Skip to main content

ஃபூங்க் - திரைப்படம் - எனது பார்வையில்

இப்படித்தான் மிகவும் ஆர்வமாக ஆர்.ஜி.வி. என்றழைக்கப்படும் ராம் கோபால் வர்மாவின் வாஸ்து சாஸ்த்ராவை ஓடிச் சென்று அரங்கில் பார்த்தேன், திருப்தியில்லை.

ஷோலேயின் மொழிமாற்றமாயிற்றேவென ஆக் திரைப்படத்தை ஓடிச் சென்று பார்த்தேன், திருப்தியில்லை.

இன்றைக்கும் அப்படியே, 'ஃபூங்'கில் சிலிர்க்க வைத்திருப்பார் என நினைத்தேன், அவரது பூத் அளவிற்குக்கூட இல்லையென்றாகி பொரித்தெடுத்துவிட்டது, சல்தா ஹை.

ஃபூங் என்றால் 'ப்பூ' என்று ஊதுகிறோமே அதுதான். சூனியக்காரர்கள் ஊதும் அந்த 'ப்பூ'வும் ஃபூங்க்தானாம். பிளவாளுமை, ஆன்மீகம், அமானுடம் மூன்றையும் கலந்துகட்டி ஏதோ சொல்லப்போவதான எதிர்பார்ப்பை உண்டாக்கிவிட்டு, அந்தப் பெண்மணி அஷ்வினியின் முத்துப் பல்வரிசையைக் காட்டி அச்சுறுத்த நினத்ததுதான் மிச்சமானது.

ஒப்பந்தக்காரர் கதாநாயகனின் களப்பணியில் பிள்ளையார் சிலை கிடைக்க, தொழிலாளிகள் அதனைக் கோயிலாக்கவேண்டுமென்கிறார்கள், கதாநாயகன் மறுக்கிறான். தகவல் தொழில் நுட்ப வளாகம் கட்டுவதற்கு பெரிய ஒப்பந்தம் கிடைத்த மகிழ்வில் விருந்து நடக்கும்போது பணியில் சேர்ந்த இருவரின் நம்பிக்கைத் துரோகம் தெரியவர, திட்டி அனுப்புகிறான். வீட்டில் மனைவி, அம்மா, வேலைகாரி இவர்கள் மூவரின் இறைநம்பிக்கைக்கும் குறுக்கே நிற்காமல் தான் மட்டுமே நாத்திகனாக வாழ்கிறான்.

திடீரென்று அவனது குழந்தைக்கு பேய் பிடிக்கின்றது. மனநிலை மருத்துவர் அது பிளவாளுமை என்கிறார். பாட்டியம்மா சொன்ன பேய்க்கதைகள்தான் அவள் மனதில் புகுந்து இப்படி ஆட்டுகிறது என்கிறார். உடன் பணிபுரியும் ஒருவர், சரி ஒரு பேயோட்டியை முயற்சி செய்தால் என்ன என்றதும் வேறு வழியில்லாமல் ஒப்புக்கொள்கிறான். பேயோட்டி வந்து சோதித்துப் பார்த்து இது உனது எதிரிகளின் வேலை என எதிரிகளை அடையாளம் காட்டுகிறார். ஒப்பந்தத்தில் தனக்கு துரோகம் செய்தவர்கள்தான் ஓட்டுனரின் துணையுடன் சூனியம் வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.

பொம்மையில் சூனியம் ஊதி ஊசிகளால் குத்தி பொம்மையைத் துன்புறுத்த அது குழந்தையின் மீது அமானுடமாக எழுந்து குழந்தையை வதைக்கிறது. உச்சத்தில் குழந்தையைக் கொல்லும் கட்டத்தில், சூனியக்காரர்களின் இடத்திற்குச் சென்று சண்டையிட்டு அவர்களைக் கொல்வதில் பேயோட்டியின் துணையையும் கொண்டு வெல்கிறான்.

அந்நேரத்தில் குழந்தைக்கு மருத்துவமனையில் வைத்தியம் செய்த மனோநிலை மருத்துவர்தான் குழந்தையின் சுகத்திற்குக் காரணம் என அவனது மனைவி நினைப்பதுடன் கதை முடிகின்றது.

இந்தப் படம் பிடிக்காததன் காரணங்களுள் சில: முதலாவதாக, பல காட்சிகளை ராம்ஸே சகோதரர்களின் அமானுடப் படங்களின் மறுபதிப்பாக எடுத்திருப்பது பிடிக்கவில்லை. அதாவது, காட்சிகளைக் காட்டும்போது அமானுடத் தோற்றமளிக்கும் பொம்மைகளை அணுகிக் காட்டி காட்சிகளை அமைத்தது. அடுத்து, அவரது (ராம் கோபால் வர்மா) பூத் படத்தின் மறுபதிப்பாக பேய்பிடித்தக் குழந்தை பேசுவது, குழந்தையைக் கட்டிலில் இருந்து உயர்த்தி வீழ்த்துவது இத்தியாதிகளைக் காட்டியது. வாஸ்து சாஸ்த்ராவில் சிறுவன் பந்து விளையாடும் போது சற்றே வெளியே போவான், அப்போது அந்தப் பந்து அப்படியே அந்தரத்தில் நிற்கும். அமானுடம் வீட்டில் நுழைந்திருப்பதற்கான காட்சியை இப்படி எடுத்த ராம் கோபால் வர்மா அவர்களால் இதுபோன்ற ஏதாவது இன்னொரு உத்தியை இந்தப் படத்தில் வேறெங்கும் காண்பிக்க இயலாமற்போனதில் வருத்தமே.

சூனியக்காரர்களை அவன் வீழ்த்தியதால் அமானும் வீழ்ந்ததா?

பிள்ளையாருக்குக் கோயில் கட்ட அனுமதித்து அங்கே பூஜை நிகழும் நேரத்தில் அவன் சூனியக்காரர்களுடன் மோதியதில் பிள்ளையாரின் அனுக்கிரகத்தால் அவன் சூனியக்காரர்களை வென்றானா?

குழந்தையின் பிளவாளுமை நோக்கு சிகிச்சையளித்த மருத்துவர் வென்றாரா?

இப்படிக் கேள்விமேல் கேள்வியாக தொங்கலில் விட்டு, கதையை முடித்ததாகப் பெயர் செய்தாலுமே, சூனியமும் அமானுடமும் உண்மை என்பதையே கதையின் முடிவு வலியுறுத்துகின்றது.

படத்தில் நடித்த குழந்தையின் பெயர் அஹ்ஸாஸ் சன்னா என ஐ.எம்.டி.பி.யிலும் படித்தேன். அவரது நடிப்பு நன்றாக இருந்தது. தினமும் நாட்காட்டியில் இருக்கும் அனுமார் படத்தைக் கும்பிட்டுவிட்டுப் படுக்கும் வேலைக்காரிக்கு நடிப்பைக் காட்டும் வாய்ப்பு கிடைத்த அளவிற்குக்கூட அம்மாவாக நடித்தவருக்குக் கிடைக்கவில்லை. பாட்டியாக நடித்தவர் வெள்ளை முடியுடன் தலையை ஆட்டிக்கொண்டே வழமையான அமானுடப் படங்களில் வரும் பாட்டி. அஷ்வினி அம்மையார் அதிகம் நடிக்காதவர், இனிமேல் நடிக்கலாம். திரையில் யாரையேனும் பயமுறுத்த வேண்டியிருந்தால் தயாரிப்பாளர்கள் அம்மையாரை நாட வாய்ப்பிருக்கிறது.

மொத்தத்தில் யாருக்குப் படம் பிடித்திருக்குமோ எனக்குப் பிடிக்கவில்லை, வடக்கே எங்கோ தனியாக அமர்ந்து படத்தைப் பார்த்து ஐந்து லட்சத்தைப் பரிசாகப் பெற்றவருக்கு படம் மிகவும் பிடித்திருக்கலாம். எங்காவது காண்ட்ராக்ட் படத்தின் குறுவட்டு கிடைக்குமாவெனத் தேடவேண்டும், ஆர்.ஜி.வி. அதிலாவது என்போன்ற ரசிகனை ஏமாற்றாதிருக்கவேண்டும்.

அன்புடன்
ஆசாத்

Comments

//ஷோலேயின் மொழிமாற்றமாயிற்றேவென ஆக் திரைப்படத்தை //

மொழிமாற்றமா? இரண்டுமே இந்திதானே? ரீ-மிக்ஸ் என்று சொல்ல வந்தீர்களோ?

அவருடைய ரோட்-க்கு அப்புறம் பெரும் எதிர்பார்ப்புடன் போனது 'பூத்'க்கு. அப்புறம் RGV படங்கள் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன் :(
மன்னிக்க ஸ்ரீதர்!

அதை *ஷோலேயின் மறுபதிப்பு* என எழுதியிருக்கவேண்டும்.

அன்புடன்
ஆசாத்

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...