Skip to main content

ஒரு சாச்சாவும் கொஞ்சம் தேநீரும்

'சாச்சா இதர் ஆவ்' (சாச்சா இங்கே வா) அழைப்பது மட்டுமே 'சாச்சா' என்று மரியாதையாக, ஆனால், நாங்கள் அழைக்கும் தோரணையில் அதிகாரம்தான் இருக்கும். பதில் சொல்லும் சாச்சாவும் வாடிக்கையளராயிற்றே என்று பணிவுடன் பேசத் துவங்க மாட்டார், 'க்யா காயேகா போலோ' (என்ன சாபுர்ர சொல்லு) என நாங்கள் காட்டும் தோரணைக்கும் கூடுதலான தோரணையில் கேள்வி கேட்பார். இரண்டொரு முறை தொடர்ந்தாற்போல் வெறும் பருப்பு மட்டுமோ, காய்கறிகள் மட்டுமோ சொல்லிவிட்டால் தொலைந்தது, 'பருப்பும் காய்கறியும் கெடைக்றது நிண்ணுட்டா நீ செத்துப்போயிருவ' (யே தால் சப்ஜி நஹீ மிலாத்தோ தும் மர்ஜாயேகா) தயக்கமே இல்லாமல் சொல்வார், 'என்ன சொல்றமோ கொண்டா சாச்சா, அதிகம் பேசாத' (ஹம் ஜோபி போல்தேன் ஹைன் லேக்கா ஆவ், ஸியாதா பாத் மத் கர்னா), என நாங்கள் அதிகாரமாகப் பேசுவோம்.

அது வாய்ச்சண்டைக்கான துவக்கம் கிடையாது. எப்பொழுது நாங்கள் அந்த உணவகம் சென்றாலும் சாச்சாவிடம் இப்படித்தான் பேசுவோம். அவருக்கும் கோபம் வராது, எங்களுக்கும் கோபம் வராது. உடன் வரும் நண்பர் ஒருவர் சாச்சாவுக்கு பக்ஷீஸ் தருவது ஒன்று இரண்டு திர்ஹம் என்று மீதமாவும் சில்லறையைத் தராமல் மாதத்திற்கு இவ்வளவு என்று சம்பளம் தருவதைப் போல தருவார், அதனாலெல்லாம் சாச்சா குழைவதுமில்லை; நாங்கள் எதிர்பார்ப்பதுமில்லை.

இரவு நேரங்களில் சாப்பாட்டிற்குப் பின் அரட்டை அடிக்கவேண்டுமென்றால் இங்கே கூடி நாற்காலிகளை இழுத்துப்போட்டு, 'சாச்சா பாஞ்ச் சாய், ஏக் மே ஷக்கர் நஹீன், ஏக் பானி கம், ஏக் லம்பா, தோ சாதா' (சாச்சா அஞ்சு டீ, ஒண்ணு சக்கர இல்லாம, ஒண்ணுல தண்ணி கம்மியா, ஒண்ணு கிளாஸ் நெறைய, ரெண்டு சாதா). அந்த ஐந்து தேநீர்க் கோப்பைகளையும் எடுத்து வந்து யார் யாருக்கு எது எனக் கேட்டு ஒவ்வொன்றாக அவர்களிடம் தந்துவிட்டுச் செல்வார். மாதாந்திர பக்ஷீஸ் போக, தேநீர் குடித்தாலும் பக்ஷீஸ் தரும் வழக்கத்தை நாங்கள் உருவாக்கிக்கொண்டது சாச்சாவுக்ககத்தான்.

இப்பொழுது ஒரு திர்ஹம் கொடுத்து தேநீர் குடித்தாலும் சாசாவுக்கு ஒரு திர்ஹம் டிப்ஸ் தரும் அளவிற்கு இந்தப் பழக்கம் சென்றிருக்கிறது.

நண்பர்கள் சேரும்போது மூன்று பேராக ரீஃப் மால் குளோரியாவில் தேநீர் குடித்து ஐம்பத்தெட்டு திர்ஹம்களை வைத்துவிட்டு எழுந்து வருவோம், என்றேனும் 'தம் டீ'யை அதற்கான ருசியுடன் குடிக்கவேண்டுமெனத் தோன்றினால் சரவணாவில் இருபது திர்ஹம்களைச் செலவழிப்போம், அப்படியாக தேநீருக்காக இரண்டொரு இடங்களில் காசைக் கொஞ்சம் அவசியத்துக்கும் மேலேயே செலவுசெய்யும் வழமை இருப்பதால் அந்த இடங்களிலிருந்து நடக்கும் தூரத்தில் இருக்கும் சாச்சாவிடம் ஒரு திர்ஹத்திற்கு தேநீர் குடித்து ஒரு திர்ஹத்தை பக்ஷீஸாகத் தருவதில் தயக்கம் ஏதும் இன்று வரையில் ஏற்படவில்லை.

சில நாள்களில் உடன் நண்பர்களில்லாத சமயங்களில் அந்த உணவகத்திற்குச் செல்லும்போது சாச்சாவைத் தொந்தரவு செய்வதில்லை, வெளியே நடைபாதையில் போடப்பட்டிருக்கும் மேசைகளுக்கு மட்டுமே சாச்சா பொறுப்பு. தனியாகச் செல்கையில் வெளியே உட்காருவதில்லை. நண்பர்களுடனென்றால் நடைபதையில் உட்கார்ந்து சாவகாசமாக எதையாவது பேசிக்கொண்டே சாப்பிடலாம், தனியே செல்கையில் அப்படியல்லாமல் உள்ளே போனோமா, உட்கார்ந்தோமா சாப்பிட்டோமா வந்தோமா என்பதும் வழமை. இரண்டொருமுறை உள்ளே போய் சாப்பிட்டு வருவதைப் பார்த்தாலும் சாச்சா ஏதும் கேட்பதில்லை, ஆனால், நினைவில் வைத்திருந்து, நண்பர்களுடன் மொத்தமாக வரும்போது, 'யே தோ அந்தர் ஜாக்கே காத்தாஹை' (இவன் உள்ள போயில்ல சாப்புடுவான்) என்பார்.

சாச்சாவின் தோற்றத்துடன் அவரது வயதை ஊகித்துப் பார்த்தால் ஓய்வுபெற்று பேரன் பேத்திகளுடன் சுகமாக பொழுதைக் கழித்துக்கொண்டிருக்கவேண்டிய வயதுதான். இந்த வயதில் இப்படி ஓட்டாட்டம்போடும் வேலையில், துபாயில் அறைக்குப் பன்னிரண்டு பேர் தங்கும் அசௌகரியங்களுக்கிடையில் தங்கி, நாளில் பாதிக்குமேலான மணிநேரங்கள் தட்டெடுத்து மேசை துடைத்து, கோடைக்காலத்திலும் குளிர்காலத்திலும் நடைபாதை மேசைகளைக் கவனிப்பதில் எல்லா தட்பவெப்பத்திற்கும் உடலை வருத்தி, தேவைதானா? என்று யோசிக்கத் தோன்றும்.

யோசிப்பதைத் தவிர வேறெதையும் செய்யவும் இயலாது, தேநீருக்கும் டிப்ஸ் தரும் வழக்கத்தைக் கொணர்ந்தது நீங்கலாக.

Comments

அப்ப, உங்க நண்பர்கள் யாருக்கும் 'சுகர்' இல்லை! god forbid :-)
ஹஹ்ஹா! வக்கீலய்யா, நம்ம குரூப்புலயே இனியவன் நானுங்க!

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...