Skip to main content

ஜெயமோகன் அய்யா சொல்லிய தவறான தகவல் - எம்.ஜி.ஆர். பாடலில்

ஜெயமோகன் அய்யாவின் தீவிர வாசகன் இல்லையென்றாலும், இலக்கியம் பேசும் நண்பர்களின் பரிந்துரையின்படி அய்யாவின் விஷ்ணுபுரமும், கொற்றவையும் என்னால் வாங்கப்பட்டு, கொஞ்சமே படிக்கப்பட்டு புத்தக அலமாரியில் இருக்கின்றன.

நேற்று புத்தகக் கண்காட்சியில் மனுஷ்யபுத்திரன் அவர்களை நலன் விசாரித்துவிட்டு உயிர்மையில் அய்யாவின் புத்தகங்கள் இரண்டினை வாங்கிவந்திருக்கிறேன். இன்றைக்கு இரவுக்குள் இரண்டையும் முடிக்க முயற்சி செய்வேன் என்றபோது நண்பர் சொன்னார்,

"பாய், நிழல்வெளிக் கதைகள முடிச்சுருவீங்க. நவீன தமிழிலக்கிய அறிமுகத்த முடிக்க முடியாது...ஹெவி பாய்"

ஆனால், நேற்று இரவு சோனி சப்இல் தேவ்தாஸ் ஓடியது. இஸ்மாயில் தர்பாரின் இசையில், நுஸ்ரத் பதரின் வரிகள் 'சில்சிலா யே சாஹத்கா'வும் 'மாரு டாலா'வும் புத்தகம் படிக்கும் எண்ணத்தை மூடிவைத்தன. நண்பர் சொன்னதுபோல் நவீன தமிழிலக்கியத்தை மட்டுமல்லாமல், நிழல்வெளிக் கதைகளையும் முடிக்க முடியவில்லை. இது இங்கேயே இருக்கட்டும்.

*

எம்.ஜி.ஆர். நினைவுநாளன்று, 'ஜெயாவில் சத்யராஜின் தேன்கிண்ணத்தைப் பார்' என்னும் குறுஞ்செய்தியை நண்பரும் எழுத்தாளருமான இரா.முருகன் அவர்கள் அனுப்பியிருந்தார். காலையில் தவறவிட்ட தேன்கிண்ணத்தை இரவு பதினொன்றரை மணிவரையில் விழித்திருந்து பார்த்தேன்.

கில்லியின் உபயத்தில், ஜெயமோகன் அய்யாவின் இந்தப் பதிவையும் படித்தேன். எஸ்.ரா., கலாப்ரியா, நாஞ்சில்நாடன் ஆகியோரும் எம்.ஜி.ஆர். ரசிகர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதைப் படிக்கையில் மகிழ்வாக இருந்தது.

இலக்கியம் படைப்போர் சிலரின் அலைவரிசையுடன் எனது அலைவரிசையும் எம்.ஜி.ஆர். ரசிப்பு தொடர்பாக ஒன்றாக இருப்பதில் சிறிய மகிழ்ச்சி. சின்னச்சின்ன சந்தோஷங்கள்தானே வாழ்க்கையை உருவாக்குகின்றன.

மேற்சொன்ன பதிவில் அய்யா அவர்கள் எம்.ஜி.ஆர். படத்தின் காட்சிகளை நகைச்சுவையாகக் குறிப்பிட்டதை ரசித்தேன். சில இடங்களில் வாய்விட்டுச் சிரிக்க முடிந்தது. நாஅர்ஓயில் (நாகர்கோயில்) பாணி தமிழால் கூடுதல் நகைச்சுவை.

இவ்வளவு அழகாக நகைச்சுவை எழுதியிருக்கும் அய்யா சொல்லும் குறிப்பிட்ட பாடலுடன் அவர் சொல்லிய நகைச்சுவையை பொருத்திப் பார்த்தால் ஒட்டவில்லை.

//அத்துடன் மழையில் நனைந்து பாடுவதையும் எங்களூர்க்காரர்கள் விரும்பவில்லை. தென்குமரிநாட்டில் வருஷத்தில் ஏழுமாசம் மழை. எளவெடுத்த மழையாலே பிள்ளைய பெருத்துப்போய் பிளைக்கவும் பளுதில்லியே என்று நொந்துபோயிருக்கும் மக்களுக்கு மழையில் எம்.ஜி.ஆர் 'இளமை முழுதும் நனைய நனைய மழையடிக்குதடி' என்று பாடும் ஜெயலலிதாவுடன் சேற்றில் குதித்து ஆடுவது கடுப்பேற்றியது. 'அந்த பட்டத்திக் குட்டிக்கு பிராந்துண்ணா இவனுக்கு எங்க போச்சு புத்தி? ஒரு நாலு நல்லவாக்கு சொல்லி எடுத்து உள்ள கூட்டிட்டுபோயி சுக்குவெள்ளமோ மற்றோ குடுக்கப்பிடாதா? வல்ல நீர்தோசமோ மற்றோ பிடிச்சா பின்ன இவன்லா வச்சு பாக்கணும்?'// இதுதான் அய்யா எழுதியிருப்பது.

முதல் பிழை:
அய்யா சொல்லிய பாடல் 'இளமை முழுதும் நனைய நனைய மழையடிக்குதடி' கிடையாது.

அது 'ஆடை முழுதும் நனைய நனைய'. சல்தா ஹை...இது ஒன்றும் பெரிய தவறு கிடையாது. தட்டச்சுப் பிழையாகக்கூட இருக்கலாம்.

ஏ(ன்)! இதப்புடிச்சு தொங்க இந்தப் பாண்டிக்கென்ன பிராந்தா :-)


இரண்டாவது பிழை:
'என்று பாடும் ஜெயலலிதாவுடன் சேற்றில் குதித்து ஆடுவது'

இந்தப் பாடலை அம்மையார் தனியாகத்தான் மழையில் நனைந்தபடி பாடுவார். எம்.ஜி.ஆர். மழையில் நனைந்தபடி இந்தப் பாடலில் ஆடும் காட்சி கிடையாது. தனியாக மழையில் ஆடும் அம்மையாரை ஜன்னலின் வழியாகப் பார்த்து புன்னகைப்பதான ஒருகாட்சியிலும் பாடலின் கடைசியில் மாலையிடும் காட்சியிலுமே எம்.ஜி.ஆர். உண்டு.

அம்மையாருடன் எம்.ஜி.ஆரும் சேர்ந்து மழையில் நனைவதோ, சேற்றில் குதிப்பதோ கிடையவே கிடையாது.


மூன்றாவது பிழை:
'ஒரு நாலு நல்லவாக்கு சொல்லி எடுத்து உள்ள கூட்டிட்டுபோயி சுக்குவெள்ளமோ மற்றோ குடுக்கப்பிடாதா? வல்ல நீர்தோசமோ மற்றோ பிடிச்சா பின்ன இவன்லா வச்சு பாக்கணும்?'

இதுதான் சற்றே பெரிய பிழையாக எனக்குப் படுகிறது.

ஏனென்றால், மற்ற மழைப்பாடல்களுக்கும் இந்த மழைப்பாடலுக்கும் இருக்கும் வித்தியாசமே அதுதான். அதாவது, பாதிப்பாடலில் மழையில் நனைந்துவிட்டு, பிறகு வீட்டிற்குள் வந்து தலைதுவட்டி, உடைமாற்றி வேறு உடையில் பாடல் தொடரும்.

மிகக் குறிப்பாக உலர்ந்த கூந்தல் ரசிகனுக்குத் தெரியும் விதமாகவும் ஒரு காட்சி படமாக்கப்பட்டிருக்கும்.

"நன்ஜிட்டா தலியத் தொடிக்ணும்னு சோக்கா வாத்ஜ்யார் சொல்லிக்ரார் மாமே" என வக்காலத்து வாங்கவில்லை, மாறாக, ஜெயமோகன் அய்யா சொல்வதுபோல் அம்மையாருக்கு 'பிராந்து' இந்தப் பாடலில் கிடையாதென்று சொல்கிறேன், அவ்வளவே.

நனைகிறார், உள்ளே வருகிறார், உடை மாற்றுகிறார், பாடலைத் தொடர்கிறார். இப்படி நனைவதும் - உடைமாற்றியபின் பாடலைத் தொடர்வதுமான மழைப்பாடல் (எனது இந்த நிமிட நினைவுத்திறனின்படி) இந்தப் பாடல் மட்டுமே.

அய்யா சொல்லும் 'உள்ள கூட்டிட்டுபோயி'யானது பாடலிலேயே நிகழ்ந்துவிடுகிறது. மழையில் நாயகி நனைந்த பின்னர், அப்படி நிகழும் காட்சிகளை, அதாவது 'உள்ள போயி' காட்சிளைக் கண்டபின்னும், இந்த யோசனைகளைச் சொன்னால், நாயகிக்குப் பிராந்தா? சொல்பவருக்குப் பிராந்தா?

வேறு ஏதோ பாடலை எழுதும் நினைவில் இந்தப் பாடலை ஜெயமோகன் அய்யா அவர்கள் குறிப்பிட்டிருப்பார் என்றே நான் நினைக்கிறேன்.

அய்யாவிடம் பழக்கமிருக்கும் நண்பர்கள் அது வேறு எந்தப் பாடல் என்று கேட்டுச் சொன்னார்களென்றால் நலமாக இருக்கும்.

*****

அய்யா சொல்லும் பாடல்: இளமை முழுதும் நனைய நனைய
எனது புரிதல்: ஆடை முழுதும் நனைய நனைய
படம்: நம்நாடு
நடனம்: தங்கப்பன் மாஸ்டர்
பாடல்: வாலி
இசை: எம்.எஸ்.வி.

எனது வீட்டிற்கு வரும் வாய்ப்பு உள்ள நண்பர்களுக்கு தேநீருடன் இந்தப் பாடல் போட்டுக் காண்பிக்கப்படலாம், அவர்கள் கேட்டார்களென்றால்.

அன்புடன்
ஆசாத்

Comments

Anonymous said…
அப்பறம், நம்பியார் திருந்துகிறது போலக் க்ளைமாக்ஸ் கொண்ட படத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறாரே? அது தொழிலாளிதானா? நான் ஆணையிட்டால் படமோ என்று குழப்பமாக இருந்தது.
//முதல் பிழை:
அய்யா சொல்லிய பாடல் 'இளமை முழுதும் நனைய நனைய மழையடிக்குதடி' கிடையாது.
அது 'ஆடை முழுதும் நனைய நனைய'. சல்தா ஹை...இது ஒன்றும் பெரிய தவறு கிடையாது. தட்டச்சுப் பிழையாகக்கூட இருக்கலாம்.//
ஒரு வேளை ஒரிஜினலான வரிகள் சென்சாரில் மாற்றப்பட்டுமிருக்கலாம். ஏனெனில் இளமை முழுதும் நனைய என்பது கிளுகிளுப்பை அதிகரிக்கிறது.

மற்றப்படி நீங்கள் சொல்வதுபோல எம்ஜீஆர் உள்ளேயேதான் இருக்கிறார்.

//நனைகிறார், உள்ளே வருகிறார், உடை மாற்றுகிறார், பாடலைத் தொடர்கிறார். இப்படி நனைவதும் - உடைமாற்றியபின் பாடலைத் தொடர்வதுமான மழைப்பாடல் (எனது இந்த நிமிட நினைவுத்திறனின்படி) இந்தப் பாடல் மட்டுமே.//
மழையில் நனையாவிட்டால் என்ன? கிணற்று நீரில் குளித்து கொண்டே “அந்த மாப்பிள்ளை காதலிச்சான் கையைப்பிடிச்சு” என்று பாடும் கே.ஆர்.விஜயா (சமீபத்தில் 1965-ல் வெளிவந்த ”பணம் படைத்தவன்”), உடலை துவட்டிக் கொண்டு மாற்றுடை அணிந்து பாடலை கண்டின்யூ செய்வார். அது வரைக்கும் எம்.ஜீ.ஆர். தனியாக அறையில் தனிச்சானலில் ஆடுவார்.

மழையில் நனையும் பாட்டு சமீபத்தில் 1964-ல் வந்த “பணக்கார குடும்பம்” படத்தில் வந்த “இதுவரை நீங்கள் பார்த்த பார்வை இதுக்காகத்தானா” என்பதாகும். எம்.ஜி.ஆர். சரோஜாதேவியை அப்படியே பிழிந்து எடுத்து விடுவார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
ROSAVASANTH said…
உங்கள் தயவில் போய் ஜெயமோகன் கட்டுரையை படித்தேன். இத்தனை சாதாரணமான (அசட்டு நகைச்சுவை, தமிழகம் முழுவதும் தெரிந்த (`பைப்பு இருக்கிறது, பம்பு இல்லை' போன்ற) செய்திகள்) ஜெயமோகனிடம் இருந்து படித்ததாக் தொன்ன்றவில்லை. துவக்கத்திலிருந்தே அசட்டுத்தனம் தூக்கல்; அதை அங்கதம் என்று அவர் நினைத்து செய்திருக்கிறார் என்று தெரியும்போது தாங்கமுடியவில்லை.
இனிய பிரகாஷ்ஜி,

கடைசியில் மனம் திருந்துவதும் அந்த மிஸ்டர் கபாலியும் இடிக்கின்றன. அநேகமாக இது 'தொழிலாளி'யாக இருக்கலாம்.

*

இனிய ராகவன் சாஹேப்,

நன்றிகள்.

*

இனிய ரோசா வசந்த்,

எனக்கும் அந்த எண்ணம் கொஞ்சம் உண்டானது.

பலகுரல் மேடைக் கலைஞர்களுக்கு வேண்டுமானால் எம்.ஜி.ஆரின் சிதைந்த குரல் நகைச்சுவைக்காகத் தேவைப்படலாம்; ஜெயமோகன் அய்யாவுக்கு அல்ல.

அன்புடன்
ஆசாத்
Anonymous said…
ஆஸாத் அண்ணன்

//மேற்சொன்ன பதிவில் அய்யா அவர்கள் எம்.ஜி.ஆர். படத்தின் காட்சிகளை நகைச்சுவையாகக் குறிப்பிட்டதை ரசித்தேன்//

இப்படியும் சொல்றீங்க

//துவக்கத்திலிருந்தே அசட்டுத்தனம் தூக்கல்; அதை அங்கதம் என்று அவர் நினைத்து செய்திருக்கிறார் என்று தெரியும்போது தாங்கமுடியவில்லை//

என்று ரோஸா வஸந்த் அண்ணாச்சி சொன்னதும் தெளிந்து போய்

//பலகுரல் மேடைக் கலைஞர்களுக்கு வேண்டுமானால் எம்.ஜி.ஆரின் சிதைந்த குரல் நகைச்சுவைக்காகத் தேவைப்படலாம்; ஜெயமோகன் அய்யாவுக்கு அல்ல.//

என்றும் சொல்கிறீர்கள்

'ஜெயமோகன் அய்யா அபத்தமாக எழுதியிருக்கிறர் சகிக்கலை' என்று சொல்வதற்குக் கூடவா யாராவது எடுத்துத் தர வேண்டும் உங்களுக்கு?

பெரியவர்களிடம் மரியாதை தேவைதான். அதுக்காக பெரியவங்க பண்ற சிறுபிள்ளைத் தனத்தையும் 'சல்தா ஹை'ன்னு விட்டுட்டுப் போறது 'சல்தா ஹை' இல்லை :-) என்னமோ போங்க, நல்லா இருந்தா சரிதான்

சாத்தான்குளத்தான்
இனிய தம்பி ஆசிப்,

உடலியல் குறைபாட்டை நகைப்புக்கிடமாக்குவது சரியல்ல. அது குறித்து வஸந்த் சொன்னதும், நானும் சொன்னேன். ஜெயமோகனும் உடலியல் குறைபாடு தவிர்த்த சில நகைச்சுவைகளையும் சொல்லித்தானே இருக்கிறார்.

என்றாலும், நீங்கள் சொல்லியது சரியே. பல நேரங்களில் என்னால் பெரியவர்கள் செய்வதை நேரடியாக இது தப்பு என்று சொல்ல இயலாது; சில நேரங்களில் மட்டுமே முடியும்.

இப்பொழுதெல்லாம் சிறியவர்கள் செய்யும் தப்புகளையும் பக்குவமாகவே சொல்லிக்காட்டும் வழக்கம் தொற்றத் துவங்கியிருக்கிறது.

எதற்குமே பொங்குவதில்லை.

சரியோ தவறோ இந்தப் பழக்கம் தொடர்கிறது. சல்தா ஹையாகவே இருக்கட்டுமே :-)

அன்புடன்
ஆசாத்
ஓகை said…
பாய், உங்கள் தயவால் ஜெயமோகன் பக்கத்தைப் படித்தேன். மலிவான நகைச்சுவையென எனக்குத் தோன்றுகிறது. அவர் கூறியிருக்கும் அளவுக்கு எம்ஜியாரின் குரல் சிதைந்திருந்ததாக எனக்குத் தொன்றவில்லை. பொதுவாகவே திரைப்படங்களில் இருக்கும் யதார்த்தக் குறைவுகளையும் அபத்தங்களையும் எம்ஜியார் படங்களுக்கு மட்டுமே உரியது என்று சொல்ல முயல்கிறாரோ என்று தோன்றுகிறது.

அப்பறம் டோண்டய்யா சொல்லுகிற தகவலும் சரிதானே!

சரி அதையெல்லாம் விடுங்க, கொஞ்சம் பின்னினைவில் தோய்ந்து, வான்மழையில் நனைந்து, பொன்னூஞ்சலில் ஆடுவோம்;

"ஹாய் ஹாய் ஏ.. மஜ்பூரீஇ........."

உறுகவலை உலகாய் ஆன கணத்தில் உள்ளும்போதும்
ஊற்றெடுக்கும் உற்சாகத்தை உள்நிறைக்கும் பாடல்.
பாய், ஜெயமோகனின் கட்டுரை நகைச்சுவையை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் குற்றச்சாட்டு அதிலிருக்கும் நகைச்சுவையைப் பற்றியது அல்ல. அதிலிருக்கும் தகவல் பிழைகளைப் பற்றியது. அந்த தகவல் பிழைகள் உண்மையென்றாலும் கட்டுரையின் அடிப்படை சிதையப்போவதில்லை. ஆனால் ரோஸா வசந்த் வந்து நகைச்சுவையைப் பற்றிச் சொன்னதும், உடனே உடலைப் பற்றிக் குற்றம் சொன்னதெல்லாம் தெரிகிறது. பெரிய பதிவில் அதைப் பற்றிய வரி இல்லை. சரி போகட்டும். ஆசிஃப் வருகிறார், உடனே மரியாதை பற்றிய சிறியவர் பெரியவர் பக்குவம் சொல்லாடல் வருகிறது. பிராந்து என்பது பக்குவமான சொல்லாடல் என்றறிந்தேன். சந்தோஷம். தொடரட்டும் உங்கள் பக்குவம்.

நகைச்சுவை கட்டுரையை தீவிரமாக அணுகும் மனநிலை தீவிர ரசிகர்களுக்கு புதியதல்ல. அதன் வழியில் நீங்கள் இட்டிருக்கும் கட்டுரையும் ஒன்று. ஜெயமோகனின் கட்டுரை சீரியஸ் நகைச்சுவையை நோக்கி முயல்கிறது என்றால் உங்கள் சீரியஸ் கட்டுரை நகைச்சுவையாக மிளிர்கிறது. அதில் ஜெயமோகனால் உங்களை வெல்ல முடியாது. வாழ்த்துகள்.


ஒருவேளை ஜெயமோகன் இந்த தகவல் பிழைகளைச் செய்யாதிருந்தால் உங்களால் உறங்கமுடியாமல் போயிருந்திருக்கும். இல்லையென்றால் உங்கள் எம்ஜியார் விசுவாசத்தை எப்படி காட்ட? அதற்காகவே ஜெயமோகனுக்கு ஒரு நன்றி சொல்லவேண்டும்.


மழையில் நனைந்து பின் துவட்டிய பாடலை தவறாக ஜெயமோகன் காட்டலாமா? தமிழில் எந்தப் படத்திலும் எந்த நாயகனும் நாயகியும் மழையில் நனைந்த பின்பு தலையைத் துவட்டாமல் அடுத்த காட்சிக்கு வந்ததே இல்லை. இதை காண்பிக்காத தமிழ்ப்படங்களே இல்லை. உண்மையில் எந்த நடிகருக்கு நடிகைக்கு மழையில் நனைந்த பின்பு ஜலதோஷம் வந்திருக்கிறது? அப்படியென்றால் தலைதுவட்டி, சாம்பிராணி காட்டி, சுக்கு வெல்லம் கொடுத்து எல்லாம் நடந்திருக்கிறது. இது நீங்கள் சொன்னதுபோல் சற்றே பெரிய பிழையா, பெரிதே பெரிய பிழை அன்றோ? இந்த அடிப்படைகூட தெரியாமல் ஏன் ஜெயமோகன் இந்தக் கட்டுரை எழுதினாரோ, எனக்கே ஆச்சரியம்தான்!!! இன்னொரு முறை ஜெயமோகன் கட்டுரையைப் படிக்கவும். ஓரிடத்தில் க்கோ ச்சோ இல்லாமல் இருக்கிறது. ஜெயமோகன் அய்யா எழுதிய தவறான தமிழ் - எம்ஜியார் கட்டுரையில் என்ற பதிவை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். நன்றி.
கோபமே வராதா பாய் உங்களுக்கு என்று கேட்டது நினைவுக்கு வருகிறது...

கோபம் வரும் என்று கூறினீர்கள்!
இனிய நட்ராசன் அய்யா,

நன்றிகள்.

*

இனிய வக்கீலய்யா,

என்ன பண்ண? ஹரன் பிரசன்னா இப்படி பின்னூட்டம் எழுதுனா கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா, அதுக்குன்னு அவர மாதிரியே நாமளும் பொங்கலாமா? கூடாது.

கொஞ்சம் யோசிச்சுதான் எழுதணும்.

*

இனிய பிரசன்னா,

நன்றிகள்.

எனது கட்டுரையில் எம்.ஜி.ஆர். விசுவாசம் தெரிகிறதென்றால், உங்கள் கட்டுரையில் ஜெயமோகன் விசுவாசம் தெரிகிறது.

எம்.ஜி.ஆர். விசுவாசத்தால் எனக்கு பலன் ஏதும் இல்லை.

அன்புடன்
ஆசாத்
//எம்.ஜி.ஆர். விசுவாசத்தால் எனக்கு பலன் ஏதும் இல்லை. //

பாய் நீங்கள் சொல்வது உண்மைதான். எம்ஜியார் விசுவாசத்தால் உங்களுக்குப் பயனில்லை. இருந்திருந்தாலும் அது நல்லதாகவே இருந்திருக்கமுடியும். ஜெயமோகன் விசுவாசம் போன்றதல்ல அது. பிரச்சினைகள் அற்றது. நன்றி.
அன்பு ஆசாத்,

தமிழர்களின் நகைச்சுவையுணர்வு மீது எனக்கு எப்போதும் நம்பிக்கையிருக்கிறது. இயக்குநர் மகேந்திரன் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் "உலகிலேயே தமிழ்த்திரையுலகில்தான் அதிகளவு நகைச்சுவை நடிகர்கள் இருக்கிறார்கள்" என்கிற விஷயத்தை பகிர்ந்து கொண்ட போது எனக்கு ஆச்சரியமாக இல்லை. தம்மையே கிண்டல் செய்தாலும் ரசிப்பவர்கள் தமிழர்கள்.

நிற்க. ஜெயமோகனின் 'தொப்பி' கட்டுரையை படித்தவுடன் (ரொம்பவும் ரசித்துச் சிரித்தேன்) உடனே நினைவுக்கு வந்தவர் நீங்கள்தான். எம்.ஜி.ஆர் படங்கள், காட்சிகள், சம்பவங்கள் போன்றவற்றை குழு மடல்களில் நீங்கள் துல்லியமாக விவரிக்கும் போது பிரமிப்பாகவே இருக்கும்.

தீவிரமான இலக்கியப்பரப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் ஜெயமோகன் மாறுதலாக இம்மாதிரியான lighter way கட்டுரைகளை எழுதத் தொடங்கியிருப்பது குறித்து எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. ஆனால் இது வரவேற்கத்தக்க மாற்றம்தான் என்று எனக்குப் படுகிறது. ஜெயமோகனின் அந்தக் கட்டுரை முழுக்க நகைச்சுவை தொனியில்தான் எழுதப்பட்டிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. பஞ்சதந்திரம் திரைப்படத்தில் கமல்ஹாசன் கூறுவதாக ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது. "ஜோக்கையெல்லாம் அனுபவிக்கணும். ஆராயக்கூடாது". மிகுந்த நகைச்சுவை தொனியில் தோற்றமளிக்கும் அந்தக் கட்டுரையை நீங்கள் மிகவும் தீவிரமாக ஆராய்ச்சி செய்திருப்பதும், உங்களின் இயல்புக்கு முரணான வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பதும் ஜெயமோகனின் கட்டுரை போலவே எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ஜெயமோகன் மாத்திரமல்ல, யாருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. இயல்விருது குறித்தான அவரின் கட்டுரைக்கு நீங்கள் கடுமையானதொரு எதிர்வினையை ஒருவேளை எழுதியிருந்தால் அது பொருத்தமானதாகவோ/வரவேற்கப்படவேண்டியதாகவோ இருந்திருக்கும். ஏனெனில் அது அவரின் சீரியஸான கட்டுரை.

நான் சுருக்கமாக சொல்ல வந்தது இதுதான். நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயத்திற்கு இவ்வளவு கடுமையாக நீங்கள் எழுதியிருக்க வேண்டியதில்லை என்பது என் பார்வை. நான் தவறாகவும் இருக்கலாம். ஒரு வேளை கிண்டல் எம்.ஜி.ஆரைப் பற்றியது என்பதால் இவ்வளவு கோபமோ? இல்லையே, நீங்கள் அப்படிப்பட்ட ஆள் அல்லவே. நானே பலமுறை எம்.ஜி.ஆரை கிண்டல் செய்து எழுதிய போதெல்லாம் 'சல்தா ஹை' என்று போய்க் கொண்டிருப்பீர்களே...? :-)

என்னமோ, உங்களுக்கான நியாயத்தை இந்தப் பதிவில் எழுதியிருக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்கிறேன்.

- SURESH KANNAN
இனிய சுரேஷ்,

நிகழாத ஒன்றை நிகழ்ந்ததாக ஜெயமோகன் எழுதியிருக்கிறார். அந்தப் பாடலில் மழையில் எம்.ஜி.ஆர். ஆடியதாகக் குறிப்பிடுகிறார். ஆனால், காட்சியில் எம்.ஜி.ஆர். ஆடவில்லை.

இதைத்தான் நான் சுட்டிக் காட்டியிருக்கிறேன்.

அது நகைச்சுவையோ சீரியசோ - இல்லாத ஒன்றை இருப்பதாக்ச் சொல்லிய வரிகள் தவறு அவ்வளவே எனது தரப்பில் நான் சொல்வது.

ரோசாவசந்தின் பின்னூட்டத்துடன் எனக்கு ஒப்புமை உண்டு.

அவை தவிர இங்கே நிகழ்ந்த மற்ற பின்னூட்டங்கள் அனைத்தும் ஆளுமை தொடர்பானவை.

அய்யாவின் கட்டுரையை முன்வைத்து ஆசிப் - நான் - பிரசன்னா நிகழ்த்திக்கொண்ட ஆளுமை நிலைநாட்டப் பின்னூட்டங்கள்.

அண்ணன் இன்னும் ஏன் இன்னும் வழவழாகொழகொழாவ இருக்கின்றார் என ஆசிப் நினைக்கிறார்.

சான்ஸ் கெடைச்சா பாயைப் போட்டுத் தள்ளிடணும்னு பிரசன்னா நெனைக்கிறாரு :-)

பிரசன்னாவோட பின்னூட்டத்துக்கு knee jerk (ரியாக்டிவ்) ரெஸ்பான்ஸ் என்னோடது.

சல்தாஹைஜீ!

எப்படியோ ஜெயமோகன் அய்யாவோட புண்ணியத்துல நம்நாடு படத்துல சில காட்சிகள nth தடவையா போட்டுப் பாக்க சான்ஸ் கெடைச்சுது...அதுக்காக் அய்யாவுக்கு ரொம்ப தேங்ஸ் :-)

ஆசாத்
அன்புடன்
//சான்ஸ் கெடைச்சா பாயைப் போட்டுத் தள்ளிடணும்னு பிரசன்னா நெனைக்கிறாரு :-)
//

மிகவும் தவறான கணிப்பு. சான்ஸை நீங்கள் அள்ளி வழங்கிக்கொண்டே இருப்பீர்கள். அதனால் நான் சான்ஸிற்காக காத்திருக்கவேண்டியதில்லை.

இனி கமெண்ட் வராது, நன்றி.
//மிகவும் தவறான கணிப்பு. சான்ஸை நீங்கள் அள்ளி வழங்கிக்கொண்டே இருப்பீர்கள். அதனால் நான் சான்ஸிற்காக காத்திருக்கவேண்டியதில்லை.//

இலக்கியவாதியான உங்களுக்கு,

எம்.ஜி.ஆரை ரசிக்கின்ற, கானாவில் மயங்குகின்ற, பில்லாவிற்கு முதல்நாள் செல்கின்ற, வணிகபடங்களை ரசிக்கின்ற சராசரி பாமர கீழ்த்தட்டு ரசனைக்காரனான நான் எழுதுவதில் பின்னூட்டத்திற்கு சான்ஸ் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

இது என்ன பெரிய விஷயம்.

ஆனால், விசுவாசத்தைக் காட்ட வாய்ப்பு கிடைக்குமா? சந்தேகமே!

//இனி கமெண்ட் வராது, நன்றி.//

அதுதான் எல்லாருக்கும் நல்லது.

ஏனென்றால், வரிகளுக்கிடையே படிக்கும் உலகத்தில் நீங்கள் போடும் கமெண்டை வேறு விதமாகத் தோலுரித்துப் பார்த்து...

அதாவது, பிழையைச் சொன்னதை விசுவாசம் என்று நீங்கள் அர்த்தம் கொண்டதுபோல் நானும் உங்கள் கமெண்ட்டிற்கு வேறு ஏதாவது அர்த்தம் கொள்ள...அது நல்லதல்ல.

உங்களிடமிருந்து கமெண்ட் வராமலிப்பதே நல்லது.

அன்புடன்
ஆசாத்
Pavals said…
¸ùநன்றி பாய்.. பொங்கல் முடிஞ்சு வந்து முதவேலையா அந்த பதிவை படிச்சுட்டு நான் பொங்கிட்டு கிடந்தேன்.. பார்த்த மாதிரி இல்லையே இல்லையேன்னு.. நன்றி.
கவுண்டர் சட்டித்தலையான்னு சொன்னா அது தரமற்ற மூனாந்தர நகைச்சுவை காட்சி.. சுருளிசார் 'ஒம்போது'ன்னு சொன்னாலோ இல்ல நம்ம வக்கீல் மூர்த்தி 'பர்ர்ர்ர்'ன்னு சவுண்ட் குடுத்தாலோ அது " நகைச்சுவை என்கிற பேரில் ரசிகனின் கீழ்த்தர மன விகாரங்களுக்கு தீனி போட்டு'ன்னு ஆரம்பிச்சு முழநீளத்துக்கு எழுதறாங்க..(எங்கயோ இப்படி படிச்சேன், உரல் தேட முடியலை இப்போ!) குரல் போன பின்னாடியும் மக்களை கவர்ந்த ஒரு மனுசன பத்தி 'பைப்பு பம்பு'ன்னு எழுதினா பெரும் அறிவாளிக படிச்சு சிலாகிக்கர அங்கதமாம்.. ஒன்னுமே புரியலை போங்க.. :)

Popular posts from this blog

போட்டிக்காக - வெண்பா

கொஞ்சம் லிஃப்ட் கிடைக்குமா? 1. (Z)ஸீரோ சதவட்டி சீலிங் ஒருஃபிப்ட்டி ஆரோ கொடுத்தார் அடமானம்1 - தார்ரோட்டில் பஞ்சத் தவணையிலே பைக்வாங்கிச் செல்வோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 2. பல்சர் படபடக்க பக்கத்(து) இருப்போர்க்கு அல்சர்2 வரவழைக்கும் ஆணழகே - வில்ஸாலே நெஞ்சில் புகைநிறைத்த நிக்கோடின் மூச்சோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 3. தண்டர்பேர்ட் என்றால் தலைசாய்த்(து) அதைநோக்கி வொண்டர்ஃபுல் சொல்லாரும் உள்ளாரோ - டெண்டர்கள் அஞ்சும் விலைகொடுத்(து) ஆர்டர் எடுப்போனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 4. கேலிபர் க்ளச்சிதழில் க்வோவாடிஸ் முத்தமிட வாலிப கெத்தில் வளைகின்றாய் - நூலிழையில் விஞ்சிட டாப்கியரில் வீம்பாய் விரைவோனே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 5. பிரகாஷ்ராஜ் சொல்லில் பிறழாமல் ஸ்ப்லெண்டர் வரமாய்ப் பெறுவோனே வாவ்க்ரேட் - சரக்கடிக்க தஞ்சம் உனைச்சேர் தலயை மறக்காதே கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 6. ஆக்டிவா ஓட்டிடும் ஆரணங்கே சைடுவாங்கும் டாக்டிஸ் தெரிந்திருக்கும் தேவதைநீ - பாக்டினிலே3 பஞ்சர் விழுந்ததனால் பார்க்கிங் கினில்நின்றேன் கொஞ்சம் கிடைக்காதோ லிஃப்ட்! 7. வொய்ஷுட்பாய்ஸ் ஹாவ்ஆல்தி ஃபன்.அடடா4 ஐகேட்சிங் ஹவ்ஷுட்.ஐ...

லூர்து - சிறுகதை - போட்டிக்காக

லூர்து எட்டடித் தீவுக்குள்ளே இருப்பது நியாயம் இல்லே எமலோகம் போகலாம் வாடியம்மா! தாயே! பட்டணம் மீதிலுன்னைக் கட்டிய மாப்பிள்ளை பாசவலை வீசுறான் வாடியம்மா! தாயே! டடக்முடக் டடக்முடக் ஓசையுடன் ஊடாடிக்கொண்டிருந்த தறி நாடாவின் ஓசையையும் தாண்டி வெண்கலக்குரலில் பாடத் துவங்கினான் ஷேக் அலி. கைத்தறி வேலை செய்பவனாக இருந்தாலும் ஷேக் அலியின் சிந்தனைகளும் நடவடிக்கைகளும் சராசரி தறிக்காரர்களுடன் எப்பொழுதும் ஒத்துப்போனதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காக தறியில் கைகள் ஓடிக்கொண்டிருந்தாலும் சிந்தனை வேறு பக்கத்தில்தான் இருக்கும். ஏதாவது பிரபலமான பாடலைப் பாடிக்கொண்டோ அல்லது தானே அடுக்கிய வார்த்தைகளை தனக்குத் தோன்றும் மெட்டில் பாடிக்கொண்டோ இருப்பான். ஷேக் அலியின் பாட்டை யாரும் குறை சொல்லாததற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. அவன் லெப்பையாகத்தான் போவான் என ஜமாத்தில் அனைவரும் நினைத்தார்கள். 'மவ்லாய ஸல்லி வஸல் லிம்தாஹி மன்அபதா' மாப்பிள்ளை ஊர்வலங்களில் அரபி பைத்தைத் துவங்கினானென்றால், மாப்பிள்ளைகூட ஊர்வலம் அவசரமாக மணப்பந்தலுக்குப் போகவேண்டாம் என நினைப்பார். வெண்கலக் குரலில் எந்த கோஷ்டியுடன் அவன் சேர்ந்து பைத்து...

அரை(றை)ப்பங்கு

தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார். பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவ...