந்த சோகத்தில் அம்மா இந்நேரம் இறந்துகூட இருக்கலாம். அப்பாவைப் பிரிந்து நான் போகமாட்டேன்' என அடம் பிடிக்கிறான். அனைவரும் சமாதானம் சொல்லி அனுப்பி வைக்கிறார்கள்.

சின்னச்சின்னதாக சில காட்சிகளைக் கவிதையாக்கி, வணிகத்திரையென்றால் உணர்ச்சிப் பிழம்பாக வந்திருக்கக்கூடிய காட்சிகளையெல்லாம்கூட திரைத்தனமில்லாமல் இயல்பாக அமைத்து, இந்திய எல்லையில் இருக்கும் ராணுவத்தினர் + கண்காணிப்பாளர்கள், சிறையில் இருக்கும் ஒரு கைதி இவர்களைத் தவிர மற்ற கதாபாத்திரங்களான பூஜ் சிறைக் காவலர்கள், அதிகாரிகள், பெண் போலீஸ் அதிகாரி, பாகிஸ்தானி அடகுக்காரர், வளையல் வியாபாரி, பாகிஸ்தான் போலீஸ் ஆக எல்லாரையுமே நல்லவர்களாகக் காண்பித்திருக்கிறார்கள்.

ஓரிரு குறைகளென்றால்...பார்லிமெண்ட் தாக்கப்பட்டதற்குப் பின்னால் நடக்கும் நிகழ்வுதானே கதைக்களன், அப்படியென்றால் அந்தக் காலகட்டத்தில்தான் குறுவட்டுகள் புழக்கத்திற்கு வந்துவிட்டனவே, அப்பொழுதுமா ஸ்ரீதேவி படங்களை ஒலிநாடாவில் போட்டுப்பார்ப்பார்கள் என்னும் கேள்வி எழுந்தாலும், பூஜ் சிறையதிகாரிக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சி.டி. ப்ளேயர் வாங்குவற்கான நிதி ஒதுக்கீடு இல்லாமல் பழைய விசிஆரில் காலத்தைத் தள்ளுகிறார் என்று எடுத்துக்கொள்ளலாம். மாட்டிக்கொண்டவர் இந்துவா முஸ்லிமா என சோதிப்பதற்காக துகிலுரியும் வழமையை இந்தப் படத்திலும் அமைத்திருக்கிறார்கள். ஏற்கெனவே பல படங்களில் பார்த்துச் சலித்த இதுபோன்ற காட்சி இந்தப் படத்திற்குத் தேவையற்றதென்பது எனது எண்ணம்.

படம் தவிர்த்து மற்ற விவரங்களென்றால்...இயக்குநரின் மூதாதையர் சென்னையைச் சேர்ந்தவர்களாம். இந்தியா பாகிஸ்தான் பிரிவினையில் பாகிஸ்தானிற்கு புலம் பெயர்ந்திருக்கிறார்கள். பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய தேசியக் கொடி மூன்று வாரங்கள் தொடர்ந்து பறந்தது இந்தியத் தூதரகம் நீங்கலாக நாங்கள் போட்டிருந்த சிறைச்சாலை அரங்க அமைப்பில்தான் என்று இயக்குநர் குறிப்பிட்டாராம்.

இயக்குநர் அம்மணியின் பெயர் மெஹ்ரீன் ஜப்பார்.

கலைப்படங்களில் ஆர்வமிருப்போர் இதனை அவசியம் பார்க்கவேண்டுமென பரிந்துரைப்பதில் எனக்கு தயக்கமேதும் இல்லை, எனது கலைப்படரசனைத்திறன் அத்தனை உயர்வானதில்லை என்றபோதும்.

Comments

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...