Skip to main content

எ வென்ஸ்டே - இந்திப்படம் எனது பார்வையில்

எ வென்ஸ்டே, நண்பர் பிரகாஷும் , நண்பர் சுரேஷ் கண்ணனும் ஏற்கெனவே எழுதிவிட்டார்கள். ஆளை அடிக்கும் திரைத்தன வழமைகள் இல்லாமல் இயல்பாக விறுவிறுப்பை உண்டாக்கி, ஓரளவிற்கே கணிக்க இயலும்படியான முடிவை அமைத்து அறிவுஜீவியோ, சராசரித் திரை ரசிகனோ யார் பார்த்தாலும் பாராட்டும்படியான அமைப்பில் இருக்கும் படம்.

மிஸ்டர் பொதுஜனம் பொங்கி எழுந்தால் என்ன நடக்கும்? இப்படியும் நடக்கலாம். இதுதான் கதை.

எல்லாவிதமான முன்னேற்பாடுகளையும் செய்துகொண்டு, மும்பை காவல்துறைக்கு சவால்விட்டு தீவிரவாதிகளை விடுவிக்கச் சொல்லி மிரட்டி அதில் வெற்றியடைகிறார் நஸீருத்தீன் ஷா. அந்த வெற்றிக்குப் பிறகு நடக்கப்போவதை ஓரளவிற்கு ஊகிக்கமுடிந்தாலுமே, சுவாரசியம் குறையவில்லை.

படத்தில் நஸீருத்தீனுக்கு பாத்திரப் பெயர் கிடையாது. பெயர் சொல்வதான காட்சியில் 'இவரது பெயரைச் சொல்ல விரும்பவில்லை, ஏனெனில் பெயர் சொன்னால் அவரை மதத்துடன் தொடர்புபடுத்தி நீங்கள் பேசக்கூடும், பெயர் வேண்டாமே' என்னும் வசனத்தை ஒலிபரப்புகிறார்கள்.

நஸீருத்தீனின் உருது உச்சரிப்பு, தீவிரவாதிகளுக்கு சலாம் சொல்லும் பாணி, வீட்டார்களுடன் பேசும்போது உணவுவகை கீர் (பாயசம்) குறித்துப் பேசுவது, இப்படியான சிற்சில தெளித்தல்களில் அவரை முஸ்லீமாகக் காட்ட முயற்சி செய்திருக்கிறார்களோ என்னும் நினைப்பு எழுந்தாலுமே, வடக்கில் வாழ்பவரிடம் இவ்விதத் தன்மை இருப்பதனால் மட்டுமே அவரை முஸ்லிம் என்று சொல்லிவிடமுடியாது என்னும் நினைப்பும் கூடவே எழுகின்றது. அவர் சார்ந்திருக்கும் மதத்தைச் சொல்லமாட்டோம் என இயக்குநர் அறிவித்ததால் ஏற்பட்ட உந்துதலின் விளைவுதான் மேற்சொன்ன அனுமானமேயன்றி, படத்தின் மையக் கருத்தை இந்தச் சிற்றலை எந்தவிதத்திலும் மாற்றிவிடாது.

காவல்துறையை முக்கியமானவர்களாகவும், குழப்பமான முடிவெடுக்கும் நேரங்களில் அரசியல்வாதிகள் தங்கள் பொறுப்பை காவல்துறையினரின்மேல் சுமத்துவதாகவும் காட்சிகள் இருக்கின்றன. நெருக்கடியான நேரத்தில் ஆணையர் முதல்வருடன் தொலைபேசியில் பேசுகிறார்,

'அய்யா, அவன் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறான். யாரேனும் ஒருவருடன்தான் பேசுவேன் என்கிறான். நீங்கள் நன்றாகப் பேசக்கூடியவர், அதிகாரமும் உங்கள் கையில், நீங்கள் அவனுடன் பேசுங்களேன்'

'ஆணையர் ராத்தோட், மேடைப் பேச்சென்பது வேறு தீவிரவாதியுடன் பேச்சுவார்த்தையென்பது வேறு, நீங்களே அவனுடன் பேசுங்கள்'

(பாஷன் தேனேமே அவுர் நெகோஷியேட் கர்னேமே ஃபரக் ஹை)


ஆழமான இந்த வசனத்தை எந்தவிதனான முகமாற்றங்களோ, தூக்கலான பின்னணி இசையோ, அட்டகாசச் சிரிப்போ, எள்ளல்லோ இல்லாமல் அரசியல்வாதி, அரசு அதிகாரி இவர்களிடையே நடக்கும் சாதாரண உரையாடலாக அமைத்துள்ளார்கள்.

இப்படி ஆழமான, உணர்வுமயமான பல உரையாடல்கள் மிகச் சாதாரணமாக இமைக்கும் நேரத்தில் வந்துபோகின்றன.

ஆணையர் கேட்கிறார்,

'நீ செத்துப்போயிட்டியானா பரவாயில்லையா'

'பரவாயில்லை'

'சரி, அப்ப அந்த பாம் இன்னும் பத்து நிமிஷத்துல கண்டுபிடிக்கப்படணும், போ'


பொதுவாக இந்திப் படங்களில் பாகிஸ்தானிய தீவிரவாதிகளைக் காட்டும்போது, யாரேனும் இந்திய முஸ்லிம் அதிகாரி அவரைத் தீர்த்துக்கட்டுவதாகவோ, பேச்சுவார்த்தை நடத்துவதாகவோ காட்சியமைப்பை வைத்து கொஞ்சம் மனவெழுச்சியை உண்டாக்குவார்கள். இங்கேயும் பாகிஸ்தானிய தீவிரவாதியை ஒரு முஸ்லிம் காவல்துறை அதிகாரி தீர்த்துக்கட்டுகிறார், ஆனால், மனவெழுச்சி வசனமெல்லாம் கிடையாது. தீவிரவாதியை அழைத்துச் செல்லும்போது அதிகாரியின் கழுத்திலிருக்கும் தாயத்து வெளியே இருக்கிறது, தீவிரவாதி அதனைப் பார்க்கிறான், அதிகாரி தாயத்தை தனது சட்டைக்குள் திணிக்கிறார், தீவிரவாதி கேட்கிறான்,

'உன் பெயர் என்ன?'

'அதனால் எந்த மாற்றமும் நிகழாது'


அத்துடன் முஸ்லிம் தீவிரவாதி - முஸ்லிம் காவல்துறையார் சமாசாரத்தை முடித்துவிட்டு அடுத்த கட்டத்திற்குப் போய்விடுகின்றார்கள்.

தீவிரவாதியைக் கொன்ற பிறகு ஒருஅதிகாரி இன்னொரு அதிகாரியைச் சுடுகின்றார். அது தடயம் உருவாக்குவதற்கான முயற்சி. சுடப்பட்டவர் கேட்கிறார்,

'சுடப்போறேன்னு மொதல்லயே சொல்லியிருக்கலாமில்ல'

'அதுக்கெல்லாம் நேரமில்ல, அங்க பார்'


துப்பாக்கிச் சண்டை நடந்த களத்தை நோக்கி தொலைகாட்சி நிருபர்கள் விரைந்துகொண்டிருக்கிறார்கள்.

இப்படியான சிறுசிறு ஆச்சரியங்களைத் தன்னுள் வைத்து விரியும் காட்சிகளால் மொத்தக்கதையும் விறுவிறுப்பாக சொல்லப்படுகின்றது.

இணையதளத்துக்குள் அத்துமீறி நுழைந்துபார்த்தாலே நஸீருத்தீனைப் பிடிக்கமுடியும் என்னும் நிலையில் காவல்துறை ஒரு ஹேக்கரை அழைத்து வருகிறது. 'யே பச்சா கோன் ஹை (இந்தப் பையன் யாரு)' என்று கேட்கிறார் ஆணையர், ஆனால் அவனோ அதை லட்சியம் செய்யாமல், காவல்துறையினர் உபயோகிக்கும் செல்பேசி, கணினி எல்லாம் பழையன என்று தூக்கிப்போட்டு தனது மடிக்கணினியைத் திறந்து ஆட்டத்தைத் துவங்கும்போது, 'சார், ஐயாம் ட்ராப்அவுட் பை சாய்ஸ்' என்கிறான்.

அனுபம் கேரை திரையில் ஓரிருவினாடிகள் அசைத்துப் பார்த்த இவர் பெயரைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

காவல்துறையை ஆட்டிப்படைத்து தீவிரவாதிகளை விடுவிக்க முயற்சி செய்யும் நஸீருத்தீனைக் கண்டுபிடிக்கும் போராட்டம் தீவிரவாதிகளின் விடுதலை இரண்டுமாகச் சேர்ந்து ஒரு குடும்பஸ்தர், ஒரு தொலைக்காட்சி நிருபர், ஒரு அரசியல்வாதி, ஒரு ஆணையர் இவர்களின் ஒருநாள் நடவடிக்கைகளை அப்படியே புரட்டிப் போடுன்றது.

நடிப்பு - திரை ஆளுமை என்ற கோணத்தில் பார்த்தால், நஸீருத்தின் ஷா, அனுபம் கேர் என்னும் இரண்டு நடிகர்களுக்கிடையே நடக்கும் போட்டியாகவே இந்தப் படம் செல்கின்றது.

இனிமேல் மாதூர் பண்டார்க்கர் படம் எடுக்கும்போது கொங்கணா சென்னுக்குப் பதிலாக தொலைக்காட்சி நிருபராக வரும் தீபல் ஷாவை நடிக்கவைக்கக்கூடும், அம்மணி கல் யுக் தொடர்பான தனது ஆடைக்குறைப்பு சமாசாரங்களிலிருந்து விலகத் தயாராக இருந்தாரென்றால்.

அன்புடன்
ஆசாத்

Comments

அன்புள்ள ஆசாத்,

அந்த hacker பையனைப் பற்றி எழுத வேண்டுமென்றிருந்தது என் பதிவில் விட்டுப் போய்வீட்டது. இறுக்கமான படம் சற்றே தளர்வது அந்த சொற்ப நகைச்சுவையால் மாத்திரமே.

இந்தி வசனங்ககளில் உள்ள நுணுக்கங்களை உங்களைப் போன்றவர்கள்தான் எழுத முடியும். ஆங்கில துணையெழுத்துக்களுடன் படம் பார்த்த நான் எழுத முடியாது. :-)
இனிய சுரேஷ்,

துவக்கத்தில் காவல்நிலையத்தில் நிகழும் ஓரிரு நகைஇசுவைக் கொத்துகளும் கடைசிக் காட்சி நகைச்சுவையுமே சிரிப்பிற்கென, அதுவும் கதையுடன் ஒட்டி.

அன்புடன்
ஆசாத்

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...