வழமையான சிக்கன்65, பட்டர் சிக்கன், சில்லி சிக்கன் ஆசாமிகளுக்கு சிக்கன் ஆஃப்கானி பிடிக்காது.
புளிப்பு, காரம், துவர்ப்பு இவற்றைக் கலந்துகட்டி அரைத்தால் என்ன சுவை வருமோ அப்படியான மாறுபட்ட சுவையாக இருக்கும். மசாலாவுடன் சேர்த்து கொஞ்சம் பாக்கையும் அவர்கள் அரைக்கின்றார்களோ என்னும் சந்தேகம் வரக்கூடும். கொஞ்சம் கொஞ்சமாக நாக்கு சுவையறிந்து மூளைக்கு தகவல் அனுப்பிய பின்னரே அந்தத் துவர்ப்பு ஏலக்காயை அரைத்துப் போட்டதால் உண்டானது விளங்கும். நிறத்தை விடுத்து அமைப்பை மட்டும் பார்த்தால் நமது செட்டிநாடு உணவகங்களில் கிடைக்கும் சிக்கன் போன்லெஸுடன் ஒத்துப்போகும்.
இந்தப் பதார்த்தத்தில் கோழிக்கறியை எலும்புடன் போடுவதா எலும்புகளை நீக்கிவிட்டுப் போடுவதா என்னும் விவாதங்கள் பாகிஸ்தானிய அரசியல் விவாதங்களை விட அதிசிக்கலானவை, அதனால் தேவையற்றவை. நான் எப்பொழுதாவது சாப்பிடும் துபாய் சில்வர் ஈகிள் உணவகத்தில் எலும்புகளை நீக்கிவிட்டுத்தான் சமைக்கிறார்கள். எலும்புகள் நீக்கப்பட்ட மாமிசத்தை சாப்பிடுவதில் அப்படியொன்றும் பேரானந்தம் கிடைப்பதில்லைதான், ஆனாலும், என்னளவில் சிக்கன் ஆஃப்கானி மட்டும் அதற்கு விதிவிலக்கு.
மிளகுக் காரமும், எலுமிச்சை புளிப்பும் பாகிஸ்தானி சாலாடுகளில் தூவித் தின்பதோடு இந்த ஆஃப்கானி சமாசாரத்தில் அதுவே சமையலுக்கும் உபயோகப்படுத்தப்பட்டு பொறித்த முட்டையுடன் கிடைக்கும் இது தென்னிந்தியர்களுக்கு புதிது.
உணவுக்கு முக்கியம் பரிமாறும் விதம் என்பதில் மாற்றுக் கருத்து யாரேனுக்கும் இருந்தால் சிக்கன் ஆஃப்கானி சாப்பிட்டால் கருத்தை மாற்றிக்கொள்ளக்கூடும். இதில் குழம்புக்கு போர்வையாக நிற்கும் பொறித்த முட்டை அதற்காக வாதிடும். அதாவது, கிண்ணத்தில் சுடச்சுட சிக்கன் ஆஃப்கானியை ஊற்றிய பிறகு அதனை மேசைக்கு எடுத்து வருமுன் கோப்பையின் விட்டத்தின் அளவிற்கு ஆம்லெட் போட்டு குழம்பை ஆம்லெட்டால் மூடி எடுத்து வருவார்கள். இரண்டு மூன்று பேராக அமர்ந்து சாப்பிட்டாலும் கன்னா பின்னாவென ஆம்லெட்டை சிதைத்து விடாமல் மூலையில் ஓட்டைபோட்டு கரண்டியை உள்ளே செலுத்தி சுரங்கம் தோண்டுகின்ற அமைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக குழம்பை எடுத்து தந்தூரி ரொட்டியுடன் சாப்பிட்டால் மூன்று நான்கு ரொட்டிகள் முடியும் வரையில் கூட குழம்பின் சூடு ஆறாது. அதற்குள் ஆமெல்ட்டின் கீழ்ப்பகுதியும் குழம்பில் நன்றாக ஊறி இன்னொரு சுவையைத் தரத் தயாராகிவிடும்.
பாகிஸ்தானி, லெபனானி, ஈரானி, ஈராக்கி, அரபி இப்படி எங்கு சென்றாலும் அவர்கள் பரிமாறும் அதிகப்படியான உணவைப் பார்த்துப் பார்த்து நமது மலையாளி காக்கா கடைகளுக்கோ செட்டிநாடு வகையறாக்களுக்கோ போகும்போது பரிமாறப்படும் உணவு அளவு குறைவாக இருப்பது போன்ற உணர்வு உண்டாகின்றது. ஒரு செட்டிநாடு உணவகத்தில் இறால் மசாலா சொல்லிவிட்டு வரட்டும் வரட்டும் என்று காத்திருந்து வினவினால், இதோ தட்டில் ஊறுகாய் போல வைத்திருப்பதுதான் இறால் மசாலா என்றார்கள். எண்ணிக்கை கணக்கில் பத்து இருக்கும் என்று கூடவே புள்ளிவிவரத்தையும் சொன்னபோது, துபாய் மார்க்கோ போலோ ஓட்டலில், பாம்பே உணவகத்தில் உள்ளங்கை கொள்ளாத இறாலை கஜலுடன் சேர்த்து ருசித்தது நினைவிற்கு வந்திருக்கக்கூடாது; வந்துவிட்டது. இனிமேல் இந்த பொத்தான் இறாலைத் தொடுவதில்லை என சபதம் ஏற்று ஒன்றரை மாதங்களாகப் போகிறது.
ஷவர்மா (அனலில் வாட்டிய இறைச்சித் துணுக்குகள் சுற்றப்பட்ட ரொட்டி) சென்னை சிட்டி சென்டர் உணவுக்கூடத்தில் நாற்பது ரூபாய்க்குக் கிடைக்கிறது. புர்கித் சாலையின் துவக்கத்தில் அராபிய பாணியில் அனலில் வாட்டிய முழுக்கோழியை பாதியாக்கி நூறு ரூபாய்க்கு ஒரு காக்கா விற்கிறார், கோழியின் அளவுதான் வளைகுடாவைச் சேர்ந்த சாதியா சிக்கன், ஃபக்கீஹ் சிக்கன் வகையறாக்களில் பாதியாக இருக்கிறது. டிக்காக்களும் கபாப்களும் சந்துக்கு சந்து கிடைக்கின்றன. இதைப்போலவே சென்னைக்கு யாரேனும் எங்கேனும் சிக்கன் ஆஃப்கானியை அறிமுகப்படுத்திவிடுவார்கள்...அடுத்த விடுமுறையில் சாப்பிடலாம். ஆனால், நம்மூரில் ஏலக்காய் விற்கும் விலைக்கு சிக்கன் ஆஃப்கானி என்ன விலைக்கு விற்கப்படும் என்பதை கணக்குப்போட்டால் கண்ணைக் கட்டுகிறது.
*
ஆஃப்கானி கோழி அதிசுவை தந்தூரி
தோற்காத ராய்த்தா தொடுப்போடு - ஏற்காதோ
கும்பி நிறைந்தாலும் கூடவொரு தட்டுண்ண
வம்பு வளர்க்கின்ற வாய்!
*
துபாய் நண்பர்கள் முத்தீனாவிலோ, ஹோர்-அல்-அன்ஸிலோ ஈகிள் உணவகத்தில் சிக்கன் ஆஃப்கானி சாப்பிடுவதாக இருந்தால், இந்தப் பதிவின் முதல் வரியைப் படிக்கவும்.
அன்புடன்
ஆசாத்

Comments