Skip to main content

சென்னை கானா - புத்தகம் எனது பார்வையில்-2

சென்னை கானா புத்தகம் - எனது பார்வையில்-1

வடசென்னை விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வுடன் இரண்டறக் கலந்துவிட்ட காவல் நிலையங்களும், அரசு மருத்துவமனைகளும் கானாக்களில் காணக்கிடைக்கும்போது அவை அறிமுகப்படுத்தும் சென்னையின் இன்னொரு முகம் கிழக்குக் கடற்கரைச் சாலைக்கும் அடுக்கு மாடிக்குடியிருப்புகளுக்கும் அன்னியமானது.

நீ குடிச்சுப்புட்டு கலாட்டாப் பண்ணா புடிச்சுருவாரு
அந்த போலீஸ்காரு! லாக்கப்புல அடச்சுருவாரு!
ஜாமீனுண்ணு வந்தாலும் மாலு நீ தந்தாலும்
வைத்திருக்கும் எஸ்.பி. உன்னை விடமாட்டாரு!


*

அரசாங்க ஆசுபத்திரி அங்கே ரேஷன் கடை மாதிரி
ஆயிரக்கணக்கு ஜனங்க நிக்கிதுங்க
அஞ்ஜி ரூபா நோட்டக் காட்டு
எல்லோருக்கும் முன்ன போயி
டாக்டர் முகம் பாக்கலாமுங்க! (பவுராஸ் பாண்டியன்)


எஸ்.பி., எஸ்.ஐ., ஏட்டு, மஃப்டி, அக்யூஸ்ட்டு, ஏ2, ஜாமீன், பெயிலு, கஸ்டடி, தொகுதி, பகுதி, வார்டு, சார்பட்டா இப்படியான வார்த்தைகளுள் ஏதாவதொன்றை நிமிடத்தில் ஒருமுறையேனும் உபயோகிக்கும் மக்களின் வாழ்க்கை முறையின் ஒரு சிறிய கீற்றாக பவுராஸ் பாண்டியனின் மேற்கண்ட வரிகளைக் காண முடிகின்றது.

பவுராஸின் வரிகளாக புத்தகத்தில் அச்சாகியிருக்கும் சில வரிகள் உண்மையிலேயே பவுராஸ் பாண்டியன் மெட்டுக்கட்டிப் பாடியதுதானா என்னும் சந்தேகம் இருக்கின்றது. அது தொகுப்பாசிரியர் சரிபார்க்கத் தவறியதாகக்கூட இருக்கலாம். யார் மீதும் பிழையில்லை, இவர்தான் இயற்றியதென்று உரிமை கொண்டாட முடியாமல், அதாவது எழுதி வைத்துப் பாதுகாத்து சொந்தம் கொண்டாடும் வழக்கம் முந்தைய தலைமுறை கானாக் கவிஞர்களிடம் இருந்ததில்லை. சென்னையின் கானா வரிகள் சில யாராலும் என்னுடையதென்று உரிமை கொண்டாட முடியாத அளவில் பல கானாப் பாடகர்களின் பாடல்களுடன் கலந்திருக்கின்றன. உதாரணமாக, அஞ்சல + நெஞ்சுல இயைபு, மதுர + குதுர இயைபு, வந்தனம் வந்தனம் வந்த ஜனம் குந்தணும் என்னும் துவக்க வரிகள், இவை கானாக் கவிஞர்களின் பொதுவுடைமையாகிவிட்டன. இயைபுகளைப் போலவே சில வரிகளும் பொதுவுடைமையாகியிருக்கின்றன.

ஆன அடியப்போல அதிரசங்கள் ஆயிரம்
பன்னி அடியப்போல பணியாரங்கள் ஆயிரம்
குதுர அடியப்போல கொழுக்கட்டைகள் ஆயிரம்


இப்படியாகத் தொடரும் வரிகள் கொண்ட ஒரு கானா பவுராஸ் பாண்டியனின் கானாவாக பிரசுரமாகியிருக்கின்றது. வடசென்னை நாள்களில் இதே வரிகளை வேறு விதமாகக் கேட்டதுண்டு.

ஆன அடியப்போல அதிரசங்கள் ஆயிரம்
பூன அடியப்போல புட்டரிசி ஆயிரம்
எரும அடியப்போல எள்ளடைகள் ஆயிரம்
- இப்படி இந்த வரிகளின் அமைப்பை ஏற்கெனவே எழுபதுகளில் கேட்டுவிட்டதால், அதனை குறிப்பிட்ட கானாக் கவிஞரின் வரியாக ஏற்காமல், பொதுவுடைமையாகிப்போன கானா வரிகள் + கருத்து என்ற அளவில் ரசித்துப்போக முடிகின்றது.

சித்திரை நிலவில்
சந்தன உடலில்
சிந்திடும் முத்தங்கள்
(ரேவ் ரவி) - இவை கானாவிற்கு அன்னியமான வரிகள்.

கூவிளம் புளிமா
கூவிளம் புளிமா
கூவிளம் தேமாங்காய் - இப்படி சொல்லி வைத்தாற்போல் வார்த்தை விளையாட்டுகள் கானாக்களில் உண்டென்றாலும், பெரும்பாலான நேரங்களில் அடியின் முதற்சீரும் மூன்றாவது சீரும் எழுதிப் பார்க்கையில் ஒன்றாது (இசையில் ஒன்றிவிடும்). அதற்கான சமீபத்திய உதாரணம்,
வாள மீனுக்கும் வெலாங்கு மீனுக்கும் - தேமா தேமாங்காய் புளிமா தேமாங்காய் - இதில் வாள மீனுக்கான மீட்டரிலேயே வெலாங்கு மீனைப் பாட உலகநாதன் பட்டிருக்கும் கஷ்டத்தை கொஞ்சம் பாடலைக் கவனித்தாலே விளங்கிக்கொள்ளலாம். வெலாங்கு என்கிறாறா? வெலங்கு என்கிறாறா? எனப் புரிந்துகொள்ள இயலாத அளவிற்கு வெலங்கு மீனுக்கும் என வேகமாகப் பாடுவார். ஆக, அப்படி இசைக்கு மட்டுமே மசியும் மண்ணின் மணங்கொண்ட வரிகளில், மேற்சொன்ன சித்திரை நிலவில் சந்தன உடலில் சிந்திடும் முத்தங்கள் போன்ற சமகால திரையிசை வரிகளையொத்த வரிகளைக் கண்ட வியப்பில் இது கானாவா என்னும் ஆவலுடன் வரிகளைத் தொடர்ந்தால், உள்ளே,
கனகாப் போல என்ன மயக்கி மோகினி போல வந்தா
டிஸ்கோ சாந்தி போல ஆடி டக்குன்னவ வுட்டுப்போன!
என பாதை மாறி, கானாக்குள் நுழைகின்றார்.

கஜல் பாடகர்கள் ஆழமான வார்த்தைகள் கொண்ட கஜல்களையே தொடர்ந்து பாடினால் சில ரசிகர்களிடமிருந்து எளிமையான கஜல்களுக்கான சீட்டுகள் வரும். அதைப் போலவே, கானாக்களில் பல நேரங்களில் கேளிக்கை மட்டுமே முன்னுரிமை பெற்றுவிடுவதும் உண்டு. இவை கானாப் பாடல்களுக்குத் தேவையான அடர்வைக் குறைத்தபோதிலும், சில நேரங்களில் இவையும் தேவையாக இருக்கின்றன.

திரைப் பாடல்களின் வர்ணமெட்டுக்கேற்ப கானாக்கள் எழுதுவதும் ஆண்டுகளாக மரபாகத் தொடர்கிறது. சென்னை கானா புத்தகத்திலும் சில பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

ஒண்ணா இருக்கக் கத்துக்கணும் - இந்த
உண்மையச் சொன்னா ஒத்துக்கணும்
காக்கா கூட்டத்தப் பாருங்க - அதுக்கு
கத்துக் குடுத்தது யாருங்க?...இது வர்ணமெட்டு

ஒண்ணா குடிக்கக் கத்துக்கணும் - இந்த
ஊரு வம்ப வாங்கிக்கணும்
போலீஸ் டேஷனப் பாருங்க - அதுக்கு
கேசு குடுத்தது யாருங்க?...
இது அந்தோணி எழுதுவது.

இதில் அந்த டேஷன்தான் (ஸ்டேஷன் அல்ல) கானாவின் மையமாக இருக்கிறது, கூடுதலாக இதனைப் பாடும்போது அந்த டேஷன், டேஷனுக்கும் டேஸனுக்கும் இடைப்பட்ட 'ஸ்ஷ'வாக உச்சரிக்கப்படும்.

தொடரும்...

Comments

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...